பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை தமிழ்நாட்டில் குளச்சலுக்கு அருகே இனையம் என்ற இடத்தில் பெரிய துறைமுகம் ஒன்றை உருவாக்க, ‘கொள்கையளவிலான’ தனது ஒப்புதலை வழங்கியது.
தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் மூன்று பெரிய துறைமுகங்களான வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகம், சென்னை துறைமுக பொறுப்புக் கழகம், காமராஜர் துறைமுக நிறுவனம் ஆகியவற்றின் பங்கு முதலீட்டுடன் இந்த புதிய துறைமுகத்தை உருவாக்குவதற்கென புதிய செயல்பாட்டு நிறுவனம் உருவாக்கப்படும். இந்தச் செயல்நிறுவனம் அகழ்ந்தெடுத்தல், நிலம் மீட்டெடுப்பு, துறைமுகத்திற்கான நுழைவுப்பாதையை உருவாக்குதல் மற்றும் இத்துறைமுகத்திற்கான தொடர்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்தல் ஆகிய துறைமுக கட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
உலகத் தரத்தில் சரக்குகளை கையாளும் திறமை கொண்டவையாக, போதுமான ஆழமும் அகலமும் கொண்டதாக இந்தியாவில் ஒரு சில துறைமுகங்களே தற்போது உள்ளன. தற்போது, இந்தியா முழுவதற்குமான சரக்ககப் போக்குவரத்தானது கொழும்பு, சிங்கப்பூர் மற்றும் இதர சர்வதேச துறைமுகங்களின் மூலமாகவே கையாளப்பட்டு வருகிறது. இதன் விளைவாக, இந்தியத் துறைமுகத் தொழில் ஆண்டொன்றுக்கு ரூ. 1500 கோடி வருவாயை இழந்து வருகிறது.
இனையத்தில் பெரிய துறைமுகத்தை நிறுவுவதன் மூலம் தற்போது நாட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டு வரும் இந்தியாவின் சரக்குகளை இந்தியாவிலேயே கையாளும் மிகப்பெரும் வாயிலாகச் செயல்படும் என்பதோடு, உலகின் கிழக்குப் பகுதியிலிருந்து மேற்கு நாடுகளுக்கு செல்லும் சரக்குகளை கையாளும் சரக்கு மாற்றும் மையமாகவும் இத்துறைமுகம் மாறும்.
தற்போது தங்களது சரக்குகளைக் கையாள கொழும்பு அல்லது இதர துறைமுகங்களையே பெரிதும் நம்பி, அதற்குக் கூடுதலாக செலவு செய்யவேண்டிய நிலையிலுள்ள தென் இந்தியாவைச் சேர்ந்த ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகர்கள் தங்கள் செலவுகளை குறைத்துக் கொள்ள வழி ஏற்படும்.