Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

“தேர்வுக்கான கலந்துரையாடல் 3.0” நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்


தேர்வுக்கான கலந்துரையாடல் 3.0 நிகழ்ச்சியை ஒட்டி புதுடெல்லி தல்கதோரா அரங்கில் மாணவர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். மாற்றுத் திறனாளிகள் 50 பேரும் இதில் கலந்து கொண்டனர். 90 நிமிடங்கள் நீடித்த இந்தக் கலந்துரையாடலின் போது, பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமரிடம் மாணவர்கள் ஆலோசனைகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டனர். இந்த ஆண்டும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் வாழும் இந்திய மாணவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

புத்தாண்டும், புதிய தசாப்தமும் வளமாக அமைய மாணவர்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். இந்த தசாப்தத்தின் முக்கியத்துவம் பற்றி விவரித்த பிரதமர், இப்போது பள்ளிப் படிப்பின் இறுதியாண்டில் இருக்கும் மாணவர்களின் தோள்களில் தான் புதிய தசாப்தத்தின் நம்பிக்கைகளும், உயர் லட்சியங்களும் இருக்கின்றன என்று கூறினார்.

இந்த தசாப்தத்தில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை எதுவாக இருந்தாலும், இப்போது 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு அதில் பெரிய பங்களிப்பு இருக்கும். தேசம் புதிய உச்சங்களைத் தொடுவதும், புதிய நம்பிக்கைகளை எட்டுவதும் எல்லாமே இந்தப் புதிய தலைமுறையினரின் கைகளில் தான் இருக்கிறது என்று அவர் கூறினார்.

கலந்துரையாடல் தொடங்குவதற்கு முன்பு பேசிய பிரதமர், பல நிகழ்ச்சிகளில் தாம் பங்கேற்ற போதிலும், தேர்வுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பது தான் தனக்குப் பிடித்தமான விஷயமாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

பிரதமர் என்ற முறையில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியிருக்கும். அதுபோன்ற கலந்துரையாடல்களில் பல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். அவை ஒவ்வொன்றுமே புதிய அனுபவங்களைத் தருபவையாக இருக்கும். ஆனால், என் மனதுக்குப் பிடித்தமான நிகழ்ச்சி எது என்று யாராவது என்னைக் கேட்டால், அது தேர்வுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி தான் என்று சொல்வேன். ஹேக்கத்தான் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும் எனக்குப் பிடிக்கும். இந்திய இளைஞர்களின் திறமையும், சக்தியும் அங்கு வெளிப்படும் என்று அவர் தெரிவித்தார்.

ஆர்வக் குறைவு மற்றும் எண்ணங்கள் அலைமோதுவதை சமாளித்தல்:

கல்வியில் ஆர்வம் குறைவது தொடர்பாக ஒரு மாணவர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த பிரதமர், தங்களுடைய புறக் காரணிகளாலும், தங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் தர முயற்சிப்பதாலும் தான் மாணவர்கள் உற்சாகத்தை இழக்கிறார்கள் என்று கூறினார்.

உற்சாகம் குறைவதற்கான காரணத்தைக் கண்டறிந்து, அதை எப்படி கையாள்வது என்பது பற்றி சிந்திக்க வேண்டும் என்று மாணவர்களை அவர் கேட்டுக்கொண்டார். சமீபத்திய சந்திராயன் விஷயம் பற்றியும், இஸ்ரோவுக்கு தாம் சென்றிருந்தது பற்றியும் பிரதமர் குறிப்பிட்டார்.

உற்சாகப்படுத்துதல், உற்சாகத்தைக் குறைத்தல் ஆகியவை மிகவும் சாதாரணமானவை. எல்லோருக்கும் இந்த உணர்வுகள் ஏற்படும். இந்த விஷயத்தில், சந்திராயன் திட்டப் பயணத்தின் போது நான்  இஸ்ரோ சென்றிருந்ததையும், கடினமாக உழைக்கும் நமது விஞ்ஞானிகளுடன் நேரத்தை செலவிட்டதையும்  ஒருபோதும் மறக்க முடியாது என்றார் அவர்.

தோல்விகள் நமக்கு பின்னடைவுகள் அல்லது தடைகள் என்று நாம் பார்க்கக் கூடாது. வாழ்வின் ஒவ்வொரு அம்சத்துடனும் நாம் உற்சாகத்தை சேர்த்துக் கொள்ள முடியும். தற்காலிகப் பின்னடைவு என்பது, வாழ்வில் நாம் வெற்றி பெறவே முடியாது என்பதாகிவிடாது. சொல்லப் போனால், ஒரு பின்னடைவு ஏற்பட்டால், மிகச் சிறந்தது ஏதோ வரப் போகிறது என்று அர்த்தமாகும். கவலை தரும் சூழ்நிலைகளை, ஒளிமயமான எதிர்காலத்துக்கான படிக்கற்களாக மாற்ற நாம் முயற்சிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையில் 2001ல் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்து இந்தியாவை மீட்டு வெற்றிக்கு வித்திட்ட ராகுல் திராவிட், வி.வி.எஸ். லட்சுமணன் ஆகியோரை பிரதமர் உதாரணமாகக் குறிப்பிட்டார்.

இந்திய கிரிக்கெட் பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே காயமுற்ற நிலையிலும், சிறப்பாகப் பந்து வீசி இந்தியாவுக்கு வெற்றி பெற்றுத் தந்தது பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

இதுதான் நேர்மறை உற்சாகத்தின் சக்தி என்றார் அவர்.

படிப்புகளுடன் கூடுதல் திறன் செயல்பாடுகளில் ஈடுபாடு:

கல்வி மற்றும் கூடுதல் திறன் செயல்பாடுகளை எப்படி சமநிலைப்படுத்திக் கொள்வது என்ற கேள்விக்குப் பதில் அளித்த பிரதமர், மாணவப் பருவத்தில் கூடுதல் திறன் செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது என்று கூறினார்.

கூடுதல் திறன் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டாமல் போனால், ஒரு மாணவர் ரோபோ போல ஆகிவிடுவார் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால் கல்வி மற்றும் கூடுதல் திறன் செயல்பாடுகளை சமநிலைப்படுத்திக் கொள்வதற்கு, உரிய வகையில் நேரத்தைப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று யோசனை தெரிவித்தார்.

இன்றைய காலக்கட்டத்தில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இளைஞர்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு பொழுதுபோக்கு அல்லது தங்களுக்கு ஆர்வமான செயல்பாடுகளில் உரிய அளவில் ஈடுபடுவார்கள் என்று நம்புகிறேன் என்றார் அவர்.

இருந்தபோதிலும், தங்கள் குழந்தைகளின் கூடுதல் திறன் செயல்பாடுகளை பிரதானப்படுத்திக் கொள்ளக் கூடாது என்று பெற்றோர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

குழந்தையின் கூடுதல் திறன் செயல்பாட்டு  விஷயம், பெற்றோர்களால் பெருமைக்குரியதாக பேசப்படுவது நல்லதாக இருக்காது. புகழை நோக்கியதாக கூடுதல் திறன் செயல்பாடுகள் இருக்கக் கூடாது. ஒவ்வொரு மாணவரும் தனக்குப் பிடித்தமானதை தேர்வு செய்து கொள்ளட்டும் என்றார் அவர்.

மதிப்பெண்கள் தான் முக்கியமா?:

தேர்வுகளில் எப்படி அதிக மதிப்பெண்கள் பெறுவது என்றும், அது தான் எதிர்காலத்தை தீர்மானிக்கும் விஷயமாக இருக்குமா என்றும் ஒரு மாணவர் கேட்டார். அதற்குப் பதில் அளித்த பிரதமர், “பல்வேறு தேர்வுகளில் நாம் பெறும் மதிப்பெண்கள்  தான் நமது வெற்றியை தீர்மானிப்பதாக நமது கல்வி முறை இருக்கிறது. நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதில் நாம் கவனம் செலுத்தினாலும், நமது பெற்றோர்களும் அதை நோக்கித்தான் நம்மை வற்புறுத்துகிறார்கள் என்று கூறினார்.

தேர்வுகளில் கிடைக்கும் வெற்றியோ அல்லது தோல்வியோ தான் எதையும் தீர்மானிக்கிறது என்ற உணர்வுகளில் இருந்து மாணவர்கள் விடுபட வேண்டும் என்று கூறிய அவர், இன்றைய காலக்கட்டத்தில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவித்தார்.

மதிப்பெண்கள் தான் வாழ்க்கை என்றில்லை. நமது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தேர்வுகள் தீர்மானிக்கப் போவதில்லை. அது ஒரு படிக்கல், நமது வாழ்வில் முக்கியமான ஒரு படிக்கல். இதுதான் எல்லாமே என்று பிள்ளைகளிடம் கூற வேண்டாம் என்று பெற்றோர்களை நான் கேட்டுக் கொள்கிறேன். இது சரியாக வராமல் போனால், எல்லாமே போய்விட்டது என்பது போல நடந்து கொள்ள வேண்டாம். நீங்கள் எந்தத் துறைக்கும் போகலாம். எண்ணற்ற வாய்ப்புகள் இருக்கின்றன என்று பிரதமர் கூறினார்.

தேர்வுகள் முக்கியம், ஆனால், தேர்வுகள் மட்டுமே வாழ்க்கை கிடையாது. இந்த மனநிலையில் இருந்து வெளியில் வர வேண்டும் என்றார் அவர்.

கல்வியில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம்

கல்வியில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்பாடு பற்றிய கேள்விக்குப் பதில் அளித்த பிரமர், தொழில்நுட்ப முன்னேற்றம் பற்றி மாணவர்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அவற்றைத் தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் கேடுகள் பற்றியும் அறிந்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.

தொழில்நுட்பத்தைப் பார்த்து பயப்படத் தேவையில்லை. அது ஒரு நண்பன். தொழில்நுட்பம் பற்றிய அறிவு மட்டும் போதுமானதல்ல. அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதும் முக்கியம். நமது தினசரி வாழ்வில் ஓர் அங்கமாக தொழில்நுட்பம் உள்ளது. ஆனால், அதை நாம் தவறாகப் பயன்படுத்தினால், நமது மதிப்புமிக்க நேரம் மற்றும் ஆதார வளங்களை அது களவாடிவிடும் என்று அவர் தெரிவித்தார்.

உரிமைகளும் கடமைகளும்

மாணவர்களின் உரிமைகள் என்ன, தங்களின் கடமைகள் பற்றி மக்களை எப்படி உணரச் செய்வது என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர், தனிநபரின் உரிமைகள், அவருடைய கடமைகளுடன் இணைந்ததாக உள்ளது என்று கூறினார்.

ஓர் ஆசிரியரை உதாரணமாகக் கூறிய அவர், ஆசிரியர் ஒருவர் தன் கடமையை சரியாகச் செய்தால், மாணவர்களின் உரிமைகளை அவர் நிறைவு செய்து தருவதாக அர்த்தம் என்று குறிப்பிட்டார்.

இதுகுறித்து தேசத் தந்தை மகாத்மா காந்தி கூறியிருப்பதை மேற்கோள் காட்டிய பிரதமர், “அடிப்படை உரிமைகள் எதுவும் கிடையாது, அடிப்படைக் கடமைகள் தான் உண்டு என மகாத்மா கூறியுள்ளார் என்றார்.

நாம் சுதந்திரம் பெற்றதன் நூற்றாண்டு கொண்டாடப்படும் 2047 ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சியில், இன்றைய மாணவர்கள் முக்கியப் பங்காற்றுவார்கள். நமது அரசியல் சாசனத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ள சில அடிப்படைக் கடமைகளை இந்தத் தலைமுறையினர் தங்கள் தோள்களில் எடுத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார் அவர்.

பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் அழுத்தம் மற்றும் எதிர்பார்ப்புகளை எப்படி சமாளிப்பது?

பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் அழுத்தம் மற்றும் எதிர்பார்ப்புகளை எப்படி சமாளிப்பது என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர், மாணவர்களுக்கு அழுத்தம் தர வேண்டாம் என்றும், பிள்ளைகளுடன் சேர்ந்து செயல்பட வேண்டும் என்றும் பெற்றோர்களை கேட்டுக்கொண்டார்.

குழந்தைகளுக்கு அழுத்தம் தருவதில் எதிர்காலம் இல்லை, அவர்களுடன் இணைந்து செயல்படுவதில் தான் எதிர்காலம் இருக்கிறது. அவர்களுக்குள் மறைந்துள்ள திறமைகளை வெளிக் கொண்டுவரும் வகையில் பிள்ளைகளை உற்சாகப்படுத்துங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

படிப்பதற்கு உகந்த நேரம், தேர்வில் மறந்து போதல் மற்றும் பொதுத் தேர்வு அச்சம்

படிப்பதற்கு உகந்த நேரம் எது என்ற கேள்விக்குப் பதில் அளித்த பிரதமர், படிப்பதுடன் நல்ல ஓய்வும் முக்கியம் என்று கூறினார்.

“மழைவிட்ட வானம் போல இருக்கும் அதிகாலை பொழுதில் மனம் புத்துணர்வாக இருக்கும். அதுபோல வ்வொருவருக்கும் சவுகரியமாக இருக்கும் நேரத்தை அவர்கள் தேர்வு செய்து பின்பற்றலாம் என்று கூறினார்.

தேர்வில் அமர்ந்திருக்கும் போது, திடீரென எல்லாம் மறந்துவிட்டது போன்ற உணர்வு பற்றி குறிப்பிட்ட அவர், மாணவர்கள் தங்களை முழுமையாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தாங்கள் படித்திருப்பதில் மாணவர்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். எந்த அழுத்தத்துடனும் தேர்வறைக்குள் நுழைய வேண்டாம். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றி கவலைப்பட வேண்டாம். உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். நீங்கள் தயார் செய்ததன் மீது கவனம் செலுத்துங்கள் என்றார் அவர்.

எதிர்கால வாழ்க்கைக்கான வாய்ப்புகள்

எதிர்கால வாழ்க்கைக்கான வாய்ப்புகள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், தேசத்தின் வளர்ச்சியை மனதில் கொண்டு, உழைக்க வேண்டும் என்று மாணவர்களை கேட்டுக் கொண்டார்.

“பணிகள் என்பது மிகவும் முக்கியம். எல்லோரும் ஏதாவது பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். நமது பொறுப்புகளை செய்யும் போது, தேசத்துக்கும் நமது பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

தேர்வுக்கான கலந்துரையாடல் 2020 பிரதமரின் கலந்துரையாடலின் மூன்றாவது நிகழ்வை ஒட்டி 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான `குறுங்கட்டுரைப் போட்டி ஆன்லைன் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் பங்கேற்க விரும்புவோரிடம் இருந்து 2019 டிசம்பர் 2 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் www.mygov.in இணையதளம் மூலம் பெறப்பட்டன. இதில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பதிவு செய்தனர். அதில் 2.6 லட்சம் பேர் போட்டியில் பங்கேற்றனர். 2019ல் இந்தப் போட்டியில் 1.03 லட்சம் பேர் கலந்து கொண்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்கள் தேர்வுக்குத் தயாராவோம் 2020 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் திரு. நரேந்திர மோடியுடன் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

தேர்வு தொடர்பான விஷயங்கள் குறித்து சிபிஎஸ்இ மற்றும் கேந்த்ரிய வித்யாலயா பள்ளி மாணவ மாணவியருக்கான ஓவியம் மற்றும் போஸ்டர் உருவாக்கும் போட்டி நடைபெற்றது. இதில் 725 ஓவியங்கள் மற்றும் போஸ்டர்கள் பெறப்பட்டன. அவற்றில் சுமார் 50 ஓவியங்கள் மற்றும் போஸ்டர்கள் தேர்வு செய்யப்பட்டு தேர்வுக்குத் தயாராவோம் 2020 நிகழ்ச்சியில் பிரதமர் எதிரே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

*****