Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஒரு சில நிமிடங்களில் மும்பை என்ற இலக்கிற்கு இணங்க மும்பை மெட்ரோ திட்டங்களுக்கு ஊக்கமளித்தார் பிரதமர்


பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஒரு சில நிமிடங்களில் மும்பை என்ற தொலைநோக்கிற்கு இணங்க, மும்பை நகருக்கான பல்வேறு மெட்ரோ திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார். இத்திட்டங்கள் இந்த மாநகரத்தில் மெட்ரோ கட்டமைப்பிற்கு உந்துதல் அளிக்கும் என்பதோடு மும்பை நகர குடிமக்கள் ஒவ்வொருக்குக்கும் பாதுகாப்பான, விரைவான, சிறந்த பயணத்தை வழங்குவதிலும் பங்களிக்கும்.

மும்பை நகர மக்களின் உணர்வைப் பாராட்டிய பிரதமர் லோகமான்ய திலகரால் தொடங்கப்பட்ட கணேஷ் உத்சவ் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் புகழ்பெற்றதாக மாறியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இஸ்ரோ மற்றும் அதன் விஞ்ஞானிகள் குழுவின் தளராத உறுதியை சுட்டிக் காட்டிய பிரதமர் “இலக்கை அடைய வேண்டுமென்று முயற்சிப்பவர்களில் மூன்று வகையினர் உள்ளனர். தோல்வியைக் கண்டு பயந்துகொண்டு அந்தச் செயலை தொடங்கவே செய்யாதவர்கள்; தொடங்கி விட்டபிறகு எதிர்கொள்ளும் சவால்களைக் கண்டு ஓடிவிடுபவர்கள்; மிகப்பெரும் சவால்களை எதிர்கொண்ட போதிலும் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருப்பவர்கள். இஸ்ரோவும் அதனோடு தொடர்புடையவர்களும் இதில் மூன்றாவது வகையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்களது முயற்சிகளை நிறுத்துவதுமில்லை; அல்லது சோர்வு அடைவதில்லை; அல்லது இலக்கை அடைவதற்கு முன்பாக தயங்கியபடி தங்களின் செயலை நிறுத்துவதுமில்லை. இரண்டாவது சந்திராயன் திட்டத்தில் சவாலை நாம் எதிர்கொண்டபோதிலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் இலக்கை அடையும் வரை தங்களின் செயலை நிறுத்தப்போவதில்லை. நிலவை வெற்றி கொள்வது என்ற இலக்கு நிச்சயமாக அடையப்படும். நிலவின் சுற்று வட்டப் பாதையில் நிலவைச் சுற்றி வரும் விண்கலத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்தியிருப்பதே வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு சாதனையாகும்.” என்று குறிப்பிட்டார்.

மும்பை நகருக்கான மெட்ரோவிற்கென ஏற்கனவே ரூ. 1.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையில் ரூ.20,000 மதிப்புடைய திட்டங்கள் இன்று மும்பையில் தொடங்கப்பட்டுள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார். மும்பை நகருக்கான புதிய மெட்ரோ பாதைகள், மெட்ரோ பவன், மெட்ரோ நிலையங்களில் புதிய வசதிகள் ஆகியவை மும்பை நகருக்கு புதியதொரு தோற்றத்தைக் கொடுக்கும் என்பதோடு மும்பைவாசிகளின் வாழ்க்கையையும் எளிதாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். “பந்த்ராவிற்கும் அதிவேகப் பாதைக்கும் இடையிலான இணைப்பு என்பது தொழில்முறை நிபுணர்களின் வாழ்வை எளிதாக்கும். இத்திட்டங்களின் மூலம் சில நிமிடங்களில் மும்பை நகரை அடைந்து விடலாம்.” கட்டமைப்புத் துறையில் மாற்றங்களை கொண்டுவந்தமைக்காக மாநில அரசையும் அவர் பாராட்டினார்.

5 ட்ரில்லியன் மதிப்புள்ள பொருளாதாரமாக மாற வேண்டும் என்ற இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி வரும் சூழலில், நமது நகரங்கள் 21-ம் நூற்றாண்டுக்குரிய நகரங்களாக மாற வேண்டும். இந்த இலக்கிற்கு உகந்தவகையில் நவீன கட்டமைப்பை உருவாக்குவதற்கென அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரசு ரூ. 100 லட்சம் கோடி செலவழிக்கவிருக்கிறது. இதன் விளைவாக மும்பை நகரம் மட்டுமின்றி வேறு பல மாநகரங்களும் பயனடையவிருக்கின்றன. எதிர்காலத்திற்கு உகந்த வகையிலான கட்டமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், இத்தகைய நகரங்களை உருவாக்கும்போது தொடர்புவசதிகள், உற்பத்தித் திறன், நிலைத்தன்மை, பாதுகாப்பு ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

போக்குவரத்து வசதியை எளிதாக்க, ஒருங்கிணைந்த போக்குவரத்து முறைகளை கட்டமைக்க அரசு முயன்று வருகிறது. மும்பை பெருநகரப் பகுதிக்கான சிறந்த கட்டமைப்பினை வழங்குவதற்கென தொலைநோக்கு ஆவணம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. மும்பை உள்ளூர் ரயில் போக்குவரத்து, பேருந்து அமைப்பு போன்ற பல்வேறு போக்குவரத்து வசதிகளையும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வது குறித்து இந்த ஆவணம் விளக்குகிறது.

மும்பை மெட்ரோவிற்கான விரிவாக்கத் திட்டங்கள் குறித்து மும்பை நகரமக்களுக்கு எடுத்துக் கூறுகையில் “ இன்றுள்ள 11 கிலோமீட்டர் நீள மெட்ரோ சேவை என்பது 2023-24-ம் ஆண்டிற்குள் 325 கிலோமீட்டர் நீளமுள்ளதாக இருக்கும். இன்று உள்ளூர் ரயில்கள் ஏற்றிச் செல்லும் அதே அளவு மக்களை ஏற்றிச் செல்வதாக மெட்ரோ ரயில் சேவை மாறும். மெட்ரோ ரயில் பாதைகளில் ஓடும் வண்டிகளும் கூட இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த மெட்ரோ திட்டங்களின் மூலமாக 10,000 பொறியாளர்களுக்கும் தனித்திறன் படைத்த, தனித்திறன் பெறாத 40,000 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். நவி மும்பை விமானநிலையம், மும்பை ட்ரான்ஸ் துறைமுக முனையம், புல்லெட் ட்ரெயின் திட்டம் போன்றவற்றை உதாரணங்களாக சுட்டிக் காட்டிய பிரதமர் இதுவரையில் கண்டிராத வேகத்தில் திட்டங்களின் அளவும், வேகமும் அதிகரித்துள்ளதையும் எடுத்துக் கூறினார்.

இந்தியாவில் மெட்ரோ ரயில் சேவையின் விரிவாக்கம் குறித்து நினைவு கூர்ந்த பிரதமர், சமீப காலம் வரையில் ஒரு சில நகரங்களில் மட்டுமே மெட்ரோ சேவைகள் இருந்து வந்தன என்று கூறினார். ஆனால் இன்று நாடு முழுவதிலும் 27 நகரங்களில் மெட்ரோ சேவைகள் செயல்பட்டு வருகின்றன; அல்லது விரைவில் தொடங்கப்படவிருக்கின்றன. “இன்று 675 கிலோமீட்டர் நீள மெட்ரோ சேவைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 400 கிலோமீட்டர் நீள மெட்ரோ சேவைகள் கடந்த ஐந்தாண்டு காலத்தில் செயல்படத் தொடங்கின. 850 கிலோமீட்டர் நீள மெட்ரோ பாதைகளுக்கான வேலைகள் நடைபெற்று வரும் அதே நேரத்தில் மேலும் 600 கிலோமீட்டர் நீள மெட்ரோ பாதைகளுக்கான வேலைகளைத் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மிகவேகமான வளர்ச்சியை எட்டும் வகையில் இந்தியாவின் கட்டமைப்பை முழுமையான வகையில் வளர்த்தெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த அரசின் முதல் நூறு நாட்களில் வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவுகளை அரசு எடுத்துள்ளது என்றும் பிரதமர் கூறினார். ஜல் ஜீவன் இயக்கம், பிரதமர் விவசாயிகளுக்கான சம்மான் நிதி திட்டம், குழந்தைகளின் பாதுகாப்பிற்கான சட்டம், முத்தலாக் ஒழிப்புச் சட்டம் போன்ற அரசின் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிய பிரதமர், தீர்மானகரமான, மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்றும் கூறினார்.

எவரொருவரின் பொறுப்புகளை உணர்ந்திருப்பதன் அவசியம் குறித்துப் பேசுகையில், சுயாட்சி என்பது ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். நாட்டின் நலனுக்காகவும், அதை நிறைவேற்றுவதற்காகவும் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற உறுதிமொழியை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார். பிள்ளையார் சிலையை நீர்நிலைகளில் கரைக்கும் போது அவற்றை மாசுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார். இந்த திருவிழாவின்போது ஏராளமான பிளாஸ்டிக் மற்றும் கழிவுப் பொருட்களும் கடலில் சென்று சேர்வதையும் அவர் சுட்டிக் காட்டினார். மித்தி ஆறு மற்றும் இதர நீர்நிலைகள் பிளாஸ்டிக் கழிவுகள் அற்றதாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மக்களை கேட்டுக் கொண்ட அவர், இதன் மூலம் இந்தியாவின் மற்ற பகுதியினருக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்றும் பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

திட்டங்கள் பற்றி சுருக்கமாக

மாநகரத்தின் மெட்ரோ சேவைகளில் மேலும் 42 கிலோமீட்டர் நீளத்தை அதிகரிக்கவுள்ள மூன்று மெட்ரோ பாதைகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். கைமுக்கில் இருந்து சிவாஜி சதுக்கம் வரையிலான 9.2 கிலோமீட்டர் நீளமுள்ள மெட்ரோ -10 வழி, வடாலாவில் இருந்து சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையம் வரையிலான 12.7 கிலோமீட்டர் நீளமுள்ள மெட்ரோ-11 வழி, கல்யாண் முதல் தலோஜா வரையிலான 20.7 கிலோமீட்டர் நீளமுள்ள மெட்ரோ-12 வழி ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த மூன்று பாதைகள் அமையும்.

அதிநவீன வசதிகள் கொண்ட மெட்ரோ பவனுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். 32 தளங்களைக் கொண்ட இந்த மையம் 340 கிலோமீட்டர் நீளமுள்ள 14 மெட்ரோ வழிகளை செயல்படுத்தி, கட்டுப்படுத்துவதாக இருக்கும்.

பந்தோங்க்ரி மெட்ரோ நிலையம், கண்டிவாலி கிழக்கு ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே உற்பத்தி செய்வது என்ற திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட அதிநவீன மெட்ரோ இருப்புப் பெட்டியையும் அவர் தொடங்கி வைத்தார். மும்பை பெருநகர மெட்ரோவிற்கான தரம் குறித்த தொலைநோக்கு ஆவணத்தையும் பிரதமர் வெளியிட்டார்.

மகாராஷ்ட்ர மாநில ஆளுநர் திரு. பகத் சிங் கோஷியாரி, மகாராஷ்ட்ர மாநில முதல்வர் திரு. தேவேந்திர ஃபட்நாவிஸ், ரயில்வே, வணிகம் மற்றும் தொழில் துறைகளின் மத்திய அமைச்சர் திரு. பியுஷ் கோயல், சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்பதற்கான அமைச்சகத்தின் துணை அமைச்சர் திரு. ராமதாஸ் அதவாலே ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

***