பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அசாம், மேகாலயா மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் உள்ள பிரதமர் விவசாயிகள் நலநிதித் திட்டப் பயனாளிகளுக்கு ஆதார் கட்டாயம் என்ற விதிமுறை தளர்வை அடுத்த ஆண்டு 2021 மார்ச் மாதம் 31ம் தேதி வரை நீட்டித்து ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் விவசாய நலநிதித் திட்டம் 2019 பிப்ரவரி 24-ம் தேதி பிரதமரால் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள அனைத்து சாகுபடி நில உரிமை கொண்ட விவசாயக் குடும்பங்களுக்கு வருமான ஒத்துழைப்பு வழங்குவதை சில விதிவிலக்குகளுடன் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டதாகும். இத்திட்டத்தின் கீழ், ரூ.2000 வீதம், நான்கு மாதங்களுக்கு ஒரு முறை மூன்று தவணைகளாக, ஆண்டுக்கு ரூ. 6000 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. 2018ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் இது அமல்படுத்தப்பட்டது. 2019 டிசம்பர் 1 முதல், பிரதமர் கிசான் வலைதளத்தில், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களால் பதிவேற்றப்பட்ட ஆதார் தரவுகளின் அடிப்படையில், பயனாளிகளுக்கு இது வழங்கப்படுகிறது. அசாம், மேகாலயா மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் ஆதார் பயன்பாடு சிறு அளவிலேயே இருப்பதால், அதைப் பயனாளிகளுக்குக் கட்டாயமாக்குவதற்கான சலுகை விலக்கு 2020 மார்ச் 31 வரை அளிக்கப்பட்டிருந்தது.
—————————————