Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

’ஹீரத் நகரில் இந்தியா ஆப்கானிஸ்தான் நட்பு அணையை திறந்து வைத்து பிரதமர் அவர்கள் உரை.

’ஹீரத் நகரில் இந்தியா ஆப்கானிஸ்தான் நட்பு அணையை திறந்து வைத்து பிரதமர் அவர்கள் உரை.


நான் ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் வருகை தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நமது காலங்களின் துணிச்சலை உறுதி செய்த மக்களிடையே இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்தியாவுக்கான அன்பார்ந்த நட்பு சாகரத்தில் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். ஆப்கானிஸ்தானின் முன்னேற்றத்தில் இது ஒரு முக்கிய மைல்கல். இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே உள்ள உறவில் இது ஒரு முக்கியமான தருணம்.

ஆப்கானிஸ்தானுக்கு வருகை தர, உங்கள் அழைப்புக்கும், இந்த அணைக்கு ஆப்கானிஸ்தான் இந்தியா நட்பு அணை என்று பெயரிட்டதற்கும் எனது நன்றிகள். ஆப்கானின் ஜீவனால் நாங்கள் பெருமிதப்படுகிறோம். உலகெங்கும் நதிகள் நாகரீகத்தின் நுழைவாயிலாக இருந்திருக்கிறது. நதிகளின் ஓட்டத்தோடு இணைந்து மனித சமுதாயம் பயணித்திருக்கிறது. புனித குரானில், நதிகள், சொர்கத்தின் புகைப்படமாக இருக்கின்றன. இந்தியாவின் புராதான கல்வெட்டுக்களில் நதிகள் பெரும் வகையில் கொண்டாடப்பட்டிருக்கின்றன. அவை வாழ்வளிக்கும் ஜீவாதாரமாக கருதப்பட்டிருக்கின்றன. ஒரு ஆப்கானிய பழமொழி, காபூல் தங்கம் இல்லாமல் கூட இருந்து விடலாம், ஆனால் பனியில்லாமல் அல்ல என்று கூறுகிறது. பனிக்கான ஆதாரமாக நதிகள் இருக்கின்றன. நதிகள் வாழ்வையும், விவசாயத்தையும் காத்து வருகின்றன. இன்று நாம், ஆப்கானிஸ்தானுக்கு நீர் பாசனத்தையும், வீடுகளுக்கு ஒளியையும் வழங்கும் திட்டத்தை மட்டும் தொடங்கவில்லை. வாழ்வுக்கு நம்பிக்கை அளித்து, வாழ்வில் புது ஒளி புகட்டி, ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தை மாற்றி அமைக்கும் ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளோம். இந்த அணை மின்சாரத்தை மட்டும் உற்பத்தி செய்யவில்லை. மாறாக ஒரு புதிய நம்பிக்கையும், ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தின் மீது அக்கறையையும் இது காட்டுகிறது.

இத்திட்டம் சிஸ்டி, ஓபே, பஷ்தூன் ஸர்குன், காரோக், கோஸாரா, இன்ஜில் மற்றும் கோர்யான் ஆகிய பகுதிகளில் உள்ள அறுநூற்று நாற்பது கிராமங்களுக்கு நீர்பாசனம் மட்டும் செய்வதில்லை. மாறாக இரண்டாயிரத்து ஐநூறுக்கும் அதிகமான வீடுகளில் ஒளி பாய்ச்சுகிறது. கடந்த டிசம்பரில் நான் காபூல் நகரில் இருந்தபோது, ஆப்கானிஸ்தானின் நாடாளுமன்றக் கட்டிடத்தை திறந்து வைக்கும் பேறு பெற்றேன். துப்பாக்கி மற்றும் வன்முறையை புறக்கணித்து, வாக்கு மற்றும் விவாதத்தின் மூலமாக தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கான அஞ்சலி அது. இந்த கோடை நாளில், ஹிராத்தில் ஒரு வலிமையான எதிர்காலத்தை உருவாக்கும் ஆப்கானிய மக்களின் உறுதியை கொண்டாட நாம் இங்கே கூடியுள்ளோம். ஆப்கானிய மக்களும், இந்திய மக்களும் இந்தத் திட்டம் குறித்து எழுபதுகளில் திட்டமிட்டார்கள். கடந்த சில பத்தாண்டுகள் நீண்ட போரினால் ஏற்பட்ட தாக்கத்தை நம்மிடம் பேசின. இது ஆப்கானியர்கள் உருவாக்கிய போர் அல்ல. ஆனால் அதே நேரத்தில் ஒரு ஒட்டுமொத்த ஆப்கான் தலைமுறையின் எதிர்காலத்தையே அது எடுத்துச் சென்று விட்டது. 2001ல் ஆப்கானில் ஒரு புதிய விடியல் ஏற்பட்டபோது, நாம் மீண்டும் இத்திட்டத்தை தொடங்கினோம்.

நமது உறுதியாலும், பொறுமையாலும் துணிச்சல் மற்றும் நம்பிக்கையால், நாம் பல தடைகள் மற்றும் வன்முறையின் ஆபத்துக்களை கடந்து வந்துள்ளோம். மரணம் மற்றும் அழிவுசக்திகளுக்கு இடமில்லை என்பதை ஆப்கானிய மக்கள் துணிச்சலோடு அறிவித்துள்ளார்கள். அவைகள் ஆப்கானிய மக்களின் கனவுகள் மற்றும் விருப்பங்களில் குறுக்கிட முடியாது. மிகச் சிறந்த பழங்களையும், குங்குமப்பூவையும் உற்பத்தி செய்யும் வயல்கள் மீண்டும் இந்நதியின் அற்புதமான நீரால் உயிர் பெற்றுள்ளது. இது வரை இருளில் மூழ்கியிருந்த வீடுகளில் இன்று நம்பிக்கையின் ஒளி ஒளிர்கிறது. ஆண்களும் பெண்களும் இணைந்து தங்கள் வயல்களில் வன்முறையின் அச்சுறுத்தல் இல்லாமல் பணியாற்ற முடியும். ஒரு காலத்தில் துப்பாக்கிகளை சுமந்திருந்த தோள்கள் இன்று ஏரை சுமந்து வயல்களில் உழைக்கின்றன. குழந்தைகளுக்கு மீண்டும் நல்ல எதிர்காலத்திலும், வாய்ப்புகளிலும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

மேலும் ஒரு இளம் பெண் கவிஞர், வலி, வேதனை மற்றும் புறக்கணிப்பு நிரம்பிய வாழ்க்கையை வாழ வேண்டியதில்லை. ஹிராத் மீண்டும் தனது பொலிவை பெற்றுள்ளது. ஜலாலுதின் ரூமியால் ஒரு காலத்தில் அற்புதமானது என்று புகழப்பட்ட நகரம், மீண்டும் உயிர்த்தெழ உள்ளது. மேற்கு, மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் நுழைவாயிலாக இப்பகுதிகள் மீண்டும் ஒற்றுமையோடு எழும். மீண்டும் ஒரு முறை, ஹிராத் அரசுக்கும், ஆப்கானிய அரசுக்கும், உங்களின் ஆதரவு, பொறுமை, புரிதல் ஆகியவற்றோடு, எங்கள் மீதான உங்கள் நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த அணை செங்கல் மற்றும் சிமென்டால் மட்டும் கட்டப்பட்டதல்ல. மாறாக இந்தியா மற்றும் ஆப்கானியர்களின் நட்பினாலும், அன்பினாலும் கட்டப்பட்டுள்ளது. பெருமைக்குரிய இந்த நேரத்தில், ஒரு வளமான எதிர்காலத்துக்காக உயிரிழந்த ஆப்கானிய மக்களை நினைவு கூர்கிறேன். நம் மக்களின் வியர்வையும் ரத்தமும் இந்த பூமியில் இரண்டறக் கலந்து நம் இரு நாடுகளிடையே ஒரு அற்புதமான உறவை ஏற்படுத்தியுள்ளது. இந்த உறவு நமது புராதான உறவை நினைவுபடுத்துகிறது. ஹரிருத் ஆறு நமது வேதகால உறவுகளை நினைவு படுத்துகிறது. இன்று இந்த ஹரிருத் ஆறு எதிர்காலத்துக்கான நமது நிலையான உறவுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. இந்த நட்பு அணை சிஷ்டி ஷரீஃப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் நம்மோடு இணைந்ததை நினைவூட்டுகிறது.

இந்த இடத்திலிருந்துதான் சிஷ்டி பாரம்பரியத்தில் வந்த சூஃபியிசம் இந்தியாவுக்கு வந்தது. டெல்லி, அஜ்மீர் மற்றும் ஃபதேபூர் சிக்ரியில் அமைந்துள்ள தர்க்காக்களில் சிஷ்டி பாரம்பரியத்தின் தாக்கம் உள்ளது. சூஃபியிசத்தின் அன்பு, அமைதி, ஒருங்கிணைவு காரணமாக இது அனைத்து சமூகங்களில் இருந்தும் மக்களை ஈர்க்கிறது. கடவுளின் அனைத்துப் படைப்புகளின் மீதும் மரியாதை மற்றும் மனித குலத்துக்கு சேவை ஆகியவற்றை இது உணர்த்துகிறது. இது போன்ற விழுமியங்களே, வன்முறை அல்ல, ஆப்கானிஸ்தானை வரையறுக்கிறது. கவிதைகள் மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தில் வந்த அமைதியை ஆப்கான் உணர்த்துகிறது. இந்த விழுமியங்களே, வன்முறையை விரும்பும் சில ஆப்கானிய மக்களை அமைதிப் பாதையில் திருப்பவும், அவர்கள் ஆதரவாளர்களை மாற்றவும் உதவுகிறது.

தங்களது சுதந்திரத்தை காப்பதற்காக போரிடுவது ஆப்கானிய மக்களுக்கு தெரிந்தாலும், அவர்கள் அமைதிப் பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த அடிப்படையில்தான் ஆப்கானியர்களும் இந்தியர்களும் ஒருவரோடு ஒருவர் நட்பு பாராட்டுகிறார்கள். ஒருவருக்கு ஒருவர் எதிராக அல்ல. க்வாஜா மொய்னுதீன் சிஸ்தி என்ற இந்தியாவின் முதல் சிஷ்தி ஞானி, மனிதர்கள், சூரியனைப் போன்ற அன்பும், நதியைப் போன்ற தாராள மனப்பான்மையையும், பூமியைப் போன்ற விருந்தோம்பலையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். பரந்துபட்ட நிலப்பரப்பை மட்டும் வைத்து அவர் இவ்வாறு சொல்லவில்லை. ஆப்கானிய மக்களை மனதில் வைத்தே இவ்வாறு கூறியுள்ளார். நான் கடந்த டிசம்பரில் காபூல் வந்தபோது, உங்கள் அன்பான வரவேற்பையும், உங்கள் இதயத்தின் அன்பையும், அனுபவித்தேன். உங்களின் தெளிவான விழிகளில் இந்திய மக்களுக்கான ஆழமான அன்பை பார்த்தேன். உங்கள் புன்னகைகளில் உங்கள் அன்பின் அழுத்தத்தை பார்த்தேன். உங்கள் தழுவலில் நமது நட்பின் மீதான நம்பிக்கையை பார்த்தேன். அந்த கணங்களில் இந்தியா மீதான உங்களின் அன்பையும், உங்கள் நிலத்தின் அழகையும், ஒரு நாட்டின் நட்பையும் பார்த்தேன். இன்று 1.25 பில்லியன் மக்களின் அன்போடு திரும்பிச் செல்கிறேன். நமது உறவுக்கான உறுதியோடு திரும்பிச் செல்கிறேன்.

நமது உறவினால், பள்ளிகள், மருத்துவமனைகள், நீர்பாசனத் திட்டங்கள் போன்றவற்றை ஊரக மக்களுக்காக செயல்படுத்தியுள்ளோம். திறனுள்ள பெண்கள் மற்றும் கல்வி கற்ற இளைஞர்களால் ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தை உறுதி செய்யும் சூழலை உருவாக்கியிருக்கிறோம். நம்மிடையே உள்ள தூரத்தை குறைக்கும் வகையில் நெடுஞ்சாலைகளை அமைத்துள்ளோம். ஸாராஞ் முதல் டெலாராம் வரை. மேலும், உங்கள் வீடுகளுக்கு மின்சாரத்தை வழங்கும் மின் பாதைகளையும் அமைத்துள்ளோம். இந்தியா ஈரான் நாட்டில் உள்ள சப்பாஹார் துறைமுகம், ஆப்கானிஸ்தானுக்கு ஒரு புதிய பாதையை ஏற்படுத்தப்போகிறது.

இந்த நோக்கத்தை நிறைவேற்ற, கடந்த மாதம், அதிபர் கனி அவர்களும், ஈரான் அதிபர் ரொஹானி அவர்களும் இணைந்து, சப்பாஹார் வணிக ஒப்பந்தத்தில் மூன்று நாடுகளும் இணைந்து கையெழுத்திட்டோம்.

நமது உழைப்பின் பலன் காபூல், கந்தஹார், மஸார் மற்றும் ஹீராத்தோடு முடியப்போவதில்லை. நமது கூட்டுறவு ஆப்கானிஸ்தானின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று சேரும். நமது உறவு ஆப்கானின் அனைத்து சமூகத்துக்கும் பயனளிக்கும். ஆப்கானிஸ்தானின் கடினமான பூகோள அமைப்பாலும், பஷ்தூன்கள், தஜிக்குகள், உஸ்பெக்குகள், மற்றும் ஹஜாராக்கள் ஆகியோர் அனைவரையும் உள்ளடக்கி ஆப்கான் ஒற்றை தேசமாக வளர வேண்டும். ஏனெனில், ஆப்கானிய மக்களின் பிரிவினை, வெளியிலிருந்து ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்க நினைப்பவர்களுக்கு உதவும். நமது உறவு அளிக்கும் வலிமையால் நாம் இருவரும் இணைந்து பணியாற்றுவதால், இப்பிராந்தியத்தில் நமக்கு எதிராக பணியாற்றும் சக்திகள் வலுவிழக்கும்.

எங்கள் மக்கள் மீது தாக்குதல் நடக்கையில், ஆப்கானியர்கள் தங்களில் ஒருவர் தாக்கப்படுவதைப் போல பாதுகாத்தார்கள். இந்திய நண்பர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, துப்பாக்கி குண்டுகளுக்கிடையே போரிட்டார்கள். இதுதான் நமது நட்பின் இலக்கணம். நான் பிரதமராக பதவியேற்ற நாள் முதல் இதை கவனித்து வருகிறேன். ஹீராத் நகரில் உள்ள எங்கள் தூதரகத்தை தீவிரவாதிகள் தாக்கியபோது, ஆப்கானிஸ்தானின் தீரமான வீரர்கள் எங்கள் அதிகாரிகளையும் இதர மக்களையும் பாதுகாப்பதற்காக போரிட்டு, ஒரு பெரிய ஆபத்தை தவிர்த்தார்கள்.

அதிபர் அவர்களே, நண்பர்களே,

ஒவ்வொரு இந்தியர் மனதிலும் ஆப்கானிஸ்தானின் வெற்றியும் அதன் நம்பிக்கையும் உள்ளது. இது ஆப்கான் மக்கள் மீதான எங்கள் இதயபூர்வமான அன்பிலிருந்து வருகிறது. உங்கள் ஜனநாயகம் ஆழமாக தழைத்து, மக்களின் ஒற்றுமையுடன், பொருளாதாரம் வளர வேண்டும் என்பதை எங்கள் நோக்கம். உங்களின் கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியம் தழைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். உங்கள் கிரிக்கெட் வீரர்கள், டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் இணைந்து, ஐ.பிஎல்லிலும் விளையாட வேண்டும் என்று விரும்புகிறோம்.

ஆப்கானிஸ்தான் தழைக்கையில் உலகம் பாதுகாப்பாகவும் அழகானதாகவும் ஆகும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆப்கானிஸ்தானின் விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கையில், தீவிரவாதமும், வகுப்பு வாதமும் பின் தங்கும். ஏனென்றால், தீவிரவாதமும் வகுப்புவாதமும் உங்கள் எல்லையோடோ அல்லது இப்பிராந்திய எல்லையோடோ நிற்பதில்லை.

இந்த நிலையில்லாத உலகில், அமைதிக்காகவும், உலகத்துக்காகவும் ஆப்கானிய மக்கள் தீவிரமாக தியாகம் செய்வதை மறந்து விட முடியாது. இந்தியா மறந்து பின் செல்லாது.

ஏற்கனவே சொன்னதை மீண்டும் வலியுறுத்துகிறேன். உங்கள் நட்பு எங்களுக்கு பெருமை. உங்கள் கனவு எங்கள் கடமை. இந்தியாவின் திறன் குறுகியதாக இருக்கலாம். ஆனால் எங்களின் உறுதி எல்லையில்லாதது. எங்களின் வளங்கள் குறைவானதாக இருக்கலாம். ஆனால் எங்களின் மன உறுதி எல்லையில்லாதது. பூகோள சூழலாலும் அரசியலாலும் சில தடைகளை சந்திக்கலாம். ஆனால் நமது நோக்கத்தினால் நமது பாதை தெளிவாகும். பிறர் நமது உறவை சந்தேகத்தோடு பார்க்கலாம். ஆனால் நமது உறவும், உறுதியும், நம்மை முன்னடத்திச் செல்லும்.

சிலர் உங்கள் எதிர்காலத்தில் சந்தேகத்தை எழுப்பினாலும், ஆப்கானிஸ்தானின் முன்னேற்றம் எத்தகைய கடுமையான பாதையாக இருந்தாலும் தொடரும் என்பதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை. சர்வதேச அரங்குகளில், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஒரே குரலில் பேசும். ஆப்கானிஸ்தானின் வளமான, அமைதியான, ஒற்றுமையான ஒருங்கிணைவான எதிர்காலத்துக்காக இந்த குரல் ஒலிக்கும். வயல்கள், கிராமங்கள் மற்றும் ஆப்கானின் நகரங்கள் ஆகிய அனைத்திலும் இணைந்து பணியாற்றுவோம்.

எது நடந்தாலும், ஒரு பிரகாசமான சூழலிலோ அல்லது இருளான சூழலிலோ, ஹிராத்தின் புகழ்பெற்ற சூபி கவிஞர் ஹக்கீம் ஜாமி சொன்னது போல, நட்பின் தென்றல் நம் மீது வீசட்டும்.

உங்களின் அங்கீகாரத்துக்கும் அன்புக்கும் நட்புக்கும் நன்றி.

நன்றி.