Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில் பிரதமரின் உரை

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில் பிரதமரின் உரை


அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர். சையத் நா முஃபத்தல் சைபுதீன் சாகப், கல்வி அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், கல்வித்துறை இணை அமைச்சர் திரு. சஞ்சய் தோத்ரே, துணைவேந்தர் தாரிக் மன்சூர், பேராசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், பெருந்தகைகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்க எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி. இங்கு அழகுற நிற்கும் பல்வேறு கட்டிடங்களையும் கண்டேன். இவை வெறும் கட்டிடங்கள் மட்டுமல்ல; இந்தியாவின் விலைமதிப்பற்ற பாரம்பரியத்துடன் தொடர்புடைய, கல்வி வரலாற்றுடன் தொடர்புடையவை.

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் பரவி இருக்கிறார்கள். நான் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் போது சந்தித்த பலர் தாங்கள் இப்பல்கலைக்கழகத்தில் பயின்றதாக பெருமிதத்துடன் கூறுவார்கள். அவர்களுக்கு என்று ஒரு தனித்தன்மை உள்ளது. உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் அவர்கள் இந்தியாவின் கலாச்சாரத்தின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள்.

இப்பல்கலைக்கழகம் தனது நூறாண்டு கால வரலாற்றில், பல இலட்சக்கணக்கான மக்களைச் செதுக்கியுள்ளது..நவீன, அறிவியல் பூர்வமான சிந்தனைகளையும் அளித்துள்ளது. சமுதாயத்திற்காகவும் நாட்டிற்காகவும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலை அளித்துள்ளது. இந்தக் கல்வி அமைப்பின் மதிப்புகளுக்கு திரு.சையத் அகமத் கான் அவர்களே சான்றாக இருக்கிறார்கள். இந்த நூற்றாண்டு காலத்தில், நாட்டிற்குச் சேவை புரிந்த ஒவ்வொரு மாணவர், ஆசிரியர், பேராசிரியர் ஆகியோருக்கு எனது பாராட்டுக்கள்.

கொரோனா நெருக்கடிக் காலத்தின் போது இப்பல்கலைக்கழகம் சமுதாயத்திற்கு செய்த உதவிகள் எதிர்பார்க்க முடியாததாக இருந்தது. ஆயிரக்கணக்கான மக்களுக்கு இலவசப் பரிசோதனை செய்தல், தனிமைப்படுத்துதல் வார்டுகள் அமைத்தல், பிளாஸ்மா வங்கிகள் ஏற்படுத்துதல், பிரதமர் நிதியத்திற்கு நிதி அளித்தல் என்று பல்வேறு வகைகளில் பங்காற்றியது. சில நாட்களுக்கு முன் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர்.சையத் நா சாகப் எனக்கு எழுதிய கடிதத்தில், தடுப்பு மருந்து தயாரிப்பதற்கான அனைத்து உதவிகளையும் அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார். நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டதாக இது போன்ற முயற்சிகள் இருப்பதால் மட்டுமே இந்தியாவால், கொரோனா போன்ற உலக அளவிலான பெருந்தொற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிகிறது.

நண்பர்களே

இந்தப் பல்கலைக்கழக வளாகம் ஒரு மினி இந்தியாவாகத் திகழ்கிறது. ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், பேராசிரியர்கள், இலட்சக்கணக்கான மாணவர்கள், பல்வேறு துறைகள், பல விடுதிகள் என அனைத்தும் இங்கு உள்ளன. உருது, இந்தி, அரபி போன்ற பல மொழிகளும் உள்ளன. அதே நேரம் சமஸ்கிருதமும் கற்பிக்கப்படுகிறது. இங்குள்ள நூலகத்தில் குரான் மட்டுமல்லாமல் பகவத் கீதை, இராமாயணம் ஆகியவற்றின் மொழிபெயர்ப்புகளும் உள்ளன. இதுபோன்ற பன்முகத்தன்மை பல்கலைக்கழகத்துக்கு மட்டுமில்லாமல் நாட்டிற்கே பெருமையளிப்பதாக உள்ளது. இந்த சக்தியை மறந்துவிடக் கூடாது. இது நலிவடைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். “ஒரே இந்தியா சிறந்த இந்தியா” என்ற எண்ணத்தை வலுப்படுத்தும் வகையில் பணியாற்ற வேண்டும்

நண்பர்களே !

கடந்த நூறு ஆண்டுகளில் இப்பல்கலைக்கழகம் உலகின் பல்வேறு நாடுகளுடன் இந்தியாவின் உறவை வலுப்படுத்தப் பணியாற்றியுள்ளது.  இஸ்லாமிய உலகுடன் இந்தியாவின் கலாச்சார உறவுகளுக்கு வழிவகுக்கும் வகையில் உருது, அரபி, பாரசீக மொழிகளில் பல்வேறு ஆய்வுகள் நடைபெறுகின்றன. ஓராயிரம் வெளிநாட்டு மாணவர்கள் இங்கு பயில்வதாக அறிகிறேன். இந்த மாணவர்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்புகையில் இந்தியாவைப் பற்றிய சிறந்த எண்ணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். எனவே இப்பல்கலைக் கழகத்திற்கு இரட்டைப் பொறுப்பு உள்ளது.

நீங்கள் உங்கள் மரியாதையை அதிகரித்துக்கொள்ள வேண்டும் அதே நேரம் உங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். பல்கலைக்கழகத்தின் தரத்தை உயர்த்துவதையும், தேசத்தைக் கட்டமைப்பதையும் ஒருங்கே செய்ய வேண்டும். “மக்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள், எந்த சாதியைச் சார்ந்தவர்கள், எந்த நம்பிக்கை உடையவர்கள் என்பதை விடுத்து அனைத்து மக்களின் நலனுக்காகவும் பணியாற்றுவதே, நம் நாட்டைப் பற்றி அக்கறை கொண்டுள்ள ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்” என்று சர் சையத் கூறியதை நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்

நண்பர்களே!

சர் சையத் இதற்கு ஒரு உதாரணமும் அளித்துள்ளார். “மனித உயிர் நல்ல ஆரோக்கியத்துடனும் சுகாதாரத்துடன் இருக்க வேண்டுமென்றால் உடலில் ஒவ்வொரு உறுப்பும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் அதே போல ஒரு நாடு செழிப்பாக இருக்க வேண்டுமானால் அந்த நாட்டில் எல்லா நிலைகளிலும் வளர்ச்சி இருக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்

நண்பர்களே!

இன்று நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் நாட்டின் வளர்ச்சிக்கான அனைத்து நன்மைகளும் கிடைக்கின்றன. அரசியல் சாசனப்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரது உரிமைகளும், அவரது எதிர்காலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. எல்லோருக்கும் முன்னேறுவதற்கான சம வாய்ப்பு வழங்கப்படுகிறது. நாட்டில் ஏழை மக்களுக்கான அனைத்துத் திட்டங்களும் எந்தவிதமான மதப் பாகுபாடுகளும் இல்லாமல் அனைத்து ஏழை மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் அமைக்கப்படுகின்றன

எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல் 40 கோடிக்கும் அதிகமான ஏழை மக்களுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் இரண்டு கோடிக்கும் அதிகமான ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. 8 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு அளிக்கப்பட்டது. கொரோனா காலத்தின்போது 80 கோடிக்கும் அதிகமான இந்திய மக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது. 50 கோடி மக்களுக்கு 5 இலட்சம் ரூபாய் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இவை எதற்குமே பாகுபாடு எதுவும் இருக்கவில்லை. நாட்டிற்கு சொந்தமான எதுவுமே ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமானது. நமது அரசு இந்தச் சிந்தனையுடன் தான் செயல்படுகிறது.

நண்பர்களே!

சில நாட்களுக்கு முன் இப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரும் இஸ்லாமிய அறிஞருமான ஒருவரைச் சந்தித்தேன். அவர் என்னுடன் பகிர்ந்து கொண்ட ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் 10 கோடி கழிவறைகள் கட்டப்பட்டன அது எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் எல்லோருக்கும் பயனளித்தது. கல்வி உலகில் கவனிக்கப்படவில்லை பொதுவாக விவாதிக்கப்படவில்லை என்பது இதில் ஒரு அம்சம் இப்பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு மாணவரும் இது குறித்து கவனிக்க வேண்டும்

நண்பர்களே!

முஸ்லிம் பெண் குழந்தைகள் பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்துவது 70 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்த காலம் ஒன்று இருந்தது. இது முஸ்லிம் சமுதாயம் முன்னேறுவதற்குத் தடையாக இருந்தது. 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிலை நீடித்து வந்தது. இந்த நிலையில் தான் கிராமங்களில் கழிப்பறைகள் கட்டப்பட்டன. பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்காக தனி கழிப்பறைகள் கட்டப்பட்டன. கழிப்பறைகள் கட்டப்பட்டதால்,  பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்தும் முஸ்லிம் பெண் குழந்தைகளின் சதவீதம் 70 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாகக் குறைந்துள்ளது.

பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்திய மாணவர்களுக்காக சிறப்புப் பயிற்சி வகுப்பு, இந்தப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படுகிறது. இப்பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் எண்ணிக்கை 35 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும் அறிகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். முஸ்லிம் பெண் குழந்தைகள் படிப்பதற்கும், அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதற்கும் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் ஒரு கோடி முஸ்லிம் பெண் குழந்தைகளுக்கு அரசு, உதவித்தொகை வழங்கி உள்ளது

நண்பர்களே!

இப்பல்கலைக்கழகத்தில் எந்தவிதமான  பாலினப் பாகுபாடும் இல்லை அனைவருக்கும் சம உரிமை வழங்கப்படுகிறது. இந்தப் பல்கலைக் கழகத்தின் நிறுவனர் வேந்தரின் பொறுப்பை பேகம் சுல்தான் எடுத்துக் கொண்டார் என்ற பெருமை இப்பல்கலைக்கழகத்திற்கு உண்டு. நூறாண்டு காலத்திற்கு முன் இது எத்தகைய பெரிய பணியாக இருந்திருக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். முத்தலாக் முறையை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் நவீன முஸ்லிம் சமுதாயத்தை முன்னேற்றுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நண்பர்களே!

ஒரு பெண் கல்வி பெற்றால் அவளது குடும்பம் கல்வி பெறும் என்று சொல்லப்படுகிறது இது உண்மைதான். இது மட்டுமல்ல. பெண்கள் கல்வியறிவு பெற்றால் அவர்கள் தங்கள் உரிமைகளைத் தகுந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள முடியும். தங்களது எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ள முடியும். கல்வி மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும். கல்வி கற்றால் தொழில் தொடங்கலாம். பொருளாதார சுதந்திரம் பெறலாம். இதனால் அதிகாரம் கிடைக்கும். அதிகாரம் கொண்ட ஒரு பெண்மணி, ஒவ்வொரு நிலையிலும் எல்லோரையும் போல முடிவெடுக்க முடியும். குடும்பத்திற்கு வழி காட்டுவதானாலும், நாட்டிற்கு வழி காட்டுவதானாலும் – கல்வி கற்ற பெண்ணால் எதையும் செய்ய முடியும். அதிக எண்ணிக்கையிலான பெண்களுக்குக் கல்வி அளிக்க வேண்டும்; அதிலும் உயர்கல்வி அளிக்க வேண்டும் என்று நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களையும்

கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர்களே!

இப்பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டங்கள் பல துறைகள் சார்ந்தவையாக உள்ளன. ஒரு மாணவருக்கு அறிவியலிலும், வரலாற்றிலும் ஆர்வம் இருந்தால் அவர் ஏன் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்? இதைத்தான் புதிய தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. 21ஆம் நூற்றாண்டு இந்தியாவில் மாணவர்களின் தேவைகளையும் ஆர்வங்களையும் புதிய கல்விக் கொள்கைகருத்தில் கொண்டுள்ளது. இந்நாட்டு இளைஞர்கள் நாட்டின் முன்னேற்றத்தையே முதன்மையாக வைத்திருக்கிறார்கள். புதிய தொழில்களைத் தொடங்குகிறார்கள். பகுத்தறிவும் அறிவியல் அணுகுமுறையும் அவர்களது முதல் முன்னுரிமையாகத் திகழ்கிறது.

புதிய கல்விக் கொள்கையின் படி, மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம் எப்போது வேண்டுமானாலும் விலகிக் கொள்ளலாம் என்ற விருப்பத் தெரிவுகள் உள்ளன. பாடத்திட்டத்திற்கான கட்டணத் தொகையைப் பற்றிய கவலையின்றி மாணவர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப படிப்பைத் தொடரலாம். அதற்கான சான்றிதழ்களும் அவர்களுக்கு வழங்கப்படும்.

நண்பர்களே!

உயர் கல்வி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. 2014ஆம் ஆண்டில் பதினாறு ஐஐடிகள் இருந்தன. தற்போது இவை 23 ஆக அதிகரித்துள்ளன. 2014 ஆம் ஆண்டில் 9 ஐஐஐடி இருந்தன. தற்போது 25 உள்ளன. 2014ஆம் ஆண்டில் 13 ஐஐஎம் கள். தற்போது 20 உள்ளன. ஆறு ஆண்டுகளுக்கு முன் ஏழு எய்ம்ஸ் இருந்தன. தற்போது 22 உள்ளன. கல்வி என்பது ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் எந்த வழியிலாயினும்  அனைவரையும் சென்றடைந்து, அவர்களது வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தித் தர வேண்டும். இந்த நோக்கத்துடன் நாம் செயலாற்றி வருகிறோம்.

நண்பர்களே!

இப்பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, இந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள 100 விடுதிகளும் 100 சிறப்புப் பணிகளை மேற்கொள்ளலாம். இவை இந்தியா விடுதலையடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற, இதுவரை அதிகம் தகவல் வெளிவராதவர்களைப் பற்றி ஆய்வு செய்யலாம். பழங்குடியினத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்து 75 விடுதிகள் ஆய்வு செய்யலாம். 25 விடுதிகள் பெண் விடுதலைப் போராட்டவீரர்களைப் பற்றி ஆய்வு செய்யலாம்.

நம் நாட்டின் பண்டைக்கால கையெழுத்துப் பிரதிகள் கொண்ட பல புத்தகங்களை மின்னணு மயமாக்கும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். இப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் புதிய இந்தியாவைக் கட்டமைப்பதில் அதிகஅளவில் பங்கேற்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். “உள்ளூர் என்று உரக்கச் சொல்வோம்” என்பதை வெற்றி பெறச் செய்யவும் தற்சார்பு இந்தியா இயக்கம் வெற்றி பெறவும் நாம் நிறைய பணியாற்ற வேண்டியிருக்கிறது. இப் பல்கலைக்கழகமும், இப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களும் இது தொடர்பாக ஆலோசனை அளித்தால் நான் மகிழ்வேன்.

நண்பர்களே!

இன்று ஒட்டுமொத்த உலகத்தின் கவனமும் இந்தியா மீது உள்ளது. இந்த நூற்றாண்டு இந்தியாவுக்கான நூற்றாண்டு என்று கூறப்படுகிறது. இந்த இலக்கை அடைய இந்தியா என்ன செய்யப்போகிறது என்று உலகம் கவனித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவை தற்சார்பு கொண்ட நாடாக எவ்வாறு மாற்றுவது என்பது நமது ஒற்றை இலக்காகும். நாம் எங்கு பிறந்தோம், எந்தக் குடும்பத்தில் பிறந்தோம், எந்த மதத்தில் வளர்ந்தோம் என்பதெல்லாம் பொருட்டல்ல. ஒவ்வொரு குடிமகனின் ஆசைகளும் நாட்டின் ஆசைகளோடு இணைக்கப்படவேண்டும் என்பதே முக்கியம் அல்லவா? இதற்கு வலுவான அடித்தளம் அமைந்து விட்டால் இந்த இலக்கை எளிதாக அடைந்து விடலாம்.

நண்பர்களே!

சமுதாயத்தில் கருத்து ரீதியான வேறுபாடுகள் இருப்பது இயற்கையே. தேசிய இலக்குகளை அடைவதற்கு இந்த வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட வேண்டும். எல்லோரும் இணைந்து செயல்பட்டால் எல்லா இலக்குகளையும் அடைந்துவிட முடியும். கல்வி, பொருளாதார வளர்ச்சி, நல்ல வாழ்க்கை முறை, வாய்ப்புகள், பெண்கள் உரிமை, பாதுகாப்பு, தேசிய வாதம் ஆகியவை ஒவ்வொரு குடிமகனுக்கும் இன்றியமையாதவை. கருத்து ரீதியான அல்லது அரசியல் ரீதியான வேறுபாடுகள் காரணமாக இவை தொடர்பான பிரச்சினைகள் குறித்து நாம் வேறுபட முடியாது. இந்தப் பல்கலைக்கழகத்தில் இருந்து தான் பல விடுதலைப் போராட்ட வீரர்கள் நாட்டிற்குக் கிடைத்தனர். தனிப்பட்ட முறையில் தனிப்பட்ட கருத்துக்கள் இருந்த போதிலும் நாட்டு விடுதலைக்காக அவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டனர்.

நண்பர்களே!

நம் முன்னோர்கள் நாட்டு விடுதலைக்காக பாடுபட்டனர். இளைய தலைமுறையினரான நீங்கள் புதிய இந்தியாவைக் கட்டமைப்பதற்கான இதே பணியைச் செய்ய வேண்டும். இந்தியா தற்சார்பு அடைந்தால் 130 கோடி மக்களும் பயனடைவார்கள். இது குறித்த விவாதங்களை இளைஞர்கள் நீங்கள் எல்லா இடத்திலும் பரப்ப வேண்டும்.

நண்பர்களே!

சமுதாயத்தில் அரசியல் முக்கியமான ஒரு பங்கு வகிக்கிறது. அதே சமயம் சமுதாயத்தில் அரசியல் தவிர இதரப் பிரச்சினைகளும் உள்ளன. சமுதாயத்தை அரசியலுக்கும் அப்பால் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்ல மிகப்பெரிய தளம் உள்ளது. இதை உங்களால் செய்ய முடியும்.

நண்பர்களே!

புதிய இந்தியா குறித்த தொலைநோக்குப் பார்வை குறித்துப் பேசுகையில் சிலர், கலவரம் அடையக்கூடும். இத்தகையோர் எதிர்மறை அலைகளை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். ஆனால் புதிய இந்தியாவைக் கட்டமைக்க வேண்டும் என்பது நமது மனங்களில் உச்ச நிலையில் இருந்தால், இத்தகைய மனிதர்களுக்கான இடம் தானாகவே குறைந்து விடும்.

நண்பர்களே!

அரசியல் காத்திருக்கலாம். சமுதாயம் காத்திருக்க முடியாது. நாட்டின் வளர்ச்சி காத்திருக்க முடியாது. பெண்கள், ஒடுக்கப்பட்டோர், பாதிக்கப்பட்டோர் காத்துக் கொண்டே இருக்க முடியாது. இளைஞர்களால் காத்துக் கொண்டிருக்க முடியாது. ஏற்கனவே சென்ற நூற்றாண்டில் நாம் பல்வேறு வேறுபாடுகள் காரணமாக பொன்னான நேரத்தை இழந்துவிட்டோம். தற்போது இழக்க நேரமில்லை. எல்லோரும் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற  ஒரே இலக்குடன் ஒன்றாக தற்சார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும்

நண்பர்களே!

1920ஆம் ஆண்டு இளைஞர்கள், நாட்டு விடுதலைக்கான போராட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. நாட்டுக்காக அர்பணிக்கவும், தியாகம் செய்யவும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களது தியாகத்தால் 27 ஆண்டுகளுக்குப் பிறகு 1947 ஆம் ஆண்டு நமக்கு விடுதலை கிடைத்தது. புதிய இந்தியாவைக் கட்டமைக்கும் இலக்கை எட்டுவதற்கு பங்காற்ற இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு 27 ஆண்டுகள் கழித்து 2047இல் இந்தியா விடுதலை அடைந்து நூறு ஆண்டுகள் ஆகியிருக்கும். அந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணத்தை நீங்கள் அனைவரும் காண்பீர்கள். எனவே, ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு முடிவெடுக்கும் போதும், நாட்டு நலன் கருதி முடிவெடுங்கள்.

தற்சார்பு இந்தியா என்ற கனவை நனவாக்க நம்மால் முடியும். இப்பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு நிறைவு குறித்து உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பல்கலைக்கழகத்தைப் பெரும் உச்சத்திற்குக் கொண்டு செல்வதற்காக, தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்ட அனைத்து மகா மனிதர்களுக்கும் என்னுடைய வணக்கங்கள். உங்கள் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள். உங்கள் கனவுகளை நனவாக்கவும், உங்கள் வளர்ச்சிக்காகவும் முயற்சிகளை மேற்கொள்ள இந்த அரசு பின்தங்கி இருக்காது என்று நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.

மிக்க நன்றி!

இது பிரதமர் உரையின் சற்றேறக்குறைய மொழியாக்கம். பிரதமரின் உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.