Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

107-வது இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்


107-வது இந்திய அறிவியல் மாநாட்டை, பிரதமர் திரு.நரேந்திர மோடி, பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (03.01.2020) தொடங்கி வைத்தார்.

தொடக்க உரையாற்றிய பிரதமர், “இந்தியாவின் வளர்ச்சி என்பது அதன் அறிவியல் & தொழில்நுட்பத் துறை சாதனைகளைப் பொறுத்தே அமையும் என்றார். இந்திய அறிவியல் தொழில்நுட்ப மற்றும் புதுமை கண்டுபிடிப்பு துறையில் புரட்சியை ஏற்படுத்த வேண்டியது அவசியம்”.

“இந்த நாட்டில் உள்ள இளம் விஞ்ஞானிகளுக்கு குறிக்கோளாக இருக்க வேண்டியது யாதெனில்- “கண்டுபிடித்தல், காப்புரிமை, உற்பத்தி செய்தல் மற்றும் வளம் பெறுதல் என்பதாகவே இருக்க வேண்டும்” என்பது எனது கருத்து. இந்த 4 நடவடிக்கைகளையும் மேற்கொண்டாலே, அது இந்தியாவின் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். “மக்களுக்கான மக்களின் கண்டுபிடிப்புகளே நமது ‘புதிய இந்தியா”–விற்கு வழிகாட்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“புதிய இந்தியாவிற்கு தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து வசதிகள் தேவைப்படுகிறது, எனவே நமது சமூக மற்றும் பொருளாதார துறைகளுக்கு நாம் புதிய வழிகாட்ட வேண்டும்” என்று அவர் கூறினார். வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் முக்கிய இடம் வகிப்பதாகக் குறிப்பிட்ட அவர்,  இதுவே சமுதாயத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

“தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் ஏற்படும் வளர்ச்சியால், முன்பொரு காலத்தில் ஒரு சிலரின் கவுரவமாக கருதப்பட்ட ஸ்மார்ட் தொலைபேசிகள் & இணையதள சேவை தற்போது நாட்டில் உள்ள அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கிறது. இது, அரசிடமிருந்து தாம் வெகு தொலைவில் விலகிச் சென்று விடவில்லை என்ற நம்பிக்கையை சாமானிய மனிதனுக்கும் ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் அந்த நபர், தற்போது அரசை தொடர்பு கொண்டு அவரது குரலை எடுத்துரைக்க முடிகிறது” என்றும் பிரதமர் தெரிவித்தார்.

கிராமப்புற வளர்ச்சியில் கவனம் செலுத்துமாறு இளம் விஞ்ஞானிகளை வலியுறுத்திய பிரதமர், கிராமப்புறங்களில்தான், குறைந்த செலவில் பல புதுமையான கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள ஏராளமான வாய்ப்புகள் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

“அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்: ஊரக வளர்ச்சி” என்ற 107-வது இந்திய அறிவியல் மாநாட்டின் மையக் கருத்து குறித்து சுட்டிக்காட்டிய பிரதமர், அறிவியல் & தொழில்நுட்பம் மூலமே, தேவைப்படும் மக்களை அரசுத் திட்டங்கள் சென்றடைவதாகவும் கூறினார்.

அறிவியல் மற்றும் பொறியியல் வெளியீடு தொடர்பான ஆய்வு எண்ணிக்கையில், இந்தியா தற்போது உலகளவில் 3-வது இடம் வகிப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். “அறிவியல் & தொழில்நுட்ப வெளியீடு தொடர்பான ஆய்வு எண்ணிக்கையில் இந்தியா சர்வதேச அளவில் 3-ம் இடம் பிடித்துள்ளது என்று என்னிடம் தெரிவித்தனர். 4% என்ற சர்வதேச சராசரியுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் வெளியீடு எண்ணிக்கை 10% என்ற அளவில் வளர்ந்து வருகிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதுமை கண்டுபிடிப்பு பட்டியலிலும் இந்தியா 52-வது இடத்திற்கு முன்னேறியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த 50 ஆண்டுகளில் இருந்ததை விட அரசுத் திட்டங்கள் மூலம், கடந்த 5 ஆண்டுகளில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஏராளமான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

நல் ஆளுமை என்ற இலக்கை அடைய, தொழில்நுட்பம் பெருமளவில் பயன்பட்டதாகவும் பிரதமர் கூறினார். “பிரதமரின் கிசான் திட்டத்திற்கான 3-வது தவணைத் தொகையை 6 கோடி பயனாளிகளுக்கு நேற்று விடுவிக்க நமது அரசால் முடிந்துள்ளது. ஆதார் உதவியுடனான தொழில்நுட்பங்களால்தான் இது சாத்தியமாயிற்று” என்று அவர் தெரிவித்தார். அதே போன்று, நவீன கழிப்பறைகள் கட்டுவதற்கும் ஏழைகளுக்கு மின்சார இணைப்பு வழங்குவதற்கும் தொழில்நுட்பமே உதவியதாகவும் அவர் குறிப்பிட்டார். புவிசார் குறியீடு தொழில்நுட்பம் மற்றும் தரவு அறிவியல் காரணமாக, ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்கான ஏராளமான திட்டங்கள் உரிய நேரத்தில் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.

“ ‘அறிவியல் ஆய்வுகளை எளிதில் மேற்கொள்ளுதல்’ என்பதை உறுதி செய்வதற்கான நமது முயற்சிகளை நாம் தொடர்வதுடன், ஊழல் மற்றும் அதிகாரிகளின் ஆதிக்கத்தைக் குறைக்க, தகவல் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்” என்றும் பிரதமர் தெரிவித்தார்.

டிஜிட்டல்மயமாக்கல், மின்னணு வர்த்தகம், இணையதள வங்கிச் சேவை மற்றும் மொபைல் வங்கிச் சேவைகள், கிராமப்புற மக்களுக்கு கணிசமாக உதவும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார். கிராமப்புற வளர்ச்சிக்கான பல்வேறு முன்முயற்சிகளுக்கு தொழில்நுட்பம் வழி வகுத்திருப்பதாகவும், குறிப்பாக, விவசாயம் மற்றும் பண்ணை உற்பத்திப் பொருட்கள், குறைந்த செலவில் நுகர்வோரை சென்றடைவதில் முக்கியப் பங்கு வகித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பயிர்க் கழிவுகளை எரிப்பதற்கும், நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்தவும், தொற்று நோய்களைத் தடுக்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து வசதிகளை உருவாக்குவதில் தொழில்நுட்ப ரீதியான தீர்வு காண அனைவரும் பாடுபட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்றுவதில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்ற வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், ஐ-ஸ்டெம் (I-STEM) இணையதளத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.