Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நிலக்கரிச் சுரங்கங்களின் வணிக ரீதியிலான ஏலம் தொடர்பான மெய்நிகர் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்


வணக்கம்!

நாடு முழுவதிலுமிருந்தும், உலகின் பல பகுதிகளிலுமிருந்தும் இதில் கலந்து கொண்டிருப்பவர்களை நான் வரவேற்கிறேன். இந்த சவாலான நேரத்தில், இந்த நிகழ்ச்சியை நடத்துவதும், அதில் நீங்கள் கலந்து கொண்டிருப்பதுமே, புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதுடன், முக்கியமான செய்தியையும் வெளிப்படுத்துகிறது.

கொரோனா தொற்றுக்கு எதிராக இந்தியா போராடுவதுடன், அதில் வெற்றி பெற்று, பீடு நடை போடும். இந்த நெருக்கடியான நிலையில், இந்தியா மூலையில் உட்கார்ந்து புலம்பிக் கொண்டிருக்கப் போவதில்லை. எவ்வளவு பெரிய நெருக்கடியாக இருந்தாலும், இந்தியா அதனை ஒரு வாய்ப்பாக மாற்ற உறுதி பூண்டுள்ளது. இந்தக் கொரோனா தொற்று இந்தியாவுக்கு கற்றுக் கொடுத்திருக்கும் பாடம் சுயசார்பு ஆகும்.

சுயசார்பு இந்தியா என்றால் இந்தியா அதன் இறக்குமதியை நம்பி இருப்பதைக் குறைக்கும் என்று பொருளாகும். சுயசார்பு இந்தியா என்றால், இறக்குமதிக்காக செலவிடும் லட்சக்கணக்கான கோடி ரூபாய் அந்நியச் செலாவணியை,  இந்தியா சேமிக்கும் என்று பொருளாகும். சுயசார்பு இந்தியா என்றால்,  இந்தியாவுக்கு இறக்குமதி தேவையில்லை, மாறாக அது உள்நாட்டிலேயே வள ஆதாரங்களை நிலையாக உருவாக்கும் என்பது பொருளாகும். சுயசார்பு என்றால், நாம் இப்போது இறக்குமதி செய்து கொண்டிருக்கும் பொருள்களை பெருமளவில் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு மாறுவோம் எனப் பொருளாகும்.

நண்பர்களே, இதனை எட்டுவதற்கு, ஒவ்வொரு துறையையும், ஒவ்வொரு தயாரிப்பையும், ஒவ்வொரு சேவையையும் நாம் பரிசீலித்து முழுமையாக உழைத்து, இந்தியாவை அந்தந்தத் துறைகளில் தன்னிறைவு பெற்றதாக மாற்ற வேண்டும். இன்றைய நிகழ்ச்சி, அதே எண்ணத்துடனான திசையை நோக்கிய வலுவான நடவடிக்கையின் வெளிப்பாடாகும்.

இன்று, எரிசக்தித் துறையில் இந்தியாவைத் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றுவதற்கான மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி, நிலக்கரி சுரங்கத்துறை என்னும் ஒரு துறை சார்ந்த சீர்திருத்தங்களை அமல்படுத்துவதை மட்டுமல்லாமல், 130 கோடி அபிலாசைகளை நனவாக்கும் உறுதிப்பாட்டையும் குறிக்கிறது.

லட்சக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்கான தொடக்கமாக இது அமைந்துள்ளது.

நண்பர்களே,

தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியாவை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, கடந்த மாதம் தற்சார்பு இந்தியா இயக்கத்தைத் தொடங்கிய போது, இது வழக்கமான அரசின் நடைமுறைதான் என்று பலர் எண்ணினார்கள்.

ஆனால், அறிவிப்பு வெளியான ஒரு மாதத்திற்குள், விவசாயம், சிறு, குறு, நடுத்தரத் தொழில் பிரிவு, நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை என ஒவ்வொரு  சீர்திருத்தமும் கள அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடிச் சூழலை, ஒரு வாய்ப்பாக மாற்றும் இந்தியாவின் உண்மையான ஈடுபாட்டை இது காட்டுகிறது. இன்று , நிலக்கரிச் சுரங்கத் தொழிலை வணிகரீதியில் நடத்தும் வகையில் ஏலத்தை தொடங்கியிருப்பதுடன்,  பல தசாப்தங்களாக முடங்கியிருந்த நிலக்கரித் துறையை விடுவித்திருக்கிறோம்.

நிலக்கரித் துறை முடக்கத்தின் பாதிப்பு என்ன என்பதை என்னை விட நீங்கள் மிக நன்றாக அறிவீர்கள்.

உங்கள் சிந்தனைக்கு அதைக் கொண்டு செல்லுங்கள். உலகின் நான்காவது பெரிய நிலக்கரி வளத்தைக் கொண்டுள்ள நாடு; உலகில் இரண்டாவது பெரிய உற்பத்தியை செய்து வரும் நாடு; நிலக்கரியை ஏற்றுமதி செய்யும் நாடாக இருக்கவில்லை, ஆனால், நிலக்கரி இறக்குமதியில் உலகிலேயே இரண்டாவதாக உள்ளது! 

உலகில் நிலக்கரி உற்பத்தியில் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாகத் திகழும் நம்மால், ஏன் பெரிய ஏற்றுமதி நாடாக முடியவில்லை? என்பது கேள்வியாக உள்ளது.

இந்தக் கேள்வி எப்போதும், என் மனதிலும், உங்கள் மனதிலும், கோடிக்கணக்கான இந்தியர்களின் மனதிலும் எதிரொலிக்கிறது.

நண்பர்களே,  பல தசாப்த காலங்களாக இதுதான் நம்முடைய நிலைமையாக இருந்து வந்துள்ளது. நாட்டின் நிலக்கரித் துறை, மின் உற்பத்தியுடன் இணைந்த மற்றும் மின் உற்பத்தியுடன் இணையாத நிலை என்ற குழப்பங்களில் இருந்து வந்தது. அது போட்டிக்கு அனுமதிக்கப்படவில்லை; வெளிப்படைத்தன்மை பெரிய பிரச்சினையாக இருந்தது. ஏலத்துக்கான நடைமுறைகளை விடுங்கள், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் தொடர்புடைய பெரிய ஊழல்களை எல்லோரும் அறிந்துள்ளனர். இந்தக் காரணத்துக்காக, நிலக்கரித் துறையில் முதலீடு வரவில்லை. அதன் செயல் திறனும் கேள்விக்குரியதாக இருந்தது. ஒரு மாநிலத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் தள்ளி உள்ள வேறு மாநிலத்துக்கு அனுப்பப்படும். வெட்டி எடுக்கப்படும் மாநிலத்தில் நிலக்கரிப் பற்றாக்குறை இருக்கும். அது குழப்பங்கள் மிகுந்ததாக இருந்தது.

நண்பர்களே, 2014க்குப் பிறகு, இந்தச் சூழ்நிலையை மாற்றுவதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. யாரும் நினைத்துப் பார்த்திராத, நிலக்கரித் தொடர்புநிலைத் திட்டத்தை நாங்கள் அமல்படுத்தினோம். அதுபோன்ற நடவடிக்கைகள் நிலக்கரி துறைக்கு உத்வேகம் அளித்தன. பல தசாப்தங்களாக சிந்தனை நிலையில் இருந்து வந்த பல சீர்திருத்தங்களை சமீபத்தில் நாங்கள் உருவாக்கியுள்ளோம். இப்போது நிலக்கரித் துறையை போட்டி, மூலதன, பங்கேற்பு மற்றும் தொழில்நுட்ப ஈடுபாட்டுக்குத் திறந்து விடலாம் என்ற பெரிய முடிவை நாங்கள் எடுத்திருக்கிறோம். தனியார் சுரங்கத் துறையில் ஈடுபடும் புதிய நிறுவனங்களுக்கு நிதி கிடைப்பதில் பிரச்சினை ஏற்படாதிருப்பதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்படுகிறது.

நண்பர்களே, வலுவான சுரங்கம் மற்றும் கனிமப் பொருள்கள் துறை இல்லாமல் தற்சார்பு என்பது சாத்தியம் கிடையாது; ஏனெனில் கனிமப் பொருள்களும், சுரங்கத் தொழிலும் தான் நமது பொருளாதாரத்தின் முக்கிய தூண்களாக உள்ளன.

இந்தச் சீர்திருத்தங்களுக்குப் பிறகு, நிலக்கரி உற்பத்தியும், ஒட்டுமொத்த நிலக்கரித் துறையும் தற்சார்பு பெற்றதாகிவிடும். இப்போது நிலக்கரித் துறையில் சந்தைக்கு அனுமதி தரப்பட்டுள்ளது; எனவே தங்களின் தேவைக்கு ஏற்ப எந்தத் துறையும் அதை வாங்கிக் கொள்ளலாம்.

நண்பர்களே, இந்தச் சீர்திருத்தங்கள் நிலக்கரித் துறைக்கு பலன் தருவதாக மட்டுமின்றி, மற்ற துறைகளுக்கும் பலன்கள் தருவதாக இருக்கும். நிலக்கரி உற்பத்தியை நாம் அதிகரிக்கும்போது, ஸ்டீல், அலுமினியம், உரங்கள் மற்றும் சிமெண்ட் துறைகளிலும் உற்பத்தி அதிகரிப்பு, மின் உற்பத்தி அதிகரிப்பு என்ற ஆக்கபூர்வமான தாக்கம் இருக்கும். அதிர்ஷ்டவசமாக, இந்தியாவில், நிலக்கரி, இரும்பு, பாக்சைட் மற்றும் இதர கனிமப் பொருள்களின் படிமங்கள், ஒன்றுக்கொன்று மிக அருகில் அமைந்துள்ளன. எனவே, கனிமவளத் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் நிலக்கரி சுரங்கச் சீர்திருத்தங்களின் பலத்தில் இருந்து உருவாகியுள்ளன.

நண்பர்களே,

வணிக ரீதியிலான நிலக்கரிச் சுரங்கத்துக்கான ஏலத்தை இன்று தொடங்குவது, அது தொடர்பான துறையில் உள்ள அனைவருக்குமே வெற்றிக்கான வாய்ப்புகளை வழங்குவதாக உள்ளது. தொழிற்சாலைகள், நீங்கள், உங்கள் தொழில்கள், முதலீடுகள் புதிய ஆதார வளங்கள் மற்றும் சந்தைகளைப் பெறும். மாநில அரசுகளுக்கு அதிக வருமானம் கிடைக்கும். நாட்டின் மக்கள் தொகையில் பெரும் பகுதியினருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதாவது, எல்லாத் துறைகளிலும் இது ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

நண்பர்களே, நிலக்கரி சீர்திருத்தங்களை அமல் செய்யும்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியாவின் பங்களிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நிலக்கரியில் இருந்து எரிவாயு தயாரிக்க நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். நிலக்கரியை வாயுவாக்குவது போன்ற நடவடிக்கைகள் காரணமாக சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். நிலக்கரி வாயு போக்குவரத்துத் துறையிலும் சமையலுக்கும் பயன்படுத்தப்படும். யூரியா மற்றும் ஸ்டீல் ஆகிய துறைகளில் உற்பத்தித் தொழிற்சாலைகள் அதிகரிக்கும். 2030 ஆம் ஆண்டுக்குள் 100 மில்லியன் டன் நிலக்கரியை வாயுவாக்க நாம் இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். இதற்காக 4 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதற்காக சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும்  எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

நமது பழங்குடிப் பகுதிகளான கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவை வளர்ச்சிக்கானத் தூண்களாக ஆக்க இந்த நிலக்கரித் துறை சீர்திருத்தங்கள் ஒரு பெரிய வாய்ப்பாகும். நிலக்கரி மற்றும் தாதுக்களை கொண்டுள்ள நமது நாட்டின் பகுதிகள் தேவையான அளவு வளர்ச்சியையும் வளத்தையும் எட்ட முடியவில்லை. வளரத் துடிக்கும் மாவட்டங்களை அதிகம் கொண்டுள்ள நமது நாட்டின் பகுதியும் இது தான். இந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் வளர்ச்சியை விரும்புகிறார்கள், ஆனாலும் வளர்ச்சியில் பின்தங்கியே உள்ளனர்.

நாட்டில் உள்ளவளரத் துடிக்கும் 16  மாவட்டங்கள் அதிக அளவிலான நிலக்கரியைக் கொண்டுள்ளன என்பதை நீங்கள் நினைத்துப் பாருங்கள்; ஆனால் இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் இதனால் போதுமான பலனை அடையவில்லை. இந்தப் பகுதிகளில் உள்ள நமது நண்பர்கள் வெகு தொலைவில் உள்ள மாநகரங்களுக்கு வேலைக்காக இடம் பெயர வேண்டியிருக்கிறது.

வணிகச் சுரங்கப் பணிகளுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் உள்ள பெரும் மக்கள் தொகைக்கு அவர்களின் வீடுகளுக்கு அருகிலேயே வேலைவாய்ப்பை வழங்குவதற்கும், பல்வேறு பிரச்சினைகளைக் குறைப்பதற்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

இந்த நிலக்கரிச் சுரங்கங்களின் இன்றைய ஏலம் மட்டுமே இந்தத் துறையில் லட்சக் கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கப் போதுமானது. அதோடு மட்டுமில்லாது, நிலக்கரியைப் பிரித்தெடுத்தலில் இருந்து போக்குவரத்து வரையில் தேவைப்படும் உள்கட்டமைப்பும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இத்தகைய உள்கட்டமைப்பை உருவாக்க ரூ 50,000 கோடியை செலவு செய்ய அரசு சமீபத்தில் முடிவெடுத்துள்ளது.

நண்பர்களே, நிலக்கரித் துறையின் சீர்திருத்தங்களும், முதலீடுகளும் மக்களின், குறிப்பாக நமது ஏழை மற்றும் பழங்குடி சகோதரசகோதரியினரின் வாழ்க்கையை, எளிதாக்குவதற்குப் பெரிதும் பங்காற்றும். நிலக்கரி உற்பத்தி மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாய் அங்குள்ள பொது நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும். மாவட்டக் கனிம நிதியில் இருந்து மாநிலங்களுக்கும் தொடர்ந்து உதவி கிடைக்கும். இந்தத் தொகையின் பெரும் பங்கு நிலக்கரிச் சுரங்கங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அத்தியாவசியத் தேவைகளின் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. கனிமங்கள் அதிகமுள்ள பகுதிகளில் வாழும் மக்களை வளப்படுத்தும் நோக்கத்தை நாங்கள் பின்பற்றுகிறோம். இன்று எடுக்கப்படும் முயற்சிகள் இந்த நோக்கத்துக்குப் பெரிதும் உதவும்.

நண்பர்களே, பொருளாதார நடவடிக்கைகள் சகஜ நிலைக்கு வேகமாகத் திரும்பி வரும் சமயத்தில் இந்த ஏலம் நடைபெறுகிறது. கொவிட்-19-க்கு முந்தைய அளவுகளில் நுகர்வும், தேவையும் வேகமாக எட்டி வருகின்றன. புதியதொரு தொடக்கத்துக்கு  இதைத் தவிர வேறு சிறந்த நேரம் இருக்க முடியாது.

மின்சார நுகர்வும், பெட்ரோலியப் பொருள்களுக்கானத் தேவையும் மே மாதத்தின் கடைசி வாரத்திலும், ஜூன் மாதத்தின் முதல் வாரத்திலும் பெருமளவு அதிகரித்துள்ளன. ஏப்ரலுடன் ஒப்பிடுகையில், 200 சதவீத வளர்ச்சியை மின்வழி ரசீதுகள் (Eway bills) அடைந்துள்ளன. பிப்ரவரி மாத அளவுகளின் 70 சதவீதத்தை ஜூன் மாத சுங்க வசூல் ஏற்கனவே எட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், ரயில்வே சரக்குகளின் போக்குவரத்தும் 26 சதவீத வளர்ச்சியை மே மாதத்தில் எட்டியுள்ளது. அளவுகளிலும், மதிப்பிலும் மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வளர்ச்சியைக் கண்டு வருகின்றன.

நண்பர்களே, கிராமப்புறப் பொருளாதாரமும் வளர்ச்சி பெற ஆரம்பித்துள்ளது. சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு கரீஃப் பருவத்தில், கரீஃப் பயிர்களைப் பயிரிடும் பகுதி 13 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கோதுமை உற்பத்தியும், கொள்முதலும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளன. சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு இதுவரை கொள்முதல் செய்யப்பட்டுள்ள கோதுமை 11 சதவிகிதம் அதிகமாகும். அதாவது, விவசாயிகளிடம் அதிக அளவு பணம் சென்றடைந்துள்ளது என்பதே இதற்குப் பொருள். இந்தியப் பொருளாதாரம் மீண்டெழுந்து முன்னேறிச் செல்லத் தயாராக உள்ளது என்பதையே இவை அனைத்தும் குறிக்கின்றன

நண்பர்களே,

இந்தியா இதைவிடப் பெரிய நெருக்கடிகளிலிருந்து எல்லாம் மீண்டு வந்திருக்கிறது. அதேபோல இந்த நெருக்கடியிலிருந்தும் இந்தியா மீண்டு வரும். இந்தியர்களாகிய நாம் அனைவரும், இலட்சக்கணக்கான நுகர்வோர்கள் என்றால், நாம் இலட்சக்கணக்கான உற்பத்தியாளர்களும் ஆவோம். இந்தியா வெற்றி பெறுவதும் வளர்ச்சியுறுவதும் நிச்சயம். நம்மால் சுயசார்பு இந்தியாவாக உருவாக முடியும்.

நினைவில் கொள்ளுங்கள். சில வாரங்களுக்கு முன்பு வரை நாம் என்-95 முகக்கவசங்கள், கொரோனா பரிசோதனை உபகரணங்கள், தனிநபர் பாதுகாப்புக் கவசங்கள், செயற்கை சுவாசக் கருவிகள் போன்றவற்றை இறக்குமதி செய்து வந்தோம். இப்போது “இந்தியாவிலேயே தயாரிப்போம்” என்ற திட்டத்தின் மூலமாக இந்தியாவின் தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்கிறோம். விரைவிலேயே நாம் மருத்துவப் பொருள்களுக்கான மிக முக்கியமான ஏற்றுமதியாளர்களுள் ஒருவராக உருவாகிவிடுவோம். உங்களுடைய நம்பிக்கையும், மன உறுதியையும் தளரவிடாமல் வைத்திருக்க வேண்டும்.. நம்மால் அதைச் செய்ய முடியும். நாம் நிச்சயமாக சுயசார்பு இந்தியாவாக உருவெடுப்போம்.

நம்மால் சுயசார்பு இந்தியாவை உருவாக்க முடியும்!

சுயசார்பு இந்தியாவை நோக்கி 130 கோடி இந்தியர்களால் தொடங்கப்பட்ட இந்தப் பயணத்தில் நீங்கள் எல்லோரும் மிக முக்கியமான துணைகள். வாருங்கள். இந்தியாவை முன்னேறிச் செல்லச் செய்வோம். இந்தியாவை சுயசார்பு இந்தியாவாக உருவாக்குவோம். நிலக்கரித் துறையில் மிக முக்கியமான இந்தத் தொடக்கம் குறித்து உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

ஒரு சிலவற்றைச் செய்து வரலாற்றை மாற்றக் கூடிய வாய்ப்பு, வாழ்க்கையில் ஒரு சில முறை தான் கிடைக்கும். மக்களை நலப்படுத்தக் கூடிய வகையில் வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு இன்றைக்கு, இந்திய தொழில் உலகிற்கும், சேவைத் துறைக்கும் கிடைத்துள்ளது. நாம் இந்த வாய்ப்பை நழுவ விட்டு விடக்கூடாது. வாருங்கள். நாம் இந்தியாவை முன்னேறச் செய்து இந்தியாவை சுயசார்பு கொண்ட நாடாக உருவாக்குவோம்

நண்பர்களே,

இன்று உங்களுடன் இருக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது இது நிலக்கரி தொடர்பான விஷயம் தான் என்றாலும், நாம் வைரங்களைப் பற்றிக் கனவு காண வேண்டும். நிலக்கரித் துறையில் மிக முக்கியமான இந்தத் தொடக்கத்திற்கு மீண்டும் உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். குறிப்பாக, பொதுமுடக்கக் காலத்தைப் பயனுள்ள முறையில் உபயோகித்து, இந்த மொத்தத் துறையின் அனைத்து நுணுக்கங்களையும் படித்ததற்காக, என்னுடைய அமைச்சரவை சகா திரு. பிரகலாத் ஜோஷி மற்றும் அவரது குழுவினருக்கு எனது பாராட்டுக்கள். தேசத்திற்கு எவ்வாறு உதவ முடியும் என்பதற்கான புதிய வழிகளைக் கண்டறிந்ததற்காகவும், மிகச் சிறந்த தலைமைப் பணியாற்றியதற்காகவும் திரு பிரகலாத் ஜோஷி, அவரது செயலர், அவர்களது குழுவினர் ஆகியோருக்கு இன்று எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இது ஒரு மிகச் சிறிய நிகழ்ச்சி என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. திரு பிரகலாத் அவர்களே, சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான மிக வலிமையான அடித்தளத்தை இன்று நீங்கள் அமைத்திருக்கிறீர்கள். எனவே உங்களுக்கும், உங்களது குழுவினருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்!.

இன்று இங்கு குழுமியுள்ள எனது தொழில்துறை நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் நான் உறுதி கூற விரும்புகிறேன்: நான் உங்களுடன் இருக்கிறேன். நீங்கள் நாட்டு நலனுக்காக இரண்டடி எடுத்து வைத்தீர்கள் என்றால், நான் உங்களுடன் இணைந்து நான்கு அடிகள் எடுத்து வைக்கத் தயாராக இருக்கிறேன். இந்த வாய்ப்பை நழுவவிட வேண்டாம். மீண்டும் உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். நன்றி!