Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாடெங்கிலும் உள்ள ஆஷா, அங்கன்வாடி பணியாளர் மற்றும் பேறுகால உதவி செவிலியர் ஆகியோருடன் பிரதமர் காணொளி மூலம் கலந்துரையாடல்


நாடெங்கிலும் உள்ள ஆஷா, அங்கன்வாடி பணியாளர் மற்றும் பேறுகால உதவி செவிலியர் ஆகியோருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொளி மூலம் கலந்துரையாடல்.  சேர்ந்து உழைப்பது, புதுமையான வழிவகைகள், தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவது, மருத்துவ, ஊட்டச்சத்து சேவைகள் வழங்குதலை மேம்படுத்துவது, போஷான் அபியான் (ஊட்டச்சத்து இயக்கம்) இலக்குகளை அடைவது, ஊட்டச்சத்துக் குறைவை குறைப்பது ஆகியவற்றில் இவர்களது சேவைகளை பிரதமர் பாராட்டினார்.   

அடித்தள நிலை மருத்துவப் பணியாளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்ட பிரதமர், வலுவான, ஆரோக்கியமான நாட்டை நிர்மாணிப்பதில் இவர்களது பங்கு பணிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.  இந்த மாதம் கடைபிடிக்கப்படும் “போஷான்மா” நிகழ்ச்சியை முன்னிட்டு இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  ஊட்டச்சத்து செய்தியை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தேசிய ஊட்டச்சத்து இயக்கத்தின் முக்கிய அம்சங்களை கோடிட்டுக்காட்டிய பிரதமர், ராஜஸ்தான் ஜூன்ஜூனுவில் இருந்து தொடங்கிவைக்கப்பட்ட “போஷான் அபியான்” திட்டம் குறைந்த வளர்ச்சி, ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைவு, பிறப்பில் எடைகுறைவு ஆகியவற்றை சரிசெய்வதை இலக்காக கொண்டு செயல்படுகிறது.  இந்த இயக்கத்தில் அதிக அளவிலான பெண்களையும், குழந்தைகளையும் ஈடுபடுத்துவது அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

ஊட்டச்சத்து, தரமான மருத்துவ பராமரிப்பு சார்ந்த அம்சங்களுக்கு அரசு முக்கிய கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் கூறினார்.  நோய்த் தடுப்பு மருந்து கொடுக்கும் நடவடிக்கைகள் விரைவாக நடைபெற்று பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மிகவும் உதவியாக அமைந்துள்ளது என்றார்.

நாடெங்கிலும் உள்ள சுகாதாரப் பணியாளர்கள், திட்டப்பயனாளிகள் தங்கள் அனுபவங்களை பிரதமருடன் பகிர்ந்து கொண்டனர்.  இந்திர தனுஷ் இயக்கத்தை சிறப்பாக அமல்படுத்தியதற்காகவும், 3 லட்சத்திற்கும் கூடுதலான கருவுற்ற பெண்கள், சுமார் 85 கோடி குழந்தைகள் ஆகியோருக்கு தடுப்பு மருந்து கொடுத்ததற்காகவும் ஆஷா, அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் பேறுகால உதவி செவிலியர்கள் பணிகளை பிரதமர் வெகுவாகப் பாராட்டினார்.        

இந்த கலந்துரையாடலின் போது, பாதுகாப்பான மகப்பேறு இயக்கம் குறித்த தகவல்களை பரப்புமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார்.

நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 12 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும் பிறந்த குழந்தை பராமரிப்புத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுகிறது என்று பிரதமர் கூறினார்.  இந்தத் திட்டம் வீடுகளில் குழந்தை பராமரிப்பு என்று மறு பெயரிடப்பட்டு அதன்கீழ், ஆஷா பணியாளர்கள் குழந்தையின் முதல் 15 மாத காலத்தில் 11 முறை சென்று பார்ப்பது என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.  முன்னதாக, பிறந்த 45 தினங்களில் ஆறு முறை சென்று பார்ப்பது என்ற அளவிலேயே இது செயல்பட்டது.

நாட்டின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் இடையே உள்ள இணைப்பை பிரதமர் சுட்டிக்காட்டினார். நாட்டின் குழந்தைகள் வலுவின்றி இருந்தால், அதன் வளர்ச்சி வேகம் குறைந்து விடும் என்று அவர் கூறினார்.  பிறந்த குழந்தைக்கு முதல் ஆயிரம் நாட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றார் அவர். அந்த ஆயிரம் நாட்களில் ஊட்டச்சத்து மிகுந்த உணவு, உணவு பழக்கங்கள், ஆகியவைதான் உடல் எவ்வாறு அமையும், அது எவ்வாறு எழுத்தறிவு பெறும், அதன் மன வலு எந்த அளவு இருக்கும் என்பதெல்லாம் முடிவு செய்யப்படுவதாக பிரதமர் கூறினார்.  நாட்டின் குடிமக்கள் ஆரோக்கியமாக இருந்தால், நாட்டின் மேம்பாட்டை எவரும் நிறுத்த இயலாது. எனவே, ஆரம்ப ஆயிரம் நாட்களில் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வலுவான அமைப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, தூய்மை இந்தியா திட்டத்தில் அமைக்கப்படும் கழிவறைகளை பயன்படுத்துவது   சுமார் 3 லட்சம் பேரின் உயிரை காப்பாற்றும் திறன்மிக்கது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.  தூய்மையை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயல்படும் மக்களுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் முதல் பயனாளியும், ஆயுஷ்மான் குழந்தை என்ற பெயருடன் புகழ்பெற்ற குழந்தை காரிஷ்மா பற்றி பிரதமர் குறிப்பிட்டார்.  ஆயுஷ்மான் பாரத் திட்டம் இம்மாதம் 23 ஆம் தேதி ராஞ்சியில் தொடங்கப்பட்ட பின், அதனால் பயன்பெறவுள்ள 10 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு குழந்தை காரிஷ்மா நம்பிக்கையின் சின்னமாக திகழ்கிறார் என்றும் பிரதமர் கூறினார்.

ஆஷா பணியாளர்களுக்கு மத்திய அரசு வழக்கமாக வழங்கும் ஊக்குவிப்புகள் இரண்டு மடங்காக உயர்த்தப்படுவதாக பிரதமர் அறிவித்தார்.  மேலும் அனைத்து ஆஷா பணியாளர்கள், அவர்களது உதவியாளர்கள் பிரதமர் ஆயுள் காப்பீட்டுத் திட்டம், பிரதமர் விபத்து காப்பீட்டு திட்டம் ஆகியவற்றின் கீழ் இலவச காப்பீடுகளை பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்.  அங்கன்வாடி பணியாளர்களுக்கான மதிப்பு ஊதியத்தில் குறிப்பிடத்தக்க உயர்வையும் பிரதமர் அறிவித்தார்.  இதுவரை ரூ.3000 பெற்றவர்கள் இனி ரூ,4500 பெறுவார்கள்.  அதேபோல ரூ.2200 பெற்றவர்கள் இனி, ரூ.3500 பெறுவார்கள்.  அங்கன்வாடி உதவியாளர்களின் மதிப்பூதியமும் ரூ.1500-லிருந்து, ரூ.2250 ஆக உயர்த்தப்படுகிறது. 

*****