Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நிதியமைச்சகமும் ஐ.எம்.எப்-உம் இணைந்து நடத்திய “முன்னேறி வரும் ஆசியா: எதிர்காலத்திற்கான முதலீடு” என்ற மாநாட்டில் பிரதமரின் உரை

நிதியமைச்சகமும் ஐ.எம்.எப்-உம் இணைந்து நடத்திய       “முன்னேறி வரும் ஆசியா: எதிர்காலத்திற்கான முதலீடு” என்ற மாநாட்டில் பிரதமரின் உரை


மேடம் லகார்டே அவர்களே! எனது அமைச்சரவை சகா அருண் ஜேட்லி அவர்களே! சகோதர, சகோதரிகளே!

உங்கள் அனைவரையும் இந்தியாவிற்கும் தில்லி மாநகரத்திற்கும் வருக வருக என வரவேற்கிறேன். தில்லி மாநகரமானது செறிவான பாரம்பரியம் மிக்க நகரமாகும். பல வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் இந்த நகரில் உள்ளன. அவற்றில் சிலவற்றையாவது பார்த்து ரசிப்பதற்கு உங்களுக்கு நேரம் இருக்கும் என நம்புகிறேன்.

எங்களோடு இணைந்து ஐ.எம்.எப். நிறுவனம் இந்த மாநாட்டை நடத்துவது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.மேடம் லகார்டே அவர்களே! இந்தியாவின் மீதும் ஆசியாவின் மீதும் உங்களுக்குள்ள அன்பை வெளிக்காட்டும் மற்றொரு உதாரணமாகவே இந்த நிகழ்வு அமைகிறது. இரண்டாவது முறையாக நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலகப் பொருளாதாரம் குறித்த உங்களது புரிதலின் மீது, இந்த நிறுவனத்தைத் தலைமை தாங்கி நடத்திச் செல்வதில் உங்களுக்குள்ள திறமையின் மீது உலகம் வைத்துள்ள நம்பிக்கையையே இது பிரதிபலிக்கிறது. மேடம் லகார்டே அவர்களே! 2010ஆம் ஆண்டில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒதுக்கீட்டு முறையை மறுசீரமைப்பது என்ற நீண்ட நாள் நடவடிக்கை இப்போதுதான் ஒரு வழியாக நடைமுறைக்கு வந்துள்ளது. முன்னேறி வரும் நாடுகளுக்கான ஒதுக்கீடு என்பது இப்போது உலகப் பொருளாதாரத்தில் முறையாகப் பிரதிபலிக்க இப்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஐ.எம்.எஃப் நிறுவனத்தில் கூட்டாக மேற்கொள்ளப்படும் முடிவுகளில் அவர்களது குரல் மேலும் எதிரொலிக்க இது வழிவகை செய்யும். இதில் ஏற்பட்ட தாமதம் குறித்து உருவான நெருக்கடிகளை சமாளிப்பதில் தனிச்சிறப்பான தலைமையை நீங்கள் வெளிப்படுத்தினீர்கள். 2010ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை அனைத்து உறுப்பினர் நாடுகளையும் ஏற்றுக் கொள்ளச் செய்வதிலும் நீங்கள் முக்கியமானதொரு பங்கை வகித்தீர்கள்.

இந்த வெற்றியை மேலும் வலுப்படுத்த ஐ.எம்.எஃப்-ஆல் முடியும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.உலகளாவிய நிறுவனங்களில் சீர்திருத்தம் என்பது தொடர்ந்து நடைபெறும் ஒரு செயல்முறையாகவே இருக்க வேண்டும். உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் மாறுதல்களை, வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் அதிகரித்துவரும் பங்கை அது பிரதிபலிக்க வேண்டும். இப்போதும் கூட ஐ.எம்.எப்-இன் ஒதுக்கீடு என்பது உலக பொருளாதாரத்தின் யதார்த்தத்தை பிரதிபலிக்கவில்லை. ஒதுக்கீடுகளில் மாற்றம் செய்வது என்பது ஒரு சில குறிப்பிட்ட நாடுகளின் ‘அதிகாரத்தை’ அதிகரிக்கும் விஷயம் அல்ல. அது நியாயமான, சட்டபூர்வமான ஒரு பிரச்சனையே ஆகும். இந்த ஒதுக்கீடுகள் மாற்றப்பட முடியும் என்ற நம்பிக்கையே இந்த முறையின் நியாயத் தன்மைக்கு அவசியமான ஒன்றாகும்.ஏழை நாடுகள் இது போன்ற அமைப்புகளின் சட்டபூர்வமான தன்மையை மதிக்க வேண்டுமெனில், அவர்கள் விரும்பவும் நம்பிக்கை கொள்ளவும் வாய்ப்பிருக்க வேண்டும். எனவே அடுத்த சுற்று ஒதுக்கீடு மாற்றம் குறித்து 2017ஆம் ஆண்டு அக்டோபருக்குள் இறுதிப்படுத்துவதென ஐ.எம்.எஃப் முடிவு செய்துள்ளது என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியா எப்போதுமே பன்முகத் தன்மையில் மிகுந்த நம்பிக்கை கொண்ட ஒரு நாடாகும். உலகமானது மேலும் மேலும் சிக்கலானதாக மாறும்போது பன்முகத்தன்மை கொண்ட நிறுவனங்களின் பங்கு என்பது அதிகரிக்கும் என்றே நாங்கள் நம்புகிறோம். உங்களில் ஒரு சிலருக்குத் தெரிந்திருக்காது என்றே நினைக்கிறேன். 1944ஆம் ஆண்டில் நடைபெற்ற ப்ரெட்டன் வுட்ஸ் மாநாட்டில் இந்தியா பிரதிநிதித்துவம் பெற்றிருந்தது. அப்போது இந்தியாவின் சார்பாக பிரதிநிதியாக இருந்த திரு. ஆர்.கே. சண்முகம் செட்டிதான் பின்னர் சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சராக பதவியேற்றார். எனவே இந்த அமைப்புடனான எங்களது உறவு 70 ஆண்டுகளுக்கும் மேலானது. ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி, புதிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் நிறுவன உறுப்பினராகவும் நாங்கள் இருக்கிறோம். ஆசியாவின் வளர்ச்சியில் இந்த வங்கிகள் முக்கியமான பங்கை வகிக்கும் என்றே நாங்கள் நம்புகிறோம்.

நிதித் துறையில் மிக அதிகமான திறமைசாலிகளை இந்த சர்வதேச நிதியம் வளர்த்தெடுத்துள்ளது. அனைத்து உறுப்பினர் நாடுகளும் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நிலையான ஒட்டுமொத்த பொருளாதாரம், அதிகரிக்கும் வளர்ச்சி, மேலும் அதிகமாக உள்வாங்கும் திறன் ஆகியவற்றை வழங்கும் கொள்கைகளை நாம் பின்பற்ற வேண்டிய அவசியம் உள்ளது. இந்த வகையில் இந்த நிதியம் மகத்தான உதவியைச் செய்வதாக இருக்கும்.

இத்தகைய அறிவுரைகள் தவிர, கொள்கை உருவாக்கலில் கூட திறமையை வளர்க்க நிதியம் உதவி செய்ய முடியும். வங்காளதேசம், பூட்டான், மாலத்தீவுகள், நேபாளம், இலங்கை, இந்தியா ஆகிய நாடுகள் இந்த நிதியத்துடன் இணைந்து ஏற்படுத்தியுள்ள ஒரு புதிய கூட்டணியை அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தெற்காசிய பகுதிக்கான பயிற்சி மற்றும் தொழில்நுட்ப உதவி மையம் ஒன்றை உருவாக்குவது என்று நாங்கள் அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளோம். இந்த மையமானது அரசு மற்றும் பொதுத்துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கும். அது அவர்களின் செயல்திறனை மேம்படுத்துவதோடு, அவர்களது கொள்கை குறித்த இடும்திறனின் தரத்தையும் மேம்படுத்தும். அரசுகளுக்கும் பொது நிறுவனங்களுக்கும் தொழில்நுட்ப உதவியையும் இந்த மையம் வழங்கும்.

இப்போது இந்த மாநாட்டின் மையக் கருத்திற்கு வருவோம். நான் இரண்டு விஷயங்களை மட்டுமே தொட்டுச் செல்லலாம் என்று நினைக்கிறேன். முதலாவது : “ஏன் ஆசியா?” மற்றொன்று “எப்படி இந்தியா?” ஏன் ஆசியா முக்கியமானது? எப்படி இந்தியா அதில் பங்களிக்க முடியும்?

அறிவார்ந்த பலரும் 21வது நூற்றாண்டு என்பது ஆசிய நூற்றாண்டாகவே இருக்கும் என்று கூறி வந்திருக்கிறார்கள். உலகத்தின் ஐந்தில் மூன்று பேர் ஆசியாவில்தான் வசிக்கிறார்கள். உலகளாவிய உற்பத்தி மர்றும் வர்த்தகம் ஆகியவற்றில் ஆசியாவின் பங்கு இப்போது மூன்றில் ஒரு பங்காக இருக்கிறது. உலகளாவிய நேரடி அந்நிய முதலீட்டில் அதன் பங்கு கிட்டத்தட்ட 40 சதவீதம் ஆகும். உலகத்தின் மிகவும் துடிப்பான ஒரு பகுதியாகவும் அது விளங்குகிறது. ஆசியாவின் வளர்ச்சி என்பது சற்றே தளர்ந்து போயிருந்த போதிலும், முன்னேறிய நாடுகளை விட மூன்று மடங்கு அதிகமான வேகத்தில் அது வளர்ந்து வருகிறது. எனவே உலகளாவிய பொருளாதாரம் மீண்டு வருவதற்கான நம்பிக்கை ரேகையாகவும் இது விளங்குகிறது.

நாம் ஆசியாவைப் பற்றி சிந்திக்கும்போது, பலவகையிலும் அது முற்றிலும் மாறுபட்ட ஒன்று என்பதையும் அங்கீகரிக்க வேண்டும்.

உதாரணமாக, இந்த மாநாட்டின் தலைப்பு “எதிர்காலத்திற்கான முதலீடு” என்பதாகும். ஆசியாவில் உள்ள மக்கள் உலகத்தின் மற்ற எந்தப் பகுதிகளையும் விட அதிகமான அளவில் இயற்கையாகவே சேமிப்பவர்கள் ஆவர். எனவே அவர்கள் எதிர்காலத்திற்காகவே முதலீடு செய்கிறார்கள். ஆசிய நாடுகளில் நிலவும் சேமிப்பு பழக்கம் குறித்து பல பொருளாதார நிபுணர்களும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். கடன் வாங்கி வீடு வாங்குவதற்குப் பதிலாக, ஆசிய மக்கள் வீடு வாங்குவதற்காக சேமிப்பவர்கள்.

ஆசிய நாடுகளில் பலவும் முதலீட்டு சந்தையை விட அதிகமான அளவிற்கு வளர்ச்சிக்கான நிதி நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றையே பெரிதும் நம்பியிருக்கின்றன. நிதித் துறைக்கு இது ஒரு மாற்று வகையை வழங்குகிறது.

வலுவான குடும்ப மதிப்பீடுகளின் மீதான சமூக நிலைத்தன்மை என்பது ஆசிய வளர்ச்சியின் மற்றொரு அம்சமாகும். ஆசியர்கள் அடுத்த தலைமுறையினருக்கு எதையாவது விட்டுச் செல்வதையே விரும்புபவர்கள்.

மேடம் லகார்டே அவர்களே! உலகின் முக்கிய பெண் தலைவர்களில் ஒருவராக நீங்கள் விளங்குகிறீர்கள். அதிகமாக யாராலும் குறிப்பிடப்படாத ஆசியாவின் மற்றொரு பிரத்தியேகமான அம்சத்தைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்புவீர்கள் என்றே நினைக்கிறேன். அதாவது, இந்த ஆசியப் பகுதியானது மிக அதிகமான பெண் தலைவர்களைக் கொண்ட பகுதியாகும். இந்தியா, இலங்கை, வங்காளதேசம், பாகிஸ்தான், இந்தோனேசியா, தாய்லாந்து, கொரியா, மயன்மார் மற்றும் பிலிப்பைன்ஸ். இந்த நாடுகள் அனைத்துமே பெண்களை தேசிய தலைவர்களாகக் கொண்ட நாடுகள். உலகத்தின் வேறு எந்தப் பகுதியையும் விட ஆசியா இந்த விஷயத்தில் மிக அதிகமாகவே செய்துள்ளது. இன்று கூட, இந்தியாவின் மிகப்பெரும் நான்கு மாநிலங்களில் – மேற்கு வங்கம், தமிழ்நாடு, குஜராத் மற்றும் ராஜஸ்தான் – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் தலைவர்களின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையின் தலைவரும் பெண்தான்.

ஆசியாவில் இந்தியாவிற்கு தனியிடம் உண்டு. வரலாற்று ரீதியாகவே இந்தியா ஆசிய பகுதிக்கு பல்வேறு வகையிலும் பங்களித்தே வந்துள்ளது. இங்கு தோன்றிய புத்த மதம்தான் சீனா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் இதர பகுதிகளுக்குச் சென்றது. இந்த ஆசிய கண்டத்தின் கலாச்சாரத்தில் மிக நீண்ட செல்வாக்கையும் அது செலுத்தி வருகிறது. இந்த நாட்டின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் இருந்த அரசுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆசியாவின் இதர பகுதிகளுடன் கடல் வாணிகம் செய்து வந்துள்ளன. வன்முறையின்றியே காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற முடியும் என்பதையும் இந்திய தேச விடுதலை இயக்கம் இதர ஆசிய நாடுகளுக்கு எடுத்துக் காட்டியது. அதன் தேசியம் என்ற உணர்வும் கூட விசாலமானதாக, அனைவரையும் உள்ளடக்கியதாகவே இருந்தது. குறுகிய மொழி அல்லது மத ரீதியான அறிகுறிகளினால் அதை விவரித்துவிட முடியாது. சமஸ்கிருதத்தில் போற்றிக் கூறப்படும் “வசுதைவ குடும்பகம்” (உலகமே ஒரு குடும்பம்) என்பதே அனைத்து அறிகுறிகளையும் ஒன்றாகக் கருதும் தன்மையைக் குறிப்பதாகும்.

ஜனநாயகமும் துரிதமான பொருளாதார வளர்ச்சியும் ஒன்றாக இருக்க முடியாது என்ற மாயையை இந்தியா அகற்றியுள்ளது. உயிர்த்துடிப்பான ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியா ஒரு நாட்டில்தான் வளர்ச்சி விகிதம் 7 சதவீதத்திற்கு மேலாக எட்டப்பட்டுள்ளது. ஜனநாயகம் என்பது காலனியாதிக்கம் இந்தியாவிற்கு விட்டுச் சென்ற சொத்து என்று கூட சில நேரங்களில் கூறப்படுவதுண்டு. ஆனால் உலகத்தின் பல பகுதிகளிலும் ஜனநாயகம் என்றால் என்னவென்றே தெரியாத காலத்திலேயே, பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே, ஜனநாயக ரீதியான சுயாட்சி வடிவங்களை இந்தியா உருவாக்கியிருக்கிறது என வரலாற்று ஆசிரியர்கள் நமக்கு எடுத்துக் கூறுகின்றனர்.

பரந்து விரிந்த, பல்வேறுபட்ட தன்மை கொண்ட ஒரு நாடு பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதோடு, சமூகத்திலும் நிலைத்தன்மையை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்பதையும் இந்தியா உலகத்திற்கு எடுத்துக் காட்டியுள்ளது. நாம் இதைச் செய்வதில் ஒரு முறை என்பது கூட்டுறவான, போட்டித் தன்மை கொண்ட கூட்டாட்சி அமைப்பின் மூலமாகவே ஆகும். பொதுவான நோக்கங்களை நிறைவேற்ற மாநிலங்களும் மத்திய அரசும் ஒன்றாக இணைந்து செயலாற்றுகின்றன. சிறந்த கொள்கைகளை, ஏழைகளுக்கு அத்தியாவசியமான சேவைகளை அளிக்கும் நடவடிக்கைகளை கடைப்பிடிக்கும் மாநிலங்கள் மற்ற மாநிலங்களும் அவற்றைப் பின்பற்றத் தூண்டுவதாக அமைகின்றன.

எங்கள் துரிதமான பொருளாதார வளர்ச்சி என்பதும் கூட ஆசியாவில் மிகவும் வேறுபட்ட ஒன்றாகும். எமது கூட்டாளிகளின் பாதிப்பில் வர்த்தகத்தில் பலன் பெற நாங்கள் எப்போதுமே முயற்சித்தது இல்லை. ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கைகளிலும் கூட ‘அடுத்த வீட்டுக்காரன் பிச்சைக்காரன்’ என்ற முறையை நாங்கள் பின்பற்றியதில்லை. எங்களது பணப் பரிமாற்ற விகிதத்தை நாங்கள் எப்போதுமே மதிப்புக் குறைத்ததில்லை. நடப்புக் கணக்கு பற்றாக்குறையை நடத்துவதன் மூலம் உலக, ஆசிய தேவைக்கு உதவி செய்கிறோம். எனவே நாங்கள் ஆசியாவில் நல்லதொரு நாடாக, சிறந்த உலகப் பொருளாதார குடிமக்களாக, எமது வர்த்தகக் கூட்டாளிகளுக்கு தேவைக்கான ஆதாரமாகவே விளங்குகிறோம்.

ஆசியா வெற்றி பெறவேண்டும் என்றே நாம் அனைவரும் விரும்புகிறோம். பொருளாதார ரீதியாக வலுவாக இருப்பதன் மூலமே ஆசியாவின் வளத்திற்கும் வளர்ச்சிக்கும் இந்தியா பங்களிக்க முடியும் என்றே நான் உறுதியாக நம்புகிறேன். உலகளாவிய பிரச்சனைகளுக்கு இடையே, இந்தியாவானது ஒட்டுமொத்த பொருளாதார நிலைத்தன்மையின் புகலிடமாக, நம்பிக்கைக்கும், சிறப்பான செயல்பாட்டிற்கும், வாய்ப்புக்கும் ஒரு கலங்கரை விளக்கமாக இந்தியா இருக்கிறது என்று சொல்லிக் கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மேடம் லகார்டே அவர்களே! உலகப் பொருளாதாரத்தில் வெளிச்சமான ஒரு பகுதி என்று இந்தியாவை நீங்கள் குறிப்பிட்டுச் சொன்னீர்கள். அதை மகத்தான ஒரு சலுகையாக அதே நேரத்தில் மிகப்பெரும் பொறுப்பாகவே கருதுகிறேன். கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட எங்களது சாதனைகளையும் வரவிருக்கும் காலத்திற்கான எங்களது முன்னுரிமைகளையும் கொஞ்சம் கோடிட்டுக் காட்ட விழைகிறேன்.

ஒட்டுமொத்த பொருளாதார நிலைத்தன்மையில் மிகப்பெரும் பயன்களை நாங்கள் அடைந்துள்ளோம். பணவீக்கத்தில் கணிசமான குறைவு, நிலையான நிதி உறுதிப்பாடு, வசதியான அளவில் கடன் திருப்பிச் செலுத்துவதற்கான கையிருப்பு, அந்நிய செலாவணி கையிருப்பை வளர்த்திருப்பது போன்றவை சுட்டிக் காட்டக் கூடிய ஒரு சில முக்கிய அம்சங்களாகும்.

சிக்கலானதொரு வெளிநாட்டு சூழ்நிலையில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக போதுமான மழை இல்லாத நிலையிலும், எங்களது வளர்ச்சி விகிதத்தை 7.6 சதவீதமாக நாங்கள் உயர்த்தியுள்ளோம். இது உலகத்தின் முக்கிய நாடுகளின் பொருளாதாரங்களிலேயே மிக அதிகமான வளர்ச்சியாகும்.

எங்களது பொருளாதார நிர்வாகத்தையும் மேம்படுத்தி உள்ளோம். ஊழல், வங்கி, ஒழுங்குமுறை அமைப்புகள் ஆகியவற்றின் முடிவுகளில் தலையிடுவது போன்றவை காலம் கடந்த ஒன்றாக மாறி விட்டன.

மக்களை நிதி அமைப்புகளில் உள்வாங்கிக் கொள்வது என்ற திட்டத்தை மேற்கொண்டு வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம். இதுவரை வங்கி வசதி எதுவும் பெறாத 20 கோடி பேரை வங்கி அமைப்பிற்குள் கொண்டு வந்துள்ளோம். அதுவும் ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே.

நிதி அமைப்புகளில் மக்களை உள்ளிழுத்துக் கொள்வது என்ற திட்டத்தின் விளைவாக, உலகத்தின் மிகப்பெரிய, அதே நேரத்தில் வெற்றிகரமான நேரடி பயன் பரிமாற்றம் என்ற திட்டத்தை சமையல் எரிவாயுத் துறையில் நிறைவேற்றியுள்ளோம். இந்த திட்டத்தை உணவு, மண்ணெண்ணெய், உரங்கள் போன்ற இதர துறைகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் இலக்கை மேம்படுத்தவும், பொதுச் செலவினத்தின் தரத்தை உயர்த்தவும் முடிந்துள்ளது.

எமது பொருளாதாரத்தின் கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளையும் நேரடி அந்நிய முதலீட்டிற்காக திறந்து விட்டுள்ளோம்.

வர்த்தகம் செய்வதற்கான உலக வங்கியின் குறியீடுகளில் 2015ஆம் ஆண்டில் இந்தியா இதுவரை பெற்றிராத உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளது.

2015ஆம் ஆண்டில் கீழ்கண்டவை உள்ளிட்ட பல நேரடி குறியீடுகளில் மிக அதிகமான இடத்தை இந்தியா அடைந்துள்ளது:

நிலக்கரி, மின்சாரம், யூரியா, உரங்கள் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றின் உற்பத்தி;

பெரும் துறைமுகங்கள் கையாண்ட சரக்கு மற்றும் துறைமுகங்களில் குறிப்பிட்ட நேரத்திற்குள் விரைவாக கப்பல்களை விடுவிப்பது;

புதிய நெடுஞ்சாலைகள் கிலோமீட்டர் கணக்கில் உருவாக்குவதற்கான உத்தரவுகள்.

மென்பொருள் ஏற்றுமதி.

ஒரு சில நடவடிக்கைகளை நாங்கள் எடுத்ததைத் தொடர்ந்து நிறுவனத்திறன் என்பது பெரிதும் அதிகரித்துள்ளது. தொழில்நுட்ப புது முயற்சிகளில், அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேலுக்கு அடுத்து இந்தியா இப்போது நான்காவது இடத்தில் உள்ளது. தி எகானாமிஸ்ட் இதழ் இந்தியாவை இணையம் மூலமான வர்த்தகத்திற்கு புதிய எல்லை என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தச் சாதனைகளோடு ஓய்ந்திருக்க நாங்கள் திட்டமிடவில்லை; ஏனெனில் மாற்றத்திற்கான சீர்திருத்தம் என்ற எனது நிகழ்ச்சி நிரல் இன்னும் முடிவு பெறவில்லை. எங்களது சமீபத்திய பட்ஜெட் எங்களது எதிர்கால திட்டங்கள்; விருப்பங்கள் ஆகியவற்றிற்கான வரைபடத்தை வழங்குவதாகவே அமைந்துள்ளது. எங்களது தத்துவம் மிகத் தெளிவானதாகவே இருக்கிறது: செல்வத்தை உருவாக்குவதற்கான சூழ்நிலையை உருவாக்குவது; அந்தச் செல்வத்தை அனைத்து இந்தியர்களுக்கும், குறிப்பாக ஏழைகள், அடுத்தவர்களின் பாதுகாப்பையே நம்பியிருப்பவர்கள், விவசாயிகள், பலவீனமான சமூகப் பகுதியினர் உள்ளிட்டவர்களுக்கு பரவலாக கொண்டு செல்வது என்பதே ஆகும்.

கிராமப்புற, விவசாயத் துறையில் நாங்கள் முதலீட்டை அதிகரித்திருக்கிறோம். ஏனென்றால் அங்கேதான் இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் விவசாயிகளுக்கு நாங்கள் செய்யும் உதவி என்பது இலவசங்கள் அல்ல. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நாங்கள் கீழ்கண்ட வகையில் திட்டமிட்டுள்ளோம்:

பாசன வசதியை அதிகரிப்பது;

சிறந்த வகையிலான நீர் மேலாண்மை;

கிராமப்புறங்களில் பொதுச்சொத்துக்களை உருவாக்குவது;

உற்பத்தியை ஊக்குவிப்பது;

விற்பனை முறையை மேம்படுத்துவது;

இடைத்தரகர்களின் லாபத்தைக் குறைப்பது;

வருவாய் இல்லாத திடீர் தருணங்களை தவிர்ப்பது.

விவசாயப் பொருட்களுக்கான விற்பனைத் துறையிலும் நாங்கள் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். மிகப்பெரும் பயிர் காப்பீட்டுத் திட்டத்தையும் துவக்கியுள்ளோம்.

விவசாயம் தவிர, சாலைகள், ரயில்வே போன்றவற்றிற்கான பொது முதலீட்டையும் நாங்கள் அதிகரித்துள்ளோம். இது பொருளாதாரத்தின் உற்பத்தித் திறனை மேம்படுத்தி, எமது மக்களின் தொடர்புத் திறனையும் அதிகரிக்கும். தனியார் முதலீடு தொடர்ந்து பலவீனமாகவே நீடிக்கும் நிலையில் பொது முதலீடு அவசியமான ஒன்றாகிறது.

செல்வத்தையும் பொருளாதார வாய்ப்பையும் உருவாக்க உதவும் வகையில் இதர பல சீர்திருத்தங்களையும் நாங்கள் மேற்கொண்டுள்ளோம். நாட்டில் ஏராளமான தொழில்திறனுக்கான வாய்ப்பு உள்ள நிலையில் எனது கோஷம் இந்தியாவில் துவக்கு! இந்தியாவை நிமிர்த்து என்பதாகும். இத்தகைய புதிய தொழில் துவங்கலை ஊக்குவிக்கும் வகையிலான ஒரு சூழலை எமது பட்ஜெட் வழங்கியுள்ளது.

வேலைக்குத் தகுதியுள்ள இளைஞர்களை உறுதிப்படுத்துவதே எங்களது இந்தியாவில் உருவாக்கு என்ற பிரச்சாரத்தின் வெற்றிக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். எனவே தொழிலாளர் சக்தியின் திறமையை மேம்படுத்துவது என்ற மிகப்பெரும் நிகழ்ச்சி நிரலை இந்திய அரசு வகுத்துள்ளது. நாங்கள் திட்டமிட்டுள்ள அளவில் திறனை உருவாக்க வேண்டுமெனில் இதற்கான நிறுவனங்களை வளர்த்தெடுக்க வேண்டியுள்ளது. இந்த முயற்சியையும் நாங்கள் மேற்கொண்டுள்ளோம். நாடு தழுவிய அளவில், 29 துறைகளில் திறன் வளர்ச்சிக்கான திட்டத்தை நாங்கள் இப்போது துவக்கியுள்ளோம்.

இந்த பூமிக் கோளத்தை பாதுகாப்பதில் பொறுப்புள்ள உலகக் குடிமகனாகவே இந்தியா விளங்குகிறது. சமீபத்தில் நடைபெற்ற சி.ஓ.பி. 21 உச்சி மாநாட்டின் நடவடிக்கைகளிலும் இந்தியா சாதகமான பங்கை வகித்தது. இப்போதைக்கும் 2030க்கும் இடையே துரிதமாக வளர்வதன் மூலமும், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் கரியமில வாயு வெளிப்பாட்டின் அளவை 33 சதவீதம் குறைப்பதன் மூலமும் வரலாற்றைத் திருத்தி எழுத நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதற்குள்ளேயே, எங்களது நிறுவப்பட்ட மின்சார உற்பத்தி திறன் என்பதில் 40 சதவீதம் வழக்கமான நிலக்கரி, கச்சா எண்ணெய், டீசல் என்பதைத் தவிர்த்த முறையில் இருக்கும். கூடுதலான வனப்பகுதி மற்றும் மரங்கள் பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம் 2030ஆம் ஆண்டிற்குள் கூடுதலாக 2.5 பில்லியன் டன் கரியமில வாயுவை தேக்கி வைக்கும் திறன் உருவாக்கப்படும். இந்த முன்முயற்சிகள் அனைத்துமே தனிநபர் அளவில் மிகக் குறைந்த நிலம், மிகக் குறைவான தனிநபர் கரியமில வாயு வெளியேற்றம் கொண்ட நாட்டில் மேற்கொள்ளப்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும். பூமத்திய ரேகைக்கு மேலேயும் கீழேயும் உள்ள 121 சூரிய ஒளி நிறைந்த நாடுகளை உள்ளடக்கி ஒரு சர்வதேச சூரிய ஒளி அடிப்படையிலான கூட்டணியை துவக்குவதிலும் நாங்கள் முன்னிலை வகிக்கிறோம். மறுசுழற்சி மூலம் மின்சாரம் தயாரிப்பதில் உருவாகியுள்ள வளர்ச்சிகளை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் ஆசியாவில் உள்ள நாடுகள் உள்ளிட்டு வளரும் நாடுகள் பலவற்றிற்கும் இது உதவிகரமாக இருக்கும். குறிப்பிடத்தக்க கரியமில மானியம் என்பதிலிருந்து இந்தியா கரியமிலம் மீதான வரி என்பதாக மாறியுள்ளது. நிலக்கரியின் மீது கூடுதல் வரி விதிப்பது என்ற வகையில் கரியமிலம் மீது வரி விதிக்கும் ஒரு சில நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா விளங்குகிறது. சமீபத்திய 2016-17 ஆண்டு பட்ஜெட்டில் நிலக்கரி மீதான இந்த கூடுதல் வரியானது இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆசியாவிலும் பல கூட்டுறவிற்கான முன்முயற்சிகளை இந்தியா எடுத்து வந்துள்ளது. ‘கிழக்கு நோக்கிய கொள்கை’ என்பதை ‘செயல் கிழக்கு கொள்கை’ என்பதாக மாற்றி அமைத்துள்ளோம். கூட்டுறவிற்கான எங்களது அணுகுமுறை என்பது தளர்வானதொரு முறையையே அடிப்படையாகக் கொண்டது. தெற்காசியாவில் உள்ள எங்களது அண்டை நாட்டவர்கள், ஆசியன் அமைப்பில் உள்ள எங்கள் கூட்டாளிகள், சிங்கப்பூர், ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் உள்ள எங்களது பங்குதாரர்கள் ஆகியோருடன் பலவேறு வகைகளில் பல விதமான வேகத்தில் நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம். அதைத் தொடர்ந்து மேற்கொள்வது என்றும் திட்டமிட்டுள்ளோம்.

எனது கனவு என்பது முழுமையாக மாற்றம் பெற்ற இந்தியா ஆகும். இந்தக் கனவை நமது பொதுவான கனவான முன்னேறிய ஆசியா – அதாவது உலகத்தின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மகிழ்ச்சியோடும் திருப்தியோடும் வாழ முடிந்த ஒரு ஆசியா – என்ற கனவுடன் கூடவே வைக்கிறேன். நமது கூட்டான பாரம்பரியம், நமது பொதுவான இலக்குகள்,ஒரே மாதிரியான கொள்கைகள் ஆகியவை நீடித்த வளர்ச்சியையும் பங்கிடப்பட்ட வளத்தையும் உருவாக்க முடியும்; உருவாக்க வேண்டும்.

மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவரையும் இந்தியாவிற்கு வருக வருக என வரவேற்கிறேன். இந்த மாநாட்டு அதன் இலக்கில் வெற்றி பெறட்டும் என்றும் வாழ்த்துகிறேன்.

நன்றி!