Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வரி-பயங்கரவாதத்தில் இருந்து வரி-வெளிப்படைத்தன்மையை நோக்கி இந்தியா நகர்ந்திருக்கிறது: பிரதமர்

வரி-பயங்கரவாதத்தில் இருந்து வரி-வெளிப்படைத்தன்மையை நோக்கி இந்தியா நகர்ந்திருக்கிறது: பிரதமர்


ஒடிசா மாநிலம் கட்டாக்கில் வருமானவரித்துறையின் மேல்முறையீட்டு தீர்ப்பாய (ஐடிஏடி) அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகத்தை, பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஒடிசாவுக்கு மட்டுமில்லாது, இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் உள்ள பல லட்சக்கணக்கான வரி செலுத்துவோருக்கு நவீன வசதிகளை இந்த அமர்வு அளிக்கும் என்றும், இந்தப் பகுதியில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளுக்கும் தீர்வு காண்பதில் உதவும் என்றும் கூறினார்.

 

வரி-பயங்கரவாதத்தில் இருந்து வரி-வெளிப்படைத்தன்மையை நோக்கி இந்தியா இன்றைக்கு நகர்ந்து வருவதாக  பிரதமர் தெரிவித்தார். சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றியமைத்தல் என்னும் அணுகுமுறை மூலம் இந்த மாற்றம் நடந்திருப்பதாக அவர் கூறினார். தொழில்நுட்பத்தின் உதவியுடன் விதிகளும், செயல்முறைகளும் சீர்திருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று அவர் கூறினார். “தெளிவான நோக்கங்களோடும், அதே சமயம் வரி நிர்வாகத்தின் மனநிலையை மாற்றியமைப்பதற்காகவும் நாங்கள் செயல்படுகிறோம்,” என்று அவர் கூறினார்.

 

நாட்டின் வளங்களை உருவாக்குபவர்களின் சிரமங்கள் குறைந்தால், அவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். இதன் பின்னர் நாட்டின் அமைப்புகளின் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கை உயரும் என்று பிரதமர் கூறினார். உயர்ந்து வரும் இந்த நம்பிக்கையின் காரணமாக அதிக அளவில் பங்குதாரர்கள் வரி அமைப்பில் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்ற முன்வந்து கொண்டிருப்பதாக அவர் மேலும் கூறினார். வரி குறைப்பு மற்றும் செயல்முறையை எளிமைப்படுத்துவதைத் தவிர, நேர்மையான வரி செலுத்துவோருக்கு அளிக்கப்படும் மரியாதை, அவர்களை சிக்கல்களில் இருந்து பாதுகாப்பது ஆகியவை தொடர்பான மிகப்பெரிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

 

வருமான வரித் தாக்கல்கள் பதிவானவுடன் அவற்றை முழுமையாக நம்புவதே அரசின் எண்ண ஓட்டமாக உள்ளதென்று பிரதமர் கூறினார். இதன் காரணமாக, நாட்டில் செய்யப்படும் 99.75 சதவீத தாக்கல்கள் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. நாட்டின் வரி அமைப்பில் இது ஒரு மிகப்பெரிய மாற்றம் என்று அவர் கூறினார்.

 

நீண்ட காலம் நிலவி வந்த அடிமை முறையானது, வரி செலுத்துவோருக்கும், வரி வசூலிப்போருக்கும் இடையே உள்ள உறவை, சுரண்டப்படுவோர் மற்றும் சுரண்டுபவராக ஆக்கியிருந்ததாக திரு மோடி கூறினார். கோசுவாமி துளசிதாஸ் கூறிய மேகங்களில் இருந்து மழை வரும் போது, அதன் பலன் நம்மனைவருக்கும் தெரிகிறது; ஆனால் மேகங்கள் உருவாகும் போது, நீரை சூரியன் உறிஞ்சிக் கொள்கிறது, இருந்தாலும் யாருக்கும் எந்த சிரமத்தையும் அளிப்பதில்லைஎன்பதை மேற்கோள் காட்டிய பிரதமர், பொதுமக்களிடம் இருந்து வரி வசூலிக்கும் போது அரசு சிரமத்தை அளிக்கக் கூடாது என்றும், ஆனால், அந்தப் பணம் மக்களை சென்றடையும் போது, அதன் பலன்களை தங்கள் வாழ்வில் மக்கள் உணர வேண்டும் என்றும் கூறினார். இந்த லட்சியத்தை நோக்கி கடந்த சில வருடங்களில் அரசு முன்னேறியிருப்பதாகவும், ஒட்டுமொத்த வரி அமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களையும், வெளிப்படைத்தன்மையையும் வரிசெலுத்துவோர் இன்றைக்கு காண்பதாகவும் அவர் கூறினார். வருமான வரி திரும்பப் பெறுதலுக்காக மாதக் கணக்கில் காத்திருக்காமல், அவர்களுக்கு அது ஒரு சில வாரங்களிலேயே கிடைக்கும் போது வெளிப்படைத்தன்மையை வரி செலுத்துவோர் உணர்வதாக அவர் கூறினார். பல்லாண்டு கால பிரச்சினைக்கு, வருமான வரித்துறை தானாக தீர்வு காணும் போதுவெளிப்படைத்தன்மையை வரி செலுத்துவோர் உணர்கிறார்கள். முகமில்லா மேல்முறையீட்டை அனுபவிக்கும் போது, வரி வெளிப்படைத்தன்மையை வரி செலுத்துவோர் உணர்கிறார்கள். வருமான வரி தொடர்ந்து குறையும் போதுவெளிப்படைத்தன்மையை வரி செலுத்துவோர் உணர்கிறார்கள்.

 

ஐந்து லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளோர் வரி செலுத்த வேண்டியதில்லை என்பது இளைஞர்கள் மற்றும் கீழ் நடுத்தர பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள மிகப் பெரிய நன்மை என்று பிரதமர் கூறினார். இந்த வருட நிதி நிலை அறிக்கையில் அளிக்கப்பட்ட புதிய வருமான வரி விருப்பத்தேர்வு, வரிசெலுத்துவோரின் வாழ்க்கையை எளிமையாக்கியுள்ளதாக அவர் மேலும் கூறினார். வளர்ச்சியை துரிதப்படுத்தவும், இந்தியாவை முதலீட்டாளர்களுக்கு இன்னும் நட்பான நாடாக ஆக்கவும், பெருநிறுவன வரியில் பெருமளவு குறைக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். உற்பத்தியில் நாடு தற்சார்படைவதற்காக புதிய உள்நாட்டு நிறுவனங்களுக்கான வரி விகிதம் 15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்திய பங்கு சந்தையில் முதலீடுகளை அதிகரிப்பதற்காக ஈவு விநியோக வரியும் நீக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் குறினார். பெரும்பாலான சரக்குகள் மற்றும் சேவைகள் மீதான வரிகளை சரக்கு மற்றும் சேவை வரி குறைத்திருக்கிறது.  வருமானவரித்துறையின் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடுக்கான வரம்பு ரூ 3 லட்சத்தில் இருந்து ரூ 50 லட்சமாகவும், உச்ச நீதிமன்றத்தில் ரூ 2 கோடியாகவும் அதிகரிக்கப்பட்டிருப்பதன் மூலம், இந்தியாவில் வர்த்தகம் செய்வது எளிதாக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

 

வருமானவரித்துறையின் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் நாடு முழுவதும் உள்ள தனது கிளைகளை காணொலி விசாரணைக்காக மேம்படுத்தி வருவது குறித்து திருப்தி தெரிவித்த பிரதமர், தொழில்நுட்ப யுகத்தில் ஒட்டுமொத்த அமைப்பையும் மேம்படுத்துவது மிகவும் அவசியம் என்றார். குறிப்பாக நீத்துறையில் அதிகளவில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது நாட்டு மக்களுக்கு புதிய வசதியை அளிக்கத் தொடங்கியிருப்பதாக அவர் கூறினார்.

——-

(Release ID 1671979)