மேதகு அதிபர் இமானுவேல் மேக்ரோன் அவர்களே,
மதிப்பிற்குரிய இந்திய மற்றும் பிரான்ஸ் நாட்டுப் பிரதிநிதிகளே,
நண்பர்களே,
இந்நாள் நன்னாள்! (Bon Jour)
வணக்கம்( நமஸ்கார்)
முதலில் என் நெருங்கிய நண்பர் அதிபர் மேக்ரோனுக்கு இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் என்னையும் எனது சக பிரதிநிதிகளையும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்திற்கு மிகச் சிறப்பான முறையிலும் அன்பாகவும் வரவேற்றுள்ளார். இது எனக்கு மறக்கமுடியாத தருணமாகும். “ஜி 7” நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு அதிபர் மேக்ரோன் விடுத்துள்ள அழைப்பு இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான ராஜீய நல்லுறவுக்கும் என்மீது அவர் கொண்டுள்ள நட்போடு கூடிய நல்லெண்ணத்திற்கும் ஓர் உதாரணமாகத் திகழ்கிறது. இன்று நாங்கள் இருவரும் விரிவான விவாதத்தை மேற்கொண்டோம். பிரான்ஸ் தலைமையில் நடைபெறும் ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் இடம்பெறும் நிகழ்நிரல்கள் முழுமையான வெற்றியை அடைய வேண்டும். இது தொடர்பாக இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்கப்படும் ஒத்துழைப்பை அளிப்பது இந்தியாவின் முடிவும் ஆகும்.
பல்லுயிரோ, பருவநிலை மாற்றமோ, குளிர்வித்தல் குறித்த விஷயங்களோ, வாயுவோ எதுவாக இருந்தாலும், என்றும் பாரம்பரிய முறைப்படி, பண்பட்ட, இயற்கையோடு ஒத்திசைந்த வகையிலான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று இந்தியா பல நூற்றாண்டுகளாக வலியுறுத்தி வந்திருக்கிறது. இயற்கையை அழிப்பது மானுட நல்வாழ்வுக்கு எவ்விதத்திலும் பயன் தராது. இது ஜி-7 நாடுகளின் உச்சி மாநாட்டில் விவாதிக்கப்படும் முக்கிய பொருளாக இருந்தால், அது இந்தியாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும்.
நண்பர்களே,
இந்தியாவும் பிரான்ஸ் நாடும் பல நூற்றாண்டுகளாக பண்டை நல்லுறவைக் கொண்டுள்ளன. நமது நட்பு சுயநலமான காரணங்களுக்கானவை அல்ல. ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ (Liberty, Equality and Fraternity) ஆகிய உறுதியான கோட்பாடுளைக் கொண்டது. இந்தியாவும் பிரான்ஸும் சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றைக் காத்து, பாசிசம், பயங்கரவாதம் ஆகியவற்றை எதிர்த்து தோளோடு தோள்கொடுத்து நிற்பதற்கு இதுதான் காரணம். முதல் உலகப் போரில் ஆயிரக் கணக்கான இந்திய வீரர்கள் உயிர்த் தியாகம் செய்ததை பிரான்ஸ் இன்றும் நினைவில் போற்றுகிறது. இன்று பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், உள்ளடக்கிய தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் பிரான்ஸும், இந்தியாவும் இணைந்து உறுதியாக நிற்கின்றன. இரு நாடுகளும் நல்ல கருத்துகளைப் பேசுவதுடன் நிற்பதில்லை. அது தொடர்பாக உறுதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றன. அவற்றில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு (International Solar Alliance) இந்தியாவும், பிரான்ஸும் எடுத்துள்ள வெற்றிகரமான முன் முயற்சியாகும்.
நண்பர்களே,
கடந்த இருபது ஆண்டுகளில் ராஜீய கூட்டாண்மைப் பாதையில் நடைபோட்டு வருகிறோம். இன்று பிரான்ஸும், இந்தியாவும் பரஸ்பரம் நம்பிக்கை கொள்ளும் கூட்டாளிகளாக இருக்கின்றன. நமக்கு சிரமங்கள் ஏற்பட்ட போது, இரு தரப்பின் பார்வைகளையும் நாம் புரிந்து கொண்டு, ஆதரவாக இருந்து வந்துள்ளோம்.
அதிபர் மேக்ரோனும், நானும் இன்று, நமது நல்லுறவு குறித்து விரிவாக விவாதித்தோம். 2022ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டாகும். அதுவரையில் புதிய இந்தியா அமைவதற்குப் பல்வேறு இலக்குகளை நிர்ணயித்துள்ளோம். இந்தியாவை 5,00,000 லட்சம் கோடி டாலர் பொருளாதார ஆற்றல் கொண்டதாக அமைப்பதே நமது பிரதானமான குறிக்கோளாகும்.
இந்தியாவின் தற்போதைய வளரச்சிக்கான தேவைகள் பிரான்ஸ் தொழில்நிறுவனங்களுக்கு அரிய வாய்ப்பாக அமைந்துள்ளன. பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு திறன் மேம்பாடு, சிவில் விமான சேவை, தகவல் தொழில்நுட்பம், விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய முன் முயற்சிகளை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம். பாதுகாப்பு ஒத்துழைப்பு நமது நல்லுறவுக்கு வலுவான தூணாக அமைந்துள்ளது. பல்வேறு திட்டங்களில் நாம் முன்னேற்றம் அடைந்து வருகிறோம் என்பது குறித்து நான் பெரிதும் மகிழ்கிறேன். இந்தியாவுக்கு பிரான்சிடமிருந்து வழங்கப்பட உள்ள 36 ரஃபேல் விமானங்களில், ஒரு விமானம் வரும் மாதத்தில் வழங்கப்படும். தொழில்நுட்பத்திலும், கூட்டு உற்பத்தியிலும் நமது ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்போம். புதிய தலைமுறை சிவில் அணு ஒப்பந்தத்தில் நாங்கள் கையெழுத்திட்ட முதல் நாடு பிரான்ஸ்தான். ஜெய்தாபூர் திட்டத்தில் எங்களது நிறுவனங்கள் விரைந்து செயல்படும்படி நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். அத்துடன், மின்சாரக் கட்டணம் குறித்து கவனத்தில் கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டுள்ளோம்.
இரு தரப்பிலும் சுற்றுலா அதிகரித்து வருவதும் மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. பிரான்ஸ் நாட்டின் இரண்டரை லட்சம் சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் இந்தியாவுக்கு வருகின்றனர். அது போல் இந்தியாவின் 7 லட்சம் சுற்றுலாப் பயணிகள் பிரான்ஸுக்குப் பயணமாகின்றனர். பரஸ்பரம் இரு நாடுகளிலும் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். “நமஸ்தே பிரான்ஸ்” என்ற பொருளில் அமைந்த இந்தியப் பண்பாட்டுத் திருவிழா பிரான்ஸில் 2021ம் ஆண்டு முதல் 2022 வரை நடைபெற உள்ளது. பல்வேறு கலாசாரங்களைக் கொண்ட இந்தியாவின் மீது பிரான்ஸ் மக்களின் ஆர்வம் இன்னும் ஆழமாக வலுப்பட இந்த விழா துணை புரியும் என்று நம்புகிறேன். யோகாசனம் பிரான்ஸில் பெரிதும் வரவேற்கப்படுகிறது என்பதை அறிவேன். பிரான்ஸ் நாட்டின் பல்வேறு நண்பர்கள் தங்களது நலமான வாழ்வியலுக்கு இதைப் பின்பற்றுவர் என்று நம்புகிறேன்.
நண்பர்களே,
உலகளாவிய சவால்களில் இந்தியாவும் பிரான்ஸும் ஒத்துழைப்பை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தை குறிப்பிட்டிருக்கிறேன். நாம் இரு நாடுகளும் பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் தொடர்ந்து எதிர்கொண்டு முறியடிக்க வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முறியடிப்பதில் மதிப்பு மிக்க பிரான்ஸின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெற்றுள்ளோம். இதற்காக பிரான்ஸ் அதிபர் மேக்ரோனுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். பாதுகாப்பு விவகாரத்திலும், பயங்கரவாத ஒழிப்பிலும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது எனத் திட்டமிட்டுள்ளோம். அதைப் போல் கடல் பாதுகாப்பிலும் (maritime), இணையவழிப் பாதுகாப்பிலும் (cyber security) அதிகரித்துவரும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது என முடிவு செய்துள்ளோம்.
இணையவழிப் பாதுகாப்பு (cyber security) விஷயத்திலும், டிஜிட்டல் தொழில்நுட்பத்திலும் புதிய திட்டத்திற்கு இசைந்துள்ளது எனக்கு நிறைவு அளிக்கிறது. இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் மேற்கொண்டுள்ள செயல்பாட்டு ஒத்துழைப்பு (operational cooperation) வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த ஒத்துழைப்பு மிக முக்கியமாக இருக்கும். இந்த ஒத்துழைப்பு இந்த மண்டலத்தில் பாதுகாப்பையும் வளர்ச்சியையும் அனைவருக்கும் உறுதி செய்வதற்கு முக்கியமானது.
நண்பர்களே,
இத்தகைய சவால்கள் கொண்ட தருணங்களில் ஜி-7 நாடுகளுக்கும், பிரான்ஸுக்கும் வெற்றிகரமான தலைவரான எனது நெருங்கிய நண்பர் அதிபர் மேக்ரோன் புதிய தொலைநோக்கு, உற்சாகம், திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளார்.
மேதகு அதிபர் அவர்களே,
இந்த நல்ல முயற்சியில் இந்தியாவின் 130 கோடி மக்களின் முழுமையான ஒத்துழைப்பும் ஆதரவும் உங்களுக்கு உள்ளது. நம் இரு நாடுகளும் இணைந்து பாதுகாப்பான, வளமையான உலகை அடைவதற்கு வழியமைக்க முடியும். பியாரிட்ஸ் (Biarritz) நகரில் நடைபெறும் ஜி – 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதை நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்த உச்சி மாநாடு மிகச் சிறப்பான வெற்றியை அடைய உங்களுக்கும், பிரான்ஸ் மக்களுக்கும் மிகுந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது அன்பான அழைப்புக்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகுந்த நன்றி (Merci beaucoup),
நல்வாழ்த்துக்கள் (Au revoir).
**********