மத்திய அமைச்சரவைக் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இதில், சுங்கத் துறை விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்படவும், பரஸ்பரம் உதவி செய்யவும், இந்தியாவுக்கும், கத்தாருக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளவும், ஒப்பந்தத்தை இறுதி செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இது இந்தியாவுக்கும், கத்தாருக்கும் இடையே சுங்கத் துறை விவகாரங்களில் ஒத்துழைப்புக்காக இருதரப்பு ஒப்பந்தம் மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சுங்கத் துறையில் குற்றச்செயல்கள் குறித்து விசாரணை நடத்தவும், குற்றங்களைத் தடுக்கவும், ஏற்கனவே உள்ள தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் ஒப்பந்தம் உதவும். மேலும், வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையே சரக்குகள் வர்த்தகத்துக்கு சிறப்பான ஒப்புதல் வழங்குவதை உறுதிப்படுத்தும்.
பின்னணி
இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான வர்த்தக நாடாக கத்தார் விளங்குகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், பல ஆண்டுகளாக வலுவடைந்து வருகிறது. இருதரப்பு வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சுங்கச் சட்டங்களை சரியாக அமல்படுத்தவும், சுங்கக் குற்றங்களை தடுக்கவும், விசாரணை நடத்தவும், வர்த்தகத்தை மேம்படுத்தவும், இரு நாடுகளின் சுங்கத் துறையினர் இடையே தகவல்கள் மற்றும் உளவுத் தகவல்களை பரிமாறிக் கொள்ள சட்ட வழிமுறைகளை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது. பரஸ்பர விவாதங்களுக்குப் பிறகு, ஒப்பந்தத்துக்கான வரைவு இறுதிசெய்யப்பட்டது. இதில், இந்தியாவின் சுங்கத் துறை பிரச்சினைகள் மற்றும் தேவைகள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, சுங்க மதிப்பை அறிவித்ததை சரிசெய்வது, பொருட்கள் எங்கிருந்து வந்தது என்பதற்கான சான்றிதழ்களை உறுதிப்படுத்துவது, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் செய்யப்படும் பொருட்கள் குறித்து விளக்குவது ஆகியவற்றில் தகவல் பரிமாற்றத்துக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.