இந்தியாவின் புவி அறிவியல் அமைச்சகத்திற்கும், சுவீடனின் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்கத்திற்கும் இடையே துருவ அறிவியலில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையிடம் எடுத்துரைக்கப்பட்டது. சுவீடன் மன்னரும், ராணியாரும் இந்தியாவில் 2019 டிசம்பர் 2-ந் தேதி பயணம் மேற்கொண்ட போது இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தியாவும், சுவீடனும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அண்டார்டிக் ஒப்பந்தம் மற்றும் இந்த ஒப்பந்தத்திற்கான தூதரக நடைமுறை ஆகியவற்றில் கையெழுத்திட்டுள்ளன. “ஆர்க்டிக் நாடுகள்” என்று அழைக்கப்படும் 8 நாடுகளில் ஒன்றான சுவீடன் ஆர்க்டிக் சபையின் உறுப்பு நாடு ஆகும். ஆர்க்டிக் சபையில் இந்தியாவுக்கு பார்வையாளர் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் இரண்டு பகுதிகளையும் உள்ளடக்கிய துருவ மண்டலங்களில் மிகவும் தீவிரமான அறிவியல் திட்டங்களை சுவீடன் மேற்கொண்டுள்ளது. அதே போல இந்தியாவும், இரண்டு துருவ மண்டலங்களிலும் இதரப் பெருங்கடல் பகுதிகளிலும் தொடர்ச்சியான அறிவியல் ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொண்டுள்ளது.
துருவ அறிவியல் குறித்து இரு நாடுகளின் அனுபவத்தையும், நிபுணத்துவத்தையும் பகிர்ந்துக் கொள்வதற்கு இந்தியாவுக்கும். சுவீடனுக்கும் இடையேயான ஒத்துழைப்பு வகை செய்கிறது.
****