Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உத்தரப் பிரதேசத்தில் குடிநீர் விநியோகத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

உத்தரப் பிரதேசத்தில் குடிநீர் விநியோகத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்


வாழ்க்கையில் மிகப் பெரிய பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் போது, ஒரு மாறுபட்ட நம்பிக்கை நம்மில் பிரதிபலிக்க ஆரம்பிக்கிறது. உங்களுடன் கலந்துரையாடும் போது, அந்த நம்பிக்கையை என்னால் காண முடிகிறது. தொழில்நுட்ப பிரச்சினையால், உங்கள் அனைவருடனும் பேச முடியாமல் போனாலும், உங்களை என்னால் பார்க்க  முடிகிறது. திருவிழா காலங்களில் அணிவதைப் போன்ற ஆடைகளை நீங்கள் அணிந்திருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. அலங்காரங்களையும் காண முடிகிறது. உங்களிடம் உற்சாகத்தையும், ஆர்வத்தையும் காண முடிகிறது. இந்த உற்சாகமும், ஆர்வமும் இந்த மகத்தான திட்டத்தின் மதிப்பை காட்டுகிறது. இது, நீர் மீது உங்கள் உணர்வை காட்டுகிறது. ஒரு திருமணம் போன்ற முக்கியமான குடும்ப விழா நடைபெறுவதைப் போன்ற சூழலை நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள்.

அரசு உங்களது பிரச்சினைகளைப் புரிந்து கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அவற்றுக்கு தீர்வு காணும் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பது இதற்கு பொருளாகும். உங்களது உற்சாகத்தைப் பார்க்கும் போது, இந்தத் திட்டம் எதிர்பார்ப்பை விட வேகமாக பயனளிக்கும் என நான் உறுதியாக கூறுகிறேன். பணத்தையும் நீங்கள் சேமிக்க முடியும் எனக் கருதிகிறேன். மக்கள் இதில் பங்களிக்கும் போது நிச்சயம் பயன் பெரிதாகவே இருக்கும்.

நம் அனைவரின் மீதான விந்தியவாசினி மாதாவின் ஆசியால், இந்தப் பகுதியின் லட்சக்கணக்கான குடும்பங்களுக்காக, இத்தகைய ஒரு பெரிய திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், லட்சக்கணக்கான குடும்பங்கள் சுத்தமான குடிநீரை தங்கள் வீட்டு குழாய்கள் வழியாகப் பெற முடியும். உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி.ஆனந்திபென் பட்டேல், உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் ஆகியோர் சொன்பத்ராவில் இருந்து கலந்து கொண்டுள்ளனர். எனது மத்திய அமைச்சரவை சகா திரு. கஜேந்திர சிங், உ.பி.அமைச்சர் பாய் மகேந்திர சிங் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.  இங்கு கலந்து கொண்டுள்ள விந்தியா பகுதி சகோதர, சகோதரிகள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன்.

நண்பர்களே, விந்திய மலையின் முழுப்பகுதியும் பண்டைக் காலத்திலிருந்து, நம்பிக்கை, தூய்மை, பக்தி ஆகியவற்றின் முக்கிய மையமாகத் திகழ்கிறது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் ரகிம்தாஸ் கூறியது பற்றி அறிந்திருப்பார்கள். இந்தப் பிரதேசத்தில், பெரும் அளவிலான வளங்களும், மகத்தான வாய்ப்புகளும் உள்ளதையே அவரது வாக்கு பிரதிபலிக்கிறது. சிப்ரா, வைன்கங்கா, சோன், மகாநதி, நர்மதா ஆகிய ஆறுகள் விந்திய மலையில் உற்பத்தியாகின்றன. கங்கை, பேலன், கர்மனாசா போன்ற ஆறுகளாலும் இந்தப் பிராந்தியம் வளப்படுத்தப்படுகிறது. ஆனால், இந்தப் பிராந்தியம், நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது. விந்தியாச்சல், புந்தேல் காண்ட் ஆகியவை , வளங்கள் அதிகமாக இருந்த போதிலும், நலிவுற்ற நிலையிலேயே உள்ளன. இந்தப் பிராந்தியத்தில் பல ஆறுகள் ஓடுகின்ற போதிலும், வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளை அதிகம் கொண்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஏராளமான மக்கள் இங்கிருந்து புலம் பெயர்ந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

நண்பர்களே, பல ஆண்டுகளாக நிலவும், விந்தியாஞ்சல் பகுதியின் மிகப்பெரிய பிரச்சினைக்கு தீர்வு காண நிலையான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர், பாசனத்துக்கு வசதிகள் வழங்கும் முயற்சிகள் மிகவும் முக்கியமான பணிகள் ஆகும். கடந்த ஆண்டு புந்தேல்காண்டில், தொடங்கப்பட்ட தண்ணீர் திட்டங்கள் மிக வேகமாக நடந்து வருகின்றன. இன்று, விந்தியா ஜலபூர்த்தி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

சோன்பத்ரா, மிர்சாபூர் மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை, குறிப்பாக தாய்மார்கள், சகோதரிகளை வாழ்த்துவதற்கு இது ஒரு வாய்ப்பு ஆகும். இந்தப் பகுதி மக்களிடம் இன்று நான் பேசிய போது, மறைந்த எனது நண்பர் சோனேலால் பட்டேலின் நினைவு வருவது இயல்பானதுதான். இந்தப் பகுதியின் தண்ணீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து அவர் மிகுந்த கவலை கொண்டிருந்தார். இந்தத் திட்டங்கள் இன்று தொடங்கப்படுவதைப் பார்த்து, அவரது ஆன்மா திருப்தியடையும்.  அவர் நம் எல்லோருக்கும் ஆசி வழங்குவார்.

சகோதர, சகோதரிகளே, வருங்காலத்தில், குழாய் மூலம் தண்ணீர் 3000 கிராமங்களுக்கு வந்தடையும் போது, 40 லட்சத்துக்கும் மேற்பட்ட நண்பர்களின் வாழ்க்கை பெரிதும் மாறுதலடையும். இது, உ.பி.யிலும், நாட்டிலும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் குடிநீர் விநியோகம் வழங்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுக்கு ஊக்குவிப்பாக அமையும். கொரோனா தொற்றுக்கு மத்தியிலும், உத்தரப் பிரதேசம் அபரிமிதமான வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும். உத்தரப் பிரதேச ஊழியர்கள் மற்றும் மாநிலத்தின் நிலைமை இன்று முற்றிலுமாக மாறியுள்ளது. இன்று, மாநிலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக திட்டங்கள் நிறைவேறி வருவதைப் பார்த்து, அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள், புலம் பெயர்ந்து சென்றிருந்த தொழிலாளர்கள் சொந்தக் கிராமங்களுக்கு திரும்பியதைத் தொடர்ந்து அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்தல் ஆகியவை சிறிய விஷயங்கள் அல்ல. பல்வேறு தரப்பிலும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதால், இந்த மாநிலத்தில் இன்று அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. இவை அனைத்துக்கும், உத்தரப் பிரதேச மக்களுக்கும், அரசுக்கும், யோகியின் மொத்தக் குழுவுக்கும் நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே, வீட்டுக்கு வீடு தண்ணீர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு ஒரு ஆண்டு கடந்து விட்டது. இந்தக் கால கட்டத்தில், குழாய் மூலம் குடிநீர், 2 கோடியே 60 லட்சம் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் லட்சக்கணக்கான குடும்பங்கள் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவை.

சகோதர, சகோதரிகளே,

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இது ஒரே கல்லில் அனேக மாங்காய்கள் அடிப்பது போன்றதாகும். இந்தத் திட்டங்களின் மூலம், பல்வேறு இலக்குகள் அடையப்பட்டுள்ளன. குழாய் மூலம் குடிநீர் கிடைப்பதால், நமது பெண்களின் வாழ்க்கை எளிதாக மாறும். வாந்தி, பேதி, டைபாய்டு போன்ற, அசுத்தமான தண்ணீரால் ஏற்படும் நோய்கள் குறையும். இந்தத் திட்டம், மனிதர்களுக்கு மட்டும் இல்லாமல், கால்நடைகளுக்கும் பயன் அளிக்கும். கால்நடைகளும் சுத்தமான தண்ணீரை அருந்தி, ஆரோக்கியமாக வளரும்.

நண்பர்களே, ‘ சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்’ மந்திரம், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொருவரிடத்திலும், நம்பிக்கையூட்டும் மந்திரமாக மாறியுள்ளது. இன்று, ஒவ்வொரு மனிதரும், நாட்டின் ஒவ்வொரு பகுதியும், அரசு அவர்களை சென்றடைவதாக உணர்ந்துள்ளனர். நாட்டின் வளர்ச்சியில் அவர்களுக்கும் பங்கு உள்ளது. பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளிலும் இந்த நம்பிக்கை, ஏற்பட்டுள்ளது. இது புதிய வலிமையைப் பிரதிபலிக்கிறது. இதை என்னால் பார்க்க முடிகிறது. பழங்குடியினப் பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் சென்றடைந்ததுடன், சிறப்பு திட்டப் பணிகளும் அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பழங்குடியின இளைஞர்களுக்கு கல்வி வழங்கும் வகையில், நாட்டில் நூற்றுக்கணக்கான புதிய ஏகலைவா மாதிரி உறைவிடப்பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியினப் பகுதி மாணவர்களுக்கு விடுதி வசதியும் வழங்கப்பட்டுள்ளது. உ.பி.யில் பல பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

கல்வி தவிர வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் குறித்தும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். நாடு முழுவதும், 1250 வந்தன் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், வனப்பகுதி உற்பத்தி பொருட்களுக்கு அதிக விலை கிடைக்கும். அவர்கள் மூலம், கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகப் பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், தற்சார்பு இந்தியா இயக்கத்தின் கீழ், பல்வேறு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம், வன உற்பத்திப் பொருட்கள் அடிப்படையிலான தொழில்களை ஏற்படுத்த முடியும். பழங்குடியினப் பகுதி மேம்பாட்டுக்கு, நிதிப்பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக் கொள்ள மாவட்ட கனிமவள நிதியம் அமைக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே, இத்தகைய திட்டங்கள் இந்தியாவின் நம்பிக்கையை நாள்தோறும் ஊக்குவித்து வருகின்றன. இந்த நம்பிக்கையுடன், நாம் அனைவரும் தன்னிறைவு இந்தியாவைக் கட்டமைப்பதில் ஈடுபட்டுள்ளோம். விந்தியா குடிநீர் வழங்கும் திட்டம் இந்த நம்பிக்கையை வலுப்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இந்த நேரத்தில், கொரோனா அபாயம் இன்னும் உள்ளது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும், முகக்கவசங்கள் அணிவது, இடைவெளியைப் பராமரிப்பது, அடிக்கடி சோப்பால் கைகளைக் கழுவுவது ஆகியவற்றை மறந்துவிடலாகாது. மிகச்சிறிய மெத்தனம் கூட நமக்கும், குடும்பத்துக்கும், கிராமத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தி விடும். மருந்து கண்டுபிடிப்பதில் நமது விஞ்ஞானிகள் கடினமாக உழைத்து வருகின்றனர். உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளும் இதே பணியில் ஈடுபட்டுள்ளனர். செல்வந்த நாடுகள் மற்றும் ஏழை நாடுகளின் மக்களும் இதில் ஈடுபட்டுள்ளனர். மருந்து கிடைக்கும் வரை, எந்த மெத்தனமும் கூடாது.

இதை நீங்கள் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

பொறுப்பு துறப்பு; இது பிரதமர் உரையின் தோராயமான மொழியாக்கம். மூல உரை இந்தியில் ஆற்றப்பட்டது.

**********