Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நேதாஜி தொடர்புடைய கோப்புகளை வெளியிடுவதில் முக்கிய மைல்கல்

நேதாஜி  தொடர்புடைய கோப்புகளை வெளியிடுவதில் முக்கிய மைல்கல்


நேதாஜி தொடர்பான ஆவணங்களை 23 ஜனவரி 2016 முதல் படிப்படியாக வெளியிடுவதற்கான முதல் கட்டமாக, பிரதமரின் முதன்மைச் செயலர் திரு நிரிபேந்திர மிஸ்ரா, நேதாஜி தொடர்பான ஆவணங்களின் முதல் தொகுப்பை தேசிய ஆவணக்காப்பகத்தின் இயக்குநர் அவர்களிடம் ஒப்படைத்தார்.

14 அக்டோபர் 2015 அன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், நேதாஜியின் குடும்பத்தினரை தனது 7 ரேஸ் கோர்ஸ் சாலை இல்லத்துக்கு மிகுந்த பெருமையுடன் வரவேற்றார். இவ்வாறு செய்யும் முதல் பிரதமர் என்பதற்கு பெருமைப்படுவதாக தெரிவித்த பிரதமர், அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதாக தெரிவித்து, அவர்களின் உணர்வுகளை மத்திய அரசும் பகிர்ந்து கொள்வதாக தெரிவித்தார்.

வரலாற்றை புரிந்து கொள்ளாதவர்கள் வரலாறு படைக்க முடியாது என்பதை உறுதியாக தெரிவித்த பிரதமர், தனது அரசு வரலாற்றை மறைக்கவோ, தடுக்கவோ முயலாது என்று தெரிவித்து, நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக உறுதியளித்தார். இதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக பிரதமர் நேதாஜி குடும்பத்தினருக்கு உறுதியளித்தார். இது குறித்து இதர நாடுகளோடும் முயற்சி மேற்கொள்வதாகவும் பிரதமர் தெரிவித்தார். நேதாஜியின் நூற்றாண்டு தொடங்கும் 23 ஜனவரி 2016 முதல், நேதாஜியின் கோப்புகள் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படத் தொடங்கும் என்று தெரிவித்தார்.

இந்த உறுதியின் அடிப்படையில், மத்திய அரசு, ரகசிய ஆவணங்களை வெளியிடுவதற்கான நடைமுறைகளின்படி, நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது.

இதன் ஒரு பகுதியாக, பிரதமர் அலுவலகத்தில் உள்ள 58 கோப்புகளை வெளியிடுவதன் முதல் பகுதியாக 33 கோப்புகள், பாதுகாப்பதற்காகவும், டிஜிட்டல் மயமாக்குவதற்காகவும், தேசிய ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத் துறைவசம் உள்ள கோப்புளும் ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்கப் படுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்திய மக்களின் நெடுநாள் கோரிக்கையான நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிடுவதில் இது ஒரு முக்கியமான மைல்கல்.