பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அபுதாபியின் இளவரசரான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் தொலைபேசியில் உரையாடினார்.
இரு தலைவர்களும் கொரானா வைரஸ் (COVID-19) தொற்றுநோய் அந்தந்த நாடுகளில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்தும் அதற்கு அவர்களின் அரசாங்கங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்த தகவல்களையும் கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டனர். மேலும், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில், அடுத்த சில வாரங்கள் முக்கியமானதாக இருக்கும் என்றும் அதற்கு அனைத்து நாடுகளின் ஒருங்கிணைந்த ஆக்கப்பூர்வமான செயல் முயற்சிகள் தேவை என்றும் ஒப்புக் கொண்டனர். இந்த சூழலில், கொரானா வைரஸ் தொற்றுநோய் பற்றி விவாதிக்க, ஜி 20 தலைவர்களிடையே இணைய மாநாடு ஏற்பாடு செய்ததை அவர்கள் பாராட்டினர்.
இரு தலைவர்களும், இருதரப்பு உறவும் வளமோடும், வலிமையோடும் இணைந்திருக்க வேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். தற்போதைய சூழ்நிலையில் இரு நாட்டு அதிகாரிகளிடையே வழக்கமான ஆலோசனைகளைப் பரிமாறிக் கொள்ள அவர்கள் ஒப்புக்கொண்டனர். குறிப்பாக ஏற்றுமதியும், வர்த்தகமும் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்தனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் இளவரசர், அந்நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்காற்றிய இருபது லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்களின் நலத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று பிரதமரிடம் உறுதியளித்தார். தற்போதைய சூழ்நிலையில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு குறித்து தனிப்பட்ட கவனம் செலுத்தியதற்காக பிரதமர், இளவரசருக்கு நன்றி தெரிவித்தார்.
இளவரசர் மற்றும் ஒட்டுமொத்த அரச குடும்பத்தினருக்கும், அனைத்து அரபு எமிரேட் குடிமக்களும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பிரதமரின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்ட இளவரசர், தனது வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டார்.
****