Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கேரளாவுக்கு பிரதமர் பயணம் மேற்கொண்டார் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வுசெய்தார்


 

வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்வதற்காக கேரளாவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டார். ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, பாதிக்கப்பட்ட சில பகுதிகளை வான்வழியாக வானிலை நிலவரத்துக்கு ஏற்ப ஆய்வுசெய்தார். வான்வழியாக பார்வையிட்டபோது, பிரதமருடன் ஆளுநர், முதலமைச்சர், மத்திய இணை அமைச்சர் திரு.கே.ஜே.அல்போன்ஸ் மற்றும் அதிகாரிகளும் உடனிருந்தனர்.

வெள்ளப்பெருக்கால் சொத்துக்கள் மற்றும் உயிரினங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் எதிர்பாராத உயிரிழப்புகளுக்கு வருத்தத்தையும், துயரத்தையும் பிரதமர் வெளிப்படுத்தினார்.

கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் மற்றும் மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபோது, வெள்ள நிலவரங்கள் குறித்து பிரதமர் ஆய்வுசெய்தார்.

ஆய்வுக்குப் பிறகு, மாநிலத்துக்கு ரூ.500 கோடி நிதியுதவியை பிரதமர் அறிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் கடந்த 12-ம் தேதி அறிவித்த ரூ.100 கோடி நிதியுதவியுடன் கூடுதலாக இந்த நிதியுதவியை பிரதமர் அறிவித்தார். மாநிலத்துக்கு உணவுதானியங்கள், மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள், மாநில அரசு கேட்டவாறு வழங்கப்படும் என்று திரு. நரேந்திர மோடி உறுதியளித்தார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-மும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள்/பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ், சேதங்களை மதிப்பீடு செய்வதற்கும், உரிய நேரத்தில் இழப்பீடு வழங்குவதற்கும் சிறப்பு முகாம்களை நடத்துமாறு காப்பீட்டு நிறுவனங்களுக்கு பிரதமர் உத்தரவிட்டார். விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காப்பீட்டுத் தொகைகளை வழங்க விரைந்து ஒப்புதல் வழங்குமாறும் உத்தரவிடப்பட்டது.

வெள்ளத்தால் சேதமடைந்த பிரதான தேசிய நெடுஞ்சாலைகளை முக்கியத்துவம் அளித்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு பிரதமர் உத்தரவிட்டார். மின்சார வழித்தடங்களை சீரமைப்பதற்கு மாநில அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு தேசிய அனல்மின் நிலையம் (NTPC) மற்றும் இந்திய மின் தொகுப்பு கழக நிறுவனம் (PGCIL) போன்ற மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது.

கடும் வெள்ளத்தால், களிமண்ணால் ஆன வீடுகளை இழந்த கிராமவாசிகளுக்கு பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் – கிராமப்புறம் திட்டத்தின்கீழ் வீடுகளை வழங்க வேண்டும். பயனாளிகள், பிரதமரின் வீட்டுவசதித் திட்டம்-கிராமப்புறம் திட்டத்தின் நிரந்தர காத்திருப்போர் பட்டியலில் எந்த நிலையில் இருந்தாலும், அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகளை வழங்க வேண்டும்.

2018-19-ம் நிதியாண்டுக்கான தொழிலாளர் பட்ஜெட்-டில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ், 5.5 கோடி நபர்களுக்கான வேலைவாய்ப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மாநில அரசு கோரிக்கை விடுக்கும் அளவுக்கு வேலைவாய்ப்புகளை கூடுதலாக வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த தோட்டப்பயிர்கள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ், சேதமடைந்த பயிர்களை மீண்டும் பயிரிடுவதற்கு விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும்.

கேரளாவின் வெள்ள நிலைமையை மத்திய அரசு தொடர்ந்தும், உன்னிப்பாகவும் கண்காணிக்கும். மோசமான சூழ்நிலையை எதிர்கொள்வதற்காக மாநில அரசுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும். வெள்ள நிலவரம் குறித்து முதலமைச்சரிடம் பிரதமர் தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார்.

பிரதமரின் உத்தரவுப்படி, மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு.கிரண் ரிஜிஜு, தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் திரு. கே.ஜே. அல்போன்ஸ் மற்றும் உயர்நிலை மத்திய குழுவினர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் கடந்த ஜூலை 21-ம் தேதி பயணம் மேற்கொண்டனர். அப்போது, வெள்ள நிலவரம் மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வுசெய்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தனர்.

மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், சுற்றுலாத் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. கே.ஜே. அல்போன்ஸ் மற்றும் மூத்த அதிகாரிகள், கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கடந்த 12-ம் தேதி பயணம் மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாக பார்வையிட்ட அவர்கள், மாநில மற்றும் மத்திய அரசு அமைப்புகள் மேற்கொண்டு வரும் தேடுதல், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து கேரள முதலமைச்சர், பிற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வுசெய்தனர். தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து முன்பணமாக ரூ.100 கோடி வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அறிவித்தார்.

மாநில அரசு கடந்த ஜூலை 21-ம் தேதி விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், இழப்புகள் குறித்து மதிப்பிடுவதற்காக பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு அமைச்சகங்களைக் கொண்ட மத்திய குழு, கடந்த 7-ம் தேதி முதல் 12-ம் தேதிவரை ஆய்வுசெய்தது.

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் 435 படகுகள் மற்றும் ஆயிரத்து 300 வீரர்களுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 57 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை மற்றும் விரைவு அதிரடிப் படையின் 5 கம்பெனிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் மாநில அரசுக்கு உதவுவதற்காக ராணுவம், விமானப் படை, கடற்படை மற்றும் கடலோர காவல் படையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஒட்டுமொத்தமாக 38 ஹெலிகாப்டர்கள் அமர்த்தப்பட்டுள்ளன. அதோடு, பொருட்களை எடுத்துச் செல்வதற்காக 20 விமானங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ராணுவம் 10 பிரிவுகளையும், பொறியியல் அதிரடிப் படையின் பயிற்சிபெற்ற 790 வீரர்களை உள்ளடக்கிய 10 குழுக்களையும் ஈடுபடுத்தியுள்ளது. 82 குழுக்களை கடற்படை வழங்கியுள்ளது. 42 குழுக்கள், 2 ஹெலிகாப்டர்கள் மற்றும் 2 கப்பல்களை கடலோர காவல் படை வழங்கியுள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவம் மற்றும் கடற்படை ஆகியவை இணைந்து கடந்த 9-ம் தேதி முதல், 6,714 பேரை மீட்டுள்ளது/வெளியேற்றியுள்ளது. 891 பேருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

எதிர்பாராத சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்வதற்காக மாநில அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்கு அதிமுக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். அனைத்து நிலைகளிலும் மாநில அரசுக்குத் தேவையான ஆதரவை மத்திய அரசு தொடர்ந்து வழங்கும்.