Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

29.11.15 அன்று ஒலிபரப்பான மன் கீ பாத் நிகழ்ச்சியின் தமிழாக்கம், மனதின் குரல்


எனதருமை நாட்டு மக்களே,

வணக்கம், தீபாவளித் திருநாளை நீங்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி இருப்பீர்கள். ஏதாவது இடத்துக்குச் செல்லும் வாய்ப்பும் கிடைத்திருக்கும், ஒரு புதிய உற்சாகத்தோடு தொழில் செய்யத் தொடங்கி இருப்பீர்கள். இன்னொரு பக்கம், க்றிஸ்துமஸ் பண்டிகைக்கான தொடக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும். சமுதாய வாழ்வில் பண்டிகைகளுக்கு என ஒரு தனியிடம் இருக்கிறது. சில வேளைகளில் பண்டிகைகள் காயங்களை ஆற்றவும் பயனுள்ளவையாகின்றன. சில வேளைகளில் அவை புதிய ஊக்கத்தை அளிக்கின்றன. ஆனால் சில வேளைகளில் பண்டிகை நாட்களில் சங்கடங்கள் வரும் போது, அவை அதிக துயரத்தை அளிக்கின்றன. உலகின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலிருந்தும், தொடர்ந்து இயற்கைப் பேரிடர்கள் பற்றிய தகவல்கள் வந்த வண்ணமிருக்கின்றன. இது வரை கேள்வியே பட்டிராத வகையில் கூட பேரிடர் நிகழ்வுகள் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. வானிலை மாற்றங்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தனை வேகமாகப் பரவி வருகிறது என்பதை நாம் இப்போது அனுபவித்துக் கொண்டு வருகிறோம். நம்முடைய நாட்டிலேயே கடந்த நாட்களில் பருவம் தப்பி அதிகப்படியான மழை பெய்திருக்கிறது, அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் பிற இடங்களிலும் இது நாசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பலர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சங்கடம் நிறைந்த சூழலில் நான் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநில அரசுகள் முழு வீச்சில் மீட்பு மற்றும் இடர் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. மத்திய அரசும் எப்போதும் போல தோளோடு தோள் சேர்த்துப் பணியாற்றி வருகிறது. இப்போது மத்திய அரசின் ஒரு குழு தமிழ்நாடு சென்றிருக்கிறது; எனக்குத் தமிழ்நாட்டின் சக்தி மீது அபார நம்பிக்கை இருக்கிறது. இந்தச் சங்கடங்களையெல்லாம் தாண்டிக் கூட தமிழ்நாடு மீண்டும் வேகமாக முன்னேற்றப் பாதையில் விரையும் என்பதையும், நாட்டின் முன்னேற்றத்தில் தனது பங்களிப்பை அளிக்கும் என்பதையும் நான் உறுதியாக நம்புகிறேன்.

ஆனால் நாலாபுறங்களிலும் இப்படி சங்கடமான சூழலை நாம் எதிர்கொண்டு வருகையில், ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இயற்கைப் பேரிடர் என்பது விவசாயத் துறையோடு தொடர்புடையதாகவே இருந்து வந்தது. ஏனென்றால் அப்போதெல்லாம் இயற்கைப் பேரிடர் என்றால் வறட்சி, பஞ்சம் என்பதோடு மட்டுமே இருந்தது. ஆனால் இன்றோ அது மாற்றம் அடைந்து விட்டது. ஒவ்வொரு மட்டத்திலும் பேரிடர் எதிர்கொள்வதில் நாம் திறன் மேம்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. அரசுகள், மக்கள் சமூகம், குடிமக்கள், சிறியதும் பெரியதுமான அமைப்புக்கள் அறிவியல் பூர்வமாக இந்த திறன் வளர்த்தல் துறையில் செயல்பட வேண்டியிருக்கிறது. நேபாளத்தில் நடந்த நிலநடுக்கத்துக்குப் பிறகு, நான் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீஃப் அவர்களுடன் உரையாட நேர்ந்தது. தெற்காசிய நாடுகளான நாமனைவருமாக இணைந்து பேரிடரை எதிர்கொள்ளத் தயார்நிலையில் இருக்க ஒரு கூட்டுச் செயல்பாட்டை மேற்கொண்டாக வேண்டும் என்ற ஆலோசனையை தெரிவித்தேன். இது தொடர்பான ஒரு கருத்துப் பட்டறையும் பேரிடரை எதிர்கொள்வதற்கான சிறந்த வழிமுறைகள் பற்றிய ஒரு கருத்தரங்கும் புது தில்லியில் நடை பெற்றது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இது நல்லதொரு தொடக்கமாக அமைந்திருக்கிறது.

பஞ்சாபின் ஜலந்தரைச் சேர்ந்த லக்வீந்தர் சிங் அவர்கள் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டிருக்கிறார்….. நான் பஞ்சாப் மாநில ஜலந்தரைச் சேர்ந்த லக்வீந்தர் சிங் பேசுகிறேன். நாங்கள் இங்கே இயற்கை வழி வேளாண்மையில் ஈடுபட்டு வருவதோடு, மேலும் பலருக்கும் விவசாயத்தில் வழிகாட்டியும் வருகிறோம். அறுவடை செய்த பிறகு மிஞ்சி இருக்கும் அடித்தாளுக்கு மக்கள் எரியூட்டி விடுகிறார்களே, இதன் மூலம் பூமித் தாயின் மடியில் இருக்கும் நுண்ணுயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது, அவர்களுக்கு எப்படிப் புரிய வைத்து இதைத் தடுப்பது, மேலும் தில்லி, ஹரியாணா, பஞ்சாப் போன்ற இடங்களில் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

லக்விந்தர் சிங்ஜி, உங்களின் கருத்து எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்கு ஒரு காரணம் நீங்கள் இயற்கை வழி விவசாயம் செய்து வருபவர் என்பது; இதை நீங்கள் மட்டுமே செய்யாமல், விவசாயிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது மேலும் சந்தோஷத்தை அளிக்கிறது. உங்களின் கவலை நியாயமானது தான். ஆனால் இது ஏதோ பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் மட்டுமே நடப்பது இல்லை; இந்தியா முழுக்கவும் இது நமது வழக்கமாகவே ஆகி இருக்கிறது, பாரம்பரியமாகவே நாம் விளைச்சலுக்குப் பிறகு ஏற்படும் விவசாயக் கழிவுகளை இப்படித் தான் எரித்து வருகிறோம். முன்பெல்லாம் இப்படி எரிப்பதால் ஏற்படும் தீமை பற்றி நமக்குத் தெரியாமல் இருந்தது, அனைவரும் செய்கிறார்கள், எனவே நானும் செய்கிறேன் என்பதாக இருந்தது. இரண்டாவதாக, வேறு வழி என்ன என்பது பற்றிய பயிற்சி ஏதும் இல்லாத நிலையிலும் இப்படி நடந்தது. இவற்றின் காரணமாக இது தொடர்ந்து நடந்தது, பெருகி வந்தது. இன்றோ பருவநிலை மாற்றத்தோடு இது இணைந்து கொண்டது. இந்த சங்கடத்தின் தாக்கம் நகரங்களை எட்டத் தொடங்கிய பிறகு, மக்களின் எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. அந்த வகையில் நீங்கள் வெளிப்படுத்தி இருக்கும் கவலை உண்மையானது தான். முதல் கட்டமாக நமது விவசாய நண்பர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும், அவர்களுக்கு உண்மையை விளக்க வேண்டும். இப்படி விளைச்சலுக்குப் பிறகான வேளாண் கழிவுகளை எரிப்பதன் மூலம் நேரம் மிச்சப்படலாம், சிரமத்தைக் குறைக்க முடியலாம், அடுத்த நடவுக்கு நிலம் தயார் நிலையை அடையச் செய்யலாம். ஆனால் இது சரியான நெறிமுறை அல்ல. அறுவடைக்குப் பிறகான வேளான் கழிவுகளும் கூட மிகவும் விலை மதிப்பானவை. அவை இயற்கை வழி உரமாக இருக்கின்றன. நாம் அவற்றை வீணடிக்கிறோம். இது மட்டுமல்ல, நாம் அவற்றைச் சின்னச் சின்ன துண்டுகளாக்கினால், அவை கால்நடைகளுக்கு விருந்தாகலாம். இரண்டாவதாக, நாம் அவற்றை எரிப்பதனால், நிலத்தின் மேல் அடுக்கு எரிய நேர்கிறது. எனதருமை விவசாய சகோதர சகோதரிகளே, ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள், நம்முடைய எலும்புகள் உறுதியாக இருக்கிறது, நமது இருதயம் நன்றாக செயல்படுகிறது, நமது சிறுநீரகம் சீராக வேலை செய்கிறது, எல்லாம் சரியாக இருக்கிறது, ஆனால் உடலின் மீது இருக்கும் சருமம் எரிந்து விட்டால் நாம் பிழைத்திருக்க முடியுமா, சொல்லுங்கள்? எப்படி நமது உடலின் சருமம் எரிந்து போய் விட்டால் நம்மால் உயிர் பிழைத்திருக்க முடியாதோ, அதே போல விளைச்சலுக்குப் பிறகான அடித்தாளையும், விவசாய விளைபொருள் மிச்சங்களையும் நாம் எரித்து விடுவதானால், பூமித் தாயின் சருமம் எரிந்து போகிறது, நமது நிலத்தின் மேல் அடுக்கு எரிந்து போகிறது; இது நமது விளைநிலங்களை மலட்டுத் தன்மையை நோக்கி இட்டுச் செல்கிறது. ஆகையால் நாம் இந்தத் திசையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த அடித்தண்டை மீண்டும் நாம் நிலத்தில் புதைத்து விட்டாலும் கூட அதுவே உரமாக மாறி விடும். அல்லது அவற்றை எல்லாம் சேகரித்து ஒரு குழியில் இட்டு நிரப்பி, மண்புழுக்களுடன் நீரையும் அதில் சேர்த்தால், அது மிகச் சிறப்பான தொழு உரமாக மாறும். இதனால் நமது நிலம் பாதுகாக்கப்படுவதோடு, அந்த விளைநிலத்தில் ஏற்படுத்தப்பட்ட உரத்தையே அதில் போடும் போது, அது இரட்டிப்பு பலனை அளிக்கிறது.

வாழை சாகுபடியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளோடு உரையாடும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அவர்கள் என்னிடம் தங்களின் அருமையான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். முன்பெல்லாம் வாழைத் தார் அறுவடை செய்த பிறகு அவர்கள், வாழைத் தண்டை அப்புறப்படுத்த, ஹெக்டேர் ஒன்றுக்கு 5000, 10000, 15000 ரூபாய்கள் என செலவு செய்ய வேண்டி இருந்தது. அவற்றைப் பிடுங்கி எடுத்துச் செல்ல வேண்டிய ஆட்கள் ட்ராக்டர்களில் வரும் வரை எந்த வேலையும் நடைபெறாமல் இருந்தது. ஆனால் சில விவசாய சகோதரர்களோ அந்தத் தண்டையே 6 முதல் 8 அங்குலங்கள் வரை வெட்டி, அவற்றை நிலத்தில் நட்டு வைத்தார்கள். இந்த வாழைத் தண்டில் ஏராளமான தண்ணீர் இருப்பதால், இதை மரமோ, செடியோ, பயிரோ இருக்கும் இடங்களில் நட்டு வைப்பதன் மூலம் அந்த இடங்களில் சுமார் 3 மாதங்கள் வரை தண்ணீர் இறைக்க வேண்டிய அவசியமே ஏற்படவில்லை என்பதை அனுபவத்தில் கண்டறிந்தார்கள். தண்டில் இருக்கும் தண்ணீரே பயிர்களுக்குப் போதுமானதாக இருந்தது. இன்று அந்தத் தண்டுகளே கூட மிகவும் விலை மதிப்பானவையாக மாறி விட்டிருக்கின்றன இவற்றின் மூலம் அவர்களுக்கு வருவாய் கிடைக்கிறது. முன்பெல்லாம் எந்தத் தண்டை அகற்ற செலவு செய்ய வேண்டி இருந்ததோ, இப்போது, அந்தத் தண்டே அவர்களுக்கு வருவாயை ஈட்டிக் கொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சின்னதொரு பரிசோதனை முயற்சி கூட எந்த அளவுக்கு பலன் தருவதாக அமைந்திருக்கிறது பாருங்கள்!! நமது விவசாய சகோதரர்கள் விஞ்ஞானிகளுக்கு எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல.

எனதருமை நாட்டு மக்களே!!

வரவிருக்கும் டிசம்பர் 3ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த முறை மனதின் குரலில் நான் உடல் உறுப்பு தானம் பற்றிப் பேசியிருந்தேன். இது தொடர்பாக NOTO இலவச தொலைபேசி எண் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். மனதின் குரலுக்குப் பிறகு தொலைபேசி அழைப்புகள் 7 மடங்கு அதிகரித்து விட்டன, வலைத்தளத்தில் 2 ½ பங்கு அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று எனக்குத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. நவம்பர் மாதம் 27ம் தேதியன்று இந்திய உடல் உறுப்பு தான தினம் கடைபிடிக்கப் பட்டது. இதில் சமுதாயத்தின் பல பிரமுகர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள். திரைப்பட நடிகை ரவீனா டண்டன் போன்ற பல பிரபலங்கள் இதில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். உடல் உறுப்பு தானம் பல உயிர்களைக் காப்பாற்றக் கூடியது. இதை விடப் பெரிய தானம் வேறு என்ன இருக்க முடியும்? உடல் உறுப்புகள் வேண்டிக் காத்திருக்கும் நோயாளிகள், உடல் உறுப்பு தானம் செய்வோர், ஆகியோர் பற்றிய விபரங்கள் அடங்கிய தேசிய அளவிலான உடல் உறுப்பு மாற்றுக்கான பதிவு மையம் நவம்பர் மாதம் 27ம் தேதியன்று தொடக்கப்பட்டது. NOTOவுக்கான முத்திரை, தானமளிப்பவருக்கான அடையாள அட்டை மற்றும் முழக்கத்தை வடிவமைக்க ஒரு தேசிய அளவிலான போட்டிக்கு mygov.in இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பல பேர்கள் பங்கெடுத்தார்கள், புதுமையான முறைகளில் தங்களை வெளிப்படுத்திக் கொண்டார்கள், மிகவும் உணர்ச்சிபூர்வமான வகையில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தார்கள் என்பது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்தத் துறையிலும் விழிப்புணர்வு பரவலாகும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது, கண்டிப்பாக தேவை இருப்பவர்களுக்கு தக்க சமயத்தில் உதவி கிடைக்கும் என்றும் நான் நம்புகிறேன். ஏனென்றால், தானம் செய்ய என்று ஒருவர் இல்லாத வரையில், இந்த உதவி எந்த வகையிலும் கிடைக்காது.

டிசம்பர் மாதம் 3ம் தேதியை நாம் மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப் படுகிறது என்பதை நான் முன்பே கூறியிருந்தேன். உடல் ரீதியாக, உள்ள ரீதியாக மாற்றுத் திறனாளிகள் இணையற்ற தைரியமும், ஒப்பற்ற திறனும் படைத்தவர்கள். சில வேளைகளில் அவர்கள் கேலிப் பொருள்களாக சித்தரிக்கப்படும் போது, மனதுக்கு வேதனை ஏற்படுகிறது. சில வேளைகளில் அவர்கள் மீது கருணையும், தயையும் வெளிப்படுத்தப் படுகிறது. ஆனால் நாம் நமது கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டால், அவர்களை நாம் பார்க்கும் பார்வையை சரி செய்து கொண்டால், இவர்கள் நமக்கே கூட ஒரு கருத்தூக்கமாக அமைவார்கள், சாதனைகள் புரிய நமக்கு ஒரு உந்து சக்தியாக விளங்குவார்கள். சின்னதொரு இடர் வந்தாலும் நாம் கண்ணீர் சிந்த ஆரம்பித்து விடுகிறோம், எனது சங்கடமோ மிகவும் சிறிய அளவிலானது, ஆனால் இவர்கள் எப்படி இந்த நிலையில் சமாளிக்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஆகையால் தான் இவர்கள் அனைவரும் நமக்கெல்லாம் கருத்தூக்கத்தின் ஊற்றுக்கள் என்றே நான் கருதுகிறேன். அவர்களின் மன உறுதிப்பாடு, வாழ்க்கையை அவர்கள் எதிர்கொள்ளும் பாங்கு, சங்கடங்களைக் கூட சாதகங்களாக மாற்றிக் கொள்ளும் திறன், தாகம், மிகவும் பாராட்டப் பட வேண்டிய ஒன்று. 40-42 வயதாகும் ஜாவேத் அஹ்மத் அவர்களைப் பற்றி நான் இன்று பேச விரும்புகிறேன். 1996ம் ஆண்டு, கச்மீரில் ஜாவத் அஹ்மெத் மீது தீவிரவாதிகள் சுட்டார்கள். ஆனால் அவர் எப்படியோ உயிர் தப்பினாலும், தீவிரவாதிகள் சுட்ட குண்டுகள் அவரது சிறுநீரகத்தை சிதைத்து விட்டன, சிறுகுடலின் ஒரு பகுதி பாதிப்படைந்தது, தண்டுவடத்தில் அபாயகரமான படுகாயம் ஏற்பட்டது, எழுந்து நிற்க முடியாத அளவுக்கு பாதிப்பின் தீவிரம் அமைந்திருந்தது. ஆனால் ஜாவேத் அஹ்மத் தோல்வியை ஏற்றுக் கொள்ளவில்லை. தீவிரவாதம் ஏற்படுத்திய காயங்கள் அவரைக் கோழையாக்கி விடவில்லை. அவரது ஊக்கத்துக்கு எந்த பங்கமும் ஏற்படவில்லை. எந்த ஒரு குற்றமும் செய்யாத ஒரு நபருக்கு இப்படிப் பட்ட ஒரு தண்டனை கிடைத்திருந்தது, அவரது இளமையே வீணாகிப் போனது, ஆனாலும் கூட அவர் மனதில் எந்த ஒரு கோபமோ, க்ரோதமோ ஏற்படவில்லை; இந்தச் சங்கடத்தைக் கூட ஹாவேத் அஹ்மத் சாதனையாக மாற்றி விட்டார். அவர் தனது ஒட்டு மொத்த வாழ்கையையுமே சமூக சேவைக்கு என அர்ப்பணித்து விட்டார். உடல் ஒத்துழைக்கவில்லை என்றாலும் அவர் கடந்த 20 ஆண்டுக்காலமாக குழந்தைகள் கல்விக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். உடல்ரீதியான மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை எப்படி மேம்படுத்துவது, பொதுவிடங்களில், அரசு அலுவலகங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை எப்படி சிறப்பாக்குவது போன்றவை மீது அவர் பணியாற்றி வருகிறார். சமூகப் பணியில் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்திருக்கிறார். ஒரு சமூக சேவகர் என்ற முறையில், ஒரு விழிப்புணர்வு கொண்ட குடிமகன் என்ற வகையில், அவர் மாற்றுத் திறனாளிகளின் இறைதூதுவராக இன்று அவர் ஒரு அமைதிப் புரட்சியை செய்து வருகிறார். ஜாவேத் அவர்களின் வாழ்வு இந்தியர்களுக்கெல்லாம் கருத்தூக்கமாக அமைய போதுமானதாக இருக்கும் அல்லவா? நான் ஜாவேத் அவர்களின் வாழ்கையை, அவரது முனைப்பை, அவரது அர்ப்பணிப்பு உணர்வை டிசம்பர் மாதம் 3ம் தேதியை முன்னிட்டு சிறப்பாக நினைவு கூர விரும்புகிறேன். நேரப் பற்றாக்குறை காரணமாக நான் இன்று ஜாவேத் அவர்களைப் பற்றி மட்டுமே பேச முடிந்திருக்கிறது என்றாலும் கூட, இந்தியாவின் மூலை முடுக்கெங்கும், இப்படி கருத்தூக்கம் ஏற்படுத்தும் தீபங்கள் ஒளிர்ந்து கொண்டு தான் இருக்கின்றன, வாழ்வதற்கு வேண்டிய ஊக்கத்தை அளித்துக் கொண்டு இருக்கின்றன, வழி துலங்கி வருகின்றன. அந்த வகையில் டிசம்பர் மாதம் 3ம் தேதி அவர்களிடமிருந்து நாம் ஊக்கம் பெற வேண்டிய நாளாக அமைந்திருக்கிறது.

பல விஷயங்களில் நாம் அரசுகளைச் சார்ந்தே இயங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. மத்தியத் தட்டு மக்கள், மத்திய வர்க்கத்துக்கு சற்று கீழே இருப்போர், அடித்தட்டு மக்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், வஞ்சிக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என இவர்கள் அனைவரும் அரசு மற்றும் அரசு தொடர்பான அமைப்புக்களோடு தொடர்ந்து தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். ஒரு சாதாரண குடிமகன் என்ற வகையில் இவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் அரசு ஊழியர்களோடு மோசமான அனுபவம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த ஒன்றிரண்டு மோசமான அனுபவங்கள் அரசு நடைமுறையை அவர்கள் அணுகும் விதத்தை வாழ்கை முழுவதும் பாதிக்கிறது. இதில் உண்மையும் அடங்கி இருக்கிறது. ஆனால் சில வேளைகளில், இதே அரசுத் துறைகளில் இருக்கும் இலட்சக்கணக்கான பேர்கள் சேவை உணர்வோடும், அர்ப்பணிப்பு மனதோடும், மிகவும் சிறப்பான பணிகளைச் செய்கிறார்கள், இது நிரந்தரமாக நமது கண்களுக்குப் புலப்படாமலேயே இருக்கிறது. இதை அரசு இயந்திரமோ, ஒரு அரசு ஊழியரோ செய்திருக்கிறார் என்பதே கூட நமக்குத் தெரியாத அளவுக்கு செயல்பாடு அமைந்திருக்கிறது. நமது நாடு முழுவதிலும் ஆஷா சேவகிகள், அதாவது கிராமப்புற சுகாதார தன்னார்வலர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இந்த ஆஷா சேவகிகளின் பணி பற்றி நாட்டில் நம்மில் பலர் கேள்விப் படாமலேயே கூட இருக்கலாம். ஆனால் பில் கேட்ஸ் அறக்கட்டளையின் உலகப் பிரசித்தி பெற்ற குடும்பத்தின் பில் கேட்ஸ், மிலிண்டா கேட்ஸ் ஆகியோர் இருவருக்கும் கடந்த முறை நாம் பத்மபூஷண் விருது கொடுத்து கௌரவித்தோம். இந்த தம்பதியினர் தங்கள் ஓய்வுக்கால வாழ்க்கையில் தங்கள் செல்வத்தை ஏழைகள் மேம்பாட்டில் செலவு செய்து வருகிறார்கள். அவர்கள் என்னை சந்திக்கும் போதெல்லாம், தாங்கள் இணைந்து பணியாற்றும் ஆஷா சேவகிகள் பற்றி மிகவும் பாராட்டிப் பேசுகிறார்கள், அந்த சேவகிகளின் அர்ப்பண உணர்வு மிகவும் போற்றுதலுக்கு உரியது, சிறப்பாக உழைக்கிறார்கள், புதிய விஷயங்களைக் கற்றல் தொடர்பாக ஆர்வம் அதிகம் இருக்கிறது என்று ஏராளமான செய்திகளை இந்தத் தம்பதிகள் தெரிவிக்கிறார்கள். சமீபத்தில் ஒடிஷா மாநில அரசு ஒரு ஆஷா சேவகிக்கு சுதந்திரத் திருநாளன்று சிறப்பான கௌரவத்தை அளித்தது. ஒடிஷா மாநிலத்தின் பாலாஸோர் மாவட்டத்தின் மிகச் சிறிய கிராமமான தேந்தாகாவின் ஒட்டு மொத்த பேர்களும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். ஏழ்மையில் உழலும் கிராமம் அது, மலேரியாவால் பீடிக்கப்படும் நிலைமை இருக்கிறது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஆஷா சேவகியான ஜமுனா மணி சிங், நான் இந்த தேந்தாகாவைச் சேர்ந்த யாரும் மலேரியா நோயால் இறக்காமல் இருப்பதை உறுதி செய்வேன் என்று தீர்மானித்துக் கொண்டார். அவர் வீடு வீடாகச் செல்வார், யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது என்ற தகவல் கிடைத்தால் போதும் சென்று விடுவார், தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் பயிற்சியை அடியொற்றி அவர் உடனடியாகச் செய்யவேண்டிய மருத்துவ உதவிகளை செய்து விடுவார், ஒவ்வொரு வீட்டிலும் கொசுவலைப் பயன்பாட்டை ஊக்குவிப்பார், எப்படி ஒருவர் தனது சொந்தக் குழந்தையைப் பராமரிப்பதில் கவனம் செலுத்துவாரோ, அதே போல ஆஷா சேவகி ஜமுனா மணி சிங் ஒட்டு மொத்த கிராமத்தின் மீதும் அக்கறை செலுத்தி வருகிறார். அவர் மலேரியாவுக்கு எதிரான போராட்டத்தை முடுக்கி விட்டதோடு, ஒட்டு மொத்த கிராமத்தையும் அதை எதிர்கொள்ள தயார் படுத்தினார். இப்படிப்பட்ட எத்தனையோ ஜமுனா மணிகள் நாட்டில் இருக்கலாம். நாம் அவர்களின் பணியை மதிப்பளித்துப் போற்றலாமே!! இப்படிப்பட்டவர்கள் தாம் நமது நாட்டின் மிகப் பெரிய பலங்களாக விளங்குகிறார்கள். சமுதயாத்தின் சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். நான் அப்படிப் பட்ட அனைத்து ஆஷா சேவகிகளுக்கும், ஜமுனா மணி அவர்கள் மூலமாக என் பாராட்டு மழைகளைப் பொழிகிறேன்.

எனதருமை இளைய நண்பர்களே,

சமூக வலைத்தளங்களிலும், இணைய தளங்களிலும் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வரும் என் இளைய நண்பர்களுக்காக mygov.inஇல் மூன்று மின் புத்தகங்களை, அதாவது e booksஐ தரவேற்றம் செய்திருக்கிறேன். ஒன்று, தூய்மையான பாரதம் தொடர்பான கருத்தூக்கம் ஏற்படுத்தக் கூடிய நிகழ்வுகள் பற்றியது, அடுத்தது, நாடாளுமன்ற உறுப்பினர் மாதிரி கிராமத் திட்டம் தொடர்பானது, மற்றது உடல்நலத் துறை தொடர்பானது. நீங்கள் இதைக் கண்டிப்பாகப் பாருங்கள் என்று நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் படிப்பதோடு மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள். ஒரு வேளை நீங்களும் கூட இதில் உங்கள் கருத்துக்களை சேர்க்கலாம். சில விஷயங்கள் உடனடியாக நம் கருத்தைச் சென்று சேராமல் போனாலும் கூட, சமுதாயத்துக்கு மெய்யான ஆற்றல் தருபவை இவை தாம். ஆக்கபூர்வமான சக்தி தான் மிகப் பெரிய ஆற்றலாக இருக்கிறது. நீங்களும் இது தொடர்பான நல்ல நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள், இந்த ஈ புத்தகங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள், இது பற்றிய கலந்தாய்வுகளை மேற்கொள்ளுங்கள். ஆர்வம் நிறைந்த ஒரு இளைஞர் இந்த ஈ புத்தகங்களை தன் வீட்டருகில் இருக்கும் பள்ளிக் கூடத்தில் படிக்கும் 8, 9, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் கொண்டு சேர்த்து, இப்படியெல்லாம் நடந்திருக்கிறது என்று தெரிவித்தால், நீங்களுமே கூட ஒரு சமுதாய வழிகாட்டியாகத் திகழலாம். இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன், வாருங்கள், நாட்டை உருவாக்குவதில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.

எனதருமை நாட்டு மக்களே,

உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் தொடர்பான கவலையில் ஆழ்ந்திருக்கிறது. பருவநிலை மாற்றம், உலக வெப்பமயமாதல் பற்றிய பேச்சு அனைத்து இடங்களிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. எந்த ஒரு செயலைச் செய்யும் முன்பாகவும் அது சுற்றுச் சூழல் மீது ஏற்படுத்தக் கூடிய தாக்கம் பற்றி சிந்திப்பது என்பது ஒரு அடிப்படைக் கூறாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. உலகின் வெப்பநிலையில் அதிகரிப்பு காணக் கூடாது என்பது அனைவரின் பொறுப்பு மட்டுமல்ல, அனைவரின் கவலையாகவுமே மாறி இருக்கிறது. வெப்பநிலை அதிகரிப்பிலிருந்து தப்ப முதன்மையான வழிமுறைகளில் ஒன்று, எரிசக்தி சேமிப்பு, அதாவது energy conservation. டிசம்பர் மாதம் 14ம் தேதி, தேசிய எரிசக்தி சேமிப்பு தினம். அரசு தரப்பில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. LED பல்ப் இயக்கம் முனைப்பாக முன்னேற்றம் கண்டு வருகிறது. பௌர்ணமி அன்று இரவில் தெரு விளக்குகளை அணைத்து விட்டு, ஒரு மணி நேரம் முழு நிலவொளியில் நனைய வேண்டும், திளைக்க வேண்டும் என்று ஒரு முறை நான் கூறியிருந்தேன்.

நண்பர் ஒருவர் என் பார்வைக்கு ஒரு இணைப்பை அனுப்பி இருந்தார், அதை பார்க்கக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இதை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. பார்க்கப் போனால் இதற்கான பாராட்டுதல்கள் zee newsஐயே சாரும். கான்பூரில் நூர்ஜஹான் என்ற பெண்மணி யாருமே சிந்தித்திருக்க முடியாத ஒரு பணியைச் செய்து வருகிறார். அவர் சூரிய சக்தியைப் பயன்படுத்தி ஏழைகளுக்கு வெளிச்சம் தரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார், இருளோடு போராடி வருகிறார், தன் பெயருக்கு ஏற்ற வகையில் செயல்பட்டு வருகிறார். அவர் பெண்களைக் கொண்ட ஒரு குழுவை ஏற்படுத்தி இருக்கிறார். சூரிய சக்தியால் இயங்கக் கூடிய லாந்தர் விளக்குக்கு மின்னூட்டம் அளிக்கக் கூடிய பட்டறை ஒன்றைத் தொடக்கி இருக்கிறார். மாதம் ஒன்றுக்கு 100 ரூபாய் கட்டணத்தில் அவர் இந்த லாந்தர் விளக்குகளை அளித்து வருகிறார். மக்கள் மாலையில் இநத விளக்குகளை வாங்கிச் சென்று, காலையில் இவற்றுக்கு மின்னூட்டம் அளிக்கப்பட கொடுத்துச் செல்கிறார்கள். நான் கேள்விப்பட்ட வரையில் சுமார் 500 வீடுகளைச் சேர்ந்தவர்கள் இப்படி மின்னூட்டம் அளிக்கப்பட லாந்தர்களைக் கொடுக்கிறார்கள் என்று அறிகிறேன். தினசரி 3 அல்லது 4 ரூபாய் செலவில் வீடு முழுக்க ஒளி பெறுகிறது. நாள் முழுவதும் இந்த லாந்தர்களுக்கு மின்னூட்டம் அளிக்கும் பணியில் இந்த நூர்ஜஹான் செயல் பட்டு வருகிறார். பருவநிலை மாற்றத்துக்கு எதிராக பெரிய பெரிய அளவுகளில் பலர் செயல்பட்டு வந்தாலும், நூர்ஜஹான் போன்றவர்கள் மற்றவர்களுக்கு கருத்தூக்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார், பாருங்கள்!! நூர்ஜஹான் என்ற பெயருக்கே கூட, உலகுக்கு ஒளி அளிப்பவர் என்று அல்லவா பொருள்? இந்தப் பணி மூலமாக அவர் மற்றவர்கள் இல்லங்களில் விளக்கேற்றி வைக்கிறார், அவருக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். கான்பூரின் ஒரு மூலையில் நடைபெற்று வரும் இந்த சின்ன நிகழ்வை உலகுக்கு எடுத்துரைத்த zee tv நிறுவனத்தாருக்கும் என் மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவிக்கிறேன்.

உத்திர பிரதேசத்தின் அபிஷேக் குமார் பாண்டே அவர்கள் எனக்கு தொலைபேசி வாயிலாகத் தன் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்…………
வணக்கம், கோரக்பூரிலிருந்து நான் அபிஷேக் குமார் பாண்டே பேசுகிறேன். நான் இங்கே ஒரு தொழில்முனைவோராக வேலை பார்க்கிறேன். முத்ரா வங்கித் திட்டத்தைத் தொடக்கியதற்காக நான் பிரதமர் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவிக்கிறேன். எந்த முறையில் முத்ரா வங்கி தொழில் முனைவோருக்கு உதவிகள் செய்கிறது என்பதை நான் பிரதமரிடம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

கோரக்பூரைச் சேர்ந்த அபிஷேக் அவர்களே, உங்களுக்கு மிக்க நன்றி. Fund the Unfunded, யாரிடம் பணம் இல்லையோ, அவர்களுக்கு நிதியுதவி செய்யப்பட வேண்டும் என்பது தான் முத்ரா வங்கியின் நோக்கம். இதை நான் எளிய நடையில் விளக்க வேண்டுமென்றால், இதில் Enterprise, அதாவது முனைவு, Earning, அதாவது சம்பாத்தியம், Empowerment, அதாவது அதிகாரம் வழங்கல் ஆகிய மூன்று கூறுகள் இருக்கின்றன. முத்ரா திட்டம் தொழில் முனைவோருக்கு ஊக்கமளித்து, வருவாய் ஈட்ட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து, உண்மையான முறையில் அதிகாரம் வழங்கப்படுதலை ஊக்குவிக்கிறது. சின்னச் சின்ன தொழில் முனைவோருக்கு உதவி செய்ய இந்த முத்ரா திட்டம் செயல்பட்டு வருகிறது. நான் விரும்பும் வேகத்தில் அது இனி வரும் காலத்தில் செயல்படும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் நல்லதொரு தொடக்கம் ஏற்ப்பட்டிருக்கிறது. மிகவும் குறைவான காலத்தில் 66 இலட்சம் பேர்களுக்கு பிரதம மந்திரி முத்ரா திட்டம் வாயிலாக 42000 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. அவர்கள் வேறு யாருமில்லை…. செய்தித் தாள் விற்பனை செய்பவர்க்ள், பால் விற்பனையாளர்கள் என சின்னச் சின்ன வியாபாரங்களில் ஈடுபட்டு வருபவர்கள். இந்த 66 இலட்சம் பயனாளிகளில் 24 இலட்சம் பேர்கள் பெண்கள் என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தத் திட்டத்தை அதிக அளவில் பயன் படுத்தியவர்களில் பெரும்பாலானோர் தங்கள் உழைப்பைக் கொண்டு கௌரவத்தோடு குடும்பம் நடத்த விரும்பும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அபிஷேக் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினது உண்மை தான், ஆனால் இது தொடர்பாக எனக்கும் பல தகவல்கள் வந்த வண்ணமிருக்கின்றன. மும்பையைச் சேர்ந்த சைலேஷ் போன்ஸ்லே என்ற ஒருவருக்கு முத்ரா திட்டம் வாயிலாக 8 ½ இலட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டிருக்கிறது என்று எனக்கு ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. அவர் கழிவு நீர் அகற்றல் தொடர்பான தொழிலைத் தொடக்கி இருக்கிறார். தூய்மை இந்தியா இப்படிப்பட்ட தொழில் முனைவோர்களை உருவாக்கும் என்று நான் முன்பே கூறியிருந்தேன். சைலேஷ் போன்ஸ்லே அவர்கள் இதை மெய்ப்படுத்தி இருக்கிறார். அவர் tanker வாங்கி இதைச் செய்து வருகிறார், மேலும் குறைவான காலத்திலேயே வங்கிக்கு 2 இலட்ச ரூபாய் கடனைத் திரும்ப செலுத்தி இருக்கிறார் என்றும் அறிகிறேன். முத்ரா திட்டம் தொடர்பாக இது தான் நமது குறிக்கோளாக இருக்கிறது.

போபால் நகரைச் சேர்ந்த மம்தா ஷர்மா அவர்கள் விஷயத்திலும் இதே போலத் தெரிவிக்கப்பட்டது. அவருக்கும் பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் படி வங்கியிலிருந்து 40000 ரூபாய் கிடைத்தன. அவர் கைப்பை தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். முன்பெல்லாம் அவர் அதிக வட்டிக்கு பணம் பெற்று வந்தார், மிகவும் சிரமப்பட்டுத் தான் கடனை செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் இப்போதோ கணிசமான தொகை ஒரே தவணையாக கிடைத்திருப்பதால், அவர் தனது வேலையை சிறப்பாக செய்யத் தொடங்கி இருக்கிறார். வட்டி அதிகம் செலுத்த தேவை இல்லாத காரணத்தால் ஒவ்வொரு மாதமும் சுமார் 1000 ரூபாய் மிச்சமாகிறது. அவரது குடும்பத்தாருக்கும் ஒரு நல்ல தொழில் அமைந்தது. ஆனால் இந்தத் திட்டம் மேலும் பிரபலமாகி விரிவடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நமது அனைத்து வங்கிகளும் அதிக புரிதலோடு இதை அணுக வேண்டும், அதிக அளவில் சிறு குறு வியாபாரிகளுக்கு உதவ முன் வர வேண்டும். உண்மையில் இவர்கள் தான் நாட்டின் பொருளாதார இயக்கிகளாகச் செயல் படுகிறார்கள். இவர்கள் தான் நாட்டின் பொருளாதார சக்திகள். இவர்களுக்குத் தான் நாம் ஊக்கம் அளிக்க விரும்புகிறோம். நல்லது நடந்திருக்கிறது, ஆனால் இது மேலும் அதிக அளவில், மேலும் சிறப்பாக நடக்க வேண்டும்.

எனதருமை நாட்டு மக்களே,

அக்டோபர் மாதம் 31 அன்று சர்தார் வல்லபபாய் படேல் அவர்களின் பிறந்த நாளன்று நான் ஒரே இந்தியா சிறப்பான இந்தியா பற்றிப் பேசினேன். இவை போன்ற விஷயங்கள் தாம் சமுதாயத்தில் நீடித்த ஊக்கங்களாக நமக்கு விளங்க வேண்டும். ராஷ்ட்ரயாம் ஜாக்ரயாம் வயம், Eternal vigilance is the price of liberty, அதாவது நிரந்தரமாக விழிப்போடு இருப்பது தான் சுதந்திரத்துக்கு நாம் அளிக்கும் விலை என்பதே இதன் பொருள். நாட்டின் ஒற்றுமை என்ற நாதம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும். ஒரே இந்தியா, சிறப்பான இந்தியா என்பதையே ஒரு திட்டமாக வகுக்க நான் நினைக்கிறேன். mygov.inஇல் நான் ஆலோசனைகளை வரவேற்றேன். திட்டம் எபப்டி இருக்க வேண்டும், முத்திரைச் சின்னம் எப்படி இருக்க வேண்டும், மக்கள் பங்களிப்பு எப்படி அமைய வேண்டும், வடிவம் என்னவாக இருக்க வேண்டும் என்றெல்லாம் கேட்டிருந்தேன். இதில் கணிசமான அளவு ஆலோசனைகள் வந்த வண்ணம் இருக்கின்றன என்று எனக்குத் தெரிவிக்கிறார்கள். ஆனால் நான் மேலும் அதிக ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன். திட்டம் தொடர்பாக குறிப்பிட்ட வகையில் எதிர்பார்க்கிறேன். இதில் பங்கெடுப்பவர்களுக்கு சான்றுப் பத்திரமும், பெரிய அளவிலான பரிசுகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்று எனக்குத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. நீங்களும் உங்கள் படைப்புத் திறன்களை முடுக்கி விடுங்கள். ஒற்றுமை, ஒருமைப்பாடு, ஒரே இந்தியா, சிறப்பான இந்தியா என்ற மந்திரத்தோடு ஒவ்வொரு இந்தியனையும் இணைக்கும் வகையில் எப்படி திட்டத்தை வடிவமைக்க முடியும் என்று தெரிவிக்க வேண்டுகிறேன். அது உயிர்ப்போடு இருக்க வேண்டும், அருமையாக இருக்க வேண்டும், துடிப்போடு இருக்க வேண்டும், அதே வேளையில் ஒவ்வொருவரையும் இணைக்கும் சூத்திரமாகவும் இருக்க வேண்டும். அதில் அரசு, பொது மக்கள், சமுதாயம் என ஒவ்வொருவரின் பங்களிப்பும் என்னவாக இருக்க வேண்டும் என்று தெரிவியுங்கள். உங்கள் மேலான ஆலோசனைகள் கண்டிப்பாக பலனளிக்கும் வ்கையில் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

எனதருமை சகோதர சகோதரிகளே,

குளிர்காலம் தொடங்கவிருக்கிறது. ஆனால் குளிர்காலத்தில் உணவு உண்பதிலும் உடைகள் உடுப்பதிலும் இருக்கும் இன்பமே அலாதியானது தான். ஆனால் இவற்றோடு சேர்ந்து உடல் பயிற்சி மேற்கொள்ளுங்கள் என்பதே என் வேண்டுகோள். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இந்த நல்ல பருவ நிலையை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். உடற்பயிற்சி, யோகப் பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ளுங்கள். குடும்பத்திலேயே கூட இவற்றுக்கான ஒரு சூழலை ஏற்படுத்துங்கள். ஒரு மணி நேரம் ஒட்டு மொத்த குடும்பமும் இணைந்து இதில் ஈடுபட வேண்டும். நாள் முழுவதிலும் எப்படி உங்கள் செயல்பாடுகளுக்கு ஏற்ப உங்கள் உடல் ஒத்துழைக்கிறது என்பதை நீங்கள் உணர்வீர்கள். நல்ல பருவ நிலை, நல்ல பழக்கங்களையும் கைவரப் பெறலாமே. எனதருமை நாட்டு மக்களுக்கு மீண்டுமொருமுறை என் நல்வாழ்த்துக்கள், ஜெய் ஹிந்த்!!