Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குரு கோபிந்த் சிங்கின் பிறந்தநாளை குறிக்கும் வகையில் ரூ.350 மதிப்பிலான நினைவு நாணயத்தை பிரதமர் வெளியிட்டார்


குரு கோபிந்த் சிங்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, தலைநகரில் இன்று நடைபெற்ற விழாவில் ரூ.350 மதிப்புள்ள நினைவு நாணயத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்டார். குரு கோபிந்த் சிங்கின் உயரிய சிந்தனைகள், கருத்துக்கள், மனிதகுலத்திற்கு அவர் ஆற்றிய தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு, வீரம் மற்றும் தியாகத்தை புகழ்ந்துரைத்த பிரதமர், மக்கள் அவரது வழியை பின்பற்றி நடக்குமாறு கேட்டுக் கொண்டார்.

எண் 7, லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள தமது இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், குரு கோபிந்த் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவு நாணயத்தை வெளியிட்ட பிரதமர், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய திரு. மோடி, குரு கோபிந்த் சிங் ஒரு தலைசிறந்த மாவீரன், தத்துவஞானி, கவிஞர் மற்றும் குருவாக திகழ்ந்தவர் என்றார். மக்களுக்கான அவரது போதனைகள், மதம் மற்றும் சாதி தடைகளை தகர்த்தெறிவதாக உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் காட்டிய அன்பு, அமைதி மற்றும் தியாகம் ஆகியவை இன்றளவும் பொருந்துவதாக உள்ளன என்றும் பிரதமர் தெரிவித்தார்.

குரு கோபிந்த் சிங்கின் கருத்துக்களும், போதனைகளும், இனி வரும் ஆண்டுகளிலும் மனித குலத்திற்கு ஊக்கம் மற்றும் வழிகாட்டுதலாக இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்த நினைவு நாணயம், நாம் அவருக்கு செலுத்தும் மரியாதை மற்றும் பயபக்திக்கான ஒரு சிறு முயற்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.

குரு கோபிந்த் சிங் மகராஜ் காட்டிய 11 அம்ச வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நடக்க, மக்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நாட்டு மக்களுக்கு தமது லோரி பண்டிகை வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

முன்னதாக, 2018 டிசம்பர் 30 அன்று தமது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், குரு கோபிந்த் சிங் காட்டிய வழியில் அர்ப்பணிப்பு மற்றும் தியாக உணர்வுகளை பின்பற்றி நடக்குமாறு நாட்டு மக்களை கேட்டுக் கொண்டிருந்தார். 2017 ஜனவரி 5 ஆம் தேதி பாட்னாவில் நடைபெற்ற குரு கோபிந்த் சிங்கின் 350-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களிலும் அவர் கலந்து கொண்டு, நினைவு அஞ்சல் தலையையும் வெளியிட்டார். 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டை கொத்தளத்தில் ஆற்றிய தமது சுதந்திர தின உரையிலும், 2016 அக்டோபர் 18 அன்று லூதியானாவில் நடைபெற்ற தேசிய குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான விருது வழங்கும் விழாவில் பேசிய போதும், குரு கோபிந்த் சிங்கின் கருத்துக்கள் மற்றும் போதனைகள், மனித குலத்திற்கு மிகவும் அவசியமானவை என பிரதமர் மோடி நினைவு கூர்ந்தது குறிப்பிடத்தக்கது.

***