Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நிதி ஆயோக் ஆட்சிமன்றக் குழுவின் நான்காவது கூட்டத்தில் பிரதமரின் நிறைவுரை

நிதி ஆயோக் ஆட்சிமன்றக் குழுவின் நான்காவது கூட்டத்தில் பிரதமரின் நிறைவுரை

நிதி ஆயோக் ஆட்சிமன்றக் குழுவின் நான்காவது கூட்டத்தில் பிரதமரின் நிறைவுரை

நிதி ஆயோக் ஆட்சிமன்றக் குழுவின் நான்காவது கூட்டத்தில் பிரதமரின் நிறைவுரை


நிதி ஆயோக் ஆட்சி மன்றக்குழுவின் நான்காவது கூட்டத்தில் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று (17.06.2018) நிறைவுரையாற்றினார்.

பல்வேறு மாநில முதலமைச்சர்கள் அளித்துள்ள ஆலோசனைகள் மற்றும் ஆக்கப்பூர்வமான விவாதங்களை வரவேற்பதாகக் கூறிய பிரதமர் முடிவெடுக்கும் தருணத்தில் இந்த ஆலோசனைகள் அக்கறையோடு பரிசீலிக்கப்படும் என்று கூடியிருந்தவர்களுக்கு உறுதியளித்தார். இவர்களால் தெரிவிக்கப்பட்ட செயல்பாட்டுக்குரிய அம்சங்கள் குறித்து 3 மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று நிதி ஆயோகை அவர் கேட்டுக் கொண்டார்.

நிதி ஆயோகால் அடையாளம் காணப்பட்ட 115 விருப்பம் தெரிவிக்கும் மாவட்டங்கள் போன்று மாநிலத்தில் உள்ள மொத்த ஒன்றியங்களில் 20 சதவீதத்தை விருப்பம் தெரிவிக்கும் ஒன்றியங்களாக தங்களின் சொந்த அளவுகோலுடன் மாநிலங்கள் தெரிவு செய்யலாம் என்றும் அவர் கூறினார்.

சுற்றுச்சூழல் பற்றி முதலமைச்சர்கள் எழுப்பிய பிரச்சினைகள் குறித்து பேசிய பிரதமர், அரசு கட்டிடங்கள், அதிகாரப்பூர்வ குடியிருப்புகள், தெரு விளக்குகள் ஆகியவற்றிற்கு அனைத்து மாநிலங்களும் எல்இடி விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நீர் சேமிப்பு, வேளாண்மை, மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்ற விஷயங்கள் பற்றி பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் தெரிவித்த மற்ற பல ஆலோசனைகளுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

விதைப்பதற்கு முன்னும், அறுவடைக்குப் பின்னும் உள்ள காலகட்டங்கள் உட்பட “வேளாண்மை மற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்” எனும் இரண்டு விஷயங்களில் ஒருங்கிணைந்த கொள்கை அணுகுமுறைக்கான பரிந்துரைகளை செய்வதற்கு மத்தியப்பிரதேசம், பீகார், சிக்கிம், குஜராத், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ஆந்திரப்பிரதேசம் ஆகியவற்றின் முதலமைச்சர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

“வரிசையில் கடைசியில் நிற்பவரை” அடையாளம் காண்பது மிக முக்கியமானது என்றும், நிர்வாகத்தின் பயன்கள் அவர்களை சென்றடைய வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார். அதேபோல், சமூகநீதி என்பதும் நிர்வாக நோக்கத்தில் முக்கியமான ஒன்று என்றும் அவர் தெரிவித்தார். இத்தகைய மதிப்புமிகு பணிகளுக்கு நெருக்கமான ஒத்துழைப்பும், தொடர்ச்சியான கண்காணிப்பும் தேவைப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

115 விருப்பம் தெரிவிக்கும் மாவட்டங்களில் கூடுதலாக 45 ஆயிரம் கிராமங்களுக்கு ஏழு முக்கிய திட்டங்களுக்கு 2018 ஆகஸ்ட் 15-க்குள் அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு உறுதிபூண்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற மத்திய அரசின் வழிகாட்டு கொள்கை குறித்து விரிவாக எடுத்துரைத்த பிரதமர், மத்திய அரசின் திட்டங்கள் குறிப்பிட்ட மக்களுக்கோ, குறிப்பிட்ட பகுதிகளுக்கோ வரையறுக்கப்பட்டவை அல்ல என்றும் சமச்சீரான வழியில் பாகுபாடு இன்றி அனைவரையும் அடையவேண்டும் என்றும் கூறினார்.

நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களும் தற்போது, சவுபாக்யா திட்டத்தின்கீழ், மின்சார வசதி பெற்றுள்ளன என்ற பிரதமர், நான்கு கோடி வீடுகளுக்கு தற்போது மின் இணைப்புகள் தரப்பட்டுள்ளன என்றார். 40 சதவீதத்தை விட குறைவாக இருந்த ஊரக துப்புரவு பணிநிலை கடந்த நான்காண்டுகளில் 85 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். மக்கள் நிதித் திட்டத்தை செயல்படுத்திய பின் நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் வங்கி நடைமுறையோடு இணைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். அதேபோல், உஜ்வாலா திட்டத்தின் கீழ், அனைவருக்கும் சமையல் எரிவாயு இணைப்பும், இந்திர தனுஷ் இயக்கத்தின் மூலம் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைத்திருப்பதாக அவர் கூறினார். 2022-க்குள் அனைவருக்கும் வீட்டு வசதி என்பதை நோக்கி மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏழை, எளிய மக்களின் நலனுக்காக இந்தத் திட்டங்கள் 100 சதவீதம் அமலாவதற்கான முயற்சிகளில் அனைத்து முதலமைச்சர்களும் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நலத்திட்டங்களின் அமலாக்கம் என்பது மக்கள் வாழ்க்கையில் நடைமுறை மாற்றங்களையும் கொண்டுவந்திருப்பதாக பிரதமர் கூறினார். வேம்பு கலந்த யூரியா, உஜ்வாலா திட்டம், மக்கள் நிதி கணக்குகள், ரூபே வங்கி அட்டைகள் ஆகியவை பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

தூய்மை இந்தியா இயக்கம் பற்றி உலகம் முழுவதும் விவாதிக்கப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார். கடந்த நான்காண்டுகளில் 7.70 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த ஆண்டான அக்டோபர் 2, 2019-க்குள் 100 சதவீத துப்புரவை நோக்கி அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

தண்ணீர் சேமிப்பு, நீர் நிர்வாகம் ஆகியவற்றிற்கு போர்க்கால அடிப்படையில் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
பொருளாதாரம் பற்றி பேசிய பிரதமர், இந்தியா விரைவில் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உருவெடுக்கும் என்று உலகம் எதிர்பார்க்கிறது என்றார். செலவுகளை சரி செய்யவும், உற்பத்தி அடிப்படையில் ஊக்கத்தொகை ஒதுக்கீடுகள் செய்யவும், நிதிக்குழுவிற்கு புதிய ஆலோசனைகளை மாநிலங்கள் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

முதலீட்டாளர்கள் மாநாடுகளுக்கு தற்போது மாநிலங்கள் ஏற்பாடு செய்வது குறித்து அவர் மகிழ்ச்சி வெளியிட்டார். ஏற்றுமதிகள் மீது மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் ஆலோசனை கூறினார். “வர்த்தகம் செய்வதை எளிதாக்குவது” என்ற செயல் திட்டத்திற்கு ஊக்கமளிக்க மாநிலங்களை அவர் வலியுறுத்தினார். வர்த்தகம் செய்வதை எளிதாக்குவது பற்றி மேலும் பல ஆலோசனைகள் கிடைக்க அனைத்து மாநிலங்களும் பங்கேற்கும் கூட்டம் ஒன்றிற்கு நிதி ஆயோக் அழைப்பு விடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். “சுலபமாக வாழ்வது” என்பது சாமானிய மக்களின் இக்கால தேவை என்றும், இது தொடர்பான நடவடிக்கைகளை மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
வேளாண் துறையில் கார்ப்பரேட் முதலீடு என்பது இந்தியாவில் மிகக் குறைவாக உள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். உணவுதானிய கிடங்கு, போக்குவரத்து மதிப்புக்கூட்டுதல், உணவுப்பதனம் போன்ற துறைகளில் கார்ப்பரேட் முதலீட்டை அதிகப்படுத்த மாநிலங்கள் புதிய கொள்கைகளை வகுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

வெற்றிகரமாக ஏலம் விடப்பட்ட நிலக்கரி சுரங்கங்கள் உற்பத்தியை வெகு விரைவில் துவங்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். இது தொடர்பாக மாநிலங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மாவட்ட தாதுப்பொருள் அறக்கட்டளைகள் அமைப்பது, ஏழைகளுக்கும், பழங்குடியினருக்கும் பேருதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

நிதி சேமிப்பு, இயற்கை வளங்களை நன்கு பயன்படுத்துவது போன்ற பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு, மக்களவைக்கும், மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும், ஒரே நேரத்தில், தேர்தல் என்பது குறித்து பரவலான விவாதமும், கலந்துரையாடல்களும் நடத்தப்படவேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

நிறைவாக, முதலமைச்சர்களின் ஆலோசனைகளுக்குப் பிரதமர் மீண்டும் நன்றி தெரிவித்தார்.

***