Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மனிதகுலத்திற்கு சேவை செய்யும் அமைப்புகளின் அர்ப்பணிப்புக்கும், உறுதிக்கும் பிரதமர் பாராட்டு.


சமூக நலனுக்காக சேவை புரியும் அமைப்புகளின் பிரதிநிதிகளோடு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் உரையாடினார்.

கொவிட்-19 சவாலை எதிர்கொள்வதில் ஒட்டுமொத்த தேசமும் மிகுந்த ஒற்றுமையையும், உறுதியையும், பொறுமையையும் காட்டுகிறது என்று பிரதமர் கூறினார். ஏழைகளுக்கும், பின்தங்கியுள்ளோருக்கும் சேவை செய்வதே நாட்டுக்கு சேவை செய்ய சிறந்த வழி என்று மகாத்மா காந்தி கூறியதை நினைவு கூர்ந்த பிரதமர், காணொலியில் கலந்து கொண்ட மனிதகுலத்துக்காக சேவை செய்யும் அமைப்புகளின் அர்ப்பணிப்புக்கும், உறுதிக்கும் பாராட்டு தெரிவித்தார்.

மனிதநேய அணுகுமுறை, அதிகமான மக்களை அணுகுதல், சேவை மனப்பான்மை ஆகிய மூன்று சிறப்பம்சங்களை இந்த அமைப்புகள் பெற்றுள்ளதாகவும், இதனால் அவர்கள் நம்பகத்தன்மையோடு விளங்குவதாகவும் பிரதமர் தெரிவித்தார். நாடு வரலாறு காணாத ஒரு சிக்கலை சந்தித்துக் கொண்டிருப்பதாகவும், இந்த அமைப்புகளின் சேவையும், வளங்களும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தேசத்துக்கு தேவைப்படுவதாகவும் அவர் கூறினார். ஏழைகளுக்கு அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்வதில் இந்த அமைப்புகள் பெரும் பங்காற்றலாம் என கருத்து தெரிவித்த அவர், அவை தங்களிடம் உள்ள மருத்துவ வசதிகளையும், தன்னார்வலர்களையும் நோயாளிகளுக்கும், சேவை தேவைப்படுவோருக்கும் அர்ப்பணிக்கலாம் என்று கூறினார். சவாலை எதிர்கொள்ள குறுகிய கால நடவடிக்கைகளும், நீண்ட காலப் பார்வையும் தேசத்துக்குத் தேவைப்படுகிறது என அவர் வலியுறுத்தினார்.

மூடப் பழக்கவழக்கங்கள், மூடநம்பிக்கைகள் மற்றும் தவறான தகவல்களை எதிர்த்து செயல்படுவதில் இந்த அமைப்புகளுக்கு பெரும் பங்கு இருப்பதாக பிரதமர் மேலும் கூறினார். அதீதமான நம்பிக்கையின் காரணமாக மக்கள் பொதுவான இடங்களில் கூடி, சமூக இடைவெளி விதிகளை மீறுவதாகக் கூறிய அவர், வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு சமூக விலகலின் அவசியம் குறித்த விழிப்புணர்வை மேலும் பரவ செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

கடினமான சூழ்நிலையை திறமையாகக் கையாளும் பிரதமரின் தலைமைக்கு சமுக சேவை அமைப்புகளின் பிரதிநிதிகள் பாராட்டுத் தெரிவித்தனர். வைரஸ் பரவலை தடுப்பதில் சிறப்பான பங்காற்றிய அரசின் செயல்மிகு நடவடிக்கைகளை அவர்கள் புகழ்ந்தனர். பிஎம் கேர்ஸ் (PM-CARES) நிதிக்கு தங்களின் ஆதரவை தெரிவித்த அவர்கள், தங்களின் மொத்த ஊழியர் பலமும் கடினமான இந்த நேரத்தில் நாட்டுக்கு சேவை செய்ய அர்ப்பணிக்கப்படும் என உறுதியளித்தனர். டிஜிட்டல் தளங்களில் விழிப்புணர்வு, அத்தியாவசியப் பொருள்கள், உணவுப் பொட்டலங்கள், சானிடைசர்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ உதவிகள் ஆகிய சேவைகளை வழங்கி தற்போதைய சவாலை அவர்கள் எதிர்க்கொள்ளச் செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.

விழிப்புணர்வைப் பரப்புதல், ஏழைகளுக்கும், உதவி தேவைப்படுவோருக்கும் அடிப்படை வசதிகள் செய்து தருதல், மருத்துவ வசதிகள் அளித்தல், கொவிட்-19-ஆல் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு உதவ தன்னார்வலர்களை அர்ப்பணித்தல் ஆகியவற்றின் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். தவறான தகவல்கள் பரவுவதை எதிர்கொள்ள மருத்துவ மற்றும் அறிவியல் பூர்வ அறிவுரைகள் வழங்குவதின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். பெரும் பரவல் நோயின் சவாலை எதிர்கொள்ள இணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் அவர் அடிக்கோடிட்டார்.

பிரதமரின் ஆலோசகர், நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி ஆகியோர் இந்த உரையாடலில் பங்கேற்றனர்.

*****