புது தில்லி, தெற்கு பிளாக்கில் அமைந்துள்ள பிரதம மந்திரி அலுவலகம் தொடர்பாக அந்த அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பல விண்ணப்பப் படிவங்களும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (2005) கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணங்களும் பெறப்படுகின்றன. மேலும், இந்த அலுவலகத்துக்கு வரப்பெற்ற அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலிப்பதற்காகப் பிரதமர் அலுவலகத்தில் தனியாகத் தகவல் உரிமைக்கான பிரிவு (RTI Wing) தொடங்கப்பட்டுள்ளது.
2. இது தவிர, தகவல் உரிமை கோரி விண்ணப்பங்களை இணையவழியாகவும் அனுப்பலாம். இணையதள முகவரி RTI Online Portal.
3. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட பல்வேறு கட்டண விகிதங்களை உரிய ரசீதைப் பெற்றுக்கொண்டு பணமாகவோ இந்திய அஞ்சல் ஆணை (IPO), கேட்பு வரைவோலை (DD), ‘Section Officer, PMO’ என்ற பெயரில் பெறப்படும் வங்கிக் காசோலையாகவோ (Banker’s Cheque) தகவல் அறியும் உரிமைப் பிரிவு பெற்றுக் கொள்கிறது. இணையவழியாக விண்ணப்பிப்போர் அதற்கான கட்டணத்தையும் இணைய வழியாகச் செலுத்தலாம்.
4. அத்துடன், பிரதமர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்ட படிவங்களின் நிலை குறித்து அறிவதற்கான வசதியும் உண்டு. மேலும், விண்ணப்பங்கள் குறித்துத் தேவைப்படும் தகவல்களையும் அறிந்துகொள்ளலாம். பிரதமர் அலுவலகத் தகவல் அறியும் உரிமைப் பிரிவு அளித்துள்ள மேலும் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன :
முகவரி | தகவல் அறியும் உரிமைப் பிரிவு, பிரதமர் அலுவலகம், தெற்கு பிளாக், புது தில்லி 110 011. |
தொலைபேசி எண். | 011–23382590 |
நேரம் | காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை |
கிடைக்கும் வசதிகள் | அ) தகவல் அறியும் உரிமைக்கான விண்ணப்பப் படிவங்களைப் பிரதமர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து நேரடியாகவும் அஞ்சல் மூலமாகவும் பெற்றுக்கொள்ளுதல். ஆ) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (2005) கீழ் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்களைப் பணமாகவும் இதர வழிகளிலும் பெற்றுக் கொள்ளுதல் இ) சம்பந்தப்பட்ட படிவங்களின் நிலை குறித்து விண்ணப்பித்தோர் அறிந்துகொள்ள வசதி. |
கட்டணங்கள் | விண்ணப்பப் படிவத்தின் கட்டணம்: ரூ.10 மற்றும் இதரக் கட்டணங்கள்: – அ) ‘ஏ 3’ அல்லது அதற்குச் சிறிய தாளில் விண்ணப்பித்தால், ஒவ்வொரு பக்கத்துக்கும் தலா ரூ. 2. ஆ) பெரிய அளவில் எடுக்கப்படும் நகலுக்கான கட்டணம். இ) தகவல்களைக் குறுந்தகட்டிலோ குறு வட்டிலோ பதிவு செய்து அளித்தால், அதற்கு உண்டான கட்டணம். ஈ) ஆவணங்களை ஆராய்வதற்கு முதல் ஒரு மணிநேரத்துக்குக் கட்டணம் இல்லை. அதன் பின் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ரூ. 5 கட்டணம் வசூலிக்கப்படும். உ) அளிக்கப்படும் தகவல்களுக்கான கட்டணம் ரூ. 50 என்ற அளவுக்குக் கூடுதலாக இருந்தால், அதை அனுப்பவதற்கான அஞ்சல் கட்டணம். |
கட்டணச் சலுகை | வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் தகவல்களை அறிந்துகொள்ள விரும்பினால், அவர்கள் விண்ணப்பிப்பதற்குக் கட்டணம் ஏதும் இல்லை. ஆனால், அவர்கள் உரிய அரசு அதிகாரியிடமிருந்து வறுமைக் கோட்டுக் கீழே இருப்பதற்கான சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும். | தகவல் அறியும் உரிமைப் பிரிவு |
---|