Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புதுதில்லியில் தேசிய அளவியல் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் முக்கிய அம்சங்கள்

புதுதில்லியில் தேசிய அளவியல் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் முக்கிய அம்சங்கள்


எனது அமைச்சரவை தோழர் டாக்டர் ஹர்ஷவர்தன் அவர்களே, முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் விஜய ராகவன் அவர்களே, சிஎஸ்ஐஆர் தலைவர் டாக்டர் சேகர் சி மண்டே அவர்களே, அறிவியல் சமூகத்தின் இதர நிபுணர்களே, அன்பர்களே, தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் வைர விழா கொண்டாட்டத்தையொட்டி உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

இன்று, நமது விஞ்ஞானிகள் தேசிய அணு கால அளவு, பாரதிய நிர்தேசக் திரவ்ய பிரணாளி ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கின்றனர். நாட்டின் முதலாவது தேசிய சுற்றுச்சூழல் தர ஆய்வகத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் நாட்டின் பெருமையை புதிய தசாப்தத்தில் உயர்த்தும்.

நண்பர்களே, இந்தப் புத்தாண்டு மேலும் ஒரு முக்கிய சாதனையைக் கொண்டு வந்துள்ளது. இந்திய விஞ்ஞானிகள், இந்தியாவிலேயே  ஒன்று அல்ல இரண்டு தடுப்பூசிகளை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் விரைவில் தொடங்கப் போகிறது. இதற்காகப் பணியாற்றிய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களால் நாடு பெருமைப்படுகிறது; இதற்காக நாட்டு மக்கள் அனைவரும் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளனர்.

நண்பர்களே, இன்றைய தினம் காலத்துக்கும் நினைவு கூரத்தக்கதாகும். தடுப்பூசியை உருவாக்குவதற்காக  நீங்கள் ஒவ்வொரு நாளும் கடினமாக உழைத்துள்ளீர்கள். சிஎஸ்ஐஆர் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து ஒவ்வொரு சவாலையும் சந்தித்ததுடன், புதிய சூழலுக்கு ஏற்ற தீர்வுகளையும் காண ஆர்வம் கொண்டன. உங்களது இந்த அர்ப்பணிப்பு காரணமாக, நாட்டில் இத்தகைய அறிவியல் நிறுவனங்கள் குறித்த புதிய விழிப்புணர்வு இன்று உருவாகியுள்ளது. சிஎஸ்ஐஆர் போன்ற நமது நிறுவனங்கள் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் நமது  இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ளது. எனவே, கொரோனா காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் பொருட்டு, சிஎஸ்ஐஆர் மேலும் அதிக மாணவர்கள், பள்ளிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு பகிர்ந்து கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன். இது நாளைய யுகத்திற்கான புதிய தலைமுறை விஞ்ஞானிகளை உருவாக்க உதவும்.

நண்பர்களே, சற்று முன்பு, எழுபத்து ஐந்து ஆண்டுகளில் உங்களது சாதனைகள் குறித்து விளக்கப்பட்டன. இத்தனை ஆண்டு காலம், இந்த நிறுவனத்தைச் சேர்ந்த பல பெரும் ஆளுமைகள் நாட்டுக்கு தொண்டாற்றியுள்ளனர். இங்கு உருவான தீர்வுகள் நாட்டுக்கு வழி காட்டியுள்ளன. சிஎஸ்ஐஆர் என்பிஎல் அறிவியல் வளர்ச்சியிலும், நாட்டின் வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றியுள்ளது. கடந்த கால சாதனைகள், வருங்கால தீர்வுகள் குறித்து விவாதிக்க மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நண்பர்களே, நாம் திரும்பி பார்த்தோமானால், காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட இந்தியாவை மறுகட்டமைக்க இது தொடங்கப்பட்டது. உங்களது பங்களிப்பு காலம் காலமாக விரிவடைந்து வந்துள்ளது; இப்போது, புதிய இலக்குகளும், புதிய லட்சியங்களும் நாட்டின் முன்பு உள்ளன. 2022-ம் ஆண்டில் நம் நாடு விடுதலையின் 75 ஆண்டுகளை நிறைவு செய்யும். இந்தக்  காலகட்டத்தில், தன்னிறைவான  இந்தியாவைக் கருத்தில் கொண்டு, நாம் புதிய தரம், புதிய முத்திரைகளை உருவாக்க வேண்டும்.

நண்பர்களே, சிஎஸ்ஐஆர் என்பிஎல் இந்தியாவின் காலக் காப்பு நிறுவனமாக இருந்து வருகிறது. அதாவது, அது இந்தியாவின் கால முறையைக் கண்காணித்து வந்துள்ளது. காலத்தின் பொறுப்பு உங்களுக்கு உள்ளதால், கால மாற்றம் உங்களிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும். புதிய காலத்தின் துவக்கம் மற்றும் புதிய எதிர்காலம் உங்களிடமிருந்து துவங்க வேண்டும்.

நண்பர்களே, கடந்த பல பத்தாண்டுகளாக, தரம் மற்றும் அளவைப் பொறுத்தவரை நமது நாடு வெளிநாட்டு தர அளவுகளையே நம்பி வந்துள்ளது. ஆனால், இந்தப் பத்தாண்டில், இந்தியா தனது சொந்த தரங்களை உருவாக்க முயற்சிக்க வேண்டும். இந்தப் பத்தாண்டில், இந்தியாவின் ஊக்கம், இந்தியாவின் முன்னேற்றம், இந்தியாவின் எழுச்சி, இந்தியாவின் மதிப்பு, இந்தியாவின் வலிமை, நமது திறன் மேம்பாடு ஆகியவை நமது சொந்த தரங்கள் மூலம் தீர்மானிக்கப்படும். அரசாங்கம், தனியார் துறைகளில் சேவைகள் மற்றும் தயாரிப்புகளின் தரம் நமது சொந்த தரத்தின் வாயிலாக வெளி வரவேண்டும். உலகில் இந்தியாவின் தயாரிப்புகளுக்கு தர மதிப்பு ஏற்படும் வகையில் இது அமையவேண்டும்.

நண்பர்களே, அளவியல் என்பது சாதாரண மனிதனின் மொழியில் அளவு அறிவியலாகும். எந்த ஒரு அறிவியல் சாதனைக்கும் இது அடிப்படையானதாகும். அளவு இல்லாமல் எந்த ஆராய்ச்சியும் நடைபெற முடியாது. நமது சாதனைகளுக்கு கூட ஏதாவது ஒரு அளவு கோல் தேவைப்படுகிறது. ஆகவே, அளவியல் என்பது நவீனத்துவத்தின் மூலைக்கல்லாகத் திகழ்கிறது. ஒரு நாட்டின் நம்பகத்தன்மையும், அந்நாட்டின்  நடைமுறையைப் பொறுத்தே அமையும். நடைமுறை நமது முகம் காட்டும் கண்ணாடி போன்றது. உலகில் நமது தயாரிப்புகள் எங்கே இருக்கின்றன என்பதைக் கண்டு கொள்வதற்கு இந்த நடைமுறை உதவுகிறது. நமது முன்னேற்றத்துக்கு இது அவசியமாகும். இதன் மூலமே சுய பரிசோதனை செய்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். எனவே, நாடு தற்சார்பு இந்தியா இயக்கத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ள நிலையில், அதன் இலக்கு அளவையும், தரத்தையும் அடிப்படையாகக் கொண்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்அளவும், தரமும் ஒரே நேரத்தில் அதிகரிக்க வேண்டும். இந்தியத் தயாரிப்புகளை வாங்கும் ஒவ்வொரு நுகர்வோரின் மனங்களையும் நாம் வெல்ல வேண்டும். இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு உலக அளவில் தேவை இருப்பதுடன் மட்டுமல்லாமல், உலகம் ஏற்றுக்கொண்டவையாக இருக்க வேண்டியது அவசியமாகும். தரம் மற்றும் நம்பகத்தன்மையில் இந்தியாவின் வணிக முத்திரைகளுக்கு வலிமையை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.

நண்பர்களே, இந்தத் திசையில் இந்தியா வேகமாக முன்னேறி வருவது பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன். இன்று, சொந்த வழிகாட்டும் முறைகளைக் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகத் திகழ்கிறது. இன்று தேசிய அணு கால அளவு வெளியிடப்பட்டுள்ளது. இது நமது உற்பத்தித் தொழில் நிறுவனங்கள் தரமான பொருட்களை தயாரிக்க ஊக்கமளிக்கும்.

இன்று, நமது தொழில்கள் கட்டுப்பாடுகள் சார்ந்த அணுகுமுறைக்குப் பதிலாக, நுகர்வோர் சார்ந்த அணுகுமுறையைக் கடைபிடித்து வருகின்றன. உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கு உலக அடையாளம் கிடைக்கச் செய்யும் நடவடிக்கைகள் உள்ளூர் உற்பத்திக்கு ஊக்கமளிக்கும். உணவு, சமையல் எண்ணெய், தாதுப்பொருட்கள், கனரக உலோகங்கள், பூச்சி மருந்துகள், மருந்து, ஜவுளி  போன்ற பல்வேறு துறைகளில், சான்றளிக்கப்பட்ட நடைமுறை வேகமாக  வளர்ந்து வருகிறது. இத்தகைய புதிய நடைமுறைகள் மூலம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் புதிய தர முறைகள் உறுதி செய்யப்படும். இதன் மூலம், இந்திய நுகர்வோருக்கு தரமான பொருட்கள் கிடைப்பதுடன் ஏற்றுமதியாளர்களுக்கும் எந்தப் பிரச்சினையும் இருக்காது. சிறந்த உற்பத்திப் பொருட்களால் நாட்டின் பொருளாதாரமும் வலுவடையும்.

நணபர்களே, நாட்டின் பயணத்தை கடந்த காலத்திலிருந்து தற்காலம் வரை பார்த்தோமானால், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நாடு வேகமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அறிவியல் புதிய கண்டுபிடிப்புக்கு வழி வகுக்கிறது. அதன் மூலம் தொழில்நுட்பம் உருவாகிறது. தொழில்நுட்பம் தொழிலை உருவாக்குகிறது. பின்னர் தொழில் புதிய ஆராய்ச்சிக்கு அறிவியலில் முதலீடு செய்கிறது. இது ஒரு சுழற்சியாக தொடர்கிறது. இதில் சிஎஸ்ஐஆர் என்பிஎல் முக்கிய பங்காற்றி வருகிறது.

சிஎஸ்ஐஆர்- என்பிஎல் இன்று தேசிய அணு கால அளவை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளது. ஒரு நானோ வினாடியை இதன் மூலம் அளவீடு செய்ய முடியும். ஒரு வினாடியில் நூறு கோடி பகுதி என்ன என்பதை கண்டறியும் தன்னிறைவை இந்தியா தற்போது கொண்டுள்ளது. இது பெரும் சாதனையாகும். இப்போது, சர்வதேச நிர்ணய நேரத்துடன் இந்திய நேரத்தை துல்லியமாக கணிக்க நம்மால் முடியும். இது இஸ்ரோ போன்ற நமது அனைத்து நிறுவனங்களுக்கும் பெருமளவுக்கு பயன்படும். வங்கிகள், ரயில்வே, பாதுகாப்பு, சுகாதாரம், தொலைத்தொடர்பு, வானிலை முன்னறிவிப்பு, பேரிடர் மேலாண்மை போன்ற பல்வேறு துறைகளின் நவீன தொழில்நுட்பங்களுக்கு  இதன் மூலம் பயன் கிட்டும். மேலும் இது தொழில்துறை 4.0 –ல் இந்தியாவின் பங்களிப்பை வலுப்படுத்தும்.

காற்றின் தரம், உமிழ்வு ஆகியவற்றை அளவீடு செய்வதிலும் நாம் முன்னேற்றம் கண்டுள்ளோம். இந்தியாவில் மாசுக் கட்டுப்பாடு விஷயத்தில் குறைந்த செலவிலான நடைமுறைகளை நாம் உருவாக்கி இருக்கிறோம். விஞ்ஞானிகளின் இடையறாத முயற்சி காரணமாக நாம் இந்த சாதனையையும் படைத்துள்ளோம்.

எந்த முன்னேறிய சமுதாயத்துக்கும் ஆராய்ச்சி என்பது மிகவும் அவசியமானதாகும். ஆராய்ச்சியின் விளைவுகள் வணிகத்திலும், சமுதாயத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆராய்ச்சி நமது அறிவு மற்றும் புரிந்துணர்வை விரிவாக்கும். ஒரு ஆராய்ச்சியை மேற்கொள்ளும் போது அது எந்த திசையில் செல்லும் என்பதைக் கணிப்பது சுலபமல்ல. ஆனால் அதன் முடிவு வேறு புதிய கண்டுபிடிப்புகளின் தொடக்கமாக அமைவது உண்டு. உதாரணமாக, ஜெகதீஷ் சந்திர போஸ், கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் நுண்ணலை பற்றிய கோட்பாட்டை சமர்ப்பித்த போது, அது வணிக ரீதியில் பயன்படும் என அவர் நினைக்கவில்லை. இன்று, ரேடியோ தொடர்பு முறை அதே கோட்பாட்டின் அடிப்படையில்தான் இயங்குகிறது.

நண்பர்களே, ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் இந்திய இளைஞர்களுக்கு மகத்தான வாய்ப்புகள் இன்று உள்ளன. அதேசமயத்தில், புதுமைகளை, புதிய கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதும் முக்கியமாகும். நமது இளைஞர்கள் இவற்றைப் பயன்படுத்திக் கொள்வதுடன், அறிவு சார் சொத்துரிமையைப் பாதுகாக்கும் வழிமுறைகளையும் கற்றுக் கொள்வது அவசியமாகும். நமது காப்புரிமைகள் எவ்வளவு சிறந்தவை, அவற்றைப் பயன்படுத்துவது எவ்வளவு அவசியம், பல்வேறு துறைகளில் நமது ஆராய்ச்சிகளைப் பரப்புவது எவ்வளவு முக்கியம் , நமது அடையாளம் எவ்வாறு வலிமையானது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நமது இந்திய முத்திரை எத்தகைய வலிமை கொண்டது என்பதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். நமது செயல்களையும், கடமைகளையும் தொடர்ந்து நாம் மேற்கொள்ள வேண்டும். விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், கடமைகளை நிறைவேற்றுவதில் விஞ்ஞானிகள் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துபவர்கள் மட்டுமல்ல, 130 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களின் கனவுகளையும், நம்பிக்கைகளையும் நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டவர்கள் நீங்கள் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

நீங்கள் வெற்றி அடைவீர்கள் என்று நான் நம்புகிறேன்!

இந்த எதிர்பார்ப்புடன், மீண்டும் உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்! நன்றி!

பொறுப்பு துறப்புஇது பிரதமர் உரையின் தோராயமான மொழி பெயர்ப்பாகும். மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.

                                                          ***