Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டாக்டர் அம்பேத்கர் தேசிய நினைவகத்துக்கு அடிக்கல் நாட்டி, நினைவு சொற்பொழிவாற்றினார் பிரதமர்.

டாக்டர் அம்பேத்கர் தேசிய நினைவகத்துக்கு அடிக்கல் நாட்டி, நினைவு சொற்பொழிவாற்றினார் பிரதமர்.


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், 26, அலிப்பூர் சாலை, புதுதில்லியில் அம்பேத்கர் தேசிய நினைவகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சிக்கான கல்வெட்டை பிரதமர் விக்ஞான் பவனிலிருந்து திறந்து வைத்தார். பின்னர் ஆறாவது அம்பேத்கர் நினைவு உரையாற்றிய பிரதமர், ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் விளிம்பு நிலை மக்கள் பயன்பெறும் வகையிலான மத்திய அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்றார். இது தொடர்பாக பொய்களையும் வதந்திகளையும் பரப்புபவர்களுக்கு பிரதமர் கண்டனம் தெரிவித்தார். திரு வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த போதும் இதே போன்ற வதந்திகள் பரப்பப்பட்டதை பிரதமர் சுட்டிக் காட்டினார்.

அம்பேத்கரின் பணிகளை நினைவுகூர்ந்த பிரதமர், டாக்டர் அம்பேத்கர் தேசிய நினைவகம், டெல்லியின் மிகச்சிறந்த கட்டிடங்களில் ஒன்றாக வடிவமைக்கப்படும் என்று கூறினார். அம்பேத்கரின் பிறந்தநாளான 14 ஏப்ரல் 2018 அன்று அந்த நினைவகத்தை தாமே திறந்து வைப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அம்பேத்கரின் நினைவாக ஐந்து இடங்கள் “பஞ்சதீர்த்” என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வருகின்றன என்று கூறினார் பிரதமர். அவரது பிறந்த இடமான மோ, அவர் படிக்கும்போது லண்டனில் குடியிருந்த இடம், நாக்பூரில் உள்ள தீக்ஷா பூமி, டெல்லியில் உள்ள மகாபரிநிர்வான் ஸ்தலம், மற்றும் மும்பையின் சைத்யா பூமி ஆகிய இடங்களில் நினைவகங்கள் அமைக்கப்படும் என்றார். கூடுதலாக, புதுதில்லி, ஜன்பத்தில் அம்பேத்கர் அறக்கட்டளைக்காக உருவாக்கப்பட்டு வரும் புதிய கட்டிடத்தையும் பிரதமர் குறிப்பிட்டார்.

டாக்டர் அம்பேத்கரின் சமூகப் பணிகளை குறிப்பிட்ட பிரதமர், சர்தார் வல்லபாய் பட்டேல், இந்தியாவை அரசியல் ரீதியாக ஒருங்கிணைத்தார் என்றால் டாக்டர் அம்பேத்கர் அரசியல் அமைப்புச் சட்டம் மூலமாக, இந்தியாவை சமூக ரீதியாக ஒருங்கிணைத்தார் என்று பிரதமர் குறிப்பிட்டார். அரசியல் ரீதியாக கடுமையான எதிர்ப்புகள் இருந்தபோதும் கூட, அம்பேத்கர் பெண்கள் உரிமைக்காக குரல் கொடுத்ததை பிரதமர் சுட்டிக்காட்டினார். டாக்டர் அம்பேத்கரின் பணிகளை தலித்துகளுக்காக மட்டும் அல்லது இந்தியாவுக்காக மட்டும் என்று சுருக்கக் கூடாது என்றார் பிரதமர். அநீதியால் பாதிக்கப்படும் அனைத்து மக்களுக்காகவும் டாக்டர் அம்பேத்கர் குரல் கொடுத்தார். அமெரிக்காவின் மார்ட்டின் லூதர் கிங் போல அம்பேத்கர் ஒரு உலகளாவிய தலைவர் என்ற பிரதமர், தலித்துகள் அல்லாமல் அனைத்து தொழிலாளர்களுக்கும், எட்டு மணி நேர வேலை என்று அம்பேத்கர் குரல் கொடுத்ததை பிரதமர் அப்போது சுட்டிக் காட்டினார்.

மத்திய அரசு சமீபகாலமாக எடுத்து வரும் கொள்கை முடிவுகள் மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளை குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் கடற்பகுதி வணிகம், உள்நாட்டு நீர்ப்பகுதிகளை வளர்த்தல் ஆகிய திட்டங்கள் அம்பேத்கரால் சிந்திக்கப்பட்டவை என்றார். அதே போல 2018ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு என்ற மத்திய அரசின் திட்டமும், அம்பேத்கரின் கனவே என்றார் பிரதமர்.

தலித் தொழிலதிபர்களோடு நடத்தப்பட்ட கூட்டத்தில் அவர்கள் தெரிவித்த ஆலோசனைகளை பிரதமர் நினைவுகூர்ந்தார். அவர்களின் பெரும்பாலான ஆலோசனைகள் மத்திய நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

உழவர்கள் தங்கள் விலை பொருட்களுக்கு உரிய விலை பெற வகை செய்யும் இணைய தளமான தேசிய விவசாய சந்தை இணையதளம், இந்த ஆண்டு 14 ஏப்ரலில் தொடங்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.


***