Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் மோடி தொடங்கிய சாம்பியன்ஸ் தளம்; சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு அதிகாரமளிக்கும் தொழில்நுட்பத் தளம்


 

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சாம்பியன்ஸ் என்னும் தொழில்நுட்பத் தளத்தை தொடங்கி வைத்தார். உற்பத்தி மற்றும் தேசிய வலிமையை அதிகரிப்பதற்கான நவீன நடைமுறைகளைக் கொண்ட இணக்கமான செயலி மற்றும் உருவாக்கத்துக்கு இது தளமாக விளங்கும்.

பெயரைப் போலவே, சிறுதொழில் பிரிவுகள் தங்கள் குறைபாடுகளைத் தீர்த்துக்கொள்ளுதல், ஊக்குவித்தல், ஆதரவளித்தல், உதவுதல் மற்றும் கைதூக்கி விடுதல் ஆகியவற்றின் மூலம் அவற்றைப் பெரிய தொழில்களாக்கும் வகையிலான அடிப்படையை இந்தத் தளம் கொண்டிருக்கிறது. சிறு, குறு, நடுத்தரத்தொழில் அமைச்சகத்தின் உண்மையான ஒற்றை நிலை இடமாக இது அமைந்துள்ளது.

தகவல், தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள இந்த முறை, சிறு, குறு, நடுத்தரத்தொழில்களை தற்போதைய இடர்மிகு சூழ்நிலையிலிருந்து வெளிக்கொணர உதவுவதுடன், தேசிய. சர்வதேச அளவில் சாம்பியன்களாக மாற கைதூக்கி விடக் கூடியதும் ஆகும்.

சாம்பியன்ஸ் தளத்தின் விரிவான நோக்கங்கள்;

  1. குறை தீர்ப்பு; நிதி, மூலப்பொருள், தொழிலாளர்கள், ஒழுங்குமுறை அனுமதிகள் உள்ளிட்ட சிறு, குறு, நடுத்தரத்தொழில்களின் பிரச்சினைகளுக்கு, குறிப்பாக கொவிட் தொற்றால் ஏற்பட்டுள்ள சிரமமான சூழ்நிலைக்குத் தீர்வு காண்பது ;
  2. புதிய வாய்ப்புகளைக் கைப்பற்ற அவர்களுக்கு உதவுதல்; மருத்துவ உபகரணங்கள், பிபிஇ எனப்படும் தனிநபர் பாதுகாப்பு சாதனங்கள், முகக்கவசங்கள், போன்ற துணைப்பொருள்களை உற்பத்தி செய்வது மற்றும் அவற்றை தேசிய, சர்வதேச சந்தைகளில் விநியோகிப்பது;
  3. திறமையை அடையாளம் கண்டு ஊக்குவித்தல்; அதாவது, தற்போதைய சூழ்நிலையில் நிலைத்து நிற்கக் கூடிய, தேசிய, சர்வதேச சாம்பியன்களாக உருவெடுக்கக் கூடிய சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் ஆற்றலைக் கண்டறிதல்;

இது தொழில்நுட்ப ஆதரவுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை மற்றும் மேலாண்மைத் தகவல் முறையாகும். தொலைபேசி, இணையதளம், காணொளிக் காட்சி உள்ளிட்ட தகவல் மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்களுடன், செயற்கை நுண்ணறிவு, தரவு ஆய்வு மற்றும் எந்திரநுட்பக் கற்றல் ஆகியவற்றை மேற்கொள்ளக் கூடிய முறையாகும். இந்திய அரசின் முக்கிய குறை தீர் தளமான சிபிகிராம்ஸ் மற்றும் சிறு, குறு , நடுத்தரத்தொழில் அமைச்சகத்தின் இதர இணையதளம் சார்ந்த வழிமுறைகளுடன் துல்லிய அடிப்படையில் இது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பக் கட்டமைப்பு முழுவதும் தேசிய தகவலியல் மையத்தின் உதவியுடன் எந்தவித செலவும் இன்றி உருவாக்கப்பட்டுள்ளது. இதே போல, அமைச்சகத்தின் பொருள்கள் காப்பு அறை ஒன்று, மிகக்குறுகிய நேரத்தில் உள்கட்டமைப்பாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்த முறையின் பகுதி, ஆரக்கால்கள் மற்றும் மையப்பகுதி எனப்படும் ஹப் அன்ட் ஸ்போக்ஸ் மாதிரியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. புதுதில்லியில் உள்ள சிறு, குறு, நடுத்தரத்தொழில் அமைச்சகத்தின் செயலர் அலுவலகத்தில் ஹப் எனப்படும் மையம் அமைந்துள்ளது. ஸ்போக்ஸ் எனப்படும் அமைப்புகள் மாநிலங்களின் பல்வேறு அலுவலகங்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தரத்தொழில் அமைச்சகத்தின் நிறுவனங்களில் செயல்படும். இதுவரை, 66 மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் உருவாக்கப்பட்டு இயங்கி வருகின்றன. அவை காணொளிக் காட்சி மூலம் இணைக்கப்பட்டுள்ளதுடன், சாம்பியன்ஸ் தளத்துடனும் இணைக்கப்பட்டுள்ளன. விரிவான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு, அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில், சிறு, குறு, நடுத்தரத்தொழில்கள், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரியும் கலந்து கொண்டார்.