Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கென்ய சுற்றுப்பயணத்தின்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடியின் அறிக்கை (ஜூலை 11, 2016)

கென்ய சுற்றுப்பயணத்தின்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடியின் அறிக்கை (ஜூலை 11, 2016)


உயர்திரு அதிபர் உகுரு கென்யாட்டா அவர்களே,

துணை அதிபர் வில்லியம் ரூட்டோ அவர்களே,

பெண்களே, ஆண்களே,

அதிபர் அவர்களே மதிப்புமிகுந்த உங்களது கருத்துக்களுக்கு நன்றி,

நான் நைரோபியில் இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். எனக்கும், எனது குழுவுக்கும் உற்சாகமான வரவேற்பும், உபசரிப்பும் அளித்த அதிபர் கென்யாட்டாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதிபரே உங்களது பெயரான உகுரு என்பதன் பொருள் சுதந்திரம் என்று என்னிடம் தெரிவித்தார்கள். இதன்படி, உங்களின் வாழ்க்கைப் பயணம், சுதந்திர கென்யாவின் பயணமாகவும் அமைந்துள்ளது. இன்று நான் உங்களுடன் இருப்பதை பெருமையாக கருதுகிறேன்.

நண்பர்களே,

இந்தியாவுக்கு மதிப்புமிகுந்த நண்பராகவும், நம்பிக்கைக்குரிய கூட்டாளியாகவும் கென்யா விளங்குகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான இணைப்பு நீண்டகாலமானது மற்றும் சிறப்பானது. இரு நாடுகளுமே காலனி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தை பகிர்ந்துகொண்டுள்ளோம்.

நமது வரலாற்றுப்பூர்வமான, மக்களுக்கு இடையேயான உறவு, பல்வேறு விவகாரங்களிலும் நமது உறவுக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது. இந்த நல்லுறவானது,

* வேளாண்மை, சுகாதாரம் முதல் மேம்பாட்டு உதவிவரை

* வர்த்தகம் முதல் முதலீடு வரை

* நமது மக்களுக்கு இடையேயான நெருங்கிய நட்பு முதல் திறன் வளர்ப்பு வரை

* வழக்கமான அரசியல் தொடர்பான ஆலோசனைகள் முதல் ராணுவம், பாதுகாப்பு ஒத்துழைப்பு வரை விரிவடைந்துள்ளது.

இன்று அதிபரும், நானும் நமது நல்லுறவின் அனைத்து அம்சங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு நடத்தினோம்.

நண்பர்களே,

உலகப் பொருளாதாரத்தின் வலுவான இடத்தில் இந்தியா உள்ளது. மேலும், கென்யாவில் வாய்ப்புகள் ஏராளமாக குவிந்து கிடக்கின்றன. கென்யாவின் மிகப்பெரும் வர்த்தக கூட்டாளியாகவும், இங்கு இரண்டாவது மிகப்பெரும் முதலீட்டாளராகவும் இந்தியா திகழ்கிறது. இன்னும் அதிக அளவில் சாதிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

நமது பொருளாதாரங்கள் மேலும் பயனடைய முடியும் என்று அதிபரும், நானும் ஒப்புக் கொண்டோம். இதற்கு

– வர்த்தக இணைப்புகளை மிகப்பெரும் அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

– வர்த்தகத்தை அதிக அளவில் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

– முதலீட்டு உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

இதன்மூலம், மிகப்பெரும் பிராந்திய பொருளாதார வளத்தை உருவாக்க முடியும். இதற்காக இரு நாட்டு அரசுகளும் தங்களது பங்களிப்பை செய்ய வேண்டும். வர்த்தக உறவை வலுப்படுத்த, இரு நாட்டு வர்த்தகங்களும் முக்கிய பொறுப்பையும், பங்களிப்பையும் செய்ய வேண்டும்.

இந்த சூழ்நிலையில், இன்று மாலை நடைபெறும் இந்தியா-கென்யா வர்த்தக கூட்டமைப்பு கூட்டத்தை வரவேற்கிறேன். நமது இரு நாடுகளுமே புத்தாக்க சமூகங்கள். இதில், முக்கிய பகுதி என்னவென்றால், அரசின் நடவடிக்கைகள், உற்பத்தி அல்லது தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் புத்தாக்கங்கள், நமது சமூகங்கள் மட்டுமல்லாமல் அனைத்திலுமே பொதுவானதாக இருக்கும். இது மற்ற வளரும் நாடுகளில் உள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் உதவும். எம்-பேசா-வின் (M-Pesa) வெற்றியை, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திய சிறந்த புத்தாக்க முயற்சிகளில் ஒன்றாக கூறலாம். புத்தாக்க தொழில்நுட்பங்களை வர்த்தகமாக மாற்றுவதற்கு இருதரப்பும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். அவற்றில் சிலவற்றை இன்று மாலை நடைபெறும் வர்த்தக கூட்டமைப்பு கூட்டத்தில் காணலாம்.

நண்பர்களே,

நமது இருதரப்பு நல்லுறவுக்கு பன்முக மேம்பாட்டு நட்பு என்பது முக்கியத் தூணாக உள்ளது. நமது வளர்ச்சி இலக்குகள், பெரும்பாலும் ஒரே மாதிரியானவை. உண்மையான மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த கூட்டாளி என்ற முறையில், கென்யாவின் வளர்ச்சி இலக்குகளை நிறைவேற்ற, தனது வளர்ச்சி அனுபவங்களையும், நிபுணத்துவத்தையும் பகிர்ந்துகொள்ள இந்தியா தயாராக உள்ளது. மேலும், சலுகைக் கடன்களையும், திறனையும் வழங்க தயாராக உள்ளோம். வேளாண்மையை இயந்திரமயமாக்குதல், ஜவுளி, சிறு மற்றும் நடுத்தர துறைகளின் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த விரும்புகிறோம். 6 கோடி டாலர்களை கடனாக வழங்கி, மின் பகிர்மானத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த ஊக்குவித்துள்ளோம். கென்யா சிறப்பாக செயல்படுத்திவரும் புவிவெப்ப சக்தி துறை (geothermal sector), எல்.இ.டி. – யை அடிப்படையாகக் கொண்டு சிறப்பான முறையில் தெருவிளக்கு அமைத்தல் போன்ற எரிசக்தி சேமிப்புத் திட்டங்கள் உள்ளிட்டவற்றில் நமது நல்லுறவை வலுப்படுத்த முடியும். சுகாதாரத்தைப் பேணுவது என்பது அதிபர் உகுரு – வின் முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்பதை நான் உணர்ந்துகொண்டேன். இந்தியாவின் திறன், குறிப்பாக மருந்துப் பொருட்கள் விவகாரத்தில் இந்தியாவின் திறனை வழங்குவதன் மூலம், கென்யாவில் ஏற்றுக் கொள்ளக் கூடிய மற்றும் திறன்வாய்ந்த சுகாதார முறையை ஏற்படுத்த முடியும். இது உங்களது சமூகத்தின் தேவையை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், பிராந்திய மருத்துவ முனையமாக கென்யா மாறுவதற்கு உதவும். இந்த வகையில், சிறப்பு வாய்ந்த கென்யாட்டா தேசிய மருத்துவமனைக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன புற்றுநோய் சிகிச்சை இயந்திரமான பபட்ரானை (Bhabhatron) விரைவில் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். கென்யாவின் பொது சுகாதார அமைப்புக்கு எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சை வழங்குவதற்கான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்பட அடிப்படையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்குகிறோம்.

நண்பர்களே,

நமது இளைஞர்கள் வெற்றியடைவதற்கான வாய்ப்புகள் இல்லாமல், நம்மால் வளர முடியாது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எனவே, கல்வி, தொழில்கல்வி, திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் கென்யாவுடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக உள்ளோம்.

நண்பர்களே,

நமது வளர்ச்சியின் சவால்களையும் நாங்கள் உணர்ந்துகொண்டுள்ளோம். எனவே, அதிபரும், நானும் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். இந்தியாவும், கென்யாவும் இந்தியப் பெருங்கடலால் இணைக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் வலுவான கடல்சார் பாரம்பரியம் உள்ளது. எனவே, நமது ஒட்டுமொத்த ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பில் கடல்சார் பாதுகாப்பு விவகாரத்தில் நெருங்கிய நட்புறவு என்பது முக்கியப் பங்கு வகிக்கிறது. பாதுகாப்பு ஒத்துழைப்புக்காக தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், நமது பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு வலுப்படும். இதில், பெருமளவில் ஊழியர்கள் பரிமாற்றம், அனுபவங்களையும், நிபுணத்துவத்தையும் பரிமாறிக் கொள்தல், பயிற்சி மற்றும் அமைப்புகளை வலுப்படுத்துதல், நீர் நிலைப்பரப்பாய்வில் (hydrography) ஒத்துழைப்பு, உபகரணங்கள் விநியோகம் ஆகியவற்றுக்கு உதவும்.

தீவிரவாதமும், தீவிரவாத கொள்கைகள் அதிவேகமாக பரவுவதும் நமது மக்கள், நமது நாடுகள், இந்த பிராந்தியம் மற்றும் ஒட்டுமொத்த உலகுக்குமே பொதுவான அச்சுறுத்தலாக இருப்பதை அதிபரும், நானும் ஒப்புக் கொண்டோம். எனவே, இணையதள பாதுகாப்பு, போதைப் பொருட்களை எதிர்கொள்தல், ஆட்கடத்தல் உள்ளிட்ட விவகாரங்களில் நமது பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்புக் கொண்டோம்.

நண்பர்களே

கென்யாவில் வசிக்கும் இந்தியர்களுடன் அதிபரும், நானும், நேற்று கருத்துக்களை பரிமாறிக் கொண்டது மறக்க முடியாதது. அப்போது பேசிய அதிபர் உகுரு, இந்திய பாரம்பரியத்தில் அவர்கள் வளர்ந்தாலும், பெருமைமிக்க கென்யர்களாகவே இருப்பதாக தெரிவித்தார். எனவே, நமது பொருளாதாரங்களுக்கும், சமூகங்களுக்கும் ஆழ்ந்த தொடர்பை ஏற்படுத்தியுள்ளோம். இதன்மூலம், நம்பகமான உறவையும், வலுவான இணைப்பையும் அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். கென்யாவில் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவின் திருவிழாவை நடத்த உள்ளோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதன்மூலம், கென்யாவின் வளமான சமூகத்தில் ஏற்கனவே ஒரு அங்கமாக உள்ள இந்தியாவின் கலாச்சாரம் வெளிப்படும்.

உயர்திரு அதிபர் உகுரு அவர்களே,

இறுதியாக, எனக்கு அளித்த சிறப்பான வரவேற்புக்காக கென்ய அரசுக்கும், மக்களுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நானும், இந்திய மக்களும், உங்களை இந்தியாவில் வரவேற்பதை எதிர்நோக்கியுள்ளோம்.

நன்றி.

***