Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் நல்ல முடிவுகள் சார்ந்த பணிமுறையை உருவாக்கும் பெரும் பொறுப்பு தலைமைத் தணிக்கை அதிகாரிக்கு உள்ளது: பிரதமர்


புதுதில்லியில் இன்று (21.11.2019) நடைபெற்ற தலைமைக் கணக்காயர்கள் மற்றும் துணைத் தலைமைக் கணக்காயர்கள் மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் நல்ல முடிவுகள் சார்ந்த பணிமுறையை உருவாக்கும் வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதில், தலைமைத் தணிக்கை அதிகாரிக்கு பெரும் பொறுப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். தலைமைத் தணிக்கை அதிகாரி மற்றும் அவரது கட்டுப்பாட்டில் உள்ள கள அலுவலகங்களால் மேற்கொள்ளப்படும் கடின உழைப்பு காரணமாக இந்தக் குறிக்கோளை அடைய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் தணிக்கையாளர்களால், தலைமைத் தணிக்கை அதிகாரியின் பணிகள் மற்றும் வலிமை சிறப்பாக உள்ளதெனவும் பிரதமர் கூறினார். பன்னெடுங் காலத்திற்கு முன்பாக ஏற்படுத்தப்பட்ட இது போன்ற அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றாலும், அதுவே ஒரு பெறும் சவாலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

சீர்திருத்தங்களைப் பற்றி பேசுவது தற்போது நாகரீகமாகி விட்டது என்று குறிப்பிட்ட பிரதமர், ஒட்டு மொத்த பணியாளர்களும் நேர்மையான முறையில் முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற தயாராக இருந்தால்தான், சீர்திருத்தங்களை மேற்கொள்வது சாத்தியமாகும் என்றார். இது அனைத்து அரசுகள் மற்றும் தலைமைத் தணிக்கை அதிகாரி அலுவலகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து அமைப்புகளுக்கும் பொருந்தும் என்றும் அவர் தெரிவித்தார். தலைமைத் தணிக்கை அதிகாரியின் தணிக்கை முறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தலைமைத் தணிக்கை அதிகாரி என்ன செய்தாலும், அது அரசு ஆளுகையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார். தலைமைத் தணிக்கை அதிகாரியின் தணிக்கையில் கால தாமதம் ஏற்படக் கூடாது என்று வலியுறுத்திய பிரதமர், தலைமைத் தணிக்கை அதிகாரி ஒரு சிறந்த அதிகாரியாக பணியாற்ற வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.