இந்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு சேவை (ஐ.பி.ஈ.எஸ்.எஸ்) என்ற பெயரில் பெட்ரோலியம் மற்றும் பாதுகாப்பு அமைப்பின் தொழில்நுட்ப பிரிவில் குழு ‘ஏ’ பணிகள் அமைப்பிற்கும் பணியாளர் பதவிகள் ஆய்விற்கும் பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
இந்த நடவடிக்கை மூலம் பெட்ரோலியம் மற்றும் பாதுகாப்பு அமைப்பின் திறனும், திறன்பட்ட செயலும் மேம்படுவதுடன் குழு ‘ஏ’ பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வாய்ப்பும் அதிகரிக்கிறது.
பின்னணி
பெட்ரோலியம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு (பி.ஈ.எஸ்.ஓ) மத்திய தொழிலியல் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் சார்பு அலுவலகம் ஆகும். இந்த அமைப்பு 1898 முதல் வெடிபொருட்கள், அழுத்தி அடைக்கப்பட்ட வாயுக்கள், பெட்ரோலியம் போன்ற பொருட்களின் பாதுகாப்பை வரன்முறைப்படுத்தும் ஒருங்கிணைப்பு அமைப்பாக செயல்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக பி.ஈ.எஸ்.ஓ-வின் பொறுப்புகளும், பங்கு பணியும் பல மடங்காக உயர்ந்து பல்வேறு துறைகளுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த அமைப்பு வெடிபொருட்கள், பெட்ரோலியம், அழுத்தி அடைக்கப்பட்ட வாயுக்கள், அதிக அழுத்த கலன்கள், வாயு சிலிண்டர்கள், தொலைதூரத்திற்கு பதிக்கப்படும் குழாய் பாதைகள், திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு, அழுத்தி அடைக்கப்பட்ட இயற்கை வாயு, வாகனங்களுக்கான திரவ பெட்ரோலிய வாயு போன்ற பல்வேறு பொருட்கள் தொடர்பான விஷயங்களை கையாளுகிறது. பி.ஈ.எஸ்.ஓ-வின் உரிமம் பெற்ற அலுவலக இடங்கள் மற்றும் இதர செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள மிக அதிகமான முன்னேற்றம் இதன் பணிப்பளு உயர்ந்திருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
தற்போது பி.ஈ.எஸ்.ஓ-வில் தொழில்நுட்ப குழு ஏ பதவிகள் 137 உள்ளன. இதில் 60 ஜூனியர் கால ஊதிய வரம்பு நிலை அதிகாரிகள் 46 சீனியர் கால ஊதிய வரம்பு நிலை அதிகாரிகள், 23 ஜூனியர் நிர்வாக நிலை (நிலை 12) அதிகாரிகள், 7 ஜூனியர் நிர்வாக நிலை (நிலை 13) அதிகாரிகள், மற்றும் 1 முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டாளர் என்ற பதவி பெயர்கொண்ட சீனியர் நிர்வாக நிலை அதிகாரிகள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அனைத்து நிலைகளிலும் தேக்கநிலை அதிகம் இருப்பதை சரி செய்யவும், பணியாளர்களிடையே இதுகுறித்த மனப்பான்மையை மேம்படுத்தவும், அவர்களது செயல்திறனை அதிகரிக்கவும் பி.ஈ.எஸ்.ஓ-வில் தொழில்நுட்ப பதவிகளில் ஐ.பி.ஈ.எஸ்.எஸ் என்ற பெயர் கொண்ட குழு ஏ பணிகள் என்ற பிரிவை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாற்றியமைக்கப்பட்ட இந்த புதிய சேவைப் பணியிடங்களில் நிலை 13-ல் ஐந்து பணியிடங்களையும், நிலை 12-ல் மூன்று பணியிடங்களையும் உயர்த்தி அதனை ஈடுகட்டும் வகையில் நிலை 11-ல் எட்டு பணியிடங்களை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
*****