நாரிசக்தி விருது பெற்றவர்களுடன் தலைநகரில் இன்று பிரதமர் கலந்துரையாடினார். லே, காஷ்மீர், ஆந்திரப்பிரதேசம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 15 பெண் சாதனையாளர்கள் தங்களது முயற்சிகள், போராட்டங்கள் மற்றும் எவ்வாறு குறிக்கோளை அடைந்தோம் என்பது குறித்து பிரதமருடன் பகிர்ந்து கொண்டனர்.
93 வயதில் தடகள விளையாட்டைத் தொடங்கி, போலந்தில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன் போட்டியின் தடகளப் பிரிவில் 4 தங்கப்பதக்கங்களை வென்ற 103 வயதாகும் திருமதி மன் கவுர், பிரதமரை சந்தித்த சாதனையாளர்களில் ஒருவராவார்.
ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த ஆரிஃபா ஜான், அழிந்து போன நுங்தா கைவினைக் கலையை உயிர்ப்பித்தவராவார். அழியும் நிலையில் உள்ள இந்த கைவினை கலைக்கு புத்துயிர் அளித்து, காஷ்மீரைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயிற்சி அளிப்பதில் கிடைத்த அனுபவங்களை இவர் பகிர்ந்து கொண்டார்.
இந்திய விமானப் படையின் முதலாவது பெண் போர் விமானிகளான மோகனா சிங், பாவனா காந்த் & அவானி சதுர்வேதி ஆகியோரும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். விமானப்படையின் போர்ப்பிரிவில் சோதனை அடிப்படையில் பெண்களை சேர்த்துக் கொள்ள மத்திய அரசு முடிவெடுத்த பிறகு, இவர்கள் மூவரும் இந்திய விமானப்படையின் போர் விமானப் படைப்பிரிவில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இவர்கள் 2018-ல் மிக் 21 விமானத்தை தனியாக இயக்கியதன் மூலம் இந்தியாவின் முதலாவது பெண் போர் விமானிகள் என்ற சிறப்பைப் பெற்றனர்.
ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் விவசாயியும், கிராமப்புற தொழில் முனைவோருமான பாதலா பூதேவி, காளான் சாகுபடி செய்வதால், ‘காளான் பெண்மணி’ என்றழைக்கப்படும் பீகாரின் முங்கேர் பகுதியைச் சேர்ந்த பீனா தேவி ஆகியோரும் விவசாயம் மற்றும் விளைபொருட்களை சந்தைப்படுத்துவது குறித்த அனுபவங்களை பிரதமருடன் பகிர்ந்து கொண்டனர்.
உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளியான கலாவதி தேவி, அந்த மாவட்டத்தில் திறந்தவெளி கழிப்பிடங்களை அகற்றுவதில் முக்கியப் பங்காற்றியவராவார். கான்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கழிவறைகளைக் கட்டுவதற்கு இவரே காரணம். திறந்தவெளி கழிப்பிடங்களால் எத்தகைய தீயவிளைவுகள் ஏற்படுகிறது என்று வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியது குறித்தும், திறந்தவெளி கழிப்பிடங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக கான்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்களில் நீண்ட நேரம் பயணம் செய்தது குறித்த அனுபவங்களையும் இவர் பிரதமருடன் பகிர்ந்து கொண்டார்.
ஜார்க்கண்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான சாமி முர்மு, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை இணைத்து, 2,500 குழுக்களை அமைத்து, தரிசு நிலங்களில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
கேரளாவைச் சேர்ந்த 98 வயதாகும் காத்யாயனி அம்மா, கேரள எழுத்தறிவு இயக்கத்தின் ஆகாஷர லக்ஷம் திட்டத்தின் மூலம் ஆகஸ்ட் 2018-ல், நான்காம் வகுப்புக்கு இணையான தேர்வில் தேர்ச்சிப் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். 98% மதிப்பெண் பெற்ற இவர், முதலிடம் பெற்று தேர்ச்சிப் பெற்றுள்ளார்.
விருது பெற்றவர்களிடம் உரையாற்றிய பிரதமர், நாரி சக்தி விருது பெற்றவர்கள் சமுதாயத்தை உருவாக்குவதில் அளப்பரிய பங்காற்றியிருப்பதுடன், நாட்டிற்கு ஊக்கமளிக்கக் கூடியவர்கள் என்றார்.
பெண்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பின்றி, திறந்தவெளி கழிப்பிடமில்லாத நிலையை நாடு அடைந்திருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். அதேபோன்று ஊட்டச்சத்து பற்றாக்குறையைப் போக்குவதிலும் பெண்கள் பெரும் பங்கு வகித்திருப்பதாக அவர் கூறினார்.
தண்ணீர் சேமிப்பு இயக்கம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், ஜல்ஜீவன் இயக்கத்தில் பெண்களின் பங்களிப்பு பெருமளவிற்கு தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.
சாதனையாளர்களுக்கு பாராட்டுத் தெரிவித்த அவர், இவர்கள் ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஊக்கமளிக்கக் கூடியவர்கள் என்றும் தெரிவித்தார்.
PM @narendramodi interacted with the Nari Shakti Puraskar winners earlier today. pic.twitter.com/v5D7Xro4D1
— PMO India (@PMOIndia) March 8, 2020