Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அசாமில் எண்ணெய்க் கிணற்றில் ஏற்பட்ட வெடிவிபத்து மற்றும் தீ பரவல் குறித்த நிலவரங்களைப் பிரதமர் ஆய்வு செய்தார்


அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள ஆயில் இந்தியா நிறுவனத்தின் பஹ்ஜான்-5 என்ற எண் கொண்ட எண்ணெய்க் கிணற்றில் ஏற்பட்ட வெடிவிபத்து மற்றும் தீயைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலவரங்கள் குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான், அசாம் முதலமைச்சர் திரு.சர்பானந்த சோனோவால், மற்ற மத்திய அமைச்சர்கள் மற்றும் இந்திய அரசின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மே 27, 2020-ல், இந்தக் கிணற்றிலிருந்து கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எரிவாயு கசியத் தொடங்கியது. இதையடுத்து, எரிவாயு கசிவை கட்டுப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஜூன் 9, 2020-ல் கிணற்றில் தீப்பிடித்தது. இந்தப் பகுதியைச் சுற்றிலும் வசித்துவந்த மக்கள், ஆயில் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து மாநில அரசு அமைத்துள்ள நிவாரண முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிவாரண முகாம்களில் சுமார் 9,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உடனடி நிவாரண நடவடிக்கையாக, மாவட்ட நிர்வாகத்தால் கண்டறியப்பட்ட 1,610 குடும்பங்களுக்கு தலா ரூ.30,000 வீதம் வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிக்கவும், ஆதரவு அளிக்கவும் இந்திய அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளதாக, அசாம் முதலமைச்சர் மூலமாக, அசாம் மக்களுக்கு, பிரதமர் உறுதியளித்தார். மேலும், எதிர்பாராத சம்பவம் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான நேரத்தில் மாநில அரசுடன் இருப்போம் என்று பிரதமர் உறுதியளித்தார். இந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்து ஆவணங்களை தயார்படுத்தி வைக்குமாறும், இதன் மூலம் கிடைக்கும் முடிவுகள், எதிர்காலத்தில் பயனளிக்கும் என்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்துக்கு பிரதமர் உத்தரவிட்டார். மேலும், இது போன்ற விபத்துக்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்கவும், அவ்வாறு ஏற்பட்டால், அதனை எதிர்கொள்ளவும், நமது அமைப்புகளுக்குள்ளேயே திறனையும், நிபுணத்துவத்தையும் உருவாக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.

கிணற்றிலிருந்து வாயு வெளியேறுவதைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் இந்திய மற்றும் வெளிநாட்டு வல்லுநர்களின் உதவியுடன் விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வுக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. திட்டமிடப்பட்ட அட்டவணையின் அடிப்படையிலேயே பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டபிறகு, கிணற்றில் ஏற்படும் கசிவை, ஜூலை 7, 2020-ல் அடைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.