Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலகத் தொழில் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் முன்னணி அமெரிக்க நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகளுடன் பிரதமர் சந்திப்பு


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில், நியூயார்க்கில் நடைபெற்ற பிரத்யேக வட்டமேஜை விவாதத்தில் 20 துறைகளைச் சேர்ந்த 42 உலகத் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த வட்டமேஜை விவாதத்தில் கலந்து கொண்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த நிகர மதிப்பு 16.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இதில் இந்தியாவில் இந்த நிறுவனங்களின் மொத்த நிகர மதிப்பு 50 பில்லியன் அமெரிக்க டாலராகும்.

ஐ.பி.எம் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி திருமிகு ஜின்னி ரோமெட்டி, வால்மார்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி திரு. டக்ளஸ் மேக்மில்லன், கொக்ககோலா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி திரு ஜேம்ஸ் குயின்சி, லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திருமிகு மரிலின் ஹெவ்சன், ஜே.பி.மோர்கன் நிறுவனத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி திரு ஜேமி டிமோன், அமெரிக்கன் டவர் கார்ப்பரேஷனின் தலைமைச் செயல் அதிகாரியும், இந்தியா-அமெரிக்கா தலைமைச் செயல் அதிகாரிகள் மன்றத்தின் இணை தலைவருமான திரு. ஜேம்ஸ் டி டாய்க்லெட், ஆப்பிள், கூகுள், மாரியட், விசா, மாஸ்டர்கார்ட், 3-எம், வார்பர்க் பிங்கஸ், ஏ.ஈ.சி.ஓ.எம், ராய்தியன், பாங்க் ஆஃப் அமெரிக்கா, பெப்சி நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் உட்பட பலர் இந்த விவாதத்தில் கலந்துகொண்டனர்.

டிபிஐஐடி மற்றும் இன்வெஸ்ட் இண்டியா ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுலபமாக தொழில் செய்வதற்கு ஏற்ற வகையிலான ஏராளமான சீர்திருத்தங்கள் மூலம் பெரும் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ள இந்தியாவில் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழல் நிலவுவதாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் பாராட்டுத் தெரிவித்தனர். முதலீட்டாளர்களுக்கு ஏற்ற வகையிலான சுலபமாக தொழில் நடத்துவதற்கான சூழலை உருவாக்குவதில் கவனம் செலுத்தி, தீர்க்கமான முடிவுகளை எடுத்ததற்காக பிரதமரைத் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் பெரிதும் பாராட்டினார்கள். இந்தியாவின் வளர்ச்சி வரலாறு தங்களை ஈர்த்துள்ளதாகவும், இந்தியாவில் தங்களது நிறுவனங்களின் காலடித் தடத்தைப் பதித்து முன்னேற தாங்கள் உறுதிபூண்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவில் தாங்கள் மேற்கொள்ளவுள்ள முக்கிய திட்டங்கள் குறித்து தலைமைச் செயல் அதிகாரிகள் சுருக்கமாக எடுத்துக் கூறினர். திறன் மேம்பாடு, டிஜிட்டல் இந்தியா, இந்தியாவில் உற்பத்தி செய்வோம், உள்ளார்ந்த வளர்ச்சி, பசுமை எரிசக்தி, நிதிச் சேர்க்கை ஆகிய இந்தியாவின் முயற்சிகளுக்கு உதவுவதற்கான பரிந்துரைகளையும் அவர்கள் வழங்கினர்.

தலைமைச் செயல் அதிகாரிகளின் கருத்துக்களுக்கு பதிலளித்த பிரதமர், தொடர்ச்சியான அரசியல் ஸ்திரத்தன்மை, கொள்கை மதிப்பீடு, மேம்பாட்டுக்கு உகந்த, வளர்ச்சிக் கொள்கைகளுக்கு ஏற்ற அம்சங்கள் அவசியம் தேவை என வலியுறுத்தினார். சுற்றுலா மேம்பாடு, பிளாஸ்டிக் மறுசுழற்சி, கழிவு மேலாண்மை முன்முயற்சிகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் அதிக வாய்ப்புகளை உருவாக்கும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வர்த்தகத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். இதர நாடுகளின் கூட்டு முயற்சியுடன் “இந்தியாவில் தொடங்குவோம்” முன்முயற்சிக்கு நிறுவனங்கள் ஊக்கமளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இதன்மூலம், ஊட்டச்சத்து மற்றும் கழிவு மேலாண்மை போன்ற சவாலான விஷயங்களுக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் தீர்வு காண முடியும் என்பதை பிரதமர் எடுத்துரைத்தார்.