வணக்கம்,
அன்பார்ந்த நண்பர்களே, சகோதர சகோதரிகளே,
உங்களில் பலர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். உங்கள் அனைவருக்கும் வணக்கம். இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு முக்கியம்.
மலேசியாவுக்கு வருகை தருவது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மாபெரும் அரங்கில் உங்களோடு இருப்பது எனக்கு உள்ளபடியே மகிழ்ச்சியை அளிக்கிறது.
என்னைப் பொறுத்தவரை, இந்தியா அதன் எல்லைகளோடு நின்று விடுவதில்லை. இந்தியா உலகெங்கும் உள்ள ஒவ்வொரு இந்தியரிலும் உள்ளது. உங்களில் இந்தியா உள்ளது.
உங்கள் முன்னால் நிற்கையில், தெய்வப் புலவர் திருவள்ளுவரின் குறள் எனக்கு நினைவுக்கு வருகிறது. “முகநக நட்பது நட்பல்ல. நெஞ்சத்தகநக நட்பது நட்பு” மகாத்மா காந்தி கூட ஒரு முறை திருவள்ளுவரின் திருக்குறளை அதன் அசல் வடிவத்திலேயே கற்க வேண்டும். திருவள்ளுவரைப் போல இவ்வுலகிற்கு அறிவுச் செல்வத்தை தந்தது வேறு யாருமல்ல என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த புலவரின் வாக்கு ஒவ்வொரு முறை மலேசியாவுக்கு வருகையிலும் எனக்கு நினைவுக்கு வருகிறது. இங்கே நான் பிரதமராக வருகிறேனா, அல்லது சாதாரணமாக வருகிறேனா என்பது முக்கியமல்ல. அதே நட்பையும் வரவேற்பையும் இங்கே நான் உணர்ந்தேன். மலேயா இந்தியர்களின் நட்புக்கும் அன்புக்கும் என் இதயத்தில் சிறப்பு இடம் உண்டு.
பல தலைமுறைகளுக்கு முன்னால், உங்களின் முன்னோர்கள் முன்பின் தெரியாத இடத்துக்கு வந்தார்கள். உங்களில் பலர், இந்த நவீன உலகத்தில் இங்கே வந்துள்ளீர்கள். நீங்கள் எப்போது வந்தீர்களோ, எந்த சூழலில் வந்தீர்க்ளோ, தூரமும் காலமும், இந்தியா மீதான உங்கள் அன்பை குறைத்து விடவில்லை. விழாக்களின் வண்ணங்களிலும் ஒளியிலும் நான் இதைப் பார்க்கிறேன். அவை எப்போதும் போல ஒளிமயமாக உள்ளன. அற்புதமான இசையிலும், நடன அசைவுகளிலும், மணிச் சத்தத்திலும், பிரார்த்தனைக்கான அழைப்பிலும் இதை நான் காண்கிறேன். இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் பிரவாசி பாரதி திவஸ் நிகழ்ச்சிக்கு மலேயா இந்தியர்கள் பெருமளவில் வருகை தருகின்றனர். மலேயா இந்தியர்கள், வைப்ரன்ட் குஜராத் நிகழ்ச்சியை மேலும் சிறப்பாக்குகின்றனர்.
இந்தியாவும் மலேசியாவும் ஒரு காலத்தில் ஒரே காலனியாதிக்கத்தின் கீழ் இருந்தன. நாம் இருவரும், ஒரு பத்தாண்டு காலத்தில் விடுதலை பெற்றோம். மலேயா இந்தியர்களுக்கு சுதந்திர இந்தியா மிகவும் கடமைப்பட்டுள்ளது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதி மலேயா இந்தியர்களின் போராட்டங்களாலும் தியாகங்களாலும் எழுதப்பட்டள்ளது.
உங்களின் ஆயிரக்கணக்கான முன்னோர்கள், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர முன்வந்துள்ளார்கள். தங்கள் வீடுகளில் உள்ள வசதிகளை உதறி விட்டு, பல பெண்கள், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸோடு தோளோடு தோள் நின்று போராடியுள்ளார்கள்.
கேப்டன் லட்சுமி சேகல் அவர்களுக்கு துணையாக பணியாற்றிய புவான் திரு கேப்டன் ஜானகி ஆதி நாகப்பன் அவர்களுக்கு எனது சிறப்பு அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். அது, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மற்றொரு வீராங்கனையான ராணி ஜான்சியின் பெயரில் அமைந்த படைப் பிரிவாகும். ஒவ்வொரு இந்தியர் சார்பாகவும், ,ந்திய விடுதலைக்காக உயிர் துறந்த, தெரிந்த மற்றும் தெரியாத மலேயா இந்தியர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அவர்களின் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் எனது பெரிய நன்றிகள். இங்கே கோலாலம்பூரில் உள்ள இந்திய கலாச்சார மையத்துக்கு சுபாஷ் சந்திர போஸ் பெயரை சூட்டுகிறோம். 70 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு மோசமான உலகப்போர் முடிவுக்கு வந்தது. மலேசிய போர்க்களத்தில் தங்கள் இன்னுயிரை ஈந்த எண்ணிலடங்கா இந்திய வீரர்களுக்கு என் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். உயிர் துறந்தவர்களில் பெரும்பாலானோர் சீக்கியர்கள். அவர்களின் ரத்தம் மலேசிய மண்ணோடு நிரந்தரமாக கலந்துள்ளது. அந்தப் போர் இரு நாடுகளுக்கும் முக்கியமான போர். மலேசிய மண்ணில் கலந்துள்ள அவர்களின் ரத்தம், நம் இரு நாடுகளுக்கிடையே அழிக்கமுடியாத நெருக்கமான உறவை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களின் வீரமும் கடமை உணர்ச்சியும், இந்தியாவின் பஞ்சாப் படைப்பிரிவு, சீக்கிய படைப்பிரிவு, ஜாட் படைப்பிரிவு, மற்றும் டோக்ரா படைப்பிரிவு ஆகியவற்றில் வாழ்ந்து வருகிறது. மலோசியாவில், பேராக்கில், கம்பார் போர் நடந்த இடத்தில் அந்த படைவீரர்களுக்கு ஒரு நினைவுச் சின்னம் கட்டுவதற்கு மலேசிய அரசுன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம்.
சகோதர சகோதரிகளே,
மலேசிய இந்தியர்கள், நேதாஜியின் அழைப்புக்கு துணிவோடும் ஆர்வத்தோடும் பதிலளித்துக் கொண்டிருந்தபோது, நாங்கள் மகாத்மா காந்தியின் வாழ்வு மற்றும் லட்சியத்தால் ஈர்க்கப்பட்டுக் கொண்டிருந்தோம். சுங்காய் பெட்டானியில் மகாத்மா காந்தி இறந்த சில வருடங்களுக்குள் கட்டப்பட்ட காந்தி நினைவு அரங்குக்காக உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். நீங்கள் அவரை சந்தித்ததில்லை. காந்தி மலேசியா வந்ததில்லை. ஆனால் அவர் உங்கள் இதயத்தை தொட்டிருக்கிறார். காந்தியின் நினைவு, அவரின் கொள்கைகள், மனித இனம் மற்றும் இந்தியாவுக்காக அவர் ஆற்றிய சேவைகளை நினைவு கூறும் வகையில் ஒரு சமூகமாக ஒன்றிணைந்து அவருக்காக நினைவிடத்தை கட்டியுள்ளீர்கள்.
ஒரு அமைதியான அஞ்சலியை ஒரு நினைவிடம் கட்டுவதன் மூலமாக செயல்படுத்திதைப் போல சிறந்த செயல் இருக்க முடியாது. அந்த காந்தி அரங்கில், காந்தியின் மார்பளவு சிலை ஒன்றை நிறுவ உள்ளோம் என்பதை மகிழ்ச்சியோடு அறிவித்துக் கொள்கிறேன்.
உங்களின் சேவை உணர்வு உறுதியாக உள்ளது. 2001ல், எனது மாநிலமான குஜராத்தை நிலநடுக்கம் தாக்கியபோது, பல்வேறு மலேய இந்தியர்கள், அதற்காக நிதி திரட்டியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் முன்வந்தீர்கள். இந்திய விடுதலை போராட்டத்தில் உங்கள் பங்கும், உங்களின் வளமான கலாச்சாரமும், இந்தியாவை உங்கள் இதயத்தில் வாழ வைக்கிறது. எங்கள் எண்ணங்களில் உங்களுக்கு எப்போதும் சிறப்பிடம் உண்டு.
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,
உங்களின் செயல்பாடுகளில் இந்தியாவின் ஆன்மா பேசுகிறது. இந்தியாவின் பல்வேறு மொழிகள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களை நீங்கள் பிரதிபலிக்கிறீர்கள். நீங்கள் ஒற்றுமையாக எழுந்து நிற்கிறீர்கள். மலேயா இந்தியர்களோடு மட்டுமல்ல, மலேய மக்களுடனும். உங்களின் சாதனைகள் எங்களை பெருமைப்பட வைக்கின்றன. உங்கள் கரங்களால் உழைத்துள்ளீர்கள். பெருமையோடும், கவுரவத்தோடும் உங்கள் வாழ்வை இங்கே அமைத்துள்ளீர்கள். வர்த்தகத்தில் சிறக்கும் நீங்கள், பயிர்களை அதிகம் வளர வைக்கிறீர்கள். மலேசியாவை நவீன தேசமாகவும், பொருளாதாரத்தில் வலிய நாடாகவும் உருவாக்குவதில் பங்களித்துள்ளீர்கள். இந்திய மலேசிய உறவை மேலும் உறுதியாக்க உதவி வருகிறீர்கள்.
மலேசியாவின் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சுப்ரமணியத்தின் பணியில் நான் இதைப் பார்க்கிறேன். மலேய இந்தியர்கள் மருத்துவர்களாக அதிக விருப்பம் தெரிவிப்பதனால், ஒரு மலேய இந்தியர் இந்தப் பதவியை வகிப்பது பொருத்தமே.
டத்தோ சாமிவேலு என்ற மலேயா இந்தியர், உட்கட்டமைப்பு கூட்டுறவுக்கான, மலேயாவின் சிறப்புத் தூதர் என்பதில் மகிழ்ச்சி.
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,
இந்தியா மலேயா இடையிலான நட்புணர்வின் அடிநாதமாக நீங்கள் இருக்கிறீர்கள். மலேசியாவுக்கும் இந்தியாவுக்குமான பழமையான இணைப்பை நீங்கள் பிரதிபலிக்கிறீர்கள். கோரமண்டலம் முதல் கலிங்கா வரை, கடல் வழியே வர்த்தகம், கலாச்சாரம் ஆகியவை மலேசிய வளைகுடாவை வந்தடைந்துள்ளது. எங்கே வணிகம் இருக்கிறதோ, அங்கிருந்து குஜராத் தொலைவில் இருக்க முடியாது. குஜராத்திகளும் அந்த வணிகத்தில் பங்கு கொண்டார்கள். புஜங் பள்ளதாக்கு மற்றும கேதா மாநிலத்தில், பல்லவ மற்றும் சோழ சாம்ராஜ்யங்களின் சிறப்பை பார்க்கிறோம். நம்மை இணைத்த வாசனைப் பொருட்களின் பாதை, நம் உணவில் அதன் சுவையை சேர்த்தது.
புத்தரின் மண்ணிலிருந்து தென்கிழக்கு ஆசியா வரை, அமைதியின் செய்தியை பரப்பிய புத்த பிக்குகளின் கால்தடத்தில் நமது உறவைப் பார்க்க முடிகிறது. இதுதான் நமது பாரம்பரியத்தின் சிறப்பு. நமது நவீன உறவுக்கான புராதான அடித்தளம் இதுதான்.
இன்று ராமகிருஷ்ணா மிஷனுக்கு சென்று, சுவாமி விவேகானந்தரின் சிலையை திறந்து வைக்கும் பெருமையைப் பெற்றேன். இது எனக்கான ஆன்மிகத் தருணம் மட்டுமல்ல. ஒரு நூற்றாண்டுக்கு முன்னால், அமெரிக்காவுக்கு அவர் இந்த வழியாக மேற்கொண்ட பயணத்தை நினைவு கூர்ந்தது. அங்கே அவர், இந்தியாவின் அறிவுச் செல்வத்தை மேற்கோள் காட்டி, உலக அமைதிக்கு அழைப்பு விடுத்தார். நாம் ஆசியாவின் நூற்றாண்டு குறித்து கனவு காண்கையில் அவர் இன்றைய தேவையான ஆசியாவின் ஆன்மாவிற்கான தேவை குறித்து பேசினார். பல்வேறு மாற்றங்கள் நிகழும் இன்றைய உலகில், மலேசிய மண்ணில் அவரது சிலை, நம் சமூகங்களை பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிரான நினைவூட்டலாகும்.
நாளை நானும் பிரதமர் நஜீபும், லிட்டில் இந்தியா, பிரிக் ஃபீல்ட்ஸில் உள்ள டோரானா வாயிலை திறந்து வைக்க உள்ளோம். இது இந்தியாவிலிருந்து வந்த பரிசு. இது இந்தியாவின் பிரபலமான சாஞ்சி ஸ்தூபா போல நிற்கிறது. அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டது. புத்த தலங்களில் மிகப் பிரபலமானது அது.
லிட்டில் இந்தியாவுக்கு வருகை தரும் ஒவ்வொருவருக்கும், மக்களுக்கான அமைதியின் செய்தியையும், மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவையும், நம் இரு நாட்டு மக்களிடையேயான உறவையும் அது நினைவூட்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அது மலேசியாவின் பன்முகத்தன்மையையும், நல்லிணக்கத்தையும் நினைவூட்டும்.
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,
மலேசியாவின் சாதனைகள் பிரம்மாண்டமானவை. சுதந்திரம் பெற்று அறுபதே ஆண்டுகளில், 30 மில்லியன் மக்களைக் கொண்ட இந்நாடு பெருமைபடத்தக்க பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. ஏறக்குறைய வறுமையை ஒழித்து விட்டது. மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துள்ளது. 100 சதவிகித கல்வி அறிவை பெற்றுள்ளது. அனைவருக்கும் வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது. அதன் சுற்றுலாத் துறை வளமை கொண்டுள்ளது. அதன் இயற்கை அளித்த அற்புத பரிசுகளை பாதுகாத்துள்ளது. அதன் உட்கட்டமைப்பு உலகத் தரம் வாய்ந்தது. தொழில் நடத்த ஏதுவான நாடுகளில் முன்னணியில் உள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆறு சதவிகித வளர்ச்சி விகிதத்தை தொடர்ந்து தக்க வைத்துள்ளது. எந்த நாட்டுக்கும் இது ஒரு அசாதாரணமான சாதனையாகும்.
மலேசியாவின் பிரபலமான சுற்றுலா வாசகங்களில் ஒன்று, மலேசியா உண்மையான ஆசியா. அந்த வாசகத்துக்கு பொருத்தமாகவே மலேசியா இருந்து வருகிறது. பன்முகத்தன்மையுடன் ஒற்றுமையாகவும், பாரம்பரியத்தோடு நவீனமாகவும், புதிய கண்டுபிடிப்புகோடு கடின உழைப்பாலும், இப்பிராந்தியத்தின் அமைதியை நாடியும் வாழ்ந்து வருகிறது.
நண்பர்களே,
உங்களின் பாரம்பரியத்துக்கு சொந்தமான இந்தியா, சுதந்திரம் பெற்றது முதல் பல்வேறு சாதனைகளை அடைந்துள்ளது. காலனியாதிக்கத்தால் பலவீனமான இந்நாடு சுதந்திரமடையும் தருவாயில் பிரிக்கப்பட்டது. இந்தியா பன்முகத்தன்மை கொண்ட, மற்றும் பல்வேறு சமூக அரசியல் சவால்களை சந்திக்கும் ஒரு நாடு. இந்த இளம் நாடு, போதுமான வளர்ச்சி அடையுமா என்று கேள்விகள் இருந்தன. இந்நாடு வளரக்கூடாது என்று சிலர் விரும்பினர்.
இன்று இந்தியா ஒற்றுமையாக இருப்பது மட்டுமல்ல. அது தன் பன்முகத்தன்மையிலிருந்து வலிமை பெறுகிறது. பல்வேறு நாடுகள் சுதந்திரமடைகையில் இருந்த நம்பிக்கை பொய்த்துப் போய் விட்டது. 1.25 பில்லியன் மக்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தும் பெருமையான ஜனநாயகம் இந்தியா. 800 மில்லியன் இளைஞர்களைக் கொண்ட இளமையான நாடு. ஒவ்வொரு குடிமகனுக்கும் அவர் உரிமைகளை வழங்கும், ஒவ்வொரு குடிமகனையும் நீதிமன்றம் காப்பாற்றும், ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியல் அமைப்புச் சட்டம் உரிமை வழங்கும் நாடு இந்தியா. பெருமைப் படத்தக்க பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளோம். உணவு தானியம், பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் உற்பத்தியில் முன்னணியில் உள்ளோம். எங்கள் விஞ்ஞானிகள் விண்வெளித் துறை ஆராய்ச்சிகளின் மூலம், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முயன்று வருகிறார்கள்.
அணு சக்தியையும், மருத்துவ ஆராய்ச்சிகளிலும் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளோம். ஏழை மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் பல்வேறு தடுப்பு மருந்துகளை தயாரித்துள்ளோம். உலகின் சிறந்த தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்குகிறோம். உலகிற்கே சேவை செய்யும் மருத்துவர்களையும் பொறியாளர்களையும் உருவாக்குகிறோம்.
உலகச் சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருள்களை உருவாக்குகிறோம். எங்களின் வெளியுறவுக் கொள்கை உலகில் அமைதியை வளர்க்கிறது.
இப்பிராந்தியத்தின் பாதுகாப்பை இந்திய ராணுவம் உறுதி செய்கிறது. இயற்கை பேரழிவுகள், இயற்கை சீற்றங்களில் நாடு கடந்து உதவி புரிகிறது. உலகெங்கும் பல்வேறு இடங்களில் அமைதிப் படையாக செயல்படுகிறது. இந்த வளர்ச்சியை அடைவதற்கு பல்வேறு தலைமுறை தலைவர்கள் காரணமாக இருந்திருக்கிறார்கள்.
இன்னும் கடக்க வேண்டிய பாதை நெடுதூரம் உள்ளது என்பதை அறிவோம். நாங்கள அடைய வேண்டிய இலக்குகளும், சந்திக்க வேண்டிய சவால்களும், எங்கள் கிராமங்களின் மூலமாகவும், நகரங்களின் மூலமாகவும் தெரிகின்றது. எனது அரசு அதை மாற்றுவதற்காகவே பதவியேற்றுள்ளது.
நவீன பொருளாதாரத்தின் பலன்களை மக்களுக்கு அளிப்பதன் மூலம், வங்கிச் சேவை மற்றும் காப்பீட்டுச் சேவைகளை மக்களுக்கு அளிப்பதன் மூலம், வறுமையை ஒழிக்க முயன்று வருகிறோம். ஒரு சில மாதங்களிலேயே 190 மில்லியன் வங்கிக் கணக்குகள் உலகில் எந்த நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது ? மக்களுக்கு திறனையும் அதிகாரத்தையும் வழங்கி வருகிறோம். தொழில் வளர்ச்சிக்கு ஏதுவான சூழலை உருவாக்கி அதன் மூலம் மக்கள் தங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறோம். தொழில்களுக்கு உதவி செய்கிறோம். புதிய யோசனைகள், தகவல்ககள், தகவல் தொடர்புகள், தொழில், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை அனுதிக்கும் வகையில் புதிய தேசிய டிஜிட்டல் கட்டமைப்பை வருகிறோம். எங்களின் ரயில்வேயை புதிய பொருளாதார புரட்சிக்கான உந்துசக்தியா மாற்றி வருகிறோம். எங்களின் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை வளமைக்கான நுழைவாயிலாக மாற்றி வருகிறோம். அனைத்து நகரங்களையும் சுத்தமானதாகவும் சுகாதாரமானதாக மாற்ற உறுதி பூண்டுள்ளோம். எங்கள் ஆறுகளை சீரமைக்கவும், கிராமங்களை புனரமைக்கவும் உறுதி பூண்டுள்ளோம்.
அடுத்த தலைமுறை காணும் வகையில் எங்கள் இயற்கை வளங்களை பாதுகாக்கிறோம்.
இவை அனைத்தும் எளிமையானவை அல்ல. நாம் 1.25 பில்லியன் மக்கள், 500 பெரிய நகரங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான கிராமங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்தியர்களின் திறனில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. எங்கள் மக்களின் இணைந்த திறமையில் நம்பிக்கை உள்ளது. மாற்றத்தின் சக்கரம் நகரத் தொடங்கி உள்ளது. தற்போது அது வேகம் பிடித்துள்ளது. தற்போது அந்த வேகம் எண்ணிக்கையில் வெளிப்படுகிறது.
இன்று இந்தியா உலகின் வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்று. நீங்கள் இது குறித்து பெருமைப் படுவீர்கள் என்பதை நான் அறிவேன். ஆண்டுக்கு 7.5 சதவிகிதம் வளர்ந்து வருகிறோம். இது வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கும். உலகின் பெரிய அமைப்புகள் இந்தியாவின் வலிமையான வளர்ச்சி மீது நம்பிக்கை வைத்துள்ளன. இது எந்த நேரத்திலென்றால், இந்தப் பகுதி உட்பட உலகின் பல்வேறு பகுதிகள் தேக்க நிலையை சந்திக்கையில்.
நகரங்களில் மாற்றம் உள்ளது. கிராமங்களில் முன்னேற்றம் உள்ளது. மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே நம்பிக்கை உள்ளது. அரசு பணியாற்றும் முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசு நிர்வாகத்தை வெளிப்படையானதாகவும், பொறுப்புள்ளதாகவும் மாற்றி வருகிறோம். எல்லா மட்டங்களிலும் ஊழலை களைந்து வருகிறோம். கொள்கைகளாலும், விதிகளாலும் அரசு நடைபெறுகிறதே தவிர, ஒரு சில தனி நபர்களின் விருப்பத்தினால் அல்ல. அரசும், மக்களும் உரையாடும் முறையை மாற்ற வருகிறோம் மாநில அரசுகளும், மத்திய அரசும் இணைந்து பணியாற்றுகின்றன. ஆரோக்கியமான வகையில் மாநிலங்கள் போட்டியோடு செயல்படுகின்றன.
அன்பார்ந்த நண்பர்களே,
நாம் இன்று சார்ந்து வாழும் உலகத்தில் வாழ்கிறோம். தொலை தூரத்தில் உள்ள ஒரு நாட்டில் நடக்கும் பிரச்சினை மற்றொரு பகுதியில் உள்ள தொழிலாளர்களை பாதிக்கும். ஐக்கிய நாடுகள் அவையிலோ, உலக சுகாதார அமைப்பின் அறையிலோ எடுக்கப்படும் முடிவுகள், இந்திய கிராமத்தில் உள்ள விவசாயியை பாதிக்கும். ஒரு நாட்டின் ஒரு பகுதியில் உள்ள வாழ்க்கை முறை, மற்றொரு நாட்டின் தட்பவெட்பத்தையும் விவசாயத்தையும் பாதிக்கும்.
நமக்கு மற்றவர்களது சந்தை மற்றும் வளங்கள் தேவை. இதனால் எங்களது தேசிய வளர்ச்சி சர்வதேச கூட்டணியின் வலிமையின் அடிப்படையில் அமையும். நண்பர்கள் மற்றும் பங்குதாரர்களைத் தேடி நாங்கள் தொலை தூரம் செல்ல வேண்டியதில்லை. தென்கிழக்கு ஆசியா கடலாலும் நிலத்தாலும் எங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ளது. கலாச்சாரம், திறமை, தொழில்திறன் மற்றும் கடின உழைப்பு உள்ள பிராந்தியம் இது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு இந்தியாவின் உறவு சிறப்பாக உள்ளது. ஆசியானோடு எங்களுக்கு சிறந்த உறவு உள்ளது. தற்போதுதான் ஆசியான் மாநாட்டை நிறைவு செய்தேன். இந்தப் பகுதியில்தான் எங்களது பொருளாதார உறவுகள் வேகமாக வளர்கிறது. இந்தப் பகுதிதான் அதிக அளவிலான இந்திய சுற்றுலாப் பயணிகளை கவர்கிறது.
நண்பர்களே,
இப்பகுதியில் மலேசியா எங்களுக்கு முக்கியமான நட்பு நாடாகவும், வலிமையான பங்குதாரராகவும் இருந்து வருகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். உட்கட்டமைப்பில் மலேசிய நிறுவனங்கள் சிறந்தவை. மலேசியாவுக்கு அடுத்தபடியாக அவர்கள் இந்தியாவில்தான் தொழில் செய்கின்றனர். உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத் தொடர்புச் சந்தை – இந்தியாவில் மலேசிய முதலீட்டாளர்கள் இருக்கின்றனர். இந்திய நிறுவனமான இர்க்கான், மலேசியாவில் ரயில் உட்கட்டமைப்பை மேம்படுத்த உதவி வருகிறது.
மலேசியாவில் 150க்கும் அதிகமான இந்திய நிறுவனங்கள் உள்ளன. 50க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. ஆசியானின் மிகப்பெரிய தொழில் பங்குதாரராக மலேசியா விளங்குகிறது. இதை மேலும் முன்னேற்ற வேண்டும். மலேசியாவுக்கான சுற்றுலாவில் இந்தியா பெரும் பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு வாரமும் மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே 170 விமானங்கள் சென்ற வருகின்றன. எங்கள் பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேதா மற்றும் யுனானியில் மலேசியாவுடன் ஒப்பந்தம் உள்ளது. எங்கள் குடிமக்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுகிறோம்.
பாதுகாப்புத் துறையில் சிறந்த உறவு உள்ளது. இந்திய விமானப்படை, மலேசிய விமானப் படைக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளித்தது. கடல் மற்றும் வானத்தில் இணைந்து பயிற்சி எடுத்துள்ளோம்.
எங்களது பாதுகாப்பு படைகள் தீவிரவாதம் தொடர்பான இணைந்து பணியாற்றுகின்றன. இது தொடர்பான மலேசிய அரசின் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இன்று தீவிரவாதம் விளங்குகிறது. அதற்கு எல்லையே கிடையாது. அது மதத்தின் பெயரால் ஆட்களை சேர்க்கிறது. ஆனால் அது பொய். அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களை அது கொல்கிறது. தீவிரவாதத்திலிருந்து நாம் மதத்தை பிரிக்க வேண்டும். மனிதத்தை நம்புபவர்கள், நம்பாதவர்கள் என்ற ஒரே ஒரு பிரிவுதான் உள்டு. நான் ஏற்கனவே கூறியதை மீண்டும் கூறுகிறேன். உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு எதிராக உலகம் ஒன்று கூட வேண்டும்.
நமது உளவுத்துறையின் ஒத்துழைப்பை அதிகப்படுத்த வேண்டும். ராணுவத்தை பயன்படுத்த வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிராக சட்டரீதியான ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும். ஒத்துழைப்பு என்று நான் கூறுவது பாதுகாப்பு ரீதியிலான ஒத்துழைப்பை மட்டும் அல்ல. தீவிரவாதத்தை எந்த நாடும் வளர்க்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். எந்த நாடும் அடைக்கலம் அளிக்கக் கூடாது. நிதியளிக்கக் கூடாது. ஆயுதம் வழங்கக் கூடாது.
நாம் நமது சமூகத்தினிடையே இளைஞர்களிடையே பணியாற்ற வேண்டும். பெற்றோர்கள், சமுதாயம் மற்றும் மத போதகர்களின் துணை நமக்கு வேண்டும். இணையதளம், தீவிரவாதத்திற்கு ஆள் சேர்க்கும் களமாக மாறாமல் நாம் தடுக்க வேண்டும்.
நமது பிராந்தியத்தில் பரஸ்பர புரிதல், நல்லுறவு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை வளர்க்க வேண்டும். வளமான எதிர்காலத்துக்கு அமைதியே அடிப்படை.
நமக்கு பொதுவான பல்வேறு சவால்களும், ஆர்வமளிக்கக் கூடிய விஷயங்களும் உள்ளது. ஆகவே நமது பிராந்தியத்தில் உள்ள சிறிய பெரிய அனைத்து நாடுகளும், நமது கடல் பிராந்தியத்தை வணிகத்துக்கு பாதுகாப்பானதாகவும், நமது தேசங்களை பாதுகாப்பு மிக்கதாகவும், நமது பொருளாதாரத்தை வளமிக்கதாகவும் மாற்ற வேண்டும்.
நண்பர்களே,
நாளை மேதகு பிரதமர் நஜீப் அவர்களை நமது உறவை மேம்படுத்துவதற்காக சந்திக்க உள்ளேன். நமது நெருக்கமான உறவால், மலேசியாவும் இந்தியாவும் பரஸ்பரம் பெரும் பயனடைய வாய்ப்பு உள்ளது. நாங்கள் எது செய்ய முடிவெடுத்தாலும், அதில் நீங்களும் பங்கு பெறுவீர்கள். இந்திய மலேசிய உறவை மேம்படுத்த உங்கள் முழு ஒத்துழைப்பையும் அளிப்பீர்கள்.
இந்த உறவை மேம்படுத்துவதிலும், இந்தியாவின் முன்னேற்றத்திலும், உங்கள் ஒத்துழைப்பை எப்போதும் விரும்புவோம். இவற்றுக்கு மேலாக நாங்கள் அதிகம் மதிப்பது, நம்மிடையே உள்ள அன்பும் உறவும். இது விலையில்லாத மதிப்பீடு கொண்டது.
நம்மிடையே உள்ள தூரத்தையும் தடைகளையும் பொருட்படுத்தாமல், இந்தியாவோடு நெருக்கமாக இருந்து வந்துள்ளீர்கள். எங்கள் கலாச்சாரத்தின் சாளரமாகவும், எங்கள் வளர்ச்சியின் பிரதிபலிப்பாகவும் இருந்து வந்துள்ளீர்கள். உங்கள் நாட்டுக்கும் இந்தியாவுக்குமான பாலமாக இருக்கிறீர்கள். இந்தியாவில் குடும்பங்களையும் சமூகங்களையும் ஆதரிக்கிறீர்கள். பல்வேறு குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லவும், தாய்மார்கள் நல்ல சுகாதாரத்தைப் பெறவும் உதவியுள்ளீர்கள். இதற்கான எந்த அடையாளமும் தெரியாமல் உதவியுள்ளீர்கள். நாங்கள் எங்களால் முடிந்ததை உங்களுக்கு செய்கிறோம்.
OCI மற்றும் PIO அட்டைகளை இணைத்து, விசா காலத்தை வாழ்நாள் முழுவதும் என்று நீட்டித்துள்ளோம். நான்காவது தலைமுறை வரையில் OCI பதிவுக்கு போதுமானது. பல தலைமுறைகளுக்கு முன்பாக மலேசியா வந்த இந்திய வம்சாவளியினருக்கு இது உதவியாக இருக்கும்.
தற்போது வெளிநாட்டவர்களாக உள்ள மைனர் குழந்தைகள் கணவன் அல்லது மனைவிகளுக்கு இந்த OCI அந்தஸ்து பொருந்தும். பயணத்தை எளிமைப்படுத்தும் ஈ விசாவை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
மலேசியாவில் ஒன்பது விசா சேகரிப்பு மையங்களை நிறுவியுள்ளோம். சில நாடுகளுக்கு வேலைக்காக செல்லும் தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஈமைக்ரேட் போர்ட்டல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தங்கள் மீது வழக்கு உள்ள வெளிநாட்டு வேலை வழங்குபவர்களை குறித்தும் அது எச்சரிக்கை விடுக்கும்.
இந்திய சமூக நல நிதி என்ற நிதியத்தையும், வெளிநாட்டில் உள்ள ஆதரவற்ற பெண்களுக்கான நிதியம் ஒன்றையும் உருவாக்கியுள்ளோம். இந்தியாவிலிருந்து வரும் தொழிலாளர்கள் சில நேரங்களில் சில சிக்கல்களை சந்திக்கிறார்கள். அவர்களின் நலனும் பாதுகாப்பும் மிக முக்கியமானது. கடந்த ஆண்டு 8000 இந்தியத் தொழிலாளர்கள் இந்தியா திரும்ப உதவி செய்தோம்.
1954ம் ஆண்டு கல்வி வசதி பெற முடியாத மலேசிய இந்திய குழந்தைகளுக்காக இந்திய மாணவர்கள் நிதியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அந்த நிதியம் நீடிக்க வேண்டும் என்று மலேசிய இந்திய மக்களில் ஒரு பகுதியினர் கருத்து தெரிவித்தனர். அந்த நிதியத்துக்கு 1 மில்லியன் டாலர் கூடுதலாக வழங்க உள்ளோம் என்பதை மகிழ்ச்சியோடு அறிவித்துக் கொள்கிறோம்.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவர்களாவதற்காக இந்தியா செல்கின்றனர். மருத்துவர்கள் சமூகத்துக்கு அவசியம் என்றாலும், இதர கல்விப் பிரிவுகளையும் தேர்ந்தெடுத்து படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இரு நாடுகளும் வழங்கும் பட்டங்களை மலேசியா மற்றும் இந்தியா உடனடியாக அங்கீகரிக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து பிரதமர் நஜீப்போடு பேச உள்ளேன்.
இறுதியாக, உங்கள் சாதனைகள் குறித்தும், உங்களின் லட்சியங்கள் குறித்தும், உங்கள் வாழ்க்கை குறித்தும் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். சவால்கள் எப்போதும் இருக்கும். கனவுகளும் இருக்கும். ஒவ்வொரு தலைமுறையும் அது சந்தித்த சவால்களை விட, அது செய்த சாதனைகளை வைத்தே அளவிடப் படுகிறது.
ஆகையால் நீங்கள் தொடர்ந்து உங்களுக்காகவும், மலேசியாவுக்காகவும், நமது இரு நாடுகளுக்காகவும் கனவு காணுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியாவின் மிகச் சிறந்த குடிமகன், மனிதத்தின் அடையாளமான தமிழகத்தைச் சேர்ந்தவரின் வார்த்தைகளோடு உங்களிடம் இருந்து விடைபெற விரும்புகிறேன்.
இந்தியாவின் நவீன சிற்பிகளில் ஒருவரான மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், 2008ல் மலேசியா வந்தார். அவர் மீண்டும் இங்கே வர விரும்பினார். ஆனால், கடவுள் வேறு திட்டங்கள் வைத்திருந்தார். ஆனால் அவர் வாழ்வும், அவர் கனவும், அவர் அளித்த செய்திகளும், நமக்கு எப்போதும் உந்துசக்தியாக இருக்கும்.
“இளைய தலைமுறைக்கு எனது செய்தி, மாற்றுச் சிந்தனைக்கு துணிவு கொள்ளுங்கள், புதிய கண்டுபிடிப்புக்கும், இது வரை செல்லாத பாதையிலும் செல்ல துணிவு கொள்ளுங்கள், செய்ய முடியாதவற்றை செய்து முடிக்க துணிவு கொள்ளுங்கள், அடைய இயாத இலக்கை அடைந்து பிரச்சினைகளுக்கு முடிவு காண துணிவு கொள்ளுங்கள்.”
உங்கள் வெற்றியில் சக மலேசியர்கள் மட்டுமல்ல, 1.25 பில்லியன் இந்தியர்களும் மகிழ்ச்சி கொள்வார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.
நன்றி
வணக்கம்.
Splendid interaction with Malaysia's Indian community. They are the living bonds of India-Malaysia friendship. https://t.co/tffHywHfKz
— Narendra Modi (@narendramodi) November 22, 2015
We appreciate the love of Malaya Indians towards India. Remembered Subhas Babu & the INA, which was strengthened by many Malaya Indians.
— Narendra Modi (@narendramodi) November 22, 2015