Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

‘சென்னை சந்திப்பு’ இந்திய – சீன உறவுகளில் புதிய சகாப்தத்தைத் துவக்கியிருக்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறுகிறார்


சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்ற இரண்டாவது முறைசாரா உச்சிமாநாடு, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே ‘ஒத்துழைப்புக்கான புதிய சகாப்தத்தை’ துவக்கியிருப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மாமல்லபுரத்தில் முறைசாரா உச்சிமாநாட்டின் இரண்டாம் நாளான இன்று நடைபெற்ற இருநாடுகளின் பிரதிநிதி குழுக்கள் அளவிலான பேச்சுவார்த்தைக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடியும், சீன அதிபர் திரு ஸீ ஜின்பிங்கும் தலைமை வகித்தனர். இந்தப் பேச்சுவார்த்தையின் துவக்க உரையில் பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு ஊஹான் நகரில் நடைபெற்ற இரண்டு நாடுகளுக்கும் இடையேயான முதலாவது முறைசாரா உச்சிமாநாட்டைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர் திரு மோடி, அந்த மாநாடு, ‘நமது உறவுகளின் நிலைத்தன்மையை அதிகரித்து, புதிய உந்துதல் அளித்ததாக’ தெரிவித்தார்.

‘இரண்டு நாடுகளுக்கும் இடையே உத்திசார்ந்த தகவல் தொடர்பு அதிகரித்துள்ளது’ என்று அவர் கூறினார்.

பிரதமர் மேலும் கூறுகையில் “இரு தரப்புக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை, பூசல்களாக மாற அனுமதிக்காமல் அவற்றை விவேகத்துடன் தீர்ப்பது என தீர்மானித்துள்ளோம். அதாவது, இருதரப்பும் ஒருவருக்கொருவர், மற்றவரின் அக்கறைகளை உணர்ந்து செயலாற்றுவோம். நமது உறவுகளின் வாயிலாக உலக அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் பாடுபடுவோம்” என்று குறிப்பிட்டார்.

மாமல்லபுரத்தில் நடைபெற்ற இரண்டாவது முறைசாரா உச்சிமாநாட்டைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர், “சென்னை மாநாட்டில், இருதரப்பு மற்றும் உலக விஷயங்கள் குறித்து நாம் மிகச் சிறந்த பரிமாற்றத்தை இதுவரை மேற்கொண்டுள்ளோம். ஊஹான் உச்சிமாநாடானது, நமது இருதரப்பு உறவுகளுக்கு புதிய உந்துதலை அளித்தது. இன்று நமது சென்னை சந்திப்பானது, இருநாட்டு உறவுகளில் ஒத்துழைப்புக்கான புதிய சகாப்தத்தை துவக்கியுள்ளது” என்றார்.

“நமது இரண்டாவது முறைசாரா உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு வருகை தந்த அதிபர் திரு. ஸீ ஜின்பிங்குக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். இந்த சென்னை சந்திப்பானது, இந்திய – சீன உறவுகளுக்கு மிகச் சிறப்பான உந்துதலை அளிக்கும். இது நமது நாட்டு மக்களுக்கும், உலக மக்களுக்கும் நன்மை பயக்கும்” என்று பிரதமர் தெரிவித்தார்.