இந்தியா – சிங்கப்பூர் இடையே நிதி சார்ந்த தொழில்நுட்ப ஒத்துழைப்பு இணை பணிக்குழு அமைப்பது தொடர்பாக இந்த ஆண்டு ஜூன் மாதம் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பயன்கள்:
இந்தியா-சிங்கப்பூர் இடையே நிதி சார்ந்த தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்காக இருநாடுகளும் இணைந்து இணை பணிக்குழுவை அமைத்துள்ளன. இந்த ஒத்துழைப்பு நிதிச் சார்ந்த விஷயங்களில் இருநாடுகளுக்கும் பரஸ்பரம் பயனளிக்கும். பண பரிவர்த்தனையில் பாதுகாப்பு, டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை, மின்னணு பண பரிவர்த்தனைக்கு வசதியாக ரூபாய் ஒருங்கிணைப்பு, யுபிஐ துரித பண பரிவர்த்தனை தொடர்பு உள்ளிட்ட பல நிதிச் சேவைகளை இருநாடுகளும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் பெறமுடியும். ஆசிய பிராந்தியத்தில் நிதிச் சந்தைகளை ஒழுங்குப்படுத்துவதற்கும், நிதிச் சந்தை, காப்பீட்டுத் துறை பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் இந்த ஒப்பந்தம் உதவும்.