Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டிஜிட்டல் இந்தியா மூலம் பயனடைந்தோருடன் பிரதமரின் உரையாடல்


கடந்த சில நாட்களாக அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் பலன் பெற்றவர்களுடன் உரையாடுவதற்கும் அவர்களது கருத்துகளைக் கேட்பதற்கும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இது எனக்கு ஓர் அற்புதமான அனுபவம். கோப்புகளைக் கடந்தும் வாழ்க்கை இருக்கிறது என்று திடமாக நம்புகிறேன். சமூகத்தில் ஏற்படும் பல மாற்றங்களைக் குறித்தும் இத்திட்டங்களின் மூலம் பலனடைந்தவர்கள் பெற்ற அனுபவம் குறித்தும் அறிந்த பிறகு எனது ஆத்மாவே திருப்தி அடைந்துள்ளது. எனது பணியைத் தொடர்வதற்கான புதிய சக்தியை எனக்குள் தூண்டிவிட்டீர்கள். டிஜிட்டல் இந்தியா மூலம் பல்வேறு பலன்களைப் பெற்றவர்களுடன் உரையாடும் வாய்ப்பை இன்று பெற்றிருக்கிறேன்.

இன்றைய நிகழ்ச்சியில் பொதுச் சேவை மையங்களின் (Common Service Centres) மூலம் மூன்று லட்சம் ஏழை மக்களுடன் உரையாடுவதாக அறிந்தேன். இந்த சேவை மையங்களை கிராம அளவிலான தொழில்முனைவோர் (Village Level Entrepreneurs) இயக்குகிறார்கள். இதன் மூலம் பயன் பெறும் குடிமக்கள் இங்கே கூடியிருக்கிறார்கள். தேசிய தேசிய தகவல் மையம் (NIC) வாயிலாக டிஜிட்டல் இந்தியாவின் சேவைகளால் பலன்பெறுவோர் இங்கே கூடியிருக்கிறார்கள். அத்துடன், தேசிய அறிவுத் தொடர்பிணைப்புடன் இணைந்துள்ள (National Knowledge Network – NKN) 1600 நிறுவனங்கள், அவற்றின் மாணவர்கள், ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோரும் இங்கே பங்கேற்றுள்ளனர். அரசின் திட்டங்களின் கீழ் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வணிகச் செயல்முறை அயல்பணி (BPO) ஊழியர்களும் இங்கே இருக்கின்றனர். மேலும், நடமாடும் உற்பத்திப் பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் எங்களுடன் உரையாடுவார்கள், தங்களது உற்பத்திப் பொருட்களைக் காட்டுவார்கள்.

நாடு முழுவதும் உள்ள “எனது அரசாங்கம்” (MyGov) என்ற இணைய இயக்கத்தின் தொண்டர்கள் எங்களோடு இணைந்துள்ளனர். இதில் இணைந்துள்ள 50 லட்சத்துக்கும் மேற்பட்டோருடன் ஒரே தலைப்பு குறித்து உரையாடுவது வித்தியாசமான அனுபவம் என உணர்கிறேன். மக்களின் அனுபவங்களை அறிவதற்கும் உரையாடுவதற்கும் ஓர் அற்புதமான நிகழ்வாகக் கருதுகிறேன்.

நாட்டின் சாமானிய, ஏழை மக்கள், விவசாயிகள், இளைஞர்கள், கிராம மக்கள் ஆகியோரை டிஜிட்டல் உலகத்துடன் இணைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு டிஜிட்டல் இந்தியா தொடங்கப்பட்டது. கடந்த நான்காண்டுகளில் இந்த ஒரே குறிக்கோளில் கவனம் செலுத்தினோம். கிராமங்களுக்குள் கண்ணாடிஇழை இணைப்பு (Optical Fibre network) மூலம் தொடர்பு ஏற்படுத்துவது முதல் கோடிக்கணக்கானோருக்கு டிஜிட்டல் வழியாக எழுத்தறிவு அளிப்பது, கைபேசிகள் வழியாக அரசின் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்லுதல், மின்னணு பொருட்களை உற்பத்தி செய்தல், தொலைதூரப் பகுதிகளில் பி.பி.ஓ.களை அமைத்து “தொடங்குக இந்தியா” திட்டத்துக்கு உத்வேகம் அளித்தல் உள்பட பல்வேறு செயல்களின் மூலம் டிஜிட்டல் அதிகாரமளித்தலின் ஒவ்வோர் அம்சத்திலும் இணைந்து செயல்பட்டோம். இதுபோல் பல்வேறு முன்முயற்சிகள் உள்ளன. இன்றைக்கு மூத்த குடிமக்கள் ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு உரிய ஆவணங்கள் சான்றிதழ்களைக் காட்டுவதற்கு நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியதில்லை. தங்களது கிராமங்களில் உள்ள பொதுச் சேவை மையங்களில் (Common Service Centres) தங்கள் வேலையை முடித்துக் கொள்ளலாம். விவசாயிகள் வானிலை நிலவரம், பயிர் நிலைமை, மண் நிலைமை குறித்து தேவையான விவரங்கள் மட்டுமின்றி, தங்களது உற்பத்திப் பொருட்களைக் கைபேசி வழியாகவோ பொதுச் சேவை மையங்கள் மூலமாகவோ தேசிய வேளாண் சந்தை (National Agriculture Market) எனப்படும் டிஜிட்டல் சந்தையின் மூலமாக விற்பனையும் செய்யலாம்.

இன்றைக்கு கிராமப்புற மாணவர்கள் பள்ளி, கல்லூரிப் படிப்புகளுக்கு வெறும் புத்தகங்களை மட்டும் சார்ந்திருக்கவில்லை. லட்சக்கணக்கான வலைதளங்களில் உள்ள டிஜிட்டல் நூலகங்களின் வழியாகவும் புத்தகங்களைப் படித்து கற்றுக் கொள்கின்றனர். உதவித் தொகைகளைப் பெறுவதற்கு பள்ளிக்கூட வழிமுறைகளைச் சார்ந்திருப்பதில்லை. உதவித்தொகைகள் அவரவர் வங்கிக் கணக்குகளில் சேர்க்கப்படுகின்றன. இவையெல்லாம் தொழில்நுட்பம் மற்றும் தகவல் புரட்சி மூலமாகவே சாத்தியமாகின்றன. அண்மையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில், ரயில் டிக்கெட் வாங்குவதற்கு வரிசையில் பல மணி நேரம் நிற்கத் தேவையில்லை என்று கிராமங்களிலும் சிறிய ஊர்களிலும் உள்ள மக்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். அதைப் போல் சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புக்காகவும், மின்சாரக் கட்டணம், குடிநீர்க் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்த நேரடியாகச் செல்லத் தேவையில்லை என்பதையும் அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். இவையெல்லாம் இன்று சாத்தியமாகியிருக்கிறது. ஒரு சொடுக்கில் இவையெல்லாம் சாத்தியமாகிறது. அது மட்டுமல்ல, ஒரு சிலருக்கு மட்டுமின்றி, எல்லோருக்குமே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இத்தகைய பெரும்பாலான சேவைகளை நாடு முழுவதும் உள்ள பொதுச் சேவை மையங்கள் மூலம் பெற்றுக் கொள்வது உறுதியாகியுள்ளது.

இன்று வரையில் நாடு முழுவதும் மொத்தம் 3 லட்சம் பொதுச் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மிகப் பெரிய டிஜிட்டல் சேவை மையங்கள் ஒரு லட்சத்து 83 ஆயிரம் கிராமப் பஞ்சாயத்துகளில் பரவியிருக்கின்றன. தற்போது, கிராம அளவிலான தொழில்முனைவோராக (Village Level Entrepreneurs) லட்சக்கணக்கான இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களில் 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் பெண்கள் என்பது மன நிறைவு தருகிறது. இந்த மையங்கள் மூலம் 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த மையங்கள் அதிகாரமளிக்கும் மையங்களாக மட்டுமின்றி வேலைவாய்ப்பு, கல்வி, தொழில்முனைவுக்கு உதவுபவையாகவும் இருக்கின்றன.

“என் அரசு” (MyGov) தளத்தில் இதுவரை 60 லட்சம் தன்னார்வத் தொண்டர்கள் இணைந்துள்ளனர். இது மக்கள்சார் அரசின் தளமாக அமைந்துள்ளது. இதில் இணைந்துள்ள இளைஞர்கள் ஆலோசனைகள், யோசனைகள் அளிப்பதுடன் தன்னார்வத் தொண்டுப் பணிகளிலும் முழு அளவில் ஈடுபடுகிறார்கள்.

அரசின் திட்டங்கள் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடும் பல்வேறு அமைச்சகங்களுக்கு பொதுமக்களின் யோசனைகளைக் கொண்டுசேர்ப்பதிலும் இளைஞர்களை இணைப்பதிலும் “என் அரசு” (MyGov) தளம் வலுவாக செயல்படுகிறது. நம் மக்கள் ஈடுபட்ட தன்னார்வப் பணிகளில் சில உதாரணங்களை உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன். தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Mission), ஜன்தன் யோஜனா (Jan Dhan Yojana) மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களுக்கான இலச்சினைகள், முழக்கங்கள் ஆகியவை பொதுமக்கள் மூலம் தெரிவித்த யோசனைகளின் அடிப்படையில்தான் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக அரசு தனியாக நேரம் ஒதுக்கத் தேவையில்லை. மக்கள் பங்கேற்கும் இந்த தளத்தை அரசு அமைத்துள்ளது.

“என் அரசு” (MyGov) தளத்தின் கீழ் மாதந்தோறும் நான் நிகழ்த்திவரும் மனதின் குரல் (‘Mann ki Baat) உரைக்காக நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள மக்கள் தங்களது யோசனைகளைக் கூறுகிறார்கள். இன்றைக்கு கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையை டிஜிட்டல் இந்தியா மாற்றிவருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு, அதிகாரமளித்தல் ஆகிய நான்கு தேவைகளையும் டிஜிட்டல் இந்தியா பூர்த்தி செய்து வருகிறது. சாதாரண இந்தியனின் வாழ்க்கையை டிஜிட்டல் இந்தியா மேம்படுத்தும் என்று நம்புகிறேன். இந்த எதிர்பார்ப்புகளுடன் உங்கள் அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன். அதே சமயம் ஒரு வேண்டுகோள் உண்டு. பொதுச் சேவை மையங்களின் பணியாளர்களிடம் நிறைய எதிர்பார்க்கிறேன். அவர்கள் என் பேச்சைக் கவனிக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் திரையில் காண்கிறேன்.

பொதுச் சேவை மையங்களின் பணியாளர்கள் தங்களது கைகளைத் தூக்குவீர்களா…? எனக்கு ஒரு உபகாரம் செய்வீர்களா? அதற்கு அடையாளமாகக் கைகளை உயர்த்துவீர்களா…? பொதுச் சேவை மையங்களைக் குறிப்பிடுவதால், பி.பி.ஓ.க்களைச் சேர்ந்த பணியாளர்களைக் கேட்கவில்லை என்று நினைக்காதீர்கள்.

வரும் ஜூன் மாதம் 20ம் தேதி, காலை 9.30 மணியளவில் நான் விவசாயிகளுடன் கலந்துரையாடப் போகிறேன். (இதைக் குறித்துக் கொள்ளுங்கள்) வேளாண் தொழிலை சேர்ந்த சகோதர சகோதரிகளுடன் உரையாடப் போகிறேன். எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் நீங்கள்? பொதுச் சேவை மையங்களில் தற்போது 10, 20 பேர் இருக்கிறார்கள். வரும் ஜூன் 20ம் தேதி அந்த மையங்களுக்கு 50-100 பேரை அழைத்து வர இயலுமா…? அவர்களுடன் பேச விரும்புகிறேன். இதற்குத் தயாராக இருப்போர் தயவு செய்து கைகளை உயர்த்துங்கள். விவசாயிகளுடன் பேசுவோம். அந்த விவாதம் அவர்கள் சம்பந்தப்பட்ட தலைப்பாகத்தான் இருக்கும்.

அது உங்களது பொதுச் சேவை மையங்களை வலுப்படுத்தும். இந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுச் சேவை மையங்களின் மூலம் நாட்டின் பிரதமர் கிராம மக்களிடம் தனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்வார். உதாரணத்திற்கு, நோய்த்தடுப்பூசி போடப்படுவதற்கு முன்பாக மக்களுடன் பேச விரும்புவதைப் போல இருக்கலாம். இப்படிச் செய்வதால், தடுப்பூசி போடும் இயக்கம் வெற்றிகரமாக அமையும். தொலைக்காட்சிகளின் மூலம் பிரசாரம் செய்வதை விட இது பல மடங்கு பயன்தரும். ஜூன் 20ம் தேதி காலை 9.30 மணிக்கு 50, 100 விவசாயிகளை அழைத்து வாருங்கள். வேளாண்துறையில் கொண்டுவரும் மாற்றங்கள் குறித்து அவர்களுடன் பேசுகிறேன். இத்தகைய திட்டங்களினால், சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் கூட பலன் பெறலாம். அவர்களது அனுபவங்களை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

நண்பர்களே,

இது ஓர் சுகமான அனுபவம். நாட்டில் ஏற்படும் இந்த மகத்தான மாற்றம் உங்களாலும் உங்களது தகவல்களாலும் மட்டுமே சாத்தியமாகிறது.

சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகியவற்றின் மூலம் மேம்பாட்டையும் முன்னேற்றத்தையும் அடைவதற்கு இந்த அரசு பாடுபட உறுதி பூண்டுள்ளது.
உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்! எல்லோருக்கும் நன்றி!
வணக்கம்!

***