Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் மு.கருணாநிதி மறைவுக்கு மத்திய அமைச்சரவை இரங்கல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, சென்னை காவேரி மருத்துவமனையில் ஏழாம் தேதி காலமான தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் மு. கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது.
இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டப் பின்னர் மத்திய அமைச்சரவை இரண்டு நிமிட நேரம் மவுன அஞ்சலி செலுத்தியது.

அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானம் வருமாறு:

“சென்னை காவேரி மருத்துவமனையில் 7.8.2018- அன்று காலமான தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் மு.கருணாநிதியின் மறைவுக்கு அமைச்சரவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அவரது மறைவால், கலைஞர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட மூத்த புகழ் பெற்ற தலைவரை நாடு இழந்து விட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளைக் கிராமத்தில் அவர் 1924-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3-ஆம் தேதி பிறந்தார். தமிழக அரசியல் களத்தில் தமது நீண்ட, நெடிய, அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் அவர், பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்திருக்கிறார். 1957-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் குளித்தலை தொகுதியில் வெற்றி பெற்று 33 வயதில் அவர் தமிழக சட்டப்பேரவையில் நுழைந்தார். 1967-ஆம் ஆண்டு தமிழக அரசின் அமைச்சரானார். பின்னர், 1969-ஆம் ஆண்டில் மாநிலத்தின் முதலமைச்சராக முதன் முதலாக பதவியேற்றார். தமிழ்நாட்டில் முதலமைச்சராக அவர் ஐந்து முறை பதவி வகித்துள்ளார்.

அரசியல் களத்தைத் தவிர, தமிழ்த்திரைப்பட உலகில் மிகவும் புகழ்பெற்ற கதை, திரைக்கதை, வசனகர்த்தாவாக அவர் திகழ்ந்தார். திரைப்பட ஊடகத்தை திராவிட இயக்கத்தின் கொள்கைகளைப் பரப்புவதற்கு அவர் பயன்படுத்தினார்.

டாக்டர்.மு.கருணாநிதி, எழுத்து மற்றும் பேச்சுத்திறனுக்கும் புகழ் பெற்றவராவார். கவிதைகள், திரைக்கதைகள், புதினங்கள், சுயசரிதை, மேடை நாடகங்கள், திரைப்பட உரையாடல் மற்றும் பாடல்கள் என பலவகைப்பட்ட படைப்புகள் மூலம் தமிழ் இலக்கியத்துக்கு அவர் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்.

அவரது மறைவால், தமிழ்நாட்டு மக்கள் தங்களது மிகப்புகழ் பெற்ற தலைவரை இழந்துள்ளனர்.

அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், தமிழக மக்களுக்கும் மத்திய அரசு மற்றும் நாட்டின் சார்பில் மத்திய அமைச்சரவை தனது இதயபூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது”.

*****