Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சிங்கப்பூர் ஃபின்டெக் விழாவில் பிரதமர் நிகழ்த்திய சிறப்புரை

சிங்கப்பூர் ஃபின்டெக் விழாவில் பிரதமர் நிகழ்த்திய சிறப்புரை

சிங்கப்பூர் ஃபின்டெக் விழாவில் பிரதமர் நிகழ்த்திய சிறப்புரை

சிங்கப்பூர் ஃபின்டெக் விழாவில் பிரதமர் நிகழ்த்திய சிறப்புரை


பொருளாதார உலகில் செல்வாக்கு மிக்க சிங்கப்பூர் துணைப் பிரதமர் திரு. தர்மன் சண்முக ரத்தினம், ஃபின்டெக் அமைப்பில் முன்னணி நிறுவனமாக விளங்கும் சிங்கப்பூர் நிதி ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் திரு.ரவி மேனன், 1000-க்கும் அதிகமான நாடுகளில் இருந்து பங்கேற்றிருக்கும் பல்லாயிரக்கணக்கானோர் அனைவருக்கும்

 

வணக்கம்

 

சிங்கப்பூர் ஃபின்டெக் விழாவில் சிறப்புரையாற்றும் முதலாவது அரசுத் தலைவர் என்பது மிகப் பெரிய கவுரமாகும்.

 

எதிர்காலத்திற்கு இந்தியா உறுதியுடன் நிலைநிறுத்தியிருக்கும் அதன் இளைஞர்களுக்கு இது புகழ் சேர்ப்பதாகும்.

 

இந்தியா மூலம் நடைபெற்று வரும் பொருளாதாரப் புரட்சிக்கும் 130 கோடி மக்களின் வாழ்க்கை மாற்றத்திற்கும் இது ஓர் அங்கீகாரமாகும்.

 

இது பொருளாதாரத்திற்கும், தொழில்நுட்பத்திற்குமான ஒரு நிகழ்ச்சி. அதே சமயம் ஒரு விழாவும் கூட.

 

இந்தப் பருவம் இந்தியாவில் தீபங்களின் திருவிழாவான தீபாவளிப் பருவமாகும். இது நல்லொழுக்கம், நம்பிக்கை, ஞானம் மற்றும் வளத்தின் வெற்றியாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. தீபாவளி தீபங்கள் சிங்கப்பூரில் இன்னமும் ஒளிர்கின்றன.

 

ஃபின்டெக் விழாவும் கூட நம்பிக்கையின் கொண்டாட்டமாகும்.

 

நம்பிக்கை என்பது புதிய கண்டுபிடிப்பின் உணர்வு மற்றும் கற்பனையின் ஆற்றல்.

 

நம்பிக்கை என்பது இளைஞர்களின் சக்தி மற்றும் மாற்றத்திற்கான அவர்களின் பேரார்வம்.

 

நம்பிக்கை என்பது உலகத்தை ஒரு நல்ல இடத்திற்குக் கொண்டு செல்வது.

 

இந்த விழா ஏற்கனவே உலகின் மிகப் பெரிய விழாவாக இருப்பதால் அதன் 3-வது ஆண்டின் சிறப்பு வியப்பளிப்பதாக இல்லை.

 

பொருளாதாரத்தில் உலகின் குவிமையமாக விளங்கும் சிங்கப்பூர் தற்போது பொருளாதாரத்தின் டிஜிட்டல் எதிர்காலத்திற்குத் தாவிச் சென்று கொண்டிருக்கிறது.

 

இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனைக்கு பயன்படும் முதலாவது சர்வதேச செல்பேசி செயலியான ரூபே அட்டையை இந்த ஆண்டு ஜூன் மாதம் இங்கே நான் தொடங்கி வைத்தேன்.

 

இன்று ஆசியான், இந்திய வங்கிகள் மற்றும் ஃபின்டெக் நிறுவனங்களுடன் தொடங்கி ஃபின்டெக் அமைப்புகள் மற்றும் நிதி நிறுவனங்களை இணைப்பதற்கு உலகளாவிய மேடை ஒன்றைத் தொடங்கி வைக்கும் கவுரவத்தை நான் பெற்றிருக்கிறேன்.

 

இந்தியாவிலும், ஆசியான் நாடுகளிலும் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில்களை இணைப்பதற்கு இந்தியாவும், சிங்கப்பூரும் பணியாற்றி வருகின்றன. இந்தியாவில் நிலைநிறுத்தப்படும் அமைப்பு பின்னர் உலக அளவில் பரவலாக்கப்படும்.

 

நண்பர்களே

 

புதுமைத் தொழில்கள் தொடங்கும் வட்டாரங்களில் ஒரு கருத்து சுற்றி வருவதாக நான் கேள்விப்படுகிறேன்.

 

·         10 சதவீத அளவு நிதி வழங்கி உங்களின் புதிய மூலதனத்தை அதிகரிக்கும் போது நீங்கள் ஒரு “அமைப்பை”த்தான் நடத்த முடியும், முறையான வணிகத்தை அல்ல என்று முதலீட்டாளர்களிடம் கூறுங்கள்.

 

·         20 சதவீத அளவுக்கு நிதி வழங்கி உங்களின் புதிய மூலதனத்தை அதிகரிக்க விரும்பினால் நீங்கள் “ஃபின்டெக் வெளி”யில் செயல்படுகிறீர்கள் என்பதை முதலீட்டாளர்களிடம் கூறுங்கள்.

 

·         ஆனால் முதலீட்டாளர்கள் தங்களின் பைகளை காலி செய்ய வேண்டும் என்று உண்மையிலேயே நீங்கள் விரும்பினால் நீங்கள் “மையப்படுத்தப்பட்ட முறை” யை பயன்படுத்துகிறீர்கள் என்று அவர்களிடம் கூறுங்கள்.

 

பொருளாதார உலகில் மாற்றங்களைக் கொண்டுவர உற்சாகமாகவும், உறுதியாகவும் தொழில்நுட்பங்கள் உருவாகி வருகின்றன என்பதை இது உங்களுக்கு சொல்கிறது.

 

உண்மையில் பொருளாதாரம் என்பது புதிய தொழில்நுட்பத்தையும், தொடர்புகளையும் முதலில் தழுவிக் கொள்கிறது என்பதை வரலாறு காட்டுகிறது.

 

நண்பர்களே,

 

தொழில்நுட்பத்தின் மூலம் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் கொண்டு வரும் சகாப்தத்தில் நாம் இருக்கிறோம்.

 

மேசைக் கணினி முதல் க்ளவ்ட் செயலி வரை, இணையத்திலிருந்து சமூக ஊடகம் வரை, தகவல் தொழில்நுட்ப சேவைகள் முதல் இணையதளப் பொருட்கள் வரை மிகக்  குறுகிய காலத்தில் நீண்ட தூரத்திற்கு நாம் வந்திருக்கிறோம். வர்த்தகத்தில் அன்றாடம் இடையூறுகள் இருக்கின்றன.

 

உலகப் பொருளாதாரத்தின் குணாம்சம் மாறி வருகிறது.

 

புதிய உலகில் தொழில்நுட்பம் என்பது போட்டித்தன்மையையும், சக்தியையும் சித்தரிக்கிறது.

 

மேலும் அது வாழ்க்கை மாற்றத்திற்கு எல்லையற்ற வாய்ப்புகளை உருவாக்குகிறது.

 

முகநூல், டிவிட்டர் அல்லது செல்பேசிகள் பரவுகின்ற அதே வேகத்துடன் வளர்ச்சியும் அதிகாரமளித்தலும் பரவ முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளதாக 2014 ஆம் ஆண்டில் ஐ.நா. சபையில் நான் கூறினேன்.

 

உலகம் முழுவதும் இந்தத் தொலைநோக்குப் பார்வை விரைந்து எதார்த்தமாக மாறி வருகிறது.

 

இந்தியாவில் இது நிர்வாகத்திலும், பொதுச் சேவைகளை வழங்குவதிலும் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இது கட்டற்றக் கண்டுபிடிப்புகளையும், நம்பிக்கை மற்றும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது. நலிந்த பிரிவினருக்கு அதிகாரம் அளித்திருப்பதோடு விளிம்பு நிலையில் இருந்தவர்களை மைய நீரோட்டத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இது பொருளாதார நிலைமையை மேலும் ஜனநாயகப்படுத்தி இருக்கிறது.

 

தொலைதூர கிராமத்தில் உள்ள மிகவும் நலிவுற்ற மக்களையும் உள்ளடக்கி அனைத்துக் குடிமக்களுக்குமான வளர்ச்சி என்ற தொலை நோக்குப் பார்வையுடன் எனது அரசு 2014-ல் பொறுப்புக்கு வந்தது.

 

அனைவரையும் உள்ளடக்கிய உறுதியான பொருளாதார அடித்தளம் இந்த இயக்கத்திற்கு தேவைப்பட்டது. இந்தியா போன்ற பெரிய நாட்டில் இந்தப் பணி எளிதானதல்ல.

 

இருப்பினும் இதனை வழக்கமான அறிவு யோசிப்பது போல ஆண்டுக் கணக்கில் அல்ல. மாதக் கணக்கில் சாதிக்க நாங்கள் விரும்பினோம்.

 

ஃபின்டெக் சக்தியுடனும் டிஜிட்டல் முறையிலான தொடர்புடனும் முன் எப்போதும் இல்லாத வேகம் மற்றும் அளவுடன் ஒரு புரட்சியை நாங்கள் தொடங்கியிருக்கிறோம்.

 

அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்துடன் தொடங்கப்பட்டிருப்பது 130 கோடி இந்தியர்களுக்கும் உண்மையானதாக மாறி வருகிறது. ஒரு சில ஆண்டுகளில் நாங்கள் 120 கோடிக்கும் அதிகமாக ஆதார் எனப்படும் பயோ மெட்ரிக் அடையாளங்களை உருவாக்கியிருக்கிறோம்.

 

ஜன் தன் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு இந்தியருக்கும் வங்கிக் கணக்கைத் துவக்க நாங்கள் திட்டமிட்டோம். 3 ஆண்டுகளில் 330 மில்லியன் புதிய வங்கிக் கணக்குகளைத் தொடங்கியிருக்கிறோம். இதன் மூலம் 330 மில்லியன் மக்களுக்கு அடையாளம், கவுரவம், வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

 

2014-ல் 50 சதவீதத்திற்கும் குறைவான இந்தியர்களுக்கே வங்கிக் கணக்குகள் இருந்தன. இப்போது ஏறத்தாழ எல்லோருக்கும் இருக்கின்றன.

 

எனவே 100 கோடிக்கும் அதிகமான பயோ மெட்ரிக் அடையாளங்கள், 100 கோடிக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள், 100 கோடிக்கும் அதிகமான செல்பேசிகள் கிடைத்திருப்பதன் மூலம் இந்தியா இன்று உலகிலேயே மிகப் பெரிய பொதுமக்கள் கட்டமைப்பு வசதியைக் கொண்டிருக்கிறது.

 

3.6 லட்சம் கோடி ரூபாய் அல்லது 50 பில்லியன் டாலருக்கும் அதிகமான பயன்கள் அரசிடமிருந்து மக்களுக்கு நேரடியாக கிடைக்கின்றன.

தொலை தூர கிராமத்தில் உள்ள ஏழை மக்கள் தங்களின் உரிமைகளை நிலைநாட்ட இனி வெகு தூரம் பயணம் செய்ய அல்லது தரகர்களுக்கு லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை.

 

அரசு நிதியுதவிகளை போலியான, ஆள் மாறாட்ட கணக்குகள் மூலம் இனி பெற  முடியாது. இத்தகைய கசிவுகளைத் தடுத்ததன் மூலம் ரூ.80,000 ஆயிரம் கோடி அல்லது 12 பில்லியன் டாலர்களை நாங்கள் சேமித்திருக்கிறோம்.

 

நிச்சயமற்ற நிலையில் வாழ்கின்ற லட்சக்கணக்கானோர் தங்களின் வங்கிக் கணக்குகளில் காப்பீட்டினைப் பெற்றிருக்கிறார்கள்.  வயது முதிர்ந்த காலத்தில் ஓய்வூதியப் பாதுகாப்பைப் பெற்றிருக்கிறார்கள்.

 

மாணவர் ஒருவர் தனது படிப்பு உதவித் தொகையை அவரது வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெற முடியும். இனிமேல் அவர் முடிவில்லாத வகையில் மனுக்களோடு ஓடிக் கொண்டிருக்கத் தேவையில்லை.

 

தொலை தூர கிராமங்களுக்கும் ஆதார் அடிப்படையில் 4 லட்சம் சிறிய வகை ஏடிஎம்கள் வீடுகளுக்கே சென்று சேவை வழங்கும் வங்கி முறையைக் கொண்டு வந்திருக்கிறோம்.

 

தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பக் கட்டமைப்பு, உலகின் மிகப் பெரிய சுகாதாரத் திட்டத்தை தொடங்க இந்த ஆண்டு உதவி செய்திருக்கிறது. “ஆயுஷ்மான்” திட்டத்தின் மூலம் 500 மில்லியன் இந்தியர்களுக்கு குறைந்த செலவில் சுகாதாரக் காப்பீடு கிடைக்கும்.

 

முத்ரா திட்டத்தின் மூலம் சிறு தொழில் முனைவோருக்கு 145 மில்லியன் கடன்கள் வழங்கவும் இது உதவி செய்திருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் இதற்கான தொகை ரூ.6.5 லட்சம் கோடி அல்லது 90 பில்லியன் டாலர்களாக உள்ளது. இந்தக் கடன்களில் சுமார் 75 சதவீதம் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

ஒரு சில வாரங்களுக்கு முன் இந்திய அஞ்சல்துறை வங்கியை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். இந்தியா முழுவதும் உள்ள சுமார் 1,50,000 அஞ்சலகங்கள் மற்றும் 3 லட்சம் அஞ்சல் ஊழியர்கள் வீடு தோறும் வங்கி வசதி வழங்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

 

அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்திற்கு இணையவழி தொடர்பும் அவசியமாகிறது.

 

இந்தியாவில் உள்ள 1,20,000-க்கும் அதிகமான கிராம சபைகள் சுமார் 3,00,000 கிலோ மீட்டர் கண்ணாடி இழை வடங்கள் மூலம் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளன.

 

சுமார் 3,00,000 பொது சேவை மையங்கள் கிராமங்களுக்கு டிஜிட்டல் இணைப்பைக் கொண்டு வந்துள்ளன. நில ஆவணங்களையும், கடன், காப்பீடு, சந்தை மற்றும் நல்ல விலைக் குறித்த விவரங்களையும் அவை விவசாயிகளுக்கு வழங்குகின்றன. பெண்களுக்கு சுகாதார சேவைகளையும் சுத்தமான பொருட்களையும் அவை வழங்குகின்றன.

 

ஃபின்டெக் மூலம் இந்தியாவில் பணபரிமாற்றம் டிஜிட்டல்மயம் ஆகாதிருந்தால் இவ்வளவு பெரிய மாற்றத்தை தீவிரமாக செயல்படுத்தியிருக்க இயலாது.

 

பல விதமான சூழல்களையும், சவால்களையும் கொண்ட நாடு இந்தியா. எங்களின் தீர்வுகளும் பலவகைப்பட்டதாகத்தான் இருக்க முடியும். எங்களின் பணப்பரிவர்த்தனைக் கருவிகள் அனைவரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதால் டிஜிட்டல்மயம் வெற்றியடைந்துள்ளது.

 

செல்பேசி மற்றும் இணையதளம் மூலம்,  பிறர் அறிய இயலாத வகையில் இருக்கும் முகவரியைப் பயன்படுத்தி வங்கிக் கணக்குகளுக்கு இடையே பணப்பரிவர்த்தனை செய்வோருக்கு பீம் செயலி உலகிலேயே மிகவும் நவீனமாக, எளிதாக, இசைவாக இருக்கிறது.

 

செல்பேசி மட்டும் வைத்துக் கொண்டு ஆனால் இணையதளம் இல்லாதவர்கள் பயன்படுத்துவதற்கு 12 மொழிகளில் யு.எஸ்.எஸ்.டி. முறை உள்ளது.

 

செல்பேசியோ, இணையதளமோ இல்லாதவர்களுக்கு பயோ மெட்ரிக் முறையைக் கொண்டு ஆதார் வழி பணப்பரிமாற்ற முறை உள்ளது. இதன் மூலம் ஏற்கனவே சுமார் 100 கோடி பணப்பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளில் 6 மடங்கு வளர்ச்சியாகும் இது.

 

அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ரூபே பணப்பரிமாற்ற அட்டைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவர்களில் 25 கோடி பேர் 4 ஆண்டுகளுக்கு முன் வங்கிக் கணக்கு இல்லாமல் இருந்தவர்கள்.

 

அட்டைகளில் இருந்து கியு.ஆர். மற்றும் வாலெட்டுகள் வரை டிஜிட்டல் முறையிலான பணப்பரிமாற்றங்கள் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது இந்தியாவில் உள்ள 128 வங்கிகள் ஒருங்கிணைந்த பணப்பரிமாற்றக் கட்டமைப்புடன் (யு.பி.ஐ.) இணைக்கப்பட்டுள்ளன.

 

கடந்த 24 மாதங்களில் யு.பி.ஐ. மூலமான பணப்பரிமாற்றங்கள் 1500 மடங்கு அதிகரித்துள்ளன. ஒவ்வொரு மாதமும் பரிவர்த்தனை மதிப்பு 30 சதவீதத்திற்கு மேல் அதிகரித்து வருகிறது.

 

ஆனால் அதன் வளர்ச்சி வேகத்தை விட டிஜிட்டல் முறையிலான பணப்பரிமாற்றம் உருவாக்கியுள்ள வாய்ப்புகள், திறன், வெளிப்படைத்தன்மை, வசதி ஆகியவற்றால் நான் ஈர்க்கப்பட்டுள்ளேன்.

 

அதிகப்படியான சரக்கு இருப்பைக் குறைக்கவும் வசூலை வேகப்படுத்தவும் கடைக்காரர் இணையதளத்தைப் பயன்படுத்த முடியும்.

 

பழங்கள் உற்பத்தியாளர், விவசாயி அல்லது கிராம கைவினைஞர் ஆகியோருக்கு சந்தைகளை நேரடியாகவும், நெருக்கமாகவும் மாற்றி அவர்களுக்கான வருவாயை அதிகரிப்பதோடு பணப்பரிமாற்றத்தை வேகப்படுத்தும்.

 

தொழிலாளர் ஒருநாள் வேலையை விட்டு விடாமல் ஊதியத்தைப் பெற்று வீட்டுக்கு விரைவாகப் பணத்தை அனுப்பிவைக்க முடியும்.

 

டிஜிட்டல் முறையிலான பணப்பரிமாற்ற முறை நேரத்தை மிச்சப்படுத்துகிறது. இது தேசத்திற்குப் பெரிய சேமிப்பைத் தருகிறது. இது தனிநபர்களின் உற்பத்தித் திறனையும், எங்களின் பொருளாதாரத்தையும் அதிகரிக்கிறது.

 

இது வரிவசூலை அதிகரிக்க உதவுவதோடு பொருளாதாரத்திலும் நேர்மையை செலுத்துகிறது.

 

இன்னும் கூடுதலாக டிஜிட்டல் முறை பரிமாற்றம் என்பது வாய்ப்புகளின் உலகத்திற்கு நுழைவாயிலாக உள்ளது.

 

மக்களுக்கு மதிப்புக் கூட்டும் சேவைகளை செய்வதற்கான கட்டமைப்புக்குத் தகவல் பகுப்பாய்வும், செயற்கை நுண்ணறிவும் உதவி செய்கின்றன.

 

அனைவருக்குமான நிதி வசதி என்பது குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கும் நீடிக்கப்பட்டுள்ளது.

 

இவர்களும் ஓராண்டுக்கு முன்பு தொடங்கப்பட்ட தேசிய அளவிலான சரக்கு மற்றும் சேவை வரி டிஜிட்டல் வலைப்பின்னலுக்குள் வருகிறார்கள்.

 

கடன் மூலம் வங்கிகளும் இவர்களைச் சென்றடைக்கின்றனர். மாற்றுக் கடன் அமைப்புகள் புதிய கண்டுபிடிப்புகளுக்கான நிதியுதவியை செய்கின்றன. அதிக வட்டி விகிதங்களுக்குக் கடன் வழங்கும் அதிகாரப்பூர்வமற்ற சந்தைகளை இனிமேல் அவர்கள் எதிர்பார்க்கத் தேவையில்லை.

 

இந்த மாதத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் 59 நிமிடங்களுக்குள் வங்கி ஒன்றுக்குக் கூட செல்லாமல் ரூ.1 கோடி வரை அல்லது 1,50,000 டாலர் வரை கடன் ஒப்புதல் பெறுவதற்கு நாங்கள் உறுதிப்பூண்டுள்ளோம். ஜி.எஸ்.டி கணக்கு தாக்கல், வருமானவரிக் கணக்கு தாக்கல், வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கடன் தரும் முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு சில நாட்களிலேயே இத்தகைய 1,50,000 தொழில் நிறுவனங்கள் கடனுக்காக வந்துள்ளன.

 

இது தொழில் நிறுவனங்களையும், வேலைவாய்ப்பையும், வாழ்க்கை வளத்தையும் மேம்படுத்துவதற்கு ஃபின்டெக்கின் சக்தியாகும்.

 

அரசு மின்னணுச் சந்தை அல்லது ஜி.இ.எம். போன்ற புதிய கண்டுபிடிப்புகள் மூலம் டிஜிட்டல் தொழில்நுட்பம் வெளிப்படைத்தன்மையை அறிமுகம் செய்து ஊழலை ஒழித்துள்ளது. அரசு முகமைகள் மூலமான கொள்முதல்களுக்கு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் அமைப்பாக இது இருக்கிறது.

 

தேடுதல் மற்றும் ஒப்பிடுதல், ஒப்பந்தப்புள்ளி, இணையம் மூலம் ஆர்டர் வழங்குதல், ஒப்பந்த உருவாக்கம் மற்றும் பணம் வழங்குதல் என அனைத்து சேவைகளையும் இது கொண்டிருக்கிறது.

 

இது ஏற்கனவே 6,00,000 லட்சம் பொருட்களைக் கொண்டிருக்கிறது. இந்த அமைப்பில் சுமார் 30,000 வாங்குவோர் அமைப்புகளும், 1,50,000-க்கும் அதிகமான விற்பனை மற்றும் சேவை வழங்குவோரும் இந்த அமைப்பில் பதிவு செய்துள்ளனர்.

 

நண்பர்களே

 

இந்தியாவில் ஃபின்டெக் கண்டுபிடிப்பு மற்றும் தொழில் நிறுவனம் புதிய உருவாக்கத்தைப் பெற்றுள்ளது. இது உலகில், இந்தியாவைப் புதுமைக் கண்டுபிடிப்பு தேசமாகவும், முன்னணி ஃபின்டெக் நாடாகவும் மாற்றியிருக்கிறது. நான்காம் தலைமுறை ஃபின்டெக் மற்றும் தொழில் துறையாக இந்தியா உருவாகி வருகிறது.

 

காகிதமற்ற, ரொக்கப் பணம் இல்லாத, நேரடியாக செல்லாத மேலும் பாதுகாப்பும், பந்தோபஸ்தும் உள்ள அனைவருக்கும் சாத்தியமான பணபரிமாற்றங்களைச் செய்வதற்கு எங்கள் இளைஞர்கள் செயலிகளை உருவாக்கி வருகிறார்கள். இந்தியா ஸ்டேக் என்பது உலகிலேயே எளிதான மிகப் பெரிய பயன்பாட்டு செயலியாக இருப்பது வியப்பைத் தந்துள்ளது.

 

வங்கிகள், ஒழுங்குமுறையாளர்கள் மற்றும் நுகர்வோருக்கான தீர்வுகளை உருவாக்குவதற்கு, அவர்கள் செயற்கை நுண்ணறிவு, மையப்படுத்தப்பட்ட இணையம் மற்றும் கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள்.

 

மேலும் சுகாதாரத்திலிருந்து கல்வி வரையும், நுண் கடனிலிருந்து காப்பீடு வரையுமான எங்கள் தேசத்தின் சமூக இயக்கங்களை அவர்கள் பின்பற்றுகின்றனர்.

 

டிஜிட்டல் இந்தியா, புதுமைத் தொழில் இந்தியா போன்ற முன்முயற்சிகள் மற்றும் ஆதரவான கொள்கைகள், ஊக்குவிப்புகள், நிதி வழங்கும் திட்டங்கள் உருவாக்கியுள்ள சூழல்களிலிருந்து இந்தியாவில் உள்ள ஏராளமான திறனாளிகள் பயன்பெறுகிறார்கள்.

 

உலகிலேயே மிக அதிக அளவில் தகவல் விவரங்களை இந்தியா பெறுவதற்கு இது உதவுகிறது. மேலும் தகவல்களுக்கான கட்டணங்களை மலிவானதாக்குகிறது. ஃ பின்டெக் பயன்பாட்டில் உயர்ந்த நிலையில் உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. எனவே ஃபின்டெக் நிறுவனங்கள் மற்றும் புதுமைத் தொழில்கள் அனைத்திற்கும் நான் கூறுவது என்னவென்றால், இந்தியாதான் உங்களின் சிறந்த இலக்காக இருக்கும் என்பதுதான்.

 

எல்.இ.டி. விளக்குகள் தொழில்துறை மூலம், இந்தியா பெருமளவு நிதியை சேமித்துள்ளது. இந்தத் திறன் மிக்க எரிசக்தித்  தொழில்நுட்பம் உலக அளவில் மிகவும் குறைந்த செலவுடையதாக மாறி வருகிறது.  இதே போன்று இந்தியாவின் பரந்துப்பட்ட சந்தை ஃபின்டெக் பொருட்கள் உலகளவில் செல்வதற்கும் செலவு மற்றும் சிரமத்தைக் குறைப்பதற்கும், அளவை அதிகரிப்பதற்கும் வாய்ப்பாக அமைகிறது.

 

நண்பர்களே

சுருக்கமாக்க் கூறினால் ஃபின்டெக்கின் 6 பெரிய பயன்களை இந்திய நடைமுறை காட்டுகிறது. எளிதில் கிடைத்தல், அனைவரையும் உள்ளடக்குதல், தொடர்பு, வாழ்க்கையை எளிதாக்குதல், வாய்ப்பு மற்றும் பொறுப்பேற்பு என்பவை அவை.

 

உலகம் முழுவதும், இந்தோ பசிபிக்கில் இருந்து ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா வரையும் சாதாரண வாழ்க்கையை மாற்றுகின்ற அசாதாரணமான கண்டுபிடிப்புகளின் ஈர்ப்பைத் தரும் கதைகளை நாம் காண்கிறோம்.

 

இருப்பினும் செய்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது. மிகவும் நலிந்த பிரிவினருக்கான வளர்ச்சி என்பதன் வழியாக அனைவருக்குமான வளர்ச்சி என்பது நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

உலகில் வங்கிக் கணக்கு இல்லாத 1.7 பில்லியன் மக்களை முறையான நிதிச் சந்தைக்குள் நாம் கொண்டு வர வேண்டும்.

 

உலக அளவில் முறைசாரா துறைகளில் உள்ள ஒரு பில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு இதுவரை கிடைத்திராத காப்பீடு மற்றும் ஓய்வூதியப் பாதுகாப்பை அவர்களுக்கு நாம் நீட்டிக்க வேண்டும்.

 

நிதி கிடைக்காத காரணத்தால் நிறைவேறாத கனவுகள் இல்லை என்பதையும், தொடங்கப்படாத புதிய தொழில்கள் இல்லை என்பதையும் உறுதி செய்ய ஃபின்டெக்கை நாம் பயன்படுத்த முடியும்.

 

சிரமங்களை சமாளிப்பதற்கும், மோசடிகளை எதிர்ப்பதற்கும், பாரம்பரியமான முறைகளில் ஏற்படும் இடையூறுகளைக் கையாள்வதற்கும் வங்கிகளையும், நிதி நிறுவனங்களையும் மேலும் நீக்குப் போக்கு உள்ளதாக நாம் மாற்ற வேண்டும்.

 

இணக்கத்தையும், முறைப்படுத்தலையும், கண்காணிப்பையும் மேம்படுத்தத் தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்தலாம். இதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகள் மலரும், சிரமங்கள் கட்டுப்படுத்தப்படும்.

 

கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கும் இதர நிதி சார்ந்த குற்றங்களைத் தடுப்பதற்கும் ஃபின்டெக் சாதனங்களை நாம் பயன்படுத்த வேண்டும்.

 

ஒன்றோடொன்று தொடர்புடைய உலகத்தில் நமது தகவல் தொகுப்பும், நடைமுறைகளும் நம்பிக்கைக்குரியதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும் போது பொருளாதார உலகம் உருவாவது வெற்றி பெறும்.

 

உலக அளவில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள முறையைத் இணையத் திருட்டுகளிலிருந்து பாதுகாப்பானதாக நாம் மாற்ற வேண்டும்.

 

ஃபின்டெக்கின் பணி மக்களுக்கு ஆதாயம் அளிப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். மிகவும் நலிந்த மக்களுடன் நேரடியான தொடர்பின் மூலம் மனிதகுல நிலைமை மேம்படுவதைப் பொருளாதாரத் தொழில்நுட்பம் உறுதி செய்கிறது.

 

இவற்றுக்குப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் பற்றியும் ஒன்றிணைந்த கொள்கைகள் பற்றியும் மக்களிடையே நாம் விழிப்புணர்வை விரிவுப்படுத்துவதும் அவர்களுக்கு உணர்த்துவதும் அவசியமாகும்.

 

இதற்கு ஃபின்டெக் என்பது வெறும் சாதனமாக இல்லாமல் ஒரு இயக்கமாக இருக்க வேண்டியது அவசியம்.

 

தகவல் உடைமை மற்றும் பரிமாற்றம், தனி உரிமை மற்றும் ஒப்புதல், தனியார் மற்றும் அரசு, சட்டம் மற்றும் நெறிமுறைகள் ஆகியவை பற்றிய தவிர்க்க இயலாத கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டும்.

 

இறுதியாக, எதிர்காலத்திற்கான திறன்களை உருவாக்குவதில் நாம் முதலீடு செய்ய வேண்டும். மேலும் யோசனைகளை ஏற்பதற்கும் நீண்ட காலத்திற்கான முதலீட்டிற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

 

நண்பர்களே,

 

ஒவ்வொரு சகாப்தமும் அதன் வாய்ப்புகளையும், சவால்களையும் கொண்டு விவரிக்கப்படுகிறது. எதிர்காலத்தை வடிவமைக்கும் பொறுப்பு ஒவ்வொரு தலைமுறைக்கும் உள்ளது.

 

இந்தத் தலைமுறை, உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரின் உள்ளங்கையாலும் எதிர்காலத்தை உருவாக்கும்.

 

இவ்வளவு பெரிய சாத்தியங்களோடு வரலாற்றில் எந்தக் காலமும் இருந்ததில்லை.

 

கோடிக்கணக்கானவர்களுக்கு நாம் வாழும் காலத்திலேயே வாய்ப்புகளையும், வளத்தையும் உண்மையானதாக ஆக்க வேண்டும்.

 

ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையே, நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையே நம்பிக்கைகளுக்கும், சாதனைகளுக்கும் இடையே இந்த உலகை மேலும் மனிதத்தன்மையோடும், சமத்துவத்தோடும் உருவாக்க வேண்டும்.

 

மற்றவர்களிடமிருந்து இந்தியா கற்றுக் கொள்வதை போலவே எங்களின் அனுபவங்களையும், நிபுணத்துவத்தையும் உலகத்தோடு நாங்கள் பகிர்ந்துக் கொள்வோம்.

 

ஏனெனில் இந்தியாவை எது இயக்குகிறதோ அது மற்றவர்களுக்கும் நம்பிக்கையை அளிப்பதாக இருக்கும். மேலும் இந்தியாவிற்கு நாங்கள் எதைக் கனவு காண்கிறோமோ அதுவேதான் உலகத்திற்கும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

 

இதுதான் அனைவருக்குமான எனது பொதுக் கருத்து.

 

இருளுக்கு எதிராக ஒளியைப் பரப்புவதற்கும், விரக்திக்கு எதிராக நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியைப் பரப்புவதற்கும் தீபத் திருவிழா நமக்கு அழைப்பு விடுப்பது போல் இந்த விழா மனிதகுலத்திற்கு சிறந்த எதிர்காலத்தை அளிப்பதற்கு நம்மை எல்லாம் ஒன்று சேர்த்திருக்கிறது.

 

நன்றி.