Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் ஏழைகள் உணவு மேம்பாட்டிற்கான பிரதமர் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதை அறிவித்தார்.


 

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நவம்பர் மாத இறுதி வரையில் பிரதமர் ஏழை மக்களின் உணவு மேம்பாட்டிற்கான திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் அறிவித்தார்.

ஏழைகளுக்கு உதவும் கரங்கள்

ஊரடங்கு காலத்தில் உணவு தேவைப்படுவோருக்கான வசதிகளை செய்து தருவதே நாட்டின் மிக முக்கியமான முன்னுரிமையாக இருந்தது என்றும் பிரதமர் வலியுறுத்தினார். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட உடனேயே, ஏழை மக்களின் உணவு மேம்பாட்டிற்கான பிரதமர் திட்டத்தை  அரசு கொண்டு வந்தது. ஏழை மக்களின் நலனுக்கான இத்திட்டத்திற்காக ரூ. 1.75 லட்சம் கோடியும் ஒதுக்கப்பட்டது.

கடந்த மூன்று மாத காலத்தில் கிட்டத்தட்ட  20 கோடி ஏழை குடும்பங்களின் ஜன்தன் வங்கிக் கணக்குகளில் மொத்தம் ரூ.31,000 கோடி பணம் செலுத்தப்பட்டுள்ளது என்றும், 9 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.18,000 கோடி பணம் செலுத்தப்பட்டுள்ளது என்றும், வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காகத் தொடங்கப்பட்ட பிரதமர் ஏழைகளின் மேம்பாட்டிற்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 50,000 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஏழைகளின் உணவு மேம்பாட்டிற்கான பிரதமர் திட்டம் நவம்பர் வரை நீட்டிப்பு

மூன்று மாத காலத்திற்கு 80 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 5 கிலோ அரிசி/கோதுமையோடு, ஒரு கிலோ பருப்பும் ஒவ்வொரு மாதமும் இலவசமாக வழங்குவது என்ற மிகப்பெரும் முடிவு எடுக்கப்பட்ட போது உலகம் முழுவதுமே நம்மை திரும்பிப் பார்த்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இவ்வாறு இலவச உணவுப் பொருள்களைப் பெற்றவர்களின் எண்ணிக்கை என்பது உலகின் மிகப்பெரும் நாடுகள் பலவற்றின் மக்கள் தொகையை விட பல மடங்கு அதிகம் என்றும் அவர்  குறிப்பிட்டார்.

மழைக்காலம் தொடங்கியதுமே விவசாயத் துறைக்கான வேலைகள் பெரும்பாலும் தொடங்கி விடுகின்றன. அதைப் போன்றே குரு பூர்ணிமா, ரக்‌ஷா பந்தன், கிருஷ்ண ஜயந்தி, விநாயக சதுர்த்தி, ஓணம், நவராத்திரி, தீபாவளி, சாத் பூஜா என ஒன்றுக்குப் பின் ஒன்றாக பண்டிகைகளும் வரத்தொடங்கி விடுகின்றன. இந்தப் பண்டிகைக் காலங்களில் குடும்பங்களுக்கான தேவைகள் அதிகரிக்கின்றன; செலவும் அதிகரிக்கின்றன என்பதை மனதில் கொண்ட வகையில் பிரதமர் ஏழை மக்களுக்கான உணவு மேம்பாட்டுத் திட்டம் தீபாவளி மற்றும் சாத் பூஜா வரையில், அதாவது ஜூலை மாதத்திலிருந்து நவம்பர் இறுதி வரையில் நீட்டிப்பது என  அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஐந்து மாத காலத்தில் 80 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5 கிலோ கோதுமை/அரிசி  குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் இலவசமாக வழங்கப்படும் என்பதோடு, அதனோடு கூடவே ஒரு கிலோ கொண்டைக்கடலையும் ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் மாதம் தோறும் வழங்கப்படும்.

 

இத்திட்டத்தை நீட்டிப்பதற்காக அரசு ரூ. 90,000 கோடிக்கும் மேலாக செலவு செய்யவுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார். கடந்த 3 மாத காலத்தில் செலவு செய்யப்பட்ட தொகையையும் சேர்த்தால் ஏழைகளுக்கு உணவு வழங்குவதற்கான இத்திட்டத்திற்காக கிட்டத்தட்ட ரூ. 1.5 லட்சம் கோடி செலவு செய்யப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்த உணவு தானியங்களை அரசு கொள்முதல் செய்து, ஏழைகளுக்கு இலவசமாக வழங்குவதை சாத்தியமாக்கிய கடுமையாக உழைக்கும் விவசாயிகள், நேர்மையாக வரி செலுத்துவோர் ஆகியோருக்கே நாம்  நன்றி செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

‘ஒரே நாடு; ஒரே ரேஷன் அட்டை’ என்ற அமைப்பை நோக்கி நாடு நகர்ந்து செல்வதையும் சுட்டிக்காட்டிய பிரதமர் வேலைக்காக மற்ற மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் ஏழைகளுக்கு இது மிகுந்த பயன் அளிப்பதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

 

ஊரடங்கு விலக்கு காலத்தில் பாதுகாப்பாக இருப்பது

கொரோனாவிற்கு எதிராக நாம் நடத்திவரும் போராட்டம் இரண்டாம் கட்ட ஊரடங்கு விலக்கினை எட்டியிருக்கும் அதே நேரத்தில் பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும் (மழைக்கால) பருவநிலையும் தொடங்கியுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். ஒவ்வொருவருமே தங்களது உடல்நலத்தைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். முழுமையான ஊரடங்கு போன்ற சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விளைவாக லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்ற முடிந்துள்ளது என்றும் இந்த நோயின் விளைவாக உயிரிழந்தவர்களின் விகிதம் உலகத்திலேயே இந்தியாவில் தான் மிகவும் குறைவாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். எனினும் முதல் கட்ட ஊரடங்கு விலக்கின் போது பொறுப்பற்ற வகையில் நடந்து கொள்வது அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், அதற்கு முந்தைய முழு ஊரடங்கு காலத்தின் போது முகக்கவசத்தை பயன்படுத்துவது, 20 விநாடிகளுக்கும் மேலாக நாள் தோறும் பலமுறை  கைகளைக் கழுவுவது, ஆறடி தூர இடைவெளியைப் பின்பற்றுவது ஆகியவை குறித்து மக்கள் மிகுந்த கவனத்துடன் இருந்தார்கள் என்பதையும் சுட்டிக் காட்டினார். மேலும் கவனமாக இருக்கவேண்டிய அவசியம் உள்ள நிலையில் இத்தகைய பொறுப்பற்ற போக்கு அதிகரித்து வருவது கவலை தருவதாக உள்ளது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

 

முழு ஊரடங்கு காலத்தில் பின்பற்றப்பட்டு வந்த அதே தீவிரத்தோடு, மிகவும் குறிப்பாக தனித்து வைக்கப்பட்ட பகுதிகளில் விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். இது போன்ற விதிமுறைகளைப் பின்பற்றாதவர்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மக்களை கேட்டுக் கொண்ட அவர், பொது இடத்தில் முகக்கவசம் அணியாததற்காக ஒரு நாட்டின் பிரதமருக்கு ரூ. 13,000 அபராதம் விதிக்கப்பட்ட உதாரணத்தையும் சுட்டிக் காட்டினார். இதே விழிப்புணர்வுடன் இந்தியாவில் உள்ள உள்ளாட்சி நிர்வாகங்கள் செயல்படுவது அவசியம் என்றும் குறிப்பிட்ட அவர், பிரதமர் உள்ளிட்ட யாருமே சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தை நோக்கி

வரும் காலங்களில் ஏழைகள், உதவி தேவைப்படுவோர் ஆகியோருக்கு உதவுவதற்கான மேலும் கூடுதலான நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு பொருளாதார செயல்பாடுகளும் கூட அதிகரிக்கப்படும். சுயசார்பு மிக்க இந்தியாவை நோக்கி செயல்படுவது என்ற உறுதிப்பாட்டையும் அவர் மீண்டும் வலியுறுத்தியதோடு, உள்ளூர்ப் பொருள்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும் முகக்கவசங்களைப் பயன்படுத்துவது, ஆறடி தூர இடைவெளியை பொது இடங்களில் கடைப்பிடிப்பது போன்றவற்றை தொடர்ந்து பின்பற்றி, கவனத்துடன் இருக்கவேண்டும் என்றும் அவர் மக்களை கேட்டுக் கொண்டார்.

 

 

*****