Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

துடிப்புமிக்க குஜராத் மாநாடு 2019 (ஜனவரி 17-19, 2019)-ல் பங்கேற்பதற்காக செக் குடியரசின் பிரதமர் இந்தியா வருகை


செக் குடியரசின் பிரதமர் திரு. ஆன்ட்ரேஜ் பாபிஸ், 2019, ஜனவரி 17-19 இந்தியாவில் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். செக் குடியரசு பங்குதாரர் நாடாக உள்ள துடிப்பு மிக்க குஜராத் சர்வதேச மாநாடு 2019-ல் பங்கேற்கும் செக் நாட்டு தூதுக்குழுவிற்கு தலைமையேற்று பிரதமர் திரு. பாபிஸ் வந்துள்ளார்.

மாநாட்டின் இடையே, ஜனவரி 18 அன்று, பிரதமர் திரு. மோடியும், பிரதமர் திரு. பாபிசும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இருநாட்டு நலன் சார்ந்த பல்வேறு சர்வதேச மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த இருதரப்பு உறவு குறித்து இந்த சந்திப்பின் போது விரிவாக விவாதிக்கப்பட்டது.

பிரதமர் மோடியின் தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய தலைமைப்பண்பை வெகுவாகப் பாராட்டிய செக் பிரதமர், இந்தியாவின் விரைவான பொருளாதார வளர்ச்சியையும் பாராட்டியதுடன், இருதரப்பு வர்த்தகம் & முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதித்தார். இந்திய குடியரசுத் தலைவர் கடந்த ஆண்டு செப்டம்பரில் செக் குடியரசில் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது, இருதரப்பு ஒத்துழைப்புக்கான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதை பிரதமர் திரு.பாபிஸ் நினைவுகூர்ந்தார்.

கனரக இயந்திரங்கள் மற்றும் துல்லியமான பொறியியல் சாதன உற்பத்தியில் செக் குடியரசு நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றி வருகிறது. எனவே, பாதுகாப்பு தளவாடங்கள், வாகன உற்பத்தி மற்றும் ரயில்வேத் துறைக்கு தேவையான சாதனங்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான சந்தை வாய்ப்புகள் ஏராளமாக உள்ளதை பயன்படுத்தி, இந்தியாவில் முதலீடு செய்ய முன்வருமாறு செக் தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் திரு. மோடி அழைப்பு விடுத்தார்.

தனிச்சிறப்பு வாய்ந்த சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் பலரை உருவாக்கி, தமது தலைமையில் இயங்கும் செக் நாட்டின் ஆராய்ச்சி & வளர்ச்சி கவுன்சிலுக்கு இந்திய விஞ்ஞானி ஒருவரை பரிந்துரைக்குமாறும் செக் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
இருநாடுகள் இடையேயான பாரம்பரிய ரீதியான ஒத்துழைப்புகளை பாராட்டிய இரு பிரதமர்களும், இருநாடுகள் இடையேயான உறவை புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்ல தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்தனர்.

தமது இந்தப் பயணத்தின் போது, பிரதமர் திரு பாபிஸ், ஜனவரி 19 அன்று, இந்திய குடியரசுத் தலைவரை புதுதில்லியில் சந்திக்க உள்ளார். அத்துடன் புனே செல்லும் அவர், அங்கு செயல்பட்டு வரும் செக் நாட்டு தொழில் நிறுவனங்களை பார்வையிடுவதுடன், புனேயில் உள்ள சிம்பயாசிஸ் பல்கலைக்கழகத்தில் ஐரோப்பிய கல்விக்கான மையத்தையும் தொடங்கிவைக்க உள்ளார்.

***