அறிவியல், தொழில்நுட்பம், புதுமைப் படைப்பு துறைகளில் ஒத்துழைப்புக் குறித்த இந்தியா – டென்மார்க் ஒப்பந்தம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையிடம் இன்று (27.06.2018) விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்தியா – டென்மார்க் அறிவியல் தொழில்நுட்ப உறவுகளில் 2018 மே 22-ம் தேதி, ஒரு வரலாற்று சிறப்புமிக்க மைல் கல் எட்டப்பட்டது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைப் படைப்பு ஆகியவற்றுக்கு என இந்தியா மற்றும் டென்மார்க்குக்கு இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம் அந்த நாளில் கையெழுத்திடப்பட்டது.
பயன்கள்:
இந்த ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளில் புதிய அத்தியாயத்தை தொடங்கும். இந்த ஒப்பந்தத்தால் அறிவியல், தொழில்நுட்பம் , புதுமைப் படைப்பு ஆகியவற்றில் பரஸ்பரம் அக்கறையுள்ள விஷயங்களில் குறிப்பிடத்தக்க கருத்தொற்றுமை காரணமாக ஏற்படும் வலுவை இருதரப்பும் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் டென்மார்க்குக்கும் இடையே அறிவியல், தொழில்நுட்பம், புதுமைப்படைப்பு ஆகியவற்றுக்குள் பொது அக்கறையுள்ள விஷயங்களில் ஊக்குவிப்பு, மேம்பாடு, மற்றும் வசதி ஏற்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது இந்த ஒப்பந்தம். அறிவியல் அமைப்புகளைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சோதனைக் கூடங்கள், இந்தியா மற்றும் டென்மார்க் நிறுவனங்கள் ஆகியன இந்த ஒப்பந்தத்தில் அக்கறை கொண்டோரில் முக்கியமானவர்கள். புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி, தண்ணீர், பொருட்கள் அறிவியல், குறைந்தவிலை மருத்துவப் பராமரிப்பு, செயற்கை உயிரியல், செயல்பாட்டு நிலை மூலம் உணவு மற்றும் நீலப்பொருளாதாரம் ஆகிய துறைகள் உடனடி ஒத்துழைப்புக்கான துறைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.