இந்தியாவுக்கும், நமீபியா நாட்டின் தேர்தல் ஆணையம் மற்றும் பனாமா நாட்டின் தேர்தல் தீர்ப்பாயத்துக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் தேர்தல் மேலாண்மை மற்றும் நிர்வாகத்துறையில் ஒத்துழைப்புக்கானது.
முக்கிய அம்சங்கள்:
தேர்தல் நடைமுறையின் அமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு சார்ந்த அறிவு மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல் உள்ளிட்ட தேர்தல் மேலாண்மை மற்றும் நிர்வாகத்தின் ஒத்துழைப்புக்கான பிரிவுகளைக் கொண்டது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம். தகவல் பரிமாற்றம், நிறுவனங்களை வலுப்படுத்துதல், திறன் வளர்ப்பு, பணியாளர் பயிற்சி, முறையான ஆலோசனைகள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
தாக்கம்:
இது நமீபிய தேர்தல் ஆணையம், பனாமா தேர்தல் தீர்ப்பாயம் ஆகியவறுக்கு தொழில்நுட்ப உதவி, திறன் மேம்பாடு துறைகளில் ஆதரவளிக்கும். இருதரப்பு உறவுகளையும் இந்த ஒப்பந்தம் மேம்படுத்தும். இந்தியாவின் சர்வதேச உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.
பின்னணி:
உலகெங்கும் தேர்தல் விஷயங்களிலும், தேர்தல் நடைமுறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் இந்திய தேர்தல் ஆணையம் பங்கேற்று வருகிறது. இதற்கென சில வெளிநாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு வருகிறது. இந்திய ஜனநாயகத்தின் வெற்றி உலகெங்கும் உள்ள அனைத்து அரசியல் அமைப்புகளின் கவனத்தையும் கவர்ந்து வருகிறது. இந்த வகையில் நமீபிய தேர்தல் ஆணையம், பனாமா தேர்தல் தீர்ப்பாயம் ஆகியவற்றுடனான தேர்தல் மேலாண்மை ஒத்துழைப்புத் திட்டத்தை, தேர்தல் ஆணையம் சட்டம் மற்றும் சட்டமியற்றும் அமைச்சகங்களுக்கு அனுப்பி வைத்து ஒப்புதலைப் பெற்றது.