பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஐ.நா. வின் அதிகாரபூர்வ புள்ளி விவரம் குறித்த அடிப்படைக் கொள்கைகளுக்கு ஏற்பு வழங்கப்பட்டது.
ஐ.நா. வின் அதிகாரபூர்வ புள்ளி விவரம் குறித்த அடிப்படைக் கொள்கைகளுக்கு ஏற்பு வழங்கப்பட்டதை அடுத்து அதிகாரபூர்வ புள்ளி விவரங்களில் தொழிலியல் சுதந்திரம், பாரபட்சமற்ற தன்மை, பொறுப்பேற்கும் தன்மை, வெளிப்படைத் தன்மை ஆகியவை புள்ளிவிவர சேகரிப்பு, தொகுப்பு மற்றும் பரப்புதல் முறைகளில் இடம்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நடைமுறை சர்வதேசத் தரத்துக்கு ஈடாக அமைகிறது. இந்தக் கொள்கைகளுக்கு ஏற்ப அமைப்பு முறைகள், நடைமுறைகள், நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான தேசிய அதிகாரப்பூர்வ புள்ளி விவர கொள்கை வகுப்பதற்கும் இதனால் வழி ஏற்படுகிறது.
ஐ. நா. பொதுச்சபை ஒப்புதல் அளித்துள்ள அதிகாரப்பூர்வ புள்ளி விவரம் தொடர்பான பத்து அடிப்படை கொள்கைகள் வருமாறு.
கொள்கை 1. ஜனநாயக சமுதாயத்தின் தகவல் அமைப்பு முறையில், அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள், மிகவும் அத்தியாவசியமான பொருளாதாரம், மக்கள் தொகை, சமூக மற்றும் சுற்றுச்சூழல் நிலவரம் ஆகியவை குறித்து அரசுக்கும் பொருளாதாரத்துக்கும் பொதுமக்களுக்கும் தகவல்களை அளிக்கிறது. இந்த நோக்கத்தைக் கருத்தில் கொண்டு செயல்முறைப் பயன்பாட்டு சோதனைகளைச் சந்திக்கும் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் தொகுக்கப்பட வேண்டும். இவை அதிகாரப்பூர்வ புள்ளி விவர அமைப்புகளால் பாகுபாடற்ற முறையில் பொது விவரங்களை அறிந்து கொள்வதற்கான குடிமக்களின் உரிமையை நிறைவு செய்யும்.
கொள்கை 2. அதிகாரப்பூர்வ புள்ளி விவரத்தில் நம்பிக்கையை நிலை நிறுத்த புள்ளி விவர அமைப்புகள், அறிவியல் கொள்கைகள் தொழிலியல் நன்னெறிகள் உள்ளிட்ட தொழிலியில் அடிப்படையில் தகவல் சேகரிப்பு, கையாளுதல், சேமிப்பு மற்றும் வழங்குதல் நடைமுறைகளை மாறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
கொள்கை 3. தகவல்களைச் சரியான முறையில் எடுத்துரைப்பதற்கு வசதி செய்யும் வகையில் புள்ளி விவர அமைப்புகள் தகவல்களை ஆதாரங்கள், நடைமுறைகள், செயல்முறைகள் ஆகியவற்றினை அறிவியல் தரத்துக்கு ஏற்ப வழங்க வேண்டும்.
கொள்கை 4. புள்ளி விவர அமைப்புகள் புள்ளி விவரத்தை தவறாக எடுத்துரைப்பது, பயன்படுத்துவது ஆகியவை குறித்து கருத்துத் தெரிவிக்கும் உரிமை உள்ளவை
கொள்கை 5. புள்ளி விவர ஆய்வு, நிர்வாக ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து வகை ஆதாரங்களிலிருந்து தகவல்களை புள்ளி விவரத் தேவைகளுக்காக பெறலாம். தரம், காலக்கெடு, கட்டணம், பதிலளிப்போர் பொறுப்பேற்கும் தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு புள்ளி விவர அமைப்புக்கள் தங்கள் ஆதாரங்களைத் தெரிவு செய்ய வேண்டும்
கொள்கை 6. தனிநபர்களைப் பொறுத்தவரை, அவர்கள் இயற்கையான அல்லது சட்டப்படியான நபர்களாக இருந்தாலும், அவர்களிடமிருந்து பெறப்படும் தகவல்களைப் புள்ளி விவர அமைப்புகள் தொகுத்து அமைக்கும்போது அவை ரகசியமானதாகவும் புள்ளி விவரத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுவதாகவும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கொள்கை 7. புள்ளி விவர அமைப்புகள் எந்தச் சட்டங்கள், வரைமுறைகள், நடவடிக்கைகளின் கீழ் செயல்படுகின்றன என்பதை பொது மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
கொள்கை 8. புள்ளி விவர அமைப்பின் ஒருமைத் தன்மையையும் திறனையும் உருவாக்க நாட்டிற்குள் செயல்படும் புள்ளி விவர அமைப்புக்ளிடையே ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம்.
கொள்கை 9. ஒவ்வொரு நாட்டின் புள்ளி விவர அமைப்பும் பயன்படுத்தும் சர்வதேச கருத்துக்கள், பகுப்பு முறைகள், நடைமுறைகள் ஆகியன, அனைத்து அதிகாரப்பூர்வ நிலைகளிலும், புள்ளி விவர அமைப்புக்களிடையே ஒருமைத் தன்மையையும் திறன்களையும் மேம்படுத்துகின்றன.
கொள்கை 10. புள்ளி விவரத்தில் இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பு, அனைத்து நாடுகளிலும் அதிகாரப்பூர்வ புள்ளி விவர அமைப்புகளின் மேம்பாட்டுக்குப் பெரிதும் உதவும்.
பின்னணி:
இந்தக் கொள்கைகளின் பல முக்கிய அம்சங்களை புள்ளி விவரம் மற்றும் அமலாக்க அமைச்சகம் பின்பற்றி வருகிறது. இவை தர மேம்பாட்டுக்கும் புள்ளி விவர அமைப்பின் நன்மைக்கும் உகந்தது என்பதால் ஏற்கனவே கடைப்பிடிக்கப்படுகின்றன.
ஐ.நா. வின் அதிகாரபூர்வ புள்ளி விவரம் குறித்த அடிப்படைக் கொள்கை வரைவினை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அனுப்பி வைத்ததை அடுத்து புள்ளி விவரம் மற்றும் அமலாக்க அமைச்சகம் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு அளி்த்தது. 2014 ஜனவரி மாதம் ஐ.நா. பொதுச்சபை தீர்மானம் ஒன்றின் மூலம் இக்கொள்கைகளுக்கு ஒப்புதல் அளித்தது.
இதன் விளைவாக 2015 மார்ச் மாதம் நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. புள்ளி விவர ஆணையத்தின் 46 வது அமர்வில் இந்த விஷயம் ஆய்வு செய்யப்பட்டது. இந்த அமர்வில் புள்ளி விவரம் மற்றும் அமலாக்க அமைச்சகத்தின் செயலாளர் பங்கேற்றார். அதிகாரபூர்வ புள்ளி விவரம் குறித்த அடிப்படைக் கொள்கை அமலாக்கத்தின் முன்னேற்றம் குறித்து இந்தியா ஐ.நா. புள்ளி விவரப் பிரிவின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்க வேண்டும். 2017 – ல் நடைபெறவுள்ள ஐ.நா. புள்ளி விவர ஆணையத்தின் 48 வது அமர்வில் இவை பரிசீலிக்கப்படும். மத்திய அரசு, இந்தக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதற்கான ஏற்பு, அவற்றை அமல்படுத்துவதன் அடிப்படைத் தேவையாகும். இந்த வகையில் ஏற்று நடப்பது குறித்து அறிக்கை சமர்ப்பிப்பது சர்வதேச கடமையும் ஆகும்.