Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மேற்கு வங்க மாநிலம் சாந்திநிகேதனில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமரின் உரை


மேடையில் அமர்ந்திருக்கும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க மாநில ஆளுநர் திரு. கேசரி நாத்ஜி திரிபாதி, மேற்கு வங்க மாநில முதலமைச்சர் செல்வி மமதா பானர்ஜி, விஸ்வ பாரதியின் துணை வேந்தர் பேராசிரியர் சபூஜ் காளி சென் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் விவேகானந்த பயிற்சி நிறுவனத்தின் துணை வேந்தர் சுவாமி பிரியானந்தஜி, இங்கு கூடியிருக்கும் விஸ்வ பாரதியைச் சேர்ந்த அனைவர், மற்றும் எனது இளம் நண்பர்களே,

விஸ்வ பாரதியின் வேந்தராக, முதலில் நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். பல்கலைக்கழகத்திற்கு நான் வருகை தந்தபோது வழியில் என்னைச் சந்தித்த சில குழந்தைகள் தங்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை என என்னிடம் முறையிட்டனர். பல்கலைக்கழகத்தின் வேந்தராக, நீங்கள் போதிய வசதியின்றி இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்வது என்னுடைய பொறுப்பாகும். எனவே உங்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்காக என்னை மன்னிக்குமாறு உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இந்த நாட்டின் பிரதமராக நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியுள்ளது. இவற்றில் பெரும்பாலான இடங்களில் நான் விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இன்றைய தினம் நான் இங்கு விருந்தினராக மட்டுமின்றி வேந்தராகவும் உள்ளேன். ஜனநாயகத்தின் பயனாக எனது இந்த பங்களிப்பு உள்ளது. பிரதமராக இருப்பதால் நான் இதன் வேந்தராகவும் இருக்கிறேன். இந்த ஜனநாயகம் 125 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பல்வேறு வழிகளில் ஊக்கமளித்து வருவதாக திகழ்கிறது. ஜனநாயகத்தின் மாண்புகளால் ஊக்கம் பெற்று கல்வி பயின்ற ஒவ்வொரு மனிதனும் சிறந்த இந்தியாவையும் சிறந்த எதிர்காலத்தையும் உருவாக்குவதில் உதவி புரிந்து வருகிறார். ஆசிரியரை அணுகாமல் ஒருவர் கல்வி, சிறப்பியல்புகள் மற்றும் வெற்றியை பெறமுடியாது என கூறப்படுகிறது. குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் புனித பூமியில் இத்தனை எண்ணிக்கையிலான ஆசிரியர்களுடன் தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பது உண்மையில் எனது அதிருஷ்டமாகும்.

ஆலயத்தில் மந்திரங்களின் சக்தியை ஒருவர் உணருவதுபோல, அதே போன்ற சக்திய விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் நான் உணருகிறேன். காரில் இருந்து இறங்கி மேடையை நோக்கி நான் வருகை புரிந்தபோது, இந்த நிலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ரவீந்திரநாத் தாகூர் கால்தடம் பதித்திருப்பது குறித்து நினைத்து நான் பெருமிதமடைந்தேன். அவர் இங்கு அமர்ந்து கொண்டு தனது கவிதைகளை எழுதியிருக்க வேண்டும். இங்கிருந்தபடிதான் அவர் இசையை முணுமுணுத்திருக்க வேண்டும் என்பதுடன் மகாத்மா காந்தியுடன் ஆலோசனைகளை நடத்தி இருக்க வேண்டும். வாழ்க்கை, தேசத்தின் அர்த்தம் மற்றும் தேசத்தின் சுய மரியாதை குறித்து மாணவர்களுக்கு விளக்கி இருக்க முடியும்.

நண்பர்களே,

பாரம்பரியம் ஒன்றை பின்பற்றுவதற்காக நாம் அனைவரும் இங்கு கூடியிருக்கிறோம். கடந்த நூற்றாண்டின் இத்தகைய பல நிகழ்வுகளின் சாட்சியாக அமர்குஞ்ச் உள்ளார். கடந்த பல ஆண்டுகளாக நீங்கள் எதைப் பயின்று இருந்தாலும் அதன் கட்டம் ஒன்று நிறைவடைகிறது. பட்டம் பெறும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது எதிர்கால விருப்பங்கள் நிறைவேற எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது கல்வித் தகுதிக்கு இந்த பட்டம் ஒரு சான்றாகும். எனவே இது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். நீங்கள் பட்டத்தை மட்டும் பெறாமல் விலையில்லா கற்றலையும் பெற்றுள்ளீர்கள். நீங்கள் வளமான பாரம்பரியம் ஒன்றின் வாரிசாக திகழ்கிறீர்கள். பண்டைய மற்றும் நவீன குரு – சிஷ்ய பாரம்பரியத்துடன் நீங்கள் தொடர்பு கொண்டிருக்கிறீர்கள்.

வேத மற்றும் புராண காலத்தில் இந்த பாரம்பரியத்தை ரிஷிகள் பின்பற்றி வந்துள்ளனர் என்றால், நவீன காலத்தில் குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் போன்ற பெரிய நபர்கள் இதனை முன்னெடுத்துச் சென்றுள்ளனர். இது வெறும் உரையாக மட்டுமின்றி உங்கள் அனைவருக்கும் ஒரு பெரிய செய்தியாகும். பெரிய மனிதனாக அல்லது தேசமாக இருப்பதற்கு இயற்கை எவ்வாறு பயிற்றுவிக்கிறது என்பதற்கு இது உதாரணமாகும். இந்த அற்புதமான அமைப்பு மற்றும் விஸ்வபாரதியின் அடிக்கல்லாக மாறிய குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் பெரும் சிந்தனையின் வெளிப்பாடாகும்.

சகோதர சகோதரிகளே,

ஒட்டுமொத்த உலகமும் ஒரு கூடு அல்லது வீடாகும். வேதம் அளித்த இந்த பயிற்சிதான் குருதேவ் அவர்களால் விஸ்வபாரதியில் முக்கிய செய்தியாக ஆக்கப்பட்டது. இந்தியாவின் வளமான பாரம்பரியம் இந்த வேத மந்திரத்தில் மறைந்துள்ளது. முழு உலகமும் தங்கள் வீடாக இதனை ஆக்கிக் கொள்ளும் இடமாக இதனை பிரகடனப்படுத்த குருதேவ் விரும்பினார். ஒட்டுமொத்த உலகத்தையும் ஏற்கக்கூடிய அளவுக்கு கூடுகள் மற்றும் பண்ணை வீடுகளுக்கு சம அளவிலான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதுதான் இந்தியத்தன்மை ஆகும். கடந்த பலர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ‘வசுதைவ குடும்பகம்’ (உலகமே ஒரு குடும்பம்) என்ற மந்திரமாக இந்திய பூமியில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. குருதேவ் தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இந்த மந்திரத்திற்காக அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.

நண்பர்களே,

வேதங்கள் மற்றும் உபநிஷத்துக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையதாக இருந்த போதிலும் 100 ஆண்டுகளுக்கு முன் ரவீந்திரநாத் தாகூர் சாந்தி நிகேதனுக்கு வருகை தந்தபோதும் ஏற்கத்தக்கதாக இருந்தது. 21ம் நூற்றாண்டில் உலகம் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இன்றும் இவை ஏற்றதாக திகழ்கின்றன. இன்றைய தினம் தேசங்கள் அரசியல் எல்லைகளுக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மைதான்.  எனினும் இந்த பூமியின் பெரும் பாரம்பரியங்கள் உலகமயமாக்கல் வடிவத்தில் பரவியுள்ளது என்பது உண்மை. வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா அவர்கள் இன்று நம்மிடையே உள்ளார். இரு நாடுகளின் பிரதமர்கள் ஒரே பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டுள்ள அரிதான நிகழ்வாகும் இது. இந்தியாவும் வங்கதேசமும் இரு வேறு நாடுகளாக உள்ள போதிலும் ஒருவர் மற்றவருடன் இணைந்து செயல்படுவது மற்றும் ஒத்துழைப்பு அளிப்பது ஆகியவற்றில் நமது ஆர்வம் உள்ளது. கலாச்சாரம் அல்லது பொதுக் கொள்கை என எதுவாக இருந்தாலும் ஒருவர் மற்றவரிடம் இருந்து ஏராளமாக கற்றுக் கொள்ளமுடியும். உதாரணத்திற்கு நாங்கள் இருவரும் விரைவில் தொடங்கி வைக்க உள்ள வங்கதேச பவனை குறிப்பிடலாம். இந்தக் கட்டிடமும் குருதேவ் அவர்களின் தொலைநோக்கு பார்வையின் பிரதிபலிப்பாகும்.

நண்பர்களே,

குருதேவ் அவர்களின் ஆளுமை மட்டுமின்றி அவரது சுற்றுப்பயணமும் விரிவாக இருந்ததை பார்த்து சில சமயங்களில் நான் ஆச்சரியமடைந்துள்ளேன். எனது வெளிநாட்டுப் பயணங்களின் போது பலர் என்னிடம் பல ஆண்டுகளுக்கு முன் தாகூர் தங்கள் நாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அந்த நாடுகளில் இன்றும் குருதேவ் பெரும் அன்பு மற்றும் மரியாதையுடன் நினைவுகூரப்படுகிறார். தாகூருடன் தங்களை இணைத்துக் கொள்ள மக்கள் முயற்சி செய்கின்றனர்.

ஆஃப்கானிஸ்தானில் ஒவ்வொரு ஆஃப்கானியரும் காபூலிவாலா கதையைப் பற்றி பெருமிதத்துடன் குறிப்பிடுகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன் தஜிகிஸ்தான் சென்றிருந்தபோது, குருதேவ் அவர்களின் சிலையை திறந்துவைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அங்கு குருதேவ் மீது மக்கள் வைத்திருக்கும் மரியாதையை என்னால் மறக்க முடியாது.

உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இன்றும் தாகூர் படிப்பிற்கான பாடமாக உள்ளார். அவரது பெயரில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தாகூர் ஓர் உலகளாவிய குடிமகனாக இருந்தார், இன்றும் திகழ்கிறார் என்று கூறுவது தவறாக இருக்காது. குஜராத்துடன் அவர் வைத்திருந்த தொடர்பை இந்த தருணத்தில் உங்களிடம் எடுத்துரைக்க நான் விரும்புகிறேன். குஜராத்துடன் சிறப்பு தொடர்பை குருதேவ் வைத்திருந்தார். அவரது மூத்த சகோதரர் சத்யேந்திரநாத் தாகூர் குடிமைப் பணியில் சேர்ந்த முதல் இந்தியர் ஆவார். அவர் நீண்ட காலம் அஹமதாபாத்தில் தங்கியிருந்தார். அவர் அஹமதாபாத்தின் ஆணையராக இருந்தார். இங்கிலாந்துக்கு செல்லும் முன் அவர் அஹமதாபாத்தில்தான் தனது இளைய சகோதரருக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்தார் என நான் எங்கோ படித்திருக்கிறேன். அப்போது குருதேவுக்கு வயது 17தான். அப்போது தனது புகழ்பெற்ற நாவலான குடிதோ பாஷனின் முக்கிய பகுதிகள் சிலவற்றை எழுதினார் என்பதுடன் அஹமதாபாத்தில் சில கவிதைகளையும் எழுதியுள்ளார். ஒருவகையில் குஜராத் உட்பட நாட்டின் ஒவ்வொரு மூலையும் உலகளாவிய அளவில் குருதேவ் முன்னேற சில பங்கை அளித்துள்ளது.

நண்பர்களே,

ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் இலக்கு ஒன்றை அடையவே பிறக்கிறான் என்பதில் குருதேவ் நம்பிக்கை கொண்டிருந்தார். ஒவ்வொரு குழந்தையும் தனது இலக்கை எட்டுவதில் கல்வி முக்கியப் பங்காற்றுகிறது. ஈர்ப்பின் ஆற்றல் எனற தனது கவிதையில் அவர் விரும்பிய கல்வியை நாம் காணலாம். பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படுவதில் கல்வி மட்டும் இல்லை என்று அவர் கூறுவார். காலம் மற்றும் இடத்துடன் இணைக்கப்படாத ஒவ்வொரு மனிதனின் சமத்துவமான வளர்ச்சியை கொண்டது கல்வி. அதனால் தான் இந்திய மாணவர்கள் வெளி உலகில் என்ன நிகழ்கிறது, மற்ற நாடுகளில் எத்தனை பேர் வாழ்ந்தார்கள், அவர்களது சமூக மதிப்புகள் யாவை, அவர்களது கலாச்சார பாரம்பரியம் போன்றவை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என குருதேவ் விரும்பினார். இவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என அவர் எப்போதும் வலியுறுத்தி வந்தார். எனினும் அவர் இந்தியக் கலாச்சாரத்தை யாரும் மறந்துவிடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

அமெரிக்காவில் வேளாண்மை பயிலச் சென்ற தனது மருமகனுக்கு எழுதிய கடிதம் ஒன்றின் மூலம் அவர் இதுகுறித்து விளக்கியிருப்பதாக எனக்கு கூறப்பட்டது. வேளாண்மை பயில்வது மட்டும் போதாது என்றும் உள்ளூர் மக்களைச் சந்திப்பதும் கல்வியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் தனது மருமகனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மக்களை அறிந்து கொள்ளும்போது ஒருவர் தனது அடையாளத்தை மறந்துபோகத் தொடங்கினால் அவர் தன்னை ஒரு அறைக்குள் வைத்து பூட்டிக் கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் எழுதியுள்ளார்.

இந்திய தேசிய இயக்கத்தில் தாகூரின் கல்வி மற்றும் இந்திய சிந்தாந்தம் விலகிப் போய் விட்டது. நமது பண்டைய  பாரம்பரியத்தில் அங்கமாக இருந்த தேசிய மற்றும் உலகளாவிய சிந்தனைகள் அவரது வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது. விஸ்வ பாரதியில் அவர் கல்விக்கான ஒரு தனி உலகத்தை  உருவாக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. எளிமை இங்குள்ள கல்வியின் அடிப்படை சித்தாந்தமாகும். திறந்தவெளியில் மரங்களின் கீழ் இப்போதும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே நேரடி உரையாடல் உள்ளது. இசை, ஓவியம், நாடகம் மற்றும் நடிப்பு உள்ளிட்ட மனித குலத்தின் அனைத்து அளவீடுகளும் இங்கு இயற்கையின் மடியில் கற்பிக்கப்படுகிறது. குருதேவ் இதற்கான அடிக்கல்லை நாட்டியபோது அவர் கண்ட கனவை நனவாக்குவதை நோக்கி இந்த நிறுவனம் தொடர்ந்து முன்னேறிவருவதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். கல்வியையும் திறன் மேம்பாட்டையும் இணைக்கவும், சாமானிய மனிதனின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கவை. சுமார் 50 கிராமங்களை உருவாக்க நீங்கள் அனைவரும் இங்கு இணைந்து செயலாற்றுவதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த முயற்சி பற்றி என்னிடம் தெரிவிக்கப்பட்ட போது எனது நம்பிக்கைகள் மற்றும் லட்சியங்கள் விரிவடைந்தது. செயல்களுடன் இணைந்து நம்பிக்கை வளர்ச்சியடையும். இந்த அளவுக்கு நீங்கள் செயல்பட்டிருப்பதால் உங்களிடம் இருந்து எனது எதிர்பார்ப்புகளும் சிறிதளவு அதிகரித்திருக்கிறது.

நண்பர்களே,

2021ம் ஆண்டில் இந்த நிறுவனம் தனது 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அடுத்த 2 – 3 ஆண்டுகளில் நீங்கள் உங்களது முயற்சிகளை 50 கிராமங்களில் இருந்து 100 அல்லது 200 கிராமங்களாக விரிவுபடுத்தலாம். உங்கள் முயற்சிகளை நாட்டின் தேவைகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோளாகும். உதாரணத்திற்கு இந்த நிறுவனம் 2021ம் ஆண்டில் தனது நூற்றாண்டு விழாவை கொண்டாடும் போது, ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சார இணைப்பு கொண்ட, சமையல் எரிவாயு இணைப்பு கொண்ட, கழிவறைகள் கொண்ட, குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு தடுப்பூசிகள் அளிக்கப்பட்ட, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பற்றி அனைத்து மக்களும் அறிவாற்றல் கொண்ட 100 கிராமங்களை நீங்கள் உருவாக்க முடியும். பொது சேவை மையங்கள் மற்றும் இணையவழி படிவங்களை நிரப்புவது குறித்தும் அவர்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள்.

உஜ்வலா திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சமையல் எரிவாயு இணைப்புகள் மற்றும் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் கட்டப்படும் கழிவறைகள் ஆகியவை மகளிரின் வாழ்வை எளிமைப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

சக்தியை வழிபடும் கிராமங்களில் உங்களது முயற்சிகள் இந்த மண்ணில் மகளிருக்கு அதிகாரம் அளிப்பதற்கான பணியாகும். இதுமட்டுமின்றி இந்த 100 கிராமங்களை இயற்கையை விரும்பும் அல்லது இயற்கையை வழிபடும் கிராமங்களாக மாற்றவும் இந்த முயற்சிகள் உதவும். இயற்கையை பாதுகாப்பதற்காக நீங்கள் செயல்படுவது போலவே இந்த கிராமங்களும் உங்கள் இயக்கத்தின் ஒரு பகுதியாக ஆகும். தண்ணீர் சேமிப்புக்கு போதுமான ஏற்பாடுகளின் மூலம் தண்ணீர் பாதுகாப்பு என்ற தொலைநோக்கு பார்வையை இந்த கிராமங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். விறகுகள் பயன்படுத்தப்படுவதை தவிர்ப்பதன் மூலம் காற்று மாசடைவது தடுக்கப்பட வேண்டும். தூய்மையை மனத்தில் இருத்தி இயற்கை உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண் வளம் பாதுகாக்கப்பட வேண்டும். இதனை எட்டுவதற்கு இந்திய அரசின் கோபர் தன் திட்டம் பயன்படுத்தப்படலாம். சரிபார்ப்பு பட்டியல் ஒன்றை உருவாக்கி இந்தப் பணிகள் அனைத்தையும் நீங்கள் நிறைவேற்றலாம்.

நண்பர்களே,

இன்றைய தினம் நாம் பலவிதமான சவால்களை எதிர்கொள்கிறோம். இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் 2022ம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்க 125 கோடி இந்தியர்களும் உறுதி கொண்டுள்ளனர். இந்த உறுதியை நிறைவேற்றுவதில் கல்வியும் இதுபோன்ற கல்வி நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்க முடியும். இத்தகைய நிறுவனங்களில் இருந்து வரும் இளைஞர்கள் நாட்டிற்கு புதிய சக்தியையும் திசையையும் அளிக்க முடியும். நமது பல்கலைக்கழகங்கள் வெறும் கல்வி புகட்டும் நிறுவனங்கள் மட்டுமல்ல. சமூக வாழ்க்கையில் அவர்களது தீவிர பங்கேற்பை உறுதிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உத்தம பாரத இயக்கத்தின் கீழ் கிராமங்களின் வளர்ச்சியுடன் பல்கலைக்கழகங்கள் இணைக்கப்படுகின்றன. குருதேவின் தொலைநோக்கு பார்வையின்படி, புதிய இந்தியாவின் தேவைக்கு ஏற்ப கல்வியின் தரத்தை வலுப்படுத்த மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரைஸ் என கல்வி  உள்கட்டமைப்பு மற்றும் பாடத்திட்டங்கள் மறுமதிப்பீடு என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் உள்ள கல்வி முறையை மேம்படுத்த அடுத்த நான்காண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படும். கல்வி கட்டமைப்புக்கான உலகளாவிய முயற்சியும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் சிறந்த ஆசிரியர்கள் இந்தியக் கல்வி நிறுவனங்களில் பாடம் நடத்த அழைக்கப்படுகிறார்கள். கல்வி நிறுவனங்களுக்கு போதுமான வசதிகளை அளிக்க ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் உயர்கல்வி நிதி முகமை உருவாக்கப்பட்டுள்ளது. பெரும் கல்வி நிறுவனங்கள் உயர்தர உள்கட்டமைப்பில் முதலீடு செய்ய இது உதவும். இளம் வயதிலேயே புதுமை படைக்கும் எண்ணத்தை குழந்தைகளிடையே ஏற்படுத்த நாடு முழுவதும் 2400 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் மீது அடல் பதப்படுத்தும் ஆய்வகங்கள் மூலம் கண்ணோட்டம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வகங்களில் நவீன தொழில்நுட்பம் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.

நண்பர்களே,

கல்வியில் புதுமைக்கான வாழும் உதாரணமாக உங்கள் நிறுவனம் திகழ்கிறது. விஸ்வ பாரதியின் 11000த்தும் மேற்பட்ட மாணவர்கள் புதுமையை மேம்படுத்துவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டங்களின் அதிகபட்ச பயன்களை பெற வேண்டும். இந்தக் கல்வி நிறுவனத்தில் இருந்து தேர்ச்சி பெற்று நீங்கள் செல்கிறீர்கள். குருதேவ் அவர்களின் ஆசிகளுடன், நீங்கள் ஒரு தொலைநோக்கு பார்வையை பெற்றுள்ளீர்கள். விஸ்வ பாரதியின் அடையாளத்தை உங்களுடன் நீங்கள் சுமந்து செல்கிறீர்கள்.

அதன் பெருமிதத்தை உயர்த்த நீங்கள் உங்களின் முயற்சிகளை தொடர நான் வலியுறுத்துகிறேன். புதுமைகள் மூலம் 500-1000 மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த மாணவர்களைப் பற்றி கேள்விப்படும்போது இந்த நிறுவனத்திற்கு மக்கள் மரியாதை அளிப்பார்கள்.

குருதேவ் அவர்கள் கூறியுள்ள, “உங்களுடன் கைகோர்த்து நடக்க யாரும் தயாராக இருக்கவில்லை என்றாலும் உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுங்கள்” என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு அடி முன்னெடுத்து வைத்தால் உங்களுடன் நான்கு அடி முன்னெடுத்து வைக்க அரசு தயாராக உள்ளது என்பதை கூறுவதற்காகவே நான் இன்று இங்கு வந்திருக்கிறேன். குருதேவ் கனவு கண்ட 21ம் நூற்றாண்டை காண பொது பங்களிப்பு மட்டுமே நாட்டை முன்னெடுத்துச் செல்லும்.

நண்பர்களே,

விஸ்வபாரதி என்பது மிகவும் மதிப்புள்ள தனது வாழ்வின் புதையலைக் கொண்ட கப்பல் என குருதேவ் மகாத்மா காந்தியிடம் ஒருமுறை கூறியுள்ளார். இந்திய மக்களாகிய நாம் அனைவரும் இந்த விலை மதிப்பற்ற புதையலை மகிழ்ச்சியுடன் ஏற்பார்கள் என அவர் நம்பினார். எனவே இந்தப் புதையலை பாதுகாப்பது மட்டுமின்றி அதற்கு செறிவூட்டுவதும் நமது பொறுப்பு. உலகிற்கும் புதிய இந்தியா என்ற கனவிற்கும் விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் புதிய வழிகளைத் தொடர்ந்து காண்பிக்கட்டும். இத்துடன் நான் எனது உரையை நிறைவு செய்கிறேன். நன்றி.

உங்கள் பெற்றோர், இந்த கல்வி நிறுவனம் மற்றும் இந்த நாட்டின் கனவுகளுடன் உங்களது கனவும் நனவாகட்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி.