Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய சுதந்திர 75-வது ஆண்டு தினத்தையொட்டி தில்லி செங்கோட்டையில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

இந்திய சுதந்திர 75-வது ஆண்டு தினத்தையொட்டி தில்லி செங்கோட்டையில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

இந்திய சுதந்திர 75-வது ஆண்டு தினத்தையொட்டி தில்லி செங்கோட்டையில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

இந்திய சுதந்திர 75-வது ஆண்டு தினத்தையொட்டி தில்லி செங்கோட்டையில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்


எனது அமைச்சரவைத் தோழர் திரு. மகேஷ் ஷர்மா அவர்களே, இந்திய விடுதலைப் படையின் உறுப்பினர்களே, நாட்டின் வீரத்திருமகனான திரு. லல்தி ராம் அவர்களே, சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் மருமகன் திரு. சந்திரகுமார் போஸ் அவர்களே, பிரிகேடியர் ஆர்.எஸ். சிக்காரா அவர்களே, பாதுகாப்புப் படைகளின் அதிகாரிகளே, முக்கியப் பிரமுகர்களே, சகோதாரர்களே, சகோதரிகளே.

இன்றைய தினம் (21.10.2018) வரலாற்றுச் சிறப்புமிக்க தினம். இந்த நாளில் நடைபெறும் கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க பெரும் அதிர்ஷ்டம் செய்தவனாகிறேன். இதே செங்கோட்டையில்தான் 75 ஆண்டுகளுக்கு முன்பு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வெற்றி அணிவகுப்பு குறித்து கனவு கண்டார். சுதந்திரமான இந்திய அரசின் முதல் பிரதமராக பதவிப்பிரமாணம் ஏற்ற திரு. நேதாஜி, செங்கோட்டையில் ஒருநாள் இந்திய தேசிய மூவர்ணக் கொடி முழுமரியாதையுடன் ஏற்றப்படும் என்று அறிவித்தார். சுதந்திர இந்திய அரசு, பிரிவுபடாத இந்தியாவின் முதலாவது அரசாகும். சுதந்திர இந்திய அரசு உருவானதன் 75-வது ஆண்டு நிறைவுதினமான இன்று நாட்டு மக்களுக்கு என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

நாட்டுக்கு மட்டுமே அர்ப்பணித்துக் கொண்ட, தனது இலக்குகளை அடைவதற்காக அனைத்தையும் துறக்க தயாராகவிருந்த, தெளிவான தொலைநோக்கு கொண்ட ஒரு நபரை நினைவுகூருவதன் மூலம், நாட்டின் ஒவ்வொரு தலைமுறையும் உத்வேகம் பெறுகிறது. இன்றைய தினம் நேதாஜி போன்ற மகனை நாட்டுக்கு ஈந்த அந்த பெற்றோருக்கு நான் தலைவணங்குகிறேன். நேதாஜி நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த பல வீரர்களை உருவாக்கியவர். சுதந்திரப் போராட்டத்திற்காக அனைத்தையும் தியாகம் செய்த அந்த வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் தலைவணங்குகிறேன். நேதாஜியின் விடுதலை இயக்கத்திற்கு தங்கள் முயற்சிகளையும், அர்ப்பணிப்பையும் ஈந்து ஆதரவளித்த உலகெங்கிலும் உள்ள அனைத்து இந்தியர்களையும் இந்த நாளில் நான் நினைவுகூருகிறேன். இவர்கள் சுதந்திரமான, வளமான, அதிகாரம் பெற்ற இந்தியாவை உருவாக்க மதிப்புமிக்க பங்காற்றியவர்கள்.

நண்பர்களே,

சுதந்திர இந்திய அரசு வெறும் பெயர் அல்ல. நேதாஜி தலைமையில் அந்த அரசு ஒவ்வொரு துறையிலும் பல்வேறு திட்டங்களை உருவாக்கியது. இந்த அரசுக்கென தனியாக வங்கி, நாணயம், தபால்தலை, உளவுத் தகவல் கட்டமைப்பு ஆகியன இருந்தன. நாட்டிற்கு வெளியேயிருந்து மிகக் குறைவான ஆதாரங்களுடன் இவ்வளவு பெரிய அரசின் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது மிகவும் அசாதாரணமான பணியாகும்.

உலகின் மிகப் பெரிய பரப்பளவில் ஆதிக்கத்தை செலுத்தி வந்த ஒரு அரசுக்கு எதிராக, நேதாஜி மக்களை ஒன்று திரட்டினார். நேதாஜியின் எழுத்துக்களை நாம் வாசித்தால், அவரது குழந்தைப் பருவத்தில் விதைக்கப்பட்ட வீரத்தின் அளவை, அடித்தளத்தை நாம் காண முடியும்.

1912-ஆம் ஆண்டுவாக்கில், அதாவது 106 ஆண்டுகளுக்கு முன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தனது அன்னைக்கு எழுதிய கடிதம் அடிமைப்பட்டுப் போன இந்தியா அவருக்கு எவ்வளவு துயரத்தையும், வேதனையையும் அளித்தது என்பதற்கு அடையாளமாக உள்ளது. அச்சமயம் அவருக்கு வயது 15 அல்லது 16-ஆகத்தான் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பல ஆண்டுகளாக காலனி ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவின் நிலை குறித்த அவரது வேதனை, அன்னைக்கு அவர் எழுதிய கடிதத்தில் வெளிப்பட்டுள்ளது. அவர் தன் தாயிடம் ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார். “அன்னையே, வரும் ஆண்டுகளிலும் நமது நாடு வீழ்ச்சியடைந்த நாடாகவே தொடருமா? ஏழை பாரத மாதாவின் ஒரு மகன்கூட தனது சுயநலத்தை கைவிட்டு, தாய்நாட்டின் சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கமாட்டானா? இந்த தூக்கத்திலிருந்து எப்போது விழித்தெழுவோம், சொல்லுங்கள் அன்னையே?” 16 வயது நிரம்பாத சுபாஷ் சந்திரபோஸ் தன் அன்னையிடம் இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தார்.

சகோதரர்களே, சகோதரிகளே,

அன்னைக்கு எழுதிய அதே கடிதத்தில் இந்த இந்தக் கேள்விகளுக்கு விடைகளையும் சொல்லியிருந்தார். இனியும் காலதாமதம் செய்ய சாத்தியமில்லை என்று அவர் தன் அன்னையிடம் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். ஒருவர் தொடர்ந்து செயலிழந்த நிலையில் இருக்கமுடியாது. தூக்கத்திலிருந்து எழுந்து சோம்பலை உதறித் தள்ளி பணி செய்யும் காலம் வந்துவிட்டது. இதுதான் 16 வயது சுபாஷ் சந்திரபோஸ். இந்த பதின்ம வயது சுபாஷ் பாபுவை, இந்த தீவிர பற்றுதான் நேதாஜி சுபாஷ்-ஆக மாற்றியது.

நேதாஜிக்கு ஒரே நோக்கம், ஒரே விருப்பம் இந்திய சுதந்திரம்தான். இந்தியாவை அடிமைத்தளையிலிருந்து மீட்பதுதான். அதுதான் அவரது கொள்கையும், அவரது பணி நோக்கமுமாக அமைந்தது.

நண்பர்களே,

சுபாஷ் பாபு, தனது வாழ்க்கையின் நோக்கத்தையும் அதனை எதற்காக அர்ப்பணிப்பது என்பதையும் சுவாமி விவேகானந்தரின் போதனைகளிலிருந்து பெற்றார்.
ஆத்ம நோமோக்ஷார்தம் ஜகத் ஹிதாய் ச்ச (आत्मनोमोक्षार्दम जगत हिताय च) அதாவது, உலக சேவையில் தான் ஒருவர் இரட்சிப்பை அடைகிறார். இந்த தத்துவத்தின் முக்கிய அடிப்படை, மக்களுக்காக சேவை என்பதாகும். அவர் ஒவ்வொரு துயரத்தையும் அனுபவித்தார்.

ஒவ்வொரு சவாலையும் எதிர்கொண்டார். இந்தியாவுக்கு சேவை என்ற உணர்வு காரணமாக எழுந்த ஒவ்வொரு சதியையும் முறியடித்தார்.

சகோதாரர்களே, சகோதரிகளே,

தங்களையே காலத்திற்கேற்ப மாற்றியமைத்துக் கொண்ட, தங்கள் இலக்குகளை மனதில் கொண்டு நடவடிக்கை எடுத்த வீரர்களில் சுபாஷ் பாபுவும் ஒருவர். இதன் காரணமாகத்தான் தொடக்க காலத்தில் உள்நாட்டிலேயே இருந்து மகாத்மா காந்தியடிகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக பாடுபட்டார். பின்னர், சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப அவர் ஆயுதப் புரட்சிப் பாதையை தேர்ந்தெடுத்தார். இந்தப் பாதைதான் சுதந்திர இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் முக்கியப் பங்காற்றியது.

நண்பர்களே,

சுபாஷ் பாபு பரப்பிய கொள்கைகளின் சாரம், இந்தியாவில் மட்டுமன்றி இதர நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. சுதந்திரத்திற்காக போராடிய அனைத்து நாடுகளும் சுபாஷ் சந்திர போஸின் கருத்துக்களால் உத்வேகம் பெற்றன. எதுவுமே இயலாத காரியம் அல்ல என்பதை அவர்கள் உணர்ந்தனர். அவர்களும்கூட ஒன்றுபட்டு, பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து, சுதந்திரம் பெற முடியும் என்று நம்பினார்கள். மாபெரும் சுதந்திரப் போராட்ட வீர்ரும், பாரத் ரத்னா விருது பெற்றவருமான நெல்சன் மண்டேலா தாம் தென்னாப்பிரிக்காவில் மாணவர் இயக்கத்தின்போது, சுபாஷ் பாபுவைத்தான் தனது தலைவராகவும், நாயகனாகவும் கருதினார் என்று கூறியுள்ளார்.

சகோதாரர்களே, சகோதரிகளே,

இன்று நாம் விடுதலை பெற்ற இந்திய அரசின் 75-வது ஆண்டு தினத்தை கொண்டாடி வருகிறோம். நான்காண்டுகள் கழித்து 2022-ல் நாம் இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டை கொண்டாடவுள்ளோம். 75 ஆண்டுகளுக்கு முன்னர் சுதந்திர இந்திய அரசின் பிரதமராக பதவியேற்றபோது, ஒவ்வொருவரும் சம உரிமைகளும், வாய்ப்புகளும் பெற்ற இந்தியாவை உருவாக்க நேதாஜி உறுதியேற்றார். தொன்மையான பாரம்பரியத்தின் அடிப்படையில் நிறைவான, வளமான இந்தியாவை உருவாக்க அவர் உறுதியளித்தார். நாட்டின் சமச்சீரான மேம்பாட்டுக்கும் ஒவ்வொரு மண்டலத்தின் மேம்பாட்டுக்கும் அவர் உறுதியளித்தார். இதுவரை நாடு அடிமைப்படுவதற்கு காரணமாக இருந்த பிரித்தாளும் கொள்கையை வேரறுத்து ஒழிக்க அவர் உறுதியேற்றார்.

சுதந்திரம் பெற்ற பல ஆண்டுகளுக்குப் பிறகும், நேதாஜியின் கனவு நிறைவேற்றப்படவில்லை. சுதந்திர இந்தியா நீண்ட பயணத்திற்கு பின்பும், புதிய சிகரங்களை இன்னும் எட்டவில்லை. இந்த இலக்கை அடைய இந்தியாவின் இன்றைய 125 கோடி மக்களும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கனவு கண்ட புதிய இந்தியாவை உருவாக்கும் தீர்மானத்துடன் முன்னேறி வருகின்றனர்.

இன்று நமது சுதந்திரத்தை அழிவு சக்திகள் தாக்கி வரும் நிலையில், நேதாஜியிடமிருந்து உத்வேகம் பெற்று நாட்டின் உள்ளேயும், வெளியேயும் இருந்து அதன் ஒருமைப்பாட்டிற்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் சக்திகளுக்கு எதிராக போராடி வெல்வது ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும்.

ஆனால், நண்பர்களே, இந்த தீர்மானத்துடன் கூட மற்றொரு விஷயமும் முக்கியமானதாகும். அதாவது, தேசியம் மற்றும் இந்தியன் என்ற உணர்வை பெறுதலும், வெளிப்படுத்துதலும் ஆகும். செங்கோட்டை வழக்கு விசாரணையின்போது, சுதந்திர இந்தியப் படையின் வீரர் ஷாநவாஸ் கான், இந்தியா என்ற உணர்வை தனது மனதில் தூண்டிய முதலாவது நபர் சுபாஷ் சந்திரபோஸ்தான் என்று கூறினார்.

இந்தியாவை இந்தியன் என்ற நிலையிலிருந்து உணர்த்திய முதல் மனிதரும் அவர்தான். வீரர் ஷாநவாஸ் கான் எந்தச் சூழ்நிலையில் இதனைச் சொன்னார்? இந்தியாவை இந்தியன் என்ற நிலையிலிருந்து நோக்குவது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? நாட்டின் இன்றைய நிலைமையை பார்த்தால், இந்த விஷயங்கள் நமக்கு நன்றாக தெரியவரும்.

சகோதாரர்களே, சகோதரிகளே,

தனது கேம்பிரிட்ஜ் நாட்களை நினைவுகூர்ந்த சுபாஷ் பாபு, ஐரோப்பா என்பது இங்கிலாந்தின் பெரிதுபடுத்தப்பட்ட வடிவம்தான் என்று இந்தியர்களுக்கு கற்பிக்கப்பட்டதாக எழுதுகிறார். எனவே, நாம் ஐரோப்பாவை இங்கிலாந்து என்ற கண்ணாடி வழியாகத்தான் பார்க்கும் பழக்கத்தை பெற்றுவிட்டோம்.

நமது பண்பாடு, நமது மாபெரும் மொழிகள், நமது கல்வி முறை, நமது பாடத்திட்ட அமைப்பு மற்றும் மொத்த அமைப்புகளும் இந்த சிந்தனைகளின் தாக்கத்தில் திளைந்தவை ஆகும். நாம் மாபெரும் தலைவர்களான சுபாஷ் பாபு, சர்தார் பட்டேல் போன்றோரின் நெறிமுறைகளை சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் இந்தியாவைப் பாதுகாக்க கடைபிடித்திருந்தால், நம்மீதான வெளிநாடுகளின் தாக்கம் இருந்திருக்காது, நிலைமையே வேறு விதமாக இருந்திருக்கும் என்பதை உறுதியாகச் சொல்லுவேன்.

சகோதாரர்களே, சகோதரிகளே,

சர்தார் பட்டேல், பாபா சாகேப் அம்பேத்கர், நேதாஜி போன்ற மண்ணின் மைந்தர்கள் பலரது பங்களிப்பை ஒரு குடும்பத்தை வளப்படுத்துவதற்காக எதிர்க்கும் பெரிய முயற்சிகள் துரதிருஷ்டவசமானவை. தற்போது நமது அரசு இந்த நிலைமையை மாற்றியமைக்க முயற்சி செய்து வருகிறது. நான் தேசிய காவல் நினைவிடத்தை அர்ப்பணித்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றேன் என்பதை நீங்கள் இங்கு வந்து சேருவதற்கு முன்பாக அறிந்திருப்பீர்கள். அந்த நிகழ்ச்சியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் தேசிய விருது ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தேன்.

தேசிய பேரிடர் காலங்களில் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் பேரிடர் மேலாண்மையிலும் மீட்பு நடவடிக்கையிலும் ஈடுபடும் நமது காவல்துறையின் வீர நெஞ்சங்களுக்கு ஒவ்வோராண்டும் நேதாஜியின் பெயரிலான இந்த விருது வழங்கப்படும். காவல்துறைப் பணியாளர்கள், துணை ராணுவப்படை வீரர்கள் ஆகியோரும் இந்த விருதை வெல்வதற்கு தகுதி பெற்றவர்கள் ஆவர்.

நண்பர்களே,

சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளிடையே சமச்சீரான வளர்ச்சி, தேசிய நிர்மாணத்தில் ஒவ்வொருவரின் பங்கு ஆகியவை நேதாஜியின் விரிவான தொலைநோக்கின் முக்கிய அம்சங்களாகும். நேதாஜி தலைமையில் அமைந்த சுதந்திர இந்திய அரசு, இந்திய சுதந்திரத்திற்கு கிழக்கு இந்தியாவை நுழைவாயிலாக அமைத்தது. 1944 ஏப்ரலில் கர்னல் சவுகத் மாலிக் தலைமையிலான இந்திய விடுதலைப்படை மணிப்பூரில் உள்ள மொய்ராங் என்ற இடத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றியது.

வடகிழக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் சார்பிலான விடுதலை இயக்கத்தின் இதுபோன்ற வீரர்களின் பங்களிப்பை போதுமான அளவு வெளிப்படுத்தவில்லை என்பது துரதிருஷ்டவசமானது. மேம்பாட்டைப் பொறுத்தவரை இந்த முக்கியத்துவம் வாய்ந்த பகுதி பின்தங்கியே உள்ளது. இன்றைய நிலையில் தற்போதைய அரசு கிழக்கு இந்தியாவுக்கும், அன்று போஸ் வழங்கிய அதே முக்கியத்துவத்தை அளித்து வருகிறது என்பதில் பெருமிதம் கொள்கிறேன். நாட்டின் இந்தப் பகுதியில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டின் உந்துவிசையாக மாற்றும் திசையில் மத்திய அரசு செயலாற்றி வருகிறது என்பதும் மனநிறைவளிக்கிறது.

சகோதாரர்களே, சகோதரிகளே,

நாட்டுக்கு பங்காற்றியவர்களில் நேதாஜியை முன்னிலைப்படுத்துவதற்கும், அவரது அடிச்சுவற்றை பின்பற்றி நடப்பதற்கும் எனக்கு அடிக்கடி வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம்தான். எனவே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு அழைப்பு கொடுத்தவுடன், சுபாஷ் சந்திரபோஸ் குஜராத்தில் தங்கியிருந்த நாட்களில் ஆற்றிய பணிகள் என் நினைவுக்கு வந்தன.

நண்பர்களே,

2009-ல் நான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, வரலாற்றுச் சிறப்புமிக்க ஹரிபுரா காங்கிரஸ் மாநாட்டின் நினைவுகள் என்னிடம் எழுந்தன. இந்த மாநாட்டில் நடந்தது போன்ற நிகழ்வுகளை நாம் மீண்டும் உருவாக்கினோம். சர்தார் வல்லபாய் பட்டேலும், குஜராத் மக்களும் மாட்டு வண்டிகளுடன் நீண்ட ஊர்வலத்தில் சென்ற அதே நிகழ்வை 2009-ல் மீண்டும் உருவாக்கினோம். இந்த மாநாடு காங்கிரஸ் கட்சியுடையது என்றாலும், நமது வரலாற்றில் அதுவொரு முக்கியமான அத்தியாயம் என்பதால், அதனை மீண்டும் நடத்திக் காட்டினோம்.

நண்பர்களே,

நாட்டு விடுதலைக்காக இன்னுயிரை ஈந்தவர்கள் இந்தப் பெரிய வாய்ப்பு கிட்டியமைக்காக அதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்ல வேண்டும். இந்த வாய்ப்பை பெறாத நம்மைப் போன்றவர்கள் நாட்டுக்காக, அதன் மேம்பாட்டுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்ள ஒரு வாய்ப்பு இன்னும் உள்ளது. அநேக தியாகங்களுக்குப் பிறகு நாம் சுயராஜ்யத்தைப் பெற்றுள்ளோம். இந்த சுயராஜ்யத்தை நல்ல ஆளுகையுடன் பராமரிக்கும் பொறுப்பு 125 கோடி இந்தியர்களாகிய நம்மிடம் உள்ளது. ஆயுதங்களின் பலத்திலிருந்தும், உங்கள் ரத்தத்தை விலையாகக் கொடுத்தும் சுதந்திரத்தை பெற வேண்டும் என்று நேதாஜி கூறினார். சுதந்திரம் பெற்ற பிறகு நீங்களெல்லாம் நாட்டின் சுதந்திரத்தை எப்போதும் பாதுகாக்கும் நிலையான ராணுவமாக செயல்பட வேண்டும்.

இன்றைய நிலையில் இந்தியா சுபாஷ் சந்திர போஸ் கண்ட கனவின்படியான ராணுவத்தை அமைப்பதை நோக்கி முன்னேறி வருகிறது என்பதை உறுதிபட சொல்லிக் கொள்கிறேன். இன்று, இந்திய ராணுவத்தில் நவீன தொழில்நுட்பமும், நவீன ஆயுதங்களும் சேர்க்கப்பட்டு வருகின்றன. நமது ராணுவ பலம் எப்போதும் சுய பாதுகாப்புக்கானது. அது அப்படியே தொடர்ந்து இருக்கும். அடுத்தவர் நிலத்திற்கு நாம் எப்போதும் ஆசைப்பட்டதில்லை. வரலாற்றுப்பூர்வமாகவும் இதே நிலை இருந்து வந்துள்ளது. ஆனால், எவரேனும் இந்தியாவின் இறையாண்மையை சோதித்தால், இந்தியா இரட்டிப்பு ஆற்றலுடன் பதிலடி கொடுக்கும்.

நண்பர்களே,

நமது ராணுவத்தை வலுப்படுத்த கடந்த நான்கு ஆண்டுகளில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உலகிலேயே மிகச் சிறந்த தொழில்நுட்பம் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ராணுவத்தின் திறன் மேம்பாடாக இருக்கட்டும், அதன் தீரமிகு வீரர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதாக இருக்கட்டும் இந்த அரசு தைரியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எதிர்காலத்திலும் இந்த நிலைமை தொடரும். அந்நிய மண்ணில் துல்லிய தாக்குதல் நடத்தியது முதல், நேதாஜி தொடர்பான கோப்புகளை வெளிப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளை நமது அரசு எடுத்துள்ளது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த “ஒரு பதவிக்கு ஒரு ஓய்வூதியம்” என்ற கோரிக்கையை, தாம் அளித்த உறுதிமொழியை அரசு நிறைவேற்றியுள்ளது என்பதற்கு இங்கு கூடியுள்ள முன்னாள் ராணுவத்தினரில் பலர் சாட்சியங்களாகும்.

மேலும், ஓய்வுபெற்ற ராணுவப் பணியாளர்களுக்கு நிலுவைத் தொகையாக ரூ.11,000 கோடி வழங்கப்பட்டிருப்பது லட்சக்கணக்கான ராணுவ வீரர்களுக்கு பயனளித்துள்ளது. மேலும், 7-வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், இவர்களது ஓய்வூதிய அளவு உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, எனது ராணுவ சகோதரர்கள், தங்கள் ஓய்வூதியத்தின்மீது இரட்டிப்பு பயன்களை பெற்றுள்ளனர்.

ராணுவ வீரர்களின் வாழ்க்கையை மேலும் சிறப்பாக்குவதற்கு இதுபோன்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேசிய போர் அருங்காட்சியப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இதன்மூலம் எதிர்கால சந்ததியினர் நமது வீரர்களின் வீரத்தையும், தீரத்தையும் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

நண்பர்களே,

நாளைய தினம் அதாவது அக்டோபர் 22-ஆம் தேதி, ஜான்ஸி படைப்பிரிவு தனது 75-வது ஆண்டை நிறைவு செய்கிறது. நமது ஆயுதப் படைகளில் சமஅளவு பங்கேற்புக்காக பெண்களையும் சேர்த்துக் கொள்வது என்ற நடைமுறைக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அடித்தளம் அமைத்தார். நாட்டின் முதலாவது அனைத்து மகளிர் படைப்பிரிவு, இந்தியாவின் வளமான பாரம்பரியத்தின்மீது சுபாஷ் பாபுவுக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை காரணமாக உருவானது. அனைத்துவிதமான எதிர்ப்புகளையும் மீறி, பெண் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றார்.

75 ஆண்டுகளுக்கு முன், நேதாஜி அவர்கள் தொடங்கிய இந்தப் பணியை, அதன் உண்மையான உணர்வுடன் இந்த அரசு முன்னெடுத்துச் செல்கிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி செங்கோட்டையிலிருந்து நான் ஒரு அறிவிப்பை வெளியிட்டேன். ராணுவப் படைகளில் குறுகியகால அதிகாரி பதவியைப் பெற்ற பெண்களுக்கு, நிரந்தர அதிகாரிகள் பதவி, ஆண் அதிகாரிகளைப் போன்று வெளிப்படையான தேர்வு முறையின் மூலம் மேற்கொள்ளப்படும் என்பதுவே அந்த அறிவிப்பு.

நண்பர்களே,

கடந்த நான்கு ஆண்டுகளாக அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளின் விரிவாக்கமே இது. 2016-மார்ச் மாதம் இந்திய கடற்படையில் பெண்களை பைலட் நிலை அதிகாரிகளாக சேர்த்துக் கொள்ளும் முடிவை அரசு எடுத்தது. சில தினங்களுக்கு முன், இந்திய கடற்படையின் வீரமிக்க ஆறு பெண் அதிகாரிகள் கடலை வெற்றிகரமாக வலம் வந்துள்ளனர். இதன்மூலம் மகளிர் ஆற்றலை உலகுக்கு அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், இந்த ஆட்சிக் காலத்தின்போதுதான் இந்தியாவின் முதலாவது பெண் போர் விமானி உருவானார்.

சுதந்திரம் பெற்ற பிறகு முதல்முறையாக இந்தியாவின் ஆயுதப் படைகளை பராமரித்து வலுப்படுத்தும் பொறுப்பு ஒரு பெண் பாதுகாப்பு அமைச்சரிடம், திருமதி நிர்மலா சீதாராமனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

நமது ஆயுதப்படைகளின் அர்ப்பணிப்பு, திறன் மற்றும் உங்களது ஒத்துழைப்பு காரணமாக நாடு முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது. மேலும், மேம்பாடு இலக்குகளை விரைவாக அடையும் பாதையில் அனைத்து திறனுடனும் விரைவாக முன்னேறி வருகிறது.

இந்த முக்கியமான நிகழ்ச்சியின்போது, 125 கோடி இந்தியர்களாகிய உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். நமது ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் தன்னம்பிக்கைப் பயணம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆசிர்வாதத்துடன் முன்னேறட்டும்.

என்னுடன் உரத்த குரலில் சொல்லுங்கள் –

பாரத அன்னைக்கு வெற்றி உண்டாகட்டும்

பாரத அன்னைக்கு வெற்றி உண்டாகட்டும்

பாரத அன்னைக்கு வெற்றி உண்டாகட்டும்

வந்தே மாதரம்

வந்தே மாதரம்

வந்தே மாதரம்

******