Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

28.10.2018 அன்று 49-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை


 

எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். வருகிற அக்டோபர் 31 அன்று நமது பேரன்பிற்குரிய சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள் ஆகும்.  இந்த ஆண்டும் நாட்டிலுள்ள இளைஞர்கள், ‘ஒற்றுமை ஓட்டம்’ நிகழ்ச்சியில் பங்கேற்க ஆயத்தமாக உள்ளனர்.  தற்போது பருவநிலை இதமாக உள்ளது.  எனவே ஒற்றுமை ஓட்டத்தில் இயன்ற அளவுக்கு பெருமளவிலானோர் பங்கேற்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.  நாடு சுதந்திரம் அடைவதற்கு சுமார் ஆறு மாதங்கள் முன்பாக, 1947 ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று உலக பிரசித்திப் பெற்ற சர்வதேச பத்திரிகையான ‘டைம்’, அதன் முதல் பக்கத்தில் சர்தார் பட்டேலின் புகைப்படத்துடன் வெளியானது. அந்த நாளிதழின் தலைப்புச் செய்தியில், இந்தியாவின் வரைபடத்தையும் வெளியிட்டிருந்தனர்; ஆனால், அந்த வரைபடம் தற்போது உள்ளது போன்றதாக இல்லை. அந்த வரைபடத்தில் இந்தியா துண்டுதுண்டாக காட்சியளித்தது. 550-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் அடங்கியதாக அது இருந்தது.  ஆங்கிலேயர்கள் இந்தியாவின் மீது அக்கறையின்றி காணப்பட்டனர்; அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது, இந்தியா பல்வேறு துண்டுகளாக உடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தனர்.  பிரிவினை, வன்முறை, உணவு பற்றாக்குறை, விலைவாசி உயர்வு மற்றும் அதிகார அரசியல் போன்ற பல்வேறு அபாயங்களை இந்தியா எதிர்நோக்கியுள்ளதாக டைம் பத்திரிகை கருத்து தெரிவித்திருந்தது.

அத்துடன், நாட்டை ஒருங்கிணைக்கவும், மக்கள் மனதில் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்தவும் சர்தார் வல்லபாய் பட்டேலால்தான் முடியும் என்றும் அந்த பத்திரிகை குறிப்பிட்டிருந்தது.  இந்தியாவின் இரும்பு மனிதரை பற்றிய வாழ்க்கை வரலாற்றின் மறுபக்கத்தையும் அந்த கட்டுரை எடுத்துரைப்பதாக இருந்தது.  1920 ஆம் ஆண்டு வாக்கில் அகமதாபாதில் வெள்ளம் ஏற்பட்ட போது, நிவாரண நடவடிக்கைகளை அவர் கையாண்ட விதத்தையும், பர்தோலி சத்தியாகிரகத்தை அவர் நடத்திச் சென்ற விதமும் அந்த கட்டுரையில் இடம்பெற்றது.  அந்த அளவிற்கு விவசாயிகள், தொழிலாளர்கள் முதல் தொழில் அதிபர்கள் வரை அவர் மீது முழு நம்பிக்கை வைக்கும் அளவிற்கு அவரது நேர்மையும், உறுதிப்பாடும் இருந்தது.  ஒற்றை நூலைக் கொண்டு இயங்கும் அச்சின் மூலம் போர்வையை நெசவு செய்வது போல, நாட்டை ஒருங்கிணைக்க சர்தார் பட்டேல் ஒவ்வொரு பிரச்சினையாக கையில் எடுத்து தீர்வுகண்டார்.  நாட்டில் இருந்த அனைத்து சமஸ்தானங்களும் ஒன்றுபட்ட இந்தியாவுடன் இணைவதை அவர் உறுதிசெய்தார். ஜூனாகத், ஹைதராபாத், திருவாங்கூர் சமஸ்தானங்களாக இருந்தாலும் சரி, ராஜஸ்தானில் இருந்த சமஸ்தானங்களாக இருந்தாலும் சரி, தற்போது நாம் காணும் ஒருங்கிணைந்த    இந்தியாவை காண முடிகிறது என்றால், அதற்கு சர்தார் பட்டேலின் மதிநுட்பமும், தொலைநோக்குப் பார்வையுமே முக்கிய காரணமாகும். இந்திய தாயாக நாம் கருதும் நம் தேசத்தின் மீது நாம் கொண்டுள்ள ஒற்றுமை உணர்வு, தானாகவே சர்தார் வல்லபாய் பட்டேலை நினைவுகூறச்செய்யும்.  இந்த ஆண்டு அக்டோபர் 31 அன்று மேலும் ஒரு சிறப்பு சேரவுள்ளது.  அன்றைய தினம் நாட்டின் ஒற்றுமை சிலையை நாம் அர்ப்பணிப்பதே சர்தார் பட்டேலுக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாக அமையும்.  குஜராத்தின் நர்மதா ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையைப் போன்று இரண்டு மடங்கு உயரம் கொண்டதாகும்.  இதுவே உலகின் மிக உயர்ந்த விண்ணை முட்டும் சிலையாகத் திகழும். உலகின் மிக உயரமான சிலை இந்தியாவில் அமைக்கப்பட்டிருப்பதை காணும்போது, ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் அடைவார். நமது மண்ணின் உண்மையான மைந்தரான சர்தார் பட்டேல், நமது வான்வெளியையும் அலங்கரிப்பார்.  இந்திய தாயை தலைநிமிரச் செய்துள்ள இந்த சிலை ஒவ்வொரு இந்தியரையும் பெருமிதம் அடையச் செய்யும் என நான் நம்புகிறேன்.  ஏனெனில், ஒற்றுமை சிலையை காண வேண்டும் என்ற விருப்பம் ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் தோன்றுவது இயற்கையானது.  நாடு முழுவதும் உள்ள மக்கள் காண விரும்பும் தலமாக இந்த சிலை அமையும் என்பதில் நான் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளேன்.

எனதருமை சகோதர சகோதரிகளே, நாம் அனைவரும் நேற்று “காலாட்படை தினத்தை” கொண்டாடினோம். இந்தியாவின் பாதுகாப்புப் படைகளில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவருக்கும் நான் தலைவணங்குகிறேன்.  நமது வீரர்களின் குடும்பத்தினரையும் நான் வணங்குகிறேன்.  இந்நாளை எதற்காக காலாட்படை தினமாக நாம் கொண்டாடுகிறோம் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்திய படைகள் இந்நாளில்தான் காஷ்மீரில் காலடி எடுத்துவைத்து, அந்தப் பள்ளத்தாக்கை ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்காமல் காப்பாற்றினர்.  இந்த சம்பவமும் சர்தார் வல்லபாய் பட்டேலுடன்  நேரடி தொடர்புடையதாகும். நமது மதிப்பிற்குரிய ராணுவ அதிகாரி ஷாம் மானெக்ஷாவின் பழைய பேட்டி ஒன்றை நான் படித்தேன். அதில், ஃபீல்டு மார்ஷல் ஷாம் மானெக்ஷா, அவர் கர்னலாக இருந்த காலத்தை நினைவுகூர்ந்துள்ளார். அந்த காலத்தில்தான் காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கியது.  அப்போது நடைபெற்ற கூட்டம் ஒன்றில், காஷ்மீருக்கு படைகளை அனுப்புவதில் ஏற்பட்ட தாமதத்திற்காக சர்தார் வல்லபாய் பட்டேல் எவ்வாறு கடிந்து கொண்டார் என்பதை ஃபீல்டு மார்ஷல் மானெக்ஷா குறிப்பிட்டுள்ளார். படைகளை அனுப்புவதில் எவ்வித தாமதமும் ஏற்படக்கூடாது என்றும் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காண வேண்டும் என்றும் சர்தார் பட்டேல் தமக்கு தெளிவான அறிவுரை வழங்கியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  இதையடுத்து, நமது படைகள் காஷ்மீருக்கு பறந்து சென்றன என்றால், நமது ராணுவம் எவ்வாறு வெற்றிகரமாக பணியாற்றியது என்பதை நாம் அறிய முடிகிறது.  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினமும் அக்டோபர் 31 அன்றுதான், வருகிறது.  இந்திரா காந்திக்கு நமது மரியாதைக்குரிய வணக்கத்தை செலுத்துவோம்.

எனதருமை நாட்டு மக்களே, விளையாட்டை விரும்பாதவர்கள் யார் இருப்பார்கள்..? விளையாட்டு உலகில், மனநிலை, வலிமை, திறன், உடல் வலிமை ஆகிய ஒவ்வொன்றும் மிகவும் முக்கியமானவையாகும்.  விளையாட்டு வீரர்களின் தைரியத்தை பரிசோதிப்பதற்கு இவை அவசியம்.  இந்த நான்கு அம்சங்களும்தான் நாட்டிற்கும் அடித்தளமாக அமைந்துள்ளன.  நம் நாட்டு இளைஞர்களிடம் இந்த தகுதிகள் இருந்தால், நம் நாடு பொருளாதாரம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் மட்டும் வளர்ச்சி அடைவதோடு இல்லாமல், விளையாட்டுத் துறையிலும் பெருமையை தேடித்தரும்.  அண்மையில் நடைபெற்ற இரண்டு சந்திப்புகள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியானவையாக அமைந்தன.  முதலாவது சந்திப்பு, ஜகார்த்தாவில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டுக்கான மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட நமது மாற்றுத் திறனாளி தடகள வீரர்களுடனானதாகும்.  இவர்கள் 72 பதக்கங்களை வென்று இதற்கு முன் கண்டிராத புதிய சாதனைகளைப் படைத்து நாட்டிற்கு பெருமையைத் தேடித்தந்தவர்களாவர். திறமைமிக்க இந்த தடகள வீரர்கள் அனைவரையும் தனித்தனியாக சந்திக்கும் நல்வாய்ப்பும் எனக்கு கிடைத்தது.  நான் அவர்களை பாராட்டினேன், தடைக்கற்களை தகர்த்தெறிந்து வெற்றியை பெறுவதில் அவர்கள்  காட்டிய மனஉறுதி நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கும்.  அதேபோன்று அர்ஜென்டினாவில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டுக்கான இளையோர் கோடைகால ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றவர்களை சந்திக்கும் அரிய வாய்ப்பும் எனக்கு கிடைத்தது.  2018 இளையோர் கோடைகால ஒலிம்பிக்கில், நமது இளைஞர்களின் செயல்பாடு இதுவரை கண்டிராத அளவிற்கு சிறப்பானதாக இருந்ததை நீங்கள் அறிவீர்கள்.  இந்தப் போட்டியில் நமக்கு 13 பதக்கங்கள் கிடைத்ததுடன், கலப்பு இரட்டையர் பிரிவிலும், மூன்று பதக்கங்கள் கிடைத்தது.  அண்மையில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இந்திய வீரர்களின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்ததை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.  நான் “மிகச்சிறந்த அல்லது இதற்கு முன் கண்டிராத சாதனை” என்ற வார்த்தையை அடிக்கடி சுட்டிக்காட்டியிருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.  இதுவே ஒவ்வொரு நாளும் இந்தியாவின் விளையாட்டுத் துறை அடைந்து வரும் முன்னேற்றத்தை பிரதிபலிக்கும் யதார்த்த நிலையாகும்.  விளையாட்டுத் துறை மட்டுமின்றி, எண்ணற்றத் துறைகளில் இந்தியா புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.  உதாரணத்திற்கு குறிப்பிட வேண்டுமென்றால், 2018 மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நாராயண் தாக்கூர்  என்ற மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரரை நான் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.  அவர், பிறவியிலேயே ஒரு மாற்றுத் திறனாளி. அவருக்கு எட்டு வயதே ஆகும் போது தந்தையை இழந்துவிட்டார்.  அதன் பிறகு எட்டு ஆண்டுகள் ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்துள்ளார்.  பின்னர் அந்த இல்லத்திலிருந்தும் வெளியேறிய அவர், தில்லி போக்குவரத்துக் கழக பேருந்துகளை சுத்தம் செய்தும், சாலையோர உணவகங்களில் பணியாற்றியும் வாழ்க்கையை நடத்தியுள்ளார். அதே நாராயண்தான், சர்வதேச போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பதக்கம் வென்றுள்ளார். அத்தோடு நின்றுவிடாமல், இந்திய விளையாட்டுத் துறை எந்த அளவிற்கு மிக வேகமாக சிறப்பிடம் பெற்று வருகிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.  மேலும், ஜூடோ போட்டியில் இந்தியா இதுவரை ஜூனியர் அல்லது சீனியர் பிரிவில் பதக்கம் வென்றதில்லை.  ஆனால், இளையோர் ஒலிம்பிக்கில் இந்தியாவின் தபாபி தேவி வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.  16 வயதே ஆகும் தபாபி தேவி, மணிப்பூரில் உள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவராவார்.  அவரது தந்தை ஒரு சாதாரண தொழிலாளி, தாயார் மீன் வியாபாரம் செய்கிறார்.  உணவு பொருட்களை வாங்க கூட பணம் இல்லாத காலகட்டம் அது.  இதுபோன்ற வறுமையான நிலையிலும், அவரது ஆர்வமும், அர்ப்பணிப்பும் சற்றும் குறையவில்லை.  நாட்டிற்காக பதக்கம் வென்று அவர் வரலாறு படைத்துள்ளார்.  இதுபோன்ற சம்பவங்கள் என்னற்றவை உள்ளன.  ஒவ்வொருவரின் வாழ்க்கையும், ஒவ்வொரு மனிதரும் ஊக்கத்தின் பிறப்பிடமாக திகழ்கின்றனர்.  இளம் விளையாட்டு வீரர்களின் பொறுமையும், அர்ப்பணிப்பு உணர்வும் புதிய இந்தியாவின் அடையாளமாகத் திகழ்கின்றன.

எனதருமை நாட்டு மக்களே, 2017 ஆம் ஆண்டில், 17 வயதிற்குட்பட்டோருக்கான ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியை நாம் வெற்றிகரமாக நடத்தி முடித்தை நீங்கள் அறிவீர்கள்.  இந்தப் போட்டி மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது என ஒட்டுமொத்த உலகமும் பாராட்டியது.    ஃபிஃபா 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டி, மைதானத்தில் நேரில் கண்டுகளித்தவர்களின் எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளது.  12 லட்சத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு ஆர்வலர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள விளையாட்டு அரங்குகளில் கால்பந்து போட்டிகளை கண்டுகளித்தது, இளம் வீரர்களுக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது.  இந்த ஆண்டும், 2018 உலகக் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டிகளை புவனேஷ்வரில் நடத்தும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது.  இந்த உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் நவம்பர் 28 தொடங்கி, டிசம்பர் 16-ல் நிறைவடைகிறது. ஒவ்வொரு இந்தியரும், அவர் எந்த விளையாட்டை விளையாடினாலும், அல்லது எந்த விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக இருந்தாலும், நிச்சயமாக ஹாக்கிப் போட்டியில் ஆர்வம் கொண்டவராக இருப்பார். ஹாக்கி விளையாட்டில், இந்தியா பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சாதனைகளை படைத்துள்ளது.   பல்வேறு போட்டிகளில் இந்தியா தங்கப்பதக்கங்களை வென்றிருப்பதுடன், உலக சாம்பியன் பட்டத்தையும் ஒருமுறை வென்றுள்ளது.  ஏராளமான சிறந்த ஹாக்கி வீரர்களையும் இந்தியா உருவாக்கியுள்ளது.  ஹாக்கி விளையாட்டு பற்றி எப்போது மேற்கோள் காட்டினாலும், நமது சாதனையாளர்களைப் பற்றி குறிப்பிடாமல், அதனை நிறைவு செய்ய முடியாது.  ஹாக்கியின் பிதாமகனாகக் கருதப்படும் மேஜர் தியான்சந்தின் பெயர் உலகம் முழுவதும் பிரசித்திப் பெற்றதாகும். மேலும், பல்பீர் சிங் சீனியர், லெஸ்லி கிளாடியஸ் முகமது ஷாகித், உத்தம்சிங் முதல், தன்ராஜ்பிள்ளை வரை இந்திய ஹாக்கி நீண்ட நெடிய பாரம்பரியத்தைக் கொண்டதாகும்.    தற்போதுகூட, இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள், தங்களது கடின உழைப்பு மற்றும் இலக்கை நோக்கிய கவனத்தால், இளைய தலைமுறையினருக்கு ஊக்கமளிப்பவர்களாகத் திகழ்கின்றனர்.

மிக அருமையான போட்டிகளை காண விரும்பும் விளையாட்டு ஆர்வலர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.  புவனேஷ்வருக்கு சென்று, அங்கு விளையாட உள்ள இந்திய அணியினரையும் ஒவ்வொரு வீரரையும் உற்சாகப்படுத்துங்கள்.  ஒடிஷா மாநிலம் மிகச்சிறந்த வரலாற்றுப் பின்னணியைக் கொண்டதோடு மட்டுமின்றி, கலாச்சார பாரம்பரியமும் மிகுந்த மாநிலமாகும்.  அந்த மாநில மக்கள் அனைவரும் மிகவும் பாசமானவர்கள்.   விளையாட்டு வீரர்கள் ஒடிஷாவைக் காண இது ஒரு அரிய வாய்ப்பாகும்.  அங்குள்ள உலகப் புகழ்பெற்ற புண்ணிய தலங்களான கொனார்க் சூரிய கோவில், பூரி ஜெகன்னாதர் ஆலயம் மற்றும் சில்கா ஏரி போன்றவற்றுடன் விளையாட்டுப் போட்டிகளையும் கண்டு மகிழலாம்.  இந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஆடவர் அணிக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், 125 கோடி இந்திய மக்களின் ஆதரவு அவர்களுக்கு உண்டு என்பதையும் உறுதிபடக் கூறிக்கொள்கிறேன்.  உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து இந்தப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணியினருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  

எனதருமை நாட்டு மக்களே, சமூகப் பணியாற்ற முன்வருவோரின் மனோபாவம் உண்மையிலேயே, நாட்டு மக்கள் அனைவருக்கும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிப்பதாக உள்ளது.  “சேவையே சிறந்தது” என்பது பன்நெடுங்காலமாக இந்தியாவின் பாரம்பரியமாக உள்ளது.  அத்துடன், ஒவ்வொரு துறையிலும் இதுபோன்ற பாரம்பரியத்தை தற்போதும் நாம் உணர்கிறோம்.  ஆனால், தற்போதைய புதிய சகாப்தத்தில், தத்தமது கனவுகளை நிறைவேற்றக் கூடியவர்களாக, புதிய தலைமுறையினர், புதுமையான வழிமுறைகளுடன் புத்தெழுச்சியும், உற்சாகமும் உடையவர்களாக உள்ளனர். “சமுதாயத்திற்காக நான்” என்ற பெயரிலான புதிய இணையதள தகவு ஒன்றின் தொடக்கவிழாவில் நான் கலந்து கொண்டேன்.  எனது அரசு என்ற திட்டமும், நாட்டின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் தொழில்துறையினரும், தொழிலாளர்கள் சமுதாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஊக்கப்படுத்தும் நோக்கிலும், இந்த துறையில் அவர்கள் பணியாற்றுவதற்குமான வாய்ப்புகளை வழங்குவதற்கும் இந்த தகவை தொடங்கியுள்ளனர்.  அவர்களது அர்ப்பணிப்பு உணர்வும், வீரியமும் ஒவ்வொரு இந்தியரையும் பெருமிதம் கொள்ளச் செய்யும்.  நான் இல்லை – நாங்கள், என்ற மாற்றம் தனிநபர்களிடமிருந்து சமுதாயத்தை மனதிற்கொண்டு சமுதாய பணியாற்றுவதற்கான புதிய சூழலை தகவல் தொழில்நுட்பத் துறையினரிடையே உருவாக்கியுள்ளது.  சிலர் வயது முதிர்ந்தவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கின்றனர்; சிலர் தூய்மைப் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர்; வேறு சிலர் விவசாயிகளுக்கு உதவுகின்றனர். ஆனால், இவர்கள் யாருடைய நடவடிக்கையின் பின்னால், எந்தவொரு உள்நோக்கமும் இல்லை, அவர்களது உறுதிப்பாடே உந்து சக்தியாக அமைந்துள்ளது.  ஆனால் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு கூடைப்பந்து விளையாட கற்றுக் கொள்ளும் ஒருவர், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் சக்கர நாற்காலி கூடைப்பந்து அணிக்கும், மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கும் உதவ முடியும்.  இந்த உணர்வும், அர்ப்பணிப்பும் ஒரு பணி முறை செயல்பாடாகும்.  இது ஒவ்வொரு இந்தியரையும் பெருமிதம் கொள்ளச் செய்யும்.  “நான் அல்ல – நாங்கள்” என்பது நிச்சயமாக நம் அனைவரையும் ஈர்ப்பதாக அமையும்.

எனதருமை சகோதர சகோதரிகளே, இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சிக்கு நீங்கள் தெரிவித்த ஆலோசனைகளை பார்த்த போது, புதுச்சேரியைச் சேர்ந்த திரு. மனிஷ் மகபத்ரா என்பவரது கருத்து மிகவும் உற்சாகம் அளிப்பதாக இருந்தது. பழங்குடியின மக்களும், அவர்களது பாரம்பரியம் மற்றும் சடங்குகளும், எவ்வாறு இயற்கைச் சூழலுக்கு ஏற்ற உதாரணங்களாக திகழ்கின்றன என்பதை மனதின் குரல் நிகழ்ச்சியில் ஒரு தலைப்பாக எடுத்துக் கொள்ளுமாறு “எனது அரசு” செயலி மூலம் தெரிவித்துள்ளார். பழங்குடியினரின் பாரம்பரியத்தை நமது வாழ்க்கையில் எவ்வாறு பின்பற்றி நீடித்த வளர்ச்சியை அடைவது மற்றும் அதுபோன்ற பாரம்பரியங்களிலிருந்து எதை அறிந்து கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  மனிஷ், மனதின் குரல் நிகழ்ச்சியின் நேயர்களிடையே இந்தப் பிரச்சினையை முன்வைத்ததற்காக நான் உங்களை பாராட்டுகிறேன். ஒட்டுமொத்த உலகமும் குறிப்பாக மேற்கத்திய நாடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி விவாதித்து, சமச்சீரான வாழ்க்கை முறையை பின்பற்றுவதற்கான புதிய வழிகளை ஆராய்ந்து வரும் வேளையில், நமது கண்ணியமான கடந்த காலத்தையும், பண்டைக்கால பாரம்பரியங்களையும் அறிந்து கொள்ள நமக்கு ஊக்கமளிப்பதாக இது அமையும்.  நம் நாடும் இதே பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது.  ஆனால், அதற்கு தீர்வுகாண வேண்டுமெனில் நாம் நமது கடந்த கால பொற்காலத்தை நினைவுகூறுவதுடன், நமது பாரம்பரிய செழுமைகளை, குறிப்பாக நமது பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்வது அவசியம்.  இயற்கையுடன் நெருங்கிய ஒத்துழைப்பு கொண்டு இசைந்துவாழ்வது, நமது பழங்குடியின மக்களின் வாழ்வில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும்.  நமது பழங்குடியின சகோதர சகோதரிகள், மரங்கள், தாவரங்கள் மற்றும் மலர்களை கடவுளாகக் கருதி வணங்குகின்றனர்.   மத்திய இந்தியாவில், குறிப்பாக மத்தியப் பிரதேசம் மற்றும் சத்திஷ்கரில் வசிக்கும் ‘பில்’ பழங்குடியின மக்கள், பீப்பால் மற்றும் அர்ஜுன் மரங்களை  வழிபடுகின்றனர்.  ராஜஸ்தானின் பாலைவனப் பகுதியில் வசிக்கும் பிஷ்னோய் வகுப்பினர், சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதற்கு நமக்கு வழிகாட்டுகின்றனர்.  குறிப்பாக மரங்களை பாதுகாக்கும் விஷயத்தில், ஒரு மரத்திற்கு பாதிப்பு ஏற்படுவதைவிட, தங்களது உயிரை கொடுக்கக் கூட அவர்கள் தயாராக உள்ளனர்.  அருணாச்சலப் பிரதேசத்தின் மிஷ்மி பழங்குடியின மக்கள், புலிகளுடன் நட்புறவோடு திகழ்கின்றனர்.  அவர்கள் புலிகளை தங்களது சகோதர சகோதரிகளாகவே கருதுகின்றனர்.  நாகாலாந்திலும் புலிகள் வனப்பாதுகாவல்களாக திகழ்கின்றன.  மகாராஷ்டிராவின் வார்லி இன மக்கள், புலிகளை தங்களது விருந்தினர்களாக கருதுகின்றனர்.  புலிகள் தங்களுடன் இருப்பது, தங்களது வளமையை பிரதிபலிப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.  மத்திய இந்தியாவின் கோல் இனத்தவர், புலிகள் தங்களது வாழ்க்கையுடன் நேரடி தொடர்பு கொண்டவையாகக் கருதுவதுடன், புலிகளுக்கு உணவு கிடைக்காவிட்டால், ஒட்டுமொத்த கிராமமும் பட்டினிக்கு ஆளாக நேரிடும் என உணர்கின்றனர்.  மத்திய இந்தியாவின் கோண்டு இன மக்களும் மீன்கள் இனப்பெருக்க காலத்தில், கைத்தான் நதியில் மீன் பிடிப்பதையே நிறுத்தி விடுகின்றனர்.  இந்தப் பகுதியை மீன்களின் சரணாலயமாகக் கருதும் அவர்கள், தங்களிடையே நிலவும் இந்த நம்பிக்கை காரணமாக சத்துள்ள மீன்கள் பெருமளவில் கிடைக்கும் என்றும் நினைக்கின்றனர்.  அத்துடன், பழங்குடியின மக்கள், வலுவான, சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கைப் பொருட்களைக் கொண்டே தங்களது வசிப்பிடங்களையும் அமைத்துக் கொள்கின்றனர்.  தென்னிந்தியாவின் நீலகிரி மலைத் தொடரில் உள்ள சில தனிமைப் பகுதிகளில் வசிக்கும் தோடர் இன மக்கள், அப்பகுதியில் கிடைக்கும் பொருட்களை மட்டும் கொண்டுதான்          தங்களது குடியிருப்புகளை அமைத்துக் கொள்கின்றனர்.

எனதருமை சகோதர சகோதரிகளே, பழங்குடியின மக்கள் மிகவும் அமைதியான, இணக்கத்துடன் வாழ்வதில் நம்பிக்கைக் கொண்டவர்கள் என்பதற்கு இவையே சான்றாகும்.  யாராவது தங்களது இயற்கை வளங்களுக்கு பாதிப்போ அல்லது சேதமோ ஏற்படுத்த முயன்றால், தங்களது உரிமைக்காக போராடவும் தயங்க மாட்டார்கள் என்பதையும் இது உணர்த்துகிறது.  நமது சுதந்திரப் போராட்ட வீரர்களில் முன்னணி வீரர்களாக திகழ்ந்த பலர், பழங்குடி சமுதாயதைச் சேர்ந்தவர்கள் என்பதில் வியப்பேதும் இல்லை.  தங்களது வனப்பகுதியை பாதுகாப்பதற்காக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கடுமையாக போரிட்ட பகவான் பிர்ஸாமுண்டாவை யாரும் மறக்க முடியாது.  நான் இதுவரையிலும் குறிப்பிட்டவை தவிர, இயற்கையுடன் எவ்வாறு ஒத்துவாழ்வது என்பது பற்றி நமக்கு போதித்த பழங்குடியின சமுதாயங்கள் ஏராளமானவற்றை பட்டியலிட முடியும்.  நாட்டில் தற்போதுள்ள வனப்பகுதிகள், தொடர்ந்து வனப்பகுதிகளாகவே இருக்கச் செய்வதற்காக நாம் நமது பழங்குடியின மக்களுக்கு பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.  அவர்களுக்கு நமது நன்றி உணர்வை வெளிப்படுத்த அனைவரும் முன்வர வேண்டும்.

எனதருமை நாட்டு மக்களே, “மனதின் குரல்” நிகழ்ச்சியில் சமுதாயத்திற்காக அளப்பரிய பங்காற்றிய தனிநபர்கள் மற்றும் அமைப்புகளைப் பற்றி நாம் குறிப்பிட்டோம்.  ஆனால், இந்தப் பணிகள் எல்லாம் போதாது, எனினும், சமுதாயத்திற்காக பாடுபடுவதற்கான புதிய வழியை காட்டுவதற்கு, நமது சிந்தனையில் மிகவும் ஆழமான உணர்வுகளை இவை தூண்டியுள்ளன.  சில தினங்களுக்கு முன், பஞ்சாபை சேர்ந்த குர்பச்சன் சிங் என்ற விவசாய சகோதரரை பற்றி படித்தேன்.  கடுமையாக உழைக்கக் கூடிய அந்த விவசாய சகோதரர் குர்பச்சன் சிங்கின் மகனின் திருமணம் நடைபெறவுள்ளது.  இந்த திருமணத்தை மிகவும் எளிமையான முறையில் நடத்த வேண்டும் என மணப்பெண்ணின்    பெற்றோரிடம், குர்பச்சன் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.  திருமண வரவேற்பு அல்லது வேறு எந்தவொரு விஷயத்திற்காகவும் பெரும் தொகையை செலவு செய்யத் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.  இதனை மிகமிக சாதாரண ஒரு வைபகமாகவே கருத வேண்டும் என்று கூறிய அவர், திடீரென ஒரு நிபந்தனையை விதித்துள்ளார்.  இதுபோன்ற நிபந்தனைகள் விதித்தால், பெண் வீட்டார் நிறைவேற்ற முடியாத அளவிற்கு கடுமையான நிபந்தனையாக அது இருக்கும் என்பதே பொதுவான கருத்தாக இருக்கும்.  ஆனால், குர்பச்சன் சிங் விதித்த நிபந்தனையை கேட்டால், நீங்கள் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள். சாதாரண விவசாயியான குர்பச்சன் சிங், பெண்ணின் தந்தையிடம் விதித்த நிபந்தனை, நமது சமுதாயத்தின் உண்மையான வலிமையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.  பெண் வீட்டார், அவர்களது விளை நிலங்களில் வைக்கோல் மற்றும் வேளாண் கழிவுகளை எரிக்க மாட்டோம் என உறுதியளிக்க வேண்டும் என்பதே அவர் விதித்த நிபந்தனையாகும்.   இந்தக் கருத்தின் சமுதாய வலிமையை நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்க வேண்டும். குர்பச்சன் சிங் தெரிவித்த கருத்து மிகவும் சாதாரணமானதாக தோன்றலாம்; ஆனால், அவரது குணநலன் எவ்வளவு உயர்ந்தவை என்பதை இது எடுத்துரைக்கிறது.  நமது சமுதாயத்தில் உள்ள ஏராளமான குடும்பங்கள் அவர்களது தனிப்பட்ட பிரச்சினைகளை ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பயனளிக்கும் வகையில் எவ்வாறு தீர்வுகாண்கிறார்கள் என்பதை இதன் மூலம் உணரலாம்.  திருவாளர் குர்பச்சன் சிங்கின் குடும்பத்தினர் அதுபோன்றதொரு உதாரணத்தை நமக்கு எடுத்துக்காட்டியுள்ளனர்.  பஞ்சாபின் நாபா அருகே உள்ள கல்லர்மஜ்ரா என்ற கிராமத்தைப் பற்றியும் நான் படித்தேன்.  வைக்கோலை எரிப்பதற்கு பதிலாக, அவற்றை மண்ணுடன் சேர்த்து உழவு செய்யும் புதிய தொழில்நுட்பத்தை பின்பற்றிய       விவசாயிகளால் கல்லர்மஜ்ரா கிராமம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குர்பச்சன் சிங்கிற்கு எனது பாராட்டுகள்! கல்லர்மஜ்ரா கிராம மக்களுக்கும், தத்தமது சுற்றுப்புறங்களில் மாசு ஏற்படாத வகையில் சிறப்பாக பராமரிக்கும் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.  நீங்கள் அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கொண்ட இந்திய பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் உண்மையான வழித்தோன்றல்களாகத் திகழ்ந்து வருகிறீர்கள். சிறு துளி தண்ணீர்  சங்கமிப்பதால்தான், கடல் உருவாகிறது என்பதைப் போல, ஒவ்வொரு ஆக்கப்பூர்வமான செயல்பாடும், நல்ல சுற்றுப்புறத்தை உருவாக்க அவசியமாகும்.

எனதருமை நாட்டு மக்களே, நமது புராணங்களும் இதைத்தான் எடுத்துரைக்கின்றன: –

கடவுளே! மூன்று லோகங்களிலும், நீர், காற்று, நிலம், நெருப்பு, சுவாசம், மருந்து, தாவரங்கள், தோட்டங்கள், ஆழ்மனது என ஒட்டுமொத்த  படைப்புகளிலும் எங்களைச் சுற்றி அமைதி நிலவ வேண்டும். எனக்குள்ளும், உங்களுக்குள்ளும் உள்ள ஒவ்வொரு ஆன்மா, ஒவ்வொரு இதயம் மற்றும் இந்த பேரண்டம் எங்கிலும் அமைதி நிலவ வேண்டும். ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:. 

உலக அமைதி பற்றி எங்கு பேச்சு எழுந்தாலும், அங்கு இந்தியாவின் பெயரும், பங்களிப்பும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.  இந்தியாவைப் பொறுத்தவரை இந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில், நூறு ஆண்டுகளுக்கு முன்பு, நவம்பர் 11 அன்றுதான் முதல் உலகப் போர் முடிவடைந்தது. அந்தப் போர் நிறைவடைந்து நூறு ஆண்டுகள் ஆகும் நிலையில், பேரழிவுகள் மற்றும் மனித உயிரிழப்புகள் நிறைவடைந்து ஒருநூற்றாண்டு ஆகிறது என்பதை நமக்கு உணர்த்துகிறது.  இந்தியாவைப் பொறுத்தவரை முதல் உலகப் போர் மிகவும் முக்கியமானதாகும். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால், நமக்கு அந்த போருடன் நேரடித் தொடர்பு கிடையாது.  எனினும், நமது வீரர்கள் அந்தப்போரில் துணிச்சலுடன் போரிட்டு, மிக உயர்ந்த தியாகங்களைப் புரிந்துள்ளனர்.  போர் என்று வந்தால் இந்தியர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதையும் இந்திய வீரர்கள் எடுத்துரைத்துள்ளனர்.  சிரமமான பகுதிகளிலும், மோசமான பருவநிலை காலங்களிலும் நமது வீரர்கள் தங்களது துணிச்சலையும் வீரத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.  அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் ஒரே நோக்கமாக இருந்தது.  முதலாம் உலகப்போரின் போது பெருமளவிலான உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்பட்டதை இந்த உலகம் அறியும். சுமார் ஒருகோடி ராணுவ வீரர்களும் அதே அளவிற்கு அப்பாவி மக்களும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதுதான், ஒட்டுமொத்த உலகமும் அமைதியின் மகத்துவத்தை உணரச் செய்தது.  கடந்த நூறு ஆண்டுகளில் அமைதிக்கான அர்த்தம் மாறியுள்ளது.  இன்று அமைதி என்பது போர் மட்டுமல்ல, பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், சமூக மாற்றம், பொருளாதார வளர்ச்சி போன்றவற்றிற்கு தீர்வுகாண உலகளாவிய ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும் தேவைப்படுகிறது.  பரம ஏழையின் வளர்ச்சியே, அமைதிக்கான உண்மையான எடுத்துக்காட்டாக அமையும்.

எனதருமை நாட்டு மக்களே, நமது வடகிழக்கு மாநிலங்கள் சிறப்பு வாய்ந்த தனித்துவத்தை கொண்டவையாகும்.  வடகிழக்கு மாநிலங்களின் இயற்கை அழகிற்கு ஈடு இணை ஏதுமில்லை – இப்பகுதி மக்களும் மிகுந்த திறமைசாலிகள்.  தற்போது தங்களது சிறப்பான செயல்பாடுகளால் வடகிழக்கு மாநிலங்கள் பிரசித்திப் பெற்றுள்ளன.  இயற்கை வேளாண்மையில் வடகிழக்கு மண்டலம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.  நீடித்த உணவு முறையை ஊக்குவித்ததற்காக, 2018 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க எதிர்கால கொள்கைக்கான தங்க விருதை, சிக்கிம் மாநிலம் சில தினங்களுக்கு முன் பெற்றுள்ளது.  ஐநாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு இந்த விருதை வழங்கியுள்ளது.  மிகச்சிறந்த கொள்கை உருவாக்கத்திற்கான இந்த விருது ஆஸ்கார் விருதுக்கு இணையானதாகும்.  இது மட்டுமின்றி, 25 நாடுகளில் இருந்து வரப்பெற்ற பரிந்துரைகளை பின்னுக்குத் தள்ளி, சிக்கிம் இந்த விருதை வென்றுள்ளது. இதற்காக, சிக்கிம் மக்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.  

எனதருமை நாட்டு மக்களே, அக்டோபர் மாதம் முடிவடையவுள்ளது, பருவநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது.  குளிர்காலம் தொடங்கி இருப்பதுடன், பருவநிலை மாற்றத்தால், பண்டிகை காலமும் தொடங்கியுள்ளது.  தாண்டிரா, தீபாவளி, பையாதூஜ், சாத் போன்ற பண்டிகைகள் வருவதால், நவம்பர் மாதத்தை பண்டிகைகளின் மாதம் என்றே கூறலாம்.  இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும் இந்திய மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.  

நீங்கள் அனைவரும் உங்களது நலனில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.  உங்களது ஆரோக்கியத்திலும், சமூக ஈடுபாடுகளிலும் கவனம் செலுத்துங்கள். இதுபோன்ற பண்டிகைகள், புதிய உறுதி மொழிகளை ஏற்க வாய்ப்பாக அமையும் என நான் நம்புகிறேன்.  நாட்டின் முன்னேற்றத்திற்கு உங்களின் முன்னேற்றம் மிகவும் அவசியமாகும்.  நீங்கள் வளர்ச்சியடைந்தால், இந்த நாடும் வளர்ச்சியடையும். உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். மிக்க நன்றி.

*****