Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராஜஸ்தான் மாநிலம் பார்மேர் பகுதி பாஞ்ச்பத்ராவில் ராஜஸ்தான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கான வேலைகளுக்கன துவக்கவிழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை


இங்கு பெரும் எண்ணிக்கையில் அணிதிரண்டு வந்துள்ள எனதருமை சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் மகர சங்க்ராந்தி விழா கொண்டாடப்பட்டது. பரிணாமத்தின் சாரம் மகர சங்க்ராந்தியோடு தொடர்புடையது. வளர்ச்சி என்பது மகர சங்க்ராந்தியோடு உள்ளார்ந்த ஒரு விஷயமாகும். இத்தகைய மகர சங்க்ராந்தி விழாவிற்குப் பிறகு மிகப்பெரியதொரு முயற்சி அல்லது முன்முயற்சியான ஒரு திட்டம் ராஜஸ்தான் மாநில மண்ணில் இன்று தொடங்கவிருக்கிறது. இது இந்தியா முழுவதற்கும் எரிபொருளை வழங்கவிருக்கிறது. இந்தப் பணியைத் தொடங்குவதை குறிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்காக முதலமைச்சர் திருமதி. வசுந்தரா ராஜே சிந்தியா, பெட்ரோலியத் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர ப்ரதான் ஜி ஆகியோருக்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுவாகவே ஏதாவது ஒன்றிற்காக எந்தவொரு அரசோ அல்லது அரசியல்வாதியோ அடிக்கல் நாட்டும்போது, அது தொடர்பான உண்மையான பணி எப்போது தொடங்கவிருக்கிறது என்று மக்கள் கேட்பது வழக்கம். எனவே இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வெறுமனே அடிக்கல் நாட்டுவதன் மூலம் மக்களை ஏமாற்ற முடியாது என்ற விழிப்புணர்வு நாடு முழுவதிலும் பரவும். உண்மையிலேயே ஏதாவதொரு வேலை தொடங்கும்போது, சாதாரண மக்கள் அதன் மீது நம்பிக்கை கொள்கிறார்கள்.

இந்த நிகழ்வை தொடங்கி வைப்பதன் மூலம் வளர்ச்சிக்கான பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பது குறித்து நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இத்திட்டம் பற்றிய விவரங்களை அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தபோது, அனைத்து விவரங்களையும் பிரதமருக்குத் தெரிவித்துவிட்டதாக அவர்கள் உணர்ந்தபிறகு, துவக்க விழாவிற்கான தேதி பற்ரி நான் அவர்களிடம் கேட்டேன். தேதி குறித்து எனக்கு உறுதியளிக்கப்பட்டது. 2022-ம் ஆண்டில் இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடவிருக்கிறது. இந்தியாவின் உண்மையான கதாநாயகர்கள் – அதாவது சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தங்கள் இளமையைத் தொலைத்துவிட்டு, தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டு, வந்தே மாதரம் என்ற கோஷத்தை எழுப்பியபடி, சுதந்திரமான, மகத்தான, புனிதமான இந்தியாவைப் பற்றி கனவு கண்டார்கள்.

இந்தியாவும் விடுதலை பெற்றுவிட்டது. இப்போது 2022-ம் ஆண்டில் இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறவிருக்கிறது. அந்த மகத்தான விடுதலைப் போராட்ட வீரர்கள் கனவு கண்டது போன்றதொரு இந்தியாவை கட்டமைத்து, அதை அவர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும், ஒவ்வொரு இந்தியனுக்கும், 125 கோடி இந்தியர்களுக்கும் உண்டு. அவர்களது உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கான நேரம் இதுவே. 2022-ம் ஆண்டிற்குள் இந்த எண்ணெய் சுத்தகரிப்பாலையை செயல்படச் செய்வது என்ற உறுதிமொழியை நீங்கள் எடுத்திருக்கிறீர்கள். நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் நேரத்தில் இந்த உறுதிமொழி நிறைவேற்றப்படும் என்றும் இங்கிருந்து புதிய எரிசக்தியை நாடு பெறத் தொடங்கும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். எனவே ராஜஸ்தான் மாநில அரசிற்கும், இந்திய அரசின் முயற்சிகளுக்கும் அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதானின் துறைக்கும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திட்டம் அமைந்துள்ள பார்மேர் பகுதியானது ரவால் மல்லிநாத், ஞானி துளசிராம், அன்னை பாதியானி, அன்னை நாக்நேச்சி, ஞானி ஈஸ்வர்தாஸ், ஞானி தாரு ஜி மேக் மற்றும் பல எண்ணற்ற ஞானிகளின் ஆசிகள் நிரம்பியதொரு பகுதியாகும். அத்தகைய மண்ணுக்கு இன்று என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பஞ்சபத்ரா மண், மகாத்மா காந்தியின் சத்யாகிரகத்திற்கு முன்பாகவே உப்பு சத்தியாகிரகத்திற்குத் தலைமை வகித்த குலாப்சந்த் சலேச்சா-வைப் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களை நாட்டிற்கு வழங்கியிருக்கிறது. இந்தப் பகுதியில் குடிநீரைக் கொண்டுவருவது, ரயில்வே தொடர்பு, முதல் கல்லூரியைத் தொடங்குவது போன்ற முயற்சிகளுக்காக குலாப்சந்த் அவர்கள் இன்றும் நினைவுகூரப்பட்டு வருகிறார். பஞ்சபத்ராவின் தலைசிறந்த மகனுக்கு எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சகோதர, சகோதரிகளே,

இன்று இந்த மண்ணில் பைரோன்சிங் செகாவாத் அவர்களை நினைவுகூரவும் நான் விரும்புகிறேன். ராஜஸ்தான் மாநிலத்தை நவீனப்படுத்தவும், நெருக்கடிகளற்றதொரு மாநிலமாக அதை மாற்றவும், பார்மேரில் இந்த எண்ணெய் சுத்தகரிப்பு ஆலையை உருவாக்க வேண்டும் என்று திட்டமிடவும் முயற்சிகளை மேற்கொண்ட திரு. பைரோன்சிங் செகாவாத் அவர்களின் மகத்தான பங்களிப்புகளை இன்று இத்தருணத்தில் எடுத்துச் சொல்லவும் நான் விரும்புகிறேன். இந்த மண்ணின் மைந்தரான திரு. ஜஸ்வந்த் சிங் ஜி அவர்கள் விரைவில் உடல்நலம் பெற்று, இந்த நாடு மீண்டு அவரது அனுபவங்களில் இருந்து பயன்பெற வேண்டும் என்று இங்கு கூடியுள்ள மக்கள் அனைவரும் கடவுளை வேண்டிக்கொள்ள வேண்டுமென்றும் நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். நமது பிரார்த்தனைகளுக்கு கடவுள் செவி சாய்ப்பார் என்றும் நான் நம்புகிறேன்.

சகோதர, சகோதரிகளே,

துரதிர்ஷ்டவசமாக நமது நாட்டில் வரலாற்றை மறந்துபோய்விடும் போக்கு நிலவுகிறது. விடுதலைப் போராட்டவீரர்கள் செய்த தியாகங்களை நினைவுகூர்வது என்பது ஒவ்வொரு தலைமுறைக்கும் புதியதொரு வரலாற்றை உருவாக்குவதற்கான உத்வேகத்தைத் தருகிறது. இத்தகைய உத்வேகத்தைப் பெற நாம் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். இஸ்ரேல் நாட்டுப் பிரதமர் இந்தியாவிற்கு வருகை தந்த செய்தியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். 14 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்தியாவிற்கு வருகை தந்தார். இந்தியா விடுதலை அடைந்தபிறகு இஸ்ரேலுக்குச் சென்ற முதல் பிரதமர் நான்தான். எனது நாட்டுமக்களே, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள எனது கதாநாயகர்களே, நேரம் குறுகியதாக இருந்தபோதிலும் இஸ்ரேலில் உள்ள ஹைஃபா பகுதிக்கு நான் சென்று, 100 ஆண்டுகளுக்கு முன்பு முதல் உலகப்போரின்போது தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்து வந்தேன் என்பதை அறிந்து நீங்கள் அனைவரும் பெருமை கொள்ளலாம். இந்தியாவின் வீரமகனான மேஜர் தல்பத் சிங் அவர்களின் தலைமையில்தான் இந்த சண்டை நடைபெற்றது. 100 ஆண்டுகளுக்கு முன்னால் முதல் உலகப் போரின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த சண்டையில் மேஜர் தல்பத் சிங் செகாவாத் ஹைஃபாவை விடுவித்தார்.

டெல்லியில் தீன் மூர்த்தி சவுக் என்ற ஓரிடம் இருக்கிறது. அங்கு மூன்று மகத்தான வீரர்களின் சிலைகள் உள்ளன. இஸ்ரேல் பிரதமர் இந்தியாவில் வந்திறங்கியதும் நாங்கள் இருவரும் தீன் மூர்த்தி சவுக்கிற்குச் சென்றோம். மேஜர் தல்பத் சிங் செய்த தியாகத்தை நினைவு கூரும் வகையில்தான் அந்த தீன் மூர்த்தி சவுக் உருவாக்கப்பட்டது. அவரது நினைவிற்கு வணக்கம் செலுத்தவே இந்த முறை இஸ்ரேல் பிரதமர் அந்த இடத்திற்குச் சென்றார். நாங்கள் இருவரும் அந்த இடத்திற்குச் சென்றோம். எனவே, வரலாறு, மேஜர் தல்பத் சிங் ஆகிய விஷயங்கள் மறந்து விடக் கூடாது என்ற வகையில்தான் அந்த இடத்தின் பெயர் தீன் மூர்த்தி ஹைஃபா சவுக் என மாற்றப்பட்டது. இவ்வாறு ராஜஸ்தானின் பாரம்பரியம் எப்போதும் நினைவுகூரப்படும். இரண்டு நாட்களுக்கு முன்புதான் இந்த வேலையைச் செய்வதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

சகோதர, சகோதரிகளே,

மகத்தான வீரர்களைக் கொண்ட மண் இது. தியாகிகள் நிரம்பிய மண் இது. இந்த மண்ணின் வீரர்கள் ரத்தம் சிந்தாத எந்தவொரு நிகழ்வும் நம் தியாக வரலாற்றில் இல்லை. அத்தகைய வீரர்கள் அனைவருக்கும் இன்று என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சகோதர, சகோதரிகளே,

ராஜஸ்தான் மாநிலத்திற்கு நான் அதிகமான முறை வந்திருக்கிறேன். சில குறிப்பிட்ட சமயங்களில் எனது அமைப்பின் வேலையாக வந்திருக்கிறேன். சில சமயங்களில் அண்டை மாநிலமான குஜராத்தின் முதல் அமைச்சராக வந்திருக்கிறேன். இந்தப் பகுதிக்கு நான் பல முறை வந்திருக்கிறேன். நான் வந்த ஒவ்வொரு முறையுமே சாதாரண மக்களிடமிருந்து ஒரு விஷயத்தை கேட்டதுண்டு. காங்கிரஸ் கட்சியும் வறட்சியும் இணைபிரியாத சகோதரர்கள் என்பதுதான் அது. எங்கெல்லாம் காங்கிரஸ் கட்சி செல்கிறதோ அங்கெல்லாம் வறட்சியும் பின் தொடர்கிறது. ராஜஸ்தான் மாநில மக்களுக்குச் சேவை செய்ய வாய்ப்பு பெற்ற முதலமைச்சர் திருமதி. வசுந்தரா-வின் ஆட்சியின் கீழ் இந்த வறண்ட பூமியும் கூட போதுமான நீரை பெற்றுள்ளது.

சகோதர, சகோதரிகளே,

இதையும் தாண்டி நாம் முன்னே செல்ல வேண்டியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை நாம் மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் வளர்ச்சிக்கான பயணம் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு புதிய பலத்தை வழங்கும்.

சகோதர, சகோதரிகளே,

அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதானும், முதலமைச்சர் திருமதி. வசுந்தரா-வும் இங்கு புகார் செய்தனர். அவர்களது புகாரில் நியாயமும் இருக்கிறது. அது பார்மேரில் எண்ணெய் சுத்தகரிப்பாலைக்காக மட்டுமா? இங்கு மட்டுமா இது போன்ற சுத்தகரிப்பாலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டு புகைப்படம் எடுக்கப்படுகிறது? இது மக்களை ஏமாற்றுவதற்கான முயற்சி அல்லவா? ஓரளவிற்கு ஆராய்ச்சி செய்யும் பழக்கமுள்ள அனைவரையும் நான் அழைக்கிறேன். மிகப்பெரும் உறுதிமொழிகளை அள்ளி வீசி, மக்களை திசைதிருப்புகின்ற காங்கிரஸ் அரசுகளின் வேலைக் கலாச்சாரம்தான் இதற்குக் காரணமா என்று அவர்கள் சற்றே ஆராய்ந்து பார்க்கட்டும். இதுவும் கூட அவர்களது வேலை கலாச்சாரத்தின், பழக்கத்தின் ஒரு பகுதிதான்.

நான் இந்த நாட்டின் பிரதமர் ஆனபிறகு, ரயில்வே பட்ஜெட் பற்றிய விவரங்களைப் பார்த்தேன். எனது வழக்கப்படியே ரயில்வே பட்ஜெட்டின்போது ஏராளமான அறிவிப்புகள் செய்யப்பட்டனவே அதன் பிறகு என்ன நடந்தது என்று கூறமுடியுமா என்று கேட்டேன். அதன் பிறகு என்ன நடந்தது என்று உங்களால் கூற முடியுமா? சகோதர, சகோதரிகளே, ஜனநாயகத்தின் கோயில் என்று கருத்தப்படும் நாடாளுமன்றத்தைப் போன்ற ஒரு இடத்தில் நாடு திசைதிருப்பப்படுகிறது. இதற்கு முன்பு பல அரசுகள் அமைக்கப்பட்டுள்ளன. ரயில்வே பட்ஜெட்டில் 150க்கும் மேற்பட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. உண்மையில் அவை நடப்பில் இல்லவே இல்லை; காகிதத்தில் மட்டுமே இருக்கின்றன.

தங்கள் தொகுதிகளுக்கான ரயில்வே திட்டங்கள் அறிவிக்கப்படும்போது நாடாளுமன்றத்தில் சிலர் கைதட்டினார்கள்; ரயில்வே அமைச்சரும் திருப்தி அடைந்தார். அதன் பின்பு அந்தத் திட்டங்களை பின்தொடர்வதற்கு யாருமே இருப்பதில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு ரயில்வே பட்ஜெட்-ஐ பயன்படுத்தி ஒரு சிலரை திருப்திப்படுத்துவது என்ற இந்த பாரம்பரியத்திற்கு முடிவு கட்டவேண்டும் என்று முடிவு செய்தோம். நடைமுறையில் நிறைவேற்றப்படக் கூடிய திட்டங்களை மட்டுமே நாங்கள் உருவாக்குவோம். துவக்கத்தில் நம்மைக் குறை கூறுவார்கள். இருந்தாலும் படிப்படியாக சரியாகச் செயல்படவும், சரியானவற்றை ஏற்றுக் கொள்ளவும் நாடு வலிமை பெறும். அந்த வழியில்தான் நாங்கள் செயல்பட விரும்புகிறோம்.

மேலும், ஒரு பதவி; ஒரே ஓய்வூதியம் என்ற விஷயத்தைப் பற்றிப் பேசுவோமானால், இங்கே நம் நாட்டு படை வீரர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்குச் சொல்லக் கூடும். ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம் என்ற இந்த கோஷம் கடந்த 40 ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வரவில்லையா? ஒவ்வொரு முறையும் ராணுவ வீரர்களுக்கு உறுதிமொழி அளிக்கப்படவில்லையா? இந்த விஷயத்தில் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் பெரிய உறுதிமொழிகள் அளிக்கப்பட்டன. இது அவர்களின் பழக்கமும் கூட. 2014லும் கூட அவர்கள் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம் பற்றி மீண்டும் பேசியதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

அதன் பிறகு, 2013-ம் ஆண்டு செப்டெம்பர் 15 அன்று ரெவாரியில் எங்களது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் ஒரு பதவி; ஒரு ஓய்வூதியம் என்ற திட்டத்தை முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அமலாக்குவோம் என நான் அறிவித்தபோது, மிகுந்த அழுத்தத்துடன் இடைக்கால பட்ஜெட்டில் ஒரு பதவி; ஒரு ஓய்வூதியம் திட்டத்திற்கென அவசர அவசரமாக ரூ. 500 கோடி ஒதுக்குவதாக அவர்கள் அறிவித்தனர். இந்த சுத்தகரிப்பு ஆலைக்காக அடிக்கல் நாட்டியதைப் போல அதே போன்று அவசர அவசரமாகத்தான் இதையும் செய்தனர்.

தேர்தலுக்கு சற்று முன்பாக செய்யப்பட்ட பெயரளவிற்கான இந்த அறிவிப்பு ஒருவிதமான துரோகம்தான். எங்களது பட்ஜெட்டில் ஒரு பதவி; ஒரு ஓய்வூதியத்திற்கென நாங்கள் பணம் ஒதுக்கினோம். தேர்தலுக்கு முன்பாக நாங்கள் வாக்குறுதி அளித்ததைப் போலவே ஒரு பதவி; ஒரு ஓய்வூதியத் திட்டத்தை நாங்கள் அமல்படுத்தினோம். தாமதங்கள் ஏற்படும்போது இந்த விஷயத்தின் மீது கவனம் செலுத்தினோம். அவர்கள் பட்ஜெட்டில் ரூ. 500 கோடி ஒதுக்குவதாக அறிவித்தபோதும் ஒரு பதவி; ஒரு ஓய்வூதியம் திட்டத்தை அமலாக்குவதற்கான அறிகுறி ஏதும் அங்கில்லை என்பதை அறிந்தால் நீங்கள் வியப்படைவீர்கள். இந்தத் திட்டத்திற்கான தகுதி வரம்பு என்னவாக இருந்தது? அதற்கான நிதிச்சுமை எந்த அளவிற்கு இருக்கும்? இந்த சுத்திகரிப்பு வேலை குறித்த திட்டமானது குறைந்தபட்சம் காகித அளவிலாவது இருந்தது. ஆனால் ஒரு பதவி; ஒரு ஓய்வூதியம் திட்டம் பற்றிய காகிதத்தில் கூட இல்லை. இதுபற்றிய எந்தவொரு திட்டமோ அல்லது பட்டியலோ இல்லை. அது வெறும் தேர்தல்கால உறுதிமொழியாகத்தான் இருந்தது.

சகோதர, சகோதரிகளே,

அந்த வேலையை முடிப்பது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். ஆனால் அதற்கு எனக்கு ஒன்றரை ஆண்டுகாலம் பிடித்தது. எல்லா விவரங்கலையும் காகிதத்தில் சேகரிக்கவே இவ்வளவு நேரம் பிடித்தது. எல்லாமே சிக்கலாகத்தான் இருந்தது. முன்னாள் ராணுவ வீரர்களின் இருப்பிட முகவரிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சரியான புள்ளிவிவரங்களும் கிடைக்கவில்லை. நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்ய எப்போதும் தயாராக உள்ள நாட்டின் படைவீரர்களுக்கான இந்த விஷயங்கள் இவ்வாறு சிக்கல்கள் நிரம்பியதாக இருப்பது கண்டு நான் மிகவும் வியப்படைந்தேன். இதற்குத் தேவையான புள்ளிவிவரங்களை சேகரிக்கத் தொடங்கினேன். சகோதர, சகோதரிகளே, 500 கோடி, 1000 கோடி, 1500 கோடி, 2000 கோடி என அனைத்துவிதமான கணக்கீடுகளுக்குப் பிறகு கூட்டிக் கழித்துப் பார்த்தால் அது ரூ. 12000 கோடிக்கும் மேலாக இருந்தது!

இந்தத் திட்டத்தைத்தான் வெறும் ரூ. 500 கோடியை வைத்துக் கொண்டு நிறைவேற்ற காங்கிரஸ் முயற்சி செய்தது. அது உண்மையிலேயே நியாயமானதொரு முயற்சியா? ராணுவ வீரர்களுக்கு உண்மையிலேயே ஏதாவது தரவேண்டுமென்று நினைத்தார்களா? ராணுவ வீரர்களிடம் அவர்கள் உண்மையிலேயே நேர்மையுடன் நடந்து கொண்டார்களா? அந்த நேரத்தில் நிதியமைச்சராக இருந்தவர் ஒன்றும் பலவீனமானவர் அல்ல. எனினும் சுத்திகரிப்பு ஆலைக்கு அடிக்கல் நாட்ட ரூ. 500 கோடியை பட்ஜெட்டில் ஒதுக்கி வைத்துவிட்டு அத்தோடு அந்த விஷயத்தை முடித்து விட்டார்கள்.

சகோதர, சகோதரிகளே,

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, இதற்குத் தேவையான தொகை ரூ. 12000 கோடி வரை இருந்தது. எனவே ராணுவ வீரர்களின் பிரதிநிதிகளை பேச அழைத்தேன். நான் அவர்களிடம் சொன்னேன்: “ உறுதிமொழி அளித்தபடியே உங்களுக்கு கொடுக்கத்தான் நான் விரும்புகிறேன். என்றாலும் அரசின் கருவூலத்தில் இதற்குப் போதுமான பணம் இல்லை. ஒரே தடவையில் ரூ. 12000 கோடியைத் தருவதென்பது என்னால் இயலாத செயல். அவர்கள் ரூ. 500 கோடியைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் மொத்த தொகை ரூ. 12000 கோடியாக இருக்கும் நிலையில் நியாயமான வழியில் அதைக் கொடுக்கவே நான் விரும்புகிறேன். எனவே உங்களின் உதவி தேவை.”

ராணுவ வீரர்கள் என்னிடம் சொன்னார்கள்: “ பிரதமர் அவர்களே, தயவு செய்து எங்களை வெட்கம் கொள்ளச் செய்துவிடாதீர்கள். உங்களுக்கு எந்த வகையில் உதவி செய்ய முடியும் என்று வெளிப்படையாகச் சொல்லுங்கள்.” நான் சொன்னேன்: “நல்லது. எனக்கு எதுவும் வேண்டாம். நாட்டிற்காக நீங்கள் எல்லாம் ஏற்கனவே நிறையவே செய்து விட்டீர்கள். இருந்தாலும் இந்த விஷயத்தில் எனக்கு உதவி செய்யுங்கள். என்னால் இந்த ரூ. 12000 கோடியை ஒட்டுமொத்தமாகத் தர முடியாது. அதைச் செய்தேன் ஆனால் ஏழைகளுக்கான சில நலத் திட்டங்களை நான் நிறுத்த வேண்டும். அது அவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாக இருக்கும். எனவே ஒரே ஒரு கோரிக்கைதான் என்னிடம் உள்ளது. இந்தத் தொகையை நான்கு தவணைகளாக உங்கள் அனைவருக்கும் சம்மதமா?” எனது நாட்டின் துணிவுமிக்க அந்த ராணுவ வீரர்கள் இந்த ஒரு பதவி; ஒரு ஓய்வூதியம் என்ற ஏற்பாட்டிற்காக கடந்த 40 ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். இப்போது அதை நிறைவேற்றும் உறுதி கொண்ட ஒரு பிரதமர் இருக்கிறார். அவர்கள் சொல்லியிருக்கலாம் “ மோடி ஜி! முன்னால் இருந்த அரசாங்கங்கள் எல்லாம் எங்களை ஏமாற்றின. இதற்கும் மேல் எங்களால் காத்திருக்க முடியாது. எனவே முடிந்தால் அந்தத் தொகையை எங்களிடம் ஒப்படையுங்கள்; அல்லது நாங்கள் எங்கள் வழியைப் பார்த்துக் கொண்டு போகிறோம்.” இத்தகைய ஒரு பதிலை அவர்கள் சொல்லியிருக்கலாம்; இருந்தாலும் அவர்கள் அப்படிச் சொல்லவில்லை.

எனது நாட்டின் ராணுவ வீரர்கள் உரிய சீருடையில் இல்லாத நேரத்திலும் கூட தங்களின் மனதாலும் இதயத்தாலும் ராணுவ வீரர்களாகத்தான் இருக்கிறார்கள். தங்களின் இறுதி மூச்சுவரை நாட்டின் நலனைத்தான் அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். எனவேதான் உடனடியாக அவர்கள் சொன்னார்கள்: “பிரதமர் அவர்களே, உங்களின் வார்த்தைகளின் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. நான்கு என்ன ஆறு தவணைகளிலும் கூட நீங்கள் அந்தத் தொகையைக் கொடுக்கலாம். என்றாலும் தயவு செய்து இந்த விஷயம் குறித்து ஒருவழியாக முடிவு எடுங்கள். நீங்கள் எப்படி முடிவு செய்தாலும் சரி, அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.”

சகோதர, சகோதரிகளே,

ராணுவ வீரர்களின் இத்தகைய மனவலிமையின் காரணமாக இந்த விஷயத்தில் என்னால் ஒரு முடிவுக்கு வர முடிந்தது. இது வரையில் நான் அவர்களுக்கு நான்கு தவணைகளை செலுத்தியிருக்கிறேன். அவர்களது வங்கிக் கணக்குகளில் இதுவரை ரூ. 10,700 கோடி செலுத்தபட்டுள்ளது. மீதமுள்ள தவணைகளும் வெகு விரைவிலேயே அவர்களது கணக்குகளை சென்று சேர்ந்துவிடும். எனவே இந்தவகையில்தான் அவர்கள் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வந்தார்கள்; அரசு இயந்திரத்தை நடத்தி வந்தார்கள்.

நீங்களே சொல்லுங்கள். கடந்த 40 வருடங்களாக ‘வறுமையே வெளியேறு’ என்ற கோஷத்தை நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். தேர்தல் நேரத்தின்போது இந்த விளையாட்டை நீங்கள் பார்த்திருக்கவும் கூடும். இதில் ஏழைகளும் கூட இழுத்து வரப்படுகின்றனர். இருந்தாலும் ஏழைகளின் நலனுக்கான ஏதாவதொரு திட்டத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அப்படி எதையும் பார்த்திருக்க மாட்டீர்கள். நாடு விடுதலை பெற்று 70 ஆண்டுகள் ஆன பிறகும் கூட அவர்கள் சொல்வார்கள்: எதையாவது போய் தோண்டி அந்த குழியிலிருந்து உண்பதற்கு எதையாவது எடுத்துச் சாப்பிடு என்று. அவர்கள் மீது உண்மையிலேயே கரிசனம் இருந்திருக்குமானால் அப்போது வறுமையைத் தோற்கடிக்க தங்கள் பலம் அனைத்தையும் அவர்கள் பயன்படுத்தி இருப்பார்கள்.

ஏழைகளுக்கு சக்தியளிக்க நாம் விரும்புகிறோம். வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டபோதிலும் அவை ஏழைகள் அணுகமுடியாத வகையிலேயே தொடர்ந்து நீடிக்கின்றன. நாடு விடுதலை பெற்று 70 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் அரசமைத்தபோது நாட்டின் வளர்ச்சிக்கான பயணத்தில் ஏழைகளை பொதுவாழ்க்கைக்குள் கொண்டு வர வேண்டுமென்ற முடிவை எடுத்தோம். எனவே தான் நாங்கள் பிரதமர் ஜன் தன் திட்டத்தைக் கொண்டு வந்தோம். இத்திட்டத்தின்கீழ் இன்ரு 32 கோடி பேர் வங்கிக் கணக்குகளைத் தொடங்கியிருக்கின்றனர்.

சகோதர, சகோதரிகளே,

இருப்பு எதுவும் இல்லாத வங்கிக் கணக்கை தொடங்குவதற்கான வசதியும் ஏழைகளுக்கு உண்டு என அந்த நேரத்தில் நான் குறிப்பிட்டேன். நமது நாட்டின் ஏழைகள் நிதியளவில் வேண்டுமானால் ஏழைகளாக இருக்கலாம். ஆனால் அவர்களிடம் மிகவும் செழிப்பான மன நிலை உள்ளது. மனதளவில் மிகவும் ஏழைகளான சில பணக்காரர்களை நான் பார்த்திருக்கிறேன். இருப்பு இல்லாத கணக்கை வைத்திருப்பதற்கான ஏற்பாட்டை நாம் அவர்களுக்குக் கொடுத்திருந்தோம். எனினும் அந்தக் கணக்கில் ஏதாவது கொஞ்சமாவது தொகை இருக்க வேண்டும் என்றே ஏழைகள் விரும்பினார்கள். எனதருமை சகோதர, சகோதரிகளே, இருப்பு இல்லாத கணக்குகளை துவக்கியவர்கள் இன்று தங்கள் ஜன் தன் வங்கிக் கணக்கில் ரூ. 72,000 கோடியை இருப்பில் வைத்திருக்கிறார்கள். பணக்காரர்கள் தங்கள் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க விரும்பும்போது ஏழைகள் தங்கள் கணக்குகளில் நேர்மையான வகையில் பணத்தைச் செலுத்தியிருக்கிறார்கள். வறுமைக்கு எதிரான போராட்டம் இப்படித்தான் இருக்க வேண்டும்.

சகோதர, சகோதரிகளே,

இதற்கு முன்பெல்லாம் ஓர் எரிவாயு இணைப்பிற்காக எவர் ஒருவரும் தங்கள் நாடாளுமன்ற உறுப்பினரின் பின்னால் ஆறு, ஏழு மாதங்கள் அலைய வேண்டிய நிலை இருந்தது என்ற உண்மையை நீங்கள் அனைவருமே அறிவீர்கள். 25 குடும்பங்களுக்கு இத்தகைய இணைப்புகளை தருவதற்காக ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ஆண்டுக்கு 25 கூப்பன்கள் தரப்பட்டன. சில நேரங்களில் இந்தக் கூப்பன்களை கருப்புச் சந்தையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விற்றது பற்றிய செய்தியையும் சில நேரங்களில் நாம் கேட்டிருக்கிறோம்.

சகோதர, சகோதரிகளே,

இன்னமும்கூட நமது ஏழைத் தாய்மார்களும் சகோதரிகளும் விறகை எரித்து, புகையில் வாடியபடியேதான் தங்கள் வாழ்க்கையை நடத்த வேண்டுமா? இப்படித்தான் ஏழைகளின் நலன்களை நாம் மேம்படுத்தப் போகிறோமா? சமைக்கும்போது அடுப்பில் இருந்து வெளிவரும் புகையை சுவாசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு நமது தாய்மார்களும் சகோதரிகளும் ஆளாக்கப்படுகின்றனர். இவ்வாறு வெளியேறும் புகையானது 400 சிகரெட்டுகளைப் புகைப்பதற்குச் சமம். வீட்டிலிருக்கும் குழந்தைகளும் கூட இதனால் மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர்.

சகோதர, சகோதரிகளே,

நாங்கள் பொறுப்பேற்றுக் கொண்டோம். வெற்று கோஷங்களை எழுப்புவதன் மூலமாக ஏழைகளின் நலனைக் காப்பாற்ற முடியாது. அவர்களின் வாழ்க்கையை நாம் மாற்ற வேண்டும். உஜ்வாலா திட்டம் என்ற ஒன்றை கொண்டு வந்தோம். இதன் மூலம் சுமார் 3 கோடியே 30 லட்சம் குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கியிருக்கிறோம். விறகில் இருந்தும் புகையில் இருந்தும் கோடிக்கணக்கான தாய்மார்களை நாம் விடுவித்துள்ளோம். இப்போது சொல்லுங்கள். இவ்வாறு விடுவிக்கப்பட்ட ஒவ்வொரு தாயும் சமைக்கும்போது நரேந்திர மோடியை ஆசீர்வதிப்பாரா இல்லையா? நம்மைக் காப்பாற்றுவதற்கான உறுதிமொழியை அவர் எடுத்துக் கொள்வார் என்பதுதான் நிச்சயம். ஏனென்றால் வறுமையை எதிர்த்துப் போராடுவதற்கு இதுதான் சரியான வழி என்பதை அவர் அறிவார்.

சகோதர, சகோதரிகளே,

நாடு விடுதலை பெற்று 70 ஆண்டுகள் ஆன பிறகும், மின்வசதி இல்லாமல் 18,000 கிராமங்கள் நம் நாட்டில் உள்ளன. இந்த 21-ம் நூற்றாண்டிலும் கூட இந்த கிராமத்து மக்கள் 18-ம் நூற்றாண்டில் இருந்த நிலைமைகளில் வாழ வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒருவேளை இப்படியும் நினைக்கக் கூடும்: “ நம் நாடு இப்போதும் சுதந்திர நாடுதானா? இதுதான் ஜனநாயகம் என்பதா? தேர்தல் நடக்கும்போதெல்லாம் நான் சென்று வாக்களித்து வருகிறேன். இருந்தாலும் நாடு விடுதலை பெற்று 70 ஆண்டுகள் ஆகியும் கூட எங்களது கிராமங்களுக்கு மின்வசதியைப் பெற்றுத் தராத இந்த அரசுகள் எப்படிப்பட்டவை?”

சகோதர, சகோதரிகளே,

இந்த 18,000 கிராமங்களுக்கும் மின்வசதி அளிக்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன். இன்னும் சுமார் 2,000 கிராமங்களுக்கு மின்வசதி செய்து தர வேண்டியுள்ளது. இந்த வேலை மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இப்போது அவர்கள் 21-ம் நூற்றாண்டு நிலைமைகளில் வாழ்வதற்கான வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.

நாடு விடுதலை பெற்று 70 ஆண்டுகள் ஆனபிறகும் கூட மின்வசதி இல்லாமல் 4 கோடி குடும்பங்கள் இருந்தன. மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தின விழாவிற்கு முன்பாக இந்த 4 கோடி குடும்பங்களுக்கும் மின்வசதியை இலவசமாகத் தருவது என்ற பொறுப்பை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். அதன் பிறகு இந்தக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளால் நன்கு படிக்க முடியும். வறுமைக்கு எதிராக நாம் போராட வேண்டும் எனில் ஏழைகளின் கரத்தை நாம் வலுப்படுத்த வேண்டும். இத்தகைய சவால்கள் அனைத்தோடும்தான் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும்.

சகோதர, சகோதரிகளே,

இந்த சுத்தகரிப்பு நிலையம் இந்தப் பகுதியின் தோற்றத்தையும் எதிர்காலத்தையும் தலைகீழாக மாற்றவிருக்கிறது. இதுபோன்றதொரு பாலைவனப் பகுதியில் தொடங்கப்படும் இந்தப் பெரிய தொழிற்சாலையானது எப்படி உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கப்போகிறது என்று நீங்கள் வியப்படையலாம். இத்தொழிலுக்குள் மட்டுமல்ல; அது உருவாக்கியுள்ள சங்கிலித் தொடரின் மூலமாகவும் கூட அது வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும். இந்த மாபெரும் தொழிற்சாலைக்கு நீர், மின்சாரம், எரிவாயு இணைப்பு, ஒளியிழை வலைப்பின்னல் போன்ற முழுமையான கட்டமைப்பு தேவைப்படுவதால் சிறிய தொழில்களும் உருவாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் இந்தப் பகுதியின் பொருளாதார நிலைமையே மாறிவிடும்.

அதிகாரிகளும், அரசு உயரதிகாரிகளும் இங்கு வந்து சேரும்போது இயல்பாகவே கல்விக்கான புதிய நிறுவனங்களும் உருவாகும். நாட்டின் இதர பகுதிகளில் இருந்தும், ராஜஸ்தானின் உதய்பூர், பன்ஸ்வாரா, பரத்பூர், கோட்டா அல்லது ஆல்வர் அல்லது ஆஜ்மீர் போன்ற பகுதிகளில் இருந்தும் வேலை செய்வதற்காக பெரும் எண்ணிக்கையில் மக்கள் இங்கு வந்திறங்கத் தொடங்கும்போது இந்தப் பகுதியின் சுகாதார வசதிகளும் கூட வளம்பெறத் தொடங்கும்.

எனவே சகோதர, சகோதரிகளே,

ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தப் பகுதியில் மிகப்பெரும் மாற்றம் ஏற்படும். அதை உங்களால் எளிதாக உணர முடியும். இன்று நான் இங்கு தொடங்கி வைக்கின்ற திட்டமானது எனக்கும் இந்திய அரசுக்கும் நஷ்டம் ஏற்படுத்தும் ஒன்றுதான். இதற்கு முந்தைய அரசால் கொஞ்சமாவது வேலைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இன்றைய அரசு சுமார் ரூ. 40,000 கோடியை மிச்சப்படுத்த முடிந்திருக்கும்.

என்றாலும் அரச குடும்பத்திற்கே உரிய, மார்வாரிகளுக்கே உரிய மதிப்பீடுகளை கொண்டவர் திருமதி. வசுந்தரா அவர்கள். மத்திய அரசிடமிருந்து எவ்வளவு பெற முடியுமோ அதைப் பெற அவர் முயற்சி செய்தார். பாரதீய ஜனதா கட்சியில் மட்டும்தான் இது சாத்தியம். தன் மாநிலத்தின் நலனுக்கான தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதில் உங்கள் மாநில முதல்வர் மிகவும் பிடிவாதமாக இருந்தார். ராஜஸ்தானின் பணத்தை சேமிக்கவும், சரியானதொரு திட்டத்தை உருவாக்கவும் இந்திய அரசுக்கு ஆலோசனை கூறி முயற்சிகளை மேற்கொண்டதற்காக முதலமைச்சர் திருமதி. வசுந்தரா–வை நான் பாராட்டுகிறேன். இதன் விளைவாக முதலமைச்சர் திருமதி. வசுந்தராவும், அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதானும் நின்று போயிருந்த ஒரு திட்டத்தை அமல்படுத்த இணைந்து செயல்பட்டனர். இதற்காக அவர்கள் இருவரையும் நான் பாராட்டுவதோடு, உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னோடு சேர்ந்து உரக்க குரலெழுப்புங்கள்: இந்திய அன்னைக்கு எப்போதும் வெற்றி நிச்சயம்!
பார்மேர் நிலப்பகுதியிலிருந்து இந்தியாவிற்கு இனி எரிபொருள் கிடைக்கும். நாட்டின் எரிபொருள் அனைத்தையும் பிரதிநிதித்துவப் படுத்துவதாக இந்த சுத்திகரிப்பு நிலையம் விளங்கவிருக்கிறது. அந்த வலிமை இங்கிருந்து தொடங்கி நாட்டின் மூலை முடுக்கெங்கும் சென்று சேரும் என்று நான் நம்புகிறேன். கம்மா கானீ என்ற மார்வாரி மொழி வாழ்த்துக்களுடன் எனது உரையை நிறைவு செய்கிறேன்.