Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஈரான் அதிபரின் இந்திய விஜயத்தை முன்னிட்டு, வெளியிடப்பட்ட இந்தியா-ஈரான் கூட்டறிக்கை


இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஈரான் அதிபர் மேதகு டாக்டர் ஹாசன் ரோஹானி, இந்தியாவில் பிப்ரவரி 15-17, 2018-ல் தனது முதலாவது அரசு முறைப் பயணம் மேற்கொண்டார்.

  • இந்தப் பயணத்தின்போது, ஈரான் அதிபர் டாக்டர் ஹாசன் ரோஹானியுடன் மத்திய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட உயர்மட்டக் குழுவும் வந்தது. அவருக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையின் முற்றத்தில் பிப்ரவரி 17-ல் நட்புரீதியான மற்றும் மனப்பூர்வமான வரவேற்பு அளிக்கப்பட்டது. வருகை தந்த விருந்தினரைக் கவுரவிக்கும் வகையில், குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த், அரசு முறையிலான இரவு விருந்து ஒன்று அளித்தார். பிரதமர் திரு.நரேந்திர மோடி மற்றும் அதிபர் டாக்டர் ஹாசன் ரோஹானி இடையே பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிபரைக் கவுரவிக்கும் வகையில், அவருக்கு இந்தியப் பிரதமரும் மதிய விருந்து அளித்தார். அதிபரை மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர், வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோர் சந்தித்துப் பேசினர். அதிபர் ரோஹானி, ஐதராபாத்துக்கு பிப்ரவரி 15-16, 2018-ல் பயணம் மேற்கொண்டார்.
  • சுமூகமான சூழலில், இருதரப்பு, பிராந்திய மற்றும் பல்தரப்பு விவகாரங்கள் குறித்து விரிவான மற்றும் பயனுள்ள பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஜனவரி 23, 2003-ல் உருவாக்கப்பட்ட “புதுதில்லி பிரகடன”த்தில் குறிப்பிடப்பட்ட இருதரப்பு நல்லுறவு மேம்பாட்டுக் கொள்கைகளை இரு தரப்பினரும் நினைவுகூர்ந்தனர். மேலும், ஈரானுக்கு பிரதமர் மோடி, மே 2016-ல் பயணம் மேற்கொண்டது முதல், இருதரப்பு நல்லுறவில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து இருதரப்பிலும் திருப்தியை வெளிப்படுத்தினர். மேலும், பன்முக இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், மேலும் தீவிரப்படுத்தவும் தங்களது பொதுவான உறுதியை வலியுறுத்தினர். இரு நாடுகளுக்கும் இடையேயான பரஸ்பரம் பயனளிக்கும் நல்லுறவு, இரண்டாயிரம் ஆண்டு பழமையான கலாச்சார மற்றும் நாகரீக பிணைப்பின் வலுவான அடித்தளத்தின் அடிப்படையில் உருவானதை இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். வலுப்படுத்தப்பட்ட இருதரப்பு நல்லுறவானது, பிராந்திய ஒத்துழைப்பு, அமைதி, வளம் மற்றும் நிலைத்தன்மைக்குப் பங்களிப்பைச் செய்யும் என்ற கருத்தைப் பரிமாறிக் கொண்டனர்.

 

  • கீழ்க்காணும் ஆவணங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதை அடுத்து பிரதமர் மோடி, அதிபர் ரோஹானி முன்னிலையில் பார்வையிட்டு, ஊடகங்களுக்கு கூட்டாகப் பேட்டியளித்தனர்:

 

  • இரட்டை வரிவிதிப்பு தப்பு மற்றும் வருவாய் மீதான வரிகள் விவகாரத்தில் நிதி ஏய்ப்பைத் தடுப்பதற்கான ஒப்பந்தம்
  • தூதரக பாஸ்போர்ட்களை வைத்திருப்பவர்களுக்கு விசா பெற வேண்டிய அவசியத்திலிருந்து விலக்கு அளிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை
  • நாடுகடத்துதல் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்கான ஆவணங்கள் பரிமாற்றம்
  • பாரம்பரிய மருத்துவ முறைகள் துறையில் ஒத்துழைப்புக்காகப் புரிந்துணர்வு உடன்படிக்கை
  • பரஸ்பரம் பலன் அளிக்கும் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் வகையில், வர்த்தகத் தீர்வு நடவடிக்கைகளுக்காக வல்லுநர் குழுவை உருவாக்க புரிந்துணர்வு உடன்படிக்கை.
  • வேளாண்மை மற்றும் அதுதொடர்பான துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை
  • சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை
  • அஞ்சல் துறை ஒத்துழைப்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை
  • ஈரானின் துறைமுகம் மற்றும் கடல்சார் அமைப்புக்கும் (PMO), இந்தியாவின் துறைமுகங்கள் சர்வதேச நிறுவனத்துக்கும் (IPGL) இடையே, சபாகரின் முதல் கட்டமான ஷாகித் பெகேஸ்தி துறைமுகத்துக்கான இடைக்காலக் குத்தகை ஒப்பந்தம்

இருதரப்பு பரிமாற்றங்கள்

  • அனைத்து மட்டங்களிலும் இருதரப்பு பரிமாற்றங்களையும் அடிக்கடியும் நடத்தி விரிவான அளவிலும், நடைமுறையில் உள்ள உயர்மட்ட செயல்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தவும், பல்வகைப்படுத்தவும், அதிபர் ரோஹானியும், பிரதமர் மோடியும் ஒப்புக் கொண்டனர். இந்தச் சூழலில், இந்த ஆண்டுக்குள்ளாகவே இந்தியா-ஈரான் கூட்டு ஆணையம் மற்றும் அதன் அனைத்துப் பணிக் குழுக்களின் சந்திப்புகள், வெளியுறவு அமைச்சக ஆலோசனைகள், இரு நாடுகளின் ராணுவம் மற்றும் தேசிய பாதுகாப்புக் குழு கட்டமைப்புகளுக்கு இடையேயான பேச்சு, கொள்கைத் திட்டமிடல் பேச்சு மற்றும் நாடாளுமன்ற பரிமாற்றங்களை ஊக்குவித்தல் ஆகியவற்றை நடத்த முடிவுசெய்யப்பட்டது.

இணைப்பு

  • இந்தப் பிராந்தியத்துக்குள்ளும், அதனைத் தாண்டியும் பல்முனை இணைப்பை ஊக்குவிப்பதில் இந்தியா மற்றும் ஈரானின் தனித்த பங்கினை இரு தரப்பினரும் அங்கீகரித்தனர். சபாகர் துறைமுகத் திட்டத்தின் முதல் கட்டத்தை டிசம்பர் 2017-ன் தொடக்கத்திலேயே வெற்றிகரமாகத் தொடங்கியது; அனைத்து முனைகள் மூலமும், சர்வதேசப் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து முனையத்தை உருவாக்க இந்தியா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான முத்தரப்பு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தது; மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு உதவும் வகையில், இந்தியா அனுப்பிய கோதுமையை சபாகர் துறைமுகம் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு வெற்றிகரமாகக் கொண்டுசேர்த்தது ஆகியவை மத்திய ஆசியாவிலிருந்தும், அதனைத் தாண்டிய பகுதியிலிருந்தும் ஆப்கானிஸ்தானுக்குப் புதிய நுழைவாயிலை ஏற்படுத்தியுள்ளது. சபாகர் பகுதியில் உள்ள ஷாகித் பெகெஸ்தி துறைமுகத்தை விரைந்து முழுமையாகக் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற தங்களது உறுதியை இருதரப்பினரும் வெளிப்படுத்தினர். சபாகர் தாராள வர்த்தகத் தொழில் துறை மண்டலத்தில் தொடர்புடைய நாடுகளுக்குப் பரஸ்பரம் பயனளிக்கும் வகையில், உரம், பெட்ரோகெமிக்கல் மற்றும் உலோகவியல் போன்ற துறைகளில் ஆலைகளை அமைப்பதற்காக இந்தியா முதலீடு செய்ததை ஈரான் குழுவினர் வரவேற்றனர்.
  • இந்தச் சூழலில், சபாகர் பகுதியில் உள்ள ஷாகித் பெகெஸ்தி துறைமுகத்துக்காக ஈரானின் துறைமுகம் மற்றும் கடல்சார் அமைப்புக்கும், இந்தியாவின் துறைமுகச் சர்வதேச நிறுவனத்துக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட குறுகிய கால குத்தகை ஒப்பந்தத்துக்கு இரு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர். மேலும், முத்தரப்பு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள காலத்துக்குள் ஒருங்கிணைப்புக் குழு கூடி ஆலோசனை நடத்த வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தினர்.
  • சபாகர் துறைமுகத்தின் திறனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும், அதன் இணைப்பை ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியா வரை இருக்கச் செய்யவும், சபாகர்-சகேதன் ரயில் பாதையை அமைப்பதற்கு உதவ தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்தது. இந்தத் திட்டத்தைக் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கும் வகையில், தொழில்நுட்ப அளவீடுகள் மற்றும் நிதிக்கான வாய்ப்புகளை இறுதிசெய்வதற்காக ஆலோசனையில் கலந்து கொண்ட இந்தியாவின் இர்கான் (IRCON) மற்றும் ஈரானின் சிடிடிஐசி (CDTIC) நிறுவனங்கள் பணிக்கப்பட்டன. உருக்குத் தண்டவாளங்கள், சிக்னல் மாற்றப் பாதைகள், ரயில் பெட்டிகள் வழங்குவது உள்ளிட்ட ரயில்வே துறை ஒத்துழைப்புக்காக மிகப்பெரும் முயற்சிகளை மேற்கொள்வதை இரு தலைவர்களும் ஊக்குவித்தனர்.
  • சர்வதேச வடக்கு – தெற்கு போக்குவரத்து முனையத்தை (INSTC) செயல்படுத்துவதில் தங்களது உறுதியை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். மேலும், இந்த முனையத்திற்குள் சபாகர் துறைமுகத்தையும் சேர்க்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர். சர்வதேச வடக்கு – தெற்கு போக்குவரத்து முனையத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தை தெஹ்ரானில் ஈரான் விரைவில் நடத்த உள்ளது குறிப்பிடப்பட்டது. இந்த கூடுதல் நடவடிக்கைகள், பிராந்திய இணைப்பை வலுப்படுத்துவதுடன், பொருளாதார வளர்ச்சிக்கான பிராந்திய மையங்களை இணைக்கும் என்பதால் சர்வதேச பாதை போக்குவரத்து ஒப்பந்தம் மற்றும் அஸ்காபாத் ஒப்பந்தத்தில் (TIR Convention and Ashgabat Agreement) இந்தியா இணைந்திருப்பதற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.
  • கண்ட்லாவில் உள்ள தீனதயாள் துறைமுகம் மற்றும் சபாகரில் உள்ள ஷாகித் பெகெஸ்தி முனையம் ஆகியவற்றின் உருவம் பொறித்த கூட்டு அஞ்சல் தலையை இரு தலைவர்களும் வெளியிட்டனர். மிகப்பெரும் இணைப்பின் மூலம், அதிக வளம் பெறுவதை இது வெளிப்படுத்துகிறது.
  • சபாகர் தாராள வர்த்தக மண்டலத்தில் இந்தியாவின் தனியார்/ பொதுத்துறை முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான சூழலை மேம்படுத்தத் தயாராக இருப்பதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி, பிராந்தியத்தில் உள்ள மற்றும் பிராந்தியத்தைத் தாண்டியும் உள்ள நாடுகளின் பங்களிப்புடன் வர்த்தக மேம்பாட்டு நிகழ்ச்சியை ஈரான் நடத்த உள்ளது. சபாகர் துறைமுகத்தில் உள்ள பொருளாதார வாய்ப்புகளை வெளிப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

எரிசக்தி ஒத்துழைப்பு

  • எரிசக்தித் துறையில் பரஸ்பர நலன்கள் மற்றும் இயல்பான ஒத்துழைப்பு இருப்பது குறித்து குறிப்பிடப்பட்டது. இந்தத் துறையில், பாரம்பரியமாக உள்ள வாங்குவோர் – விற்பனையாளர் என்ற உறவையும் கடந்து, நீண்டகாலப் பாதுகாப்பு ஒத்துழைப்பாக அதனை மேம்படுத்துவது என ஒப்புக் கொள்ளப்பட்டது. ஃபர்சாத் பி எரிவாயுக்களும் உள்ளிட்ட எரிசக்தி ஒத்துழைப்பில் உரிய பலன்களைப் பெறுவதற்காகப் பேச்சுவார்த்தையைத் தொடரவும், வேகப்படுத்தவும் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.

வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு

  • இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இதற்காக, வர்த்தகப் பரிமாற்றங்களுக்காகச் சரியான வங்கி வழிமுறையைச் செயல்படுத்த வேண்டியது அவசியத்தை அவர்கள் அங்கீகரித்தனர். ஈரானின் பசர்காட் வங்கியின் கிளையை இந்தியாவில் திறப்பதற்கு அனுமதி அளிப்பது குறித்தும் தீவிர பரிசீலனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடப்பட்டது. பணம் செலுத்துவதற்கான செயல்பாட்டு வழிகளை ஏற்படுத்துவதற்காக ரூபாய்-ரியால் ஏற்பாடு, ஆசிய அளவில் ஒப்புதல் அளிக்கும் மத்திய வழிமுறை உள்ளிட்ட சரியான வழிகளை ஆய்வுசெய்வதற்காக அதிகாரிகளைக் கொண்ட கூட்டுக் குழுவை ஏற்படுத்தவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
  • இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம், வர்த்தகச் சூழல் ஊக்குவிக்கப்படும். முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஆவண அடிப்படையில் (text based) பேச்சுவார்த்தை நடத்தவும், இரு தரப்பு முதலீட்டு உடன்பாட்டை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் முடிவுக்குக் கொண்டுவரவும் இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
  • பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில், தொழிலதிபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு முக்கியத்துவத்தைக் குறிப்பிட்ட இரு தலைவர்களும், இந்திய தொழிலக கூட்டமைப்பின் பிராந்திய அலுவலகத்தை தெஹ்ரானில் கடந்த ஆண்டில் திறந்ததை வரவேற்றனர். மேலும், இரு நாடுகளையும் சேர்ந்த பல்வேறு தொழில் கூட்டமைப்புகளுக்கு இடையே கையெழுத்தான பரஸ்பர ஒத்துழைப்பு ஒப்பந்தங்களையும் வரவேற்றனர். ஈரான் வர்த்தகம் மற்றும் தொழில் சபையின் அலுவலகத்தை இந்தியாவில் திறப்பதை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாக இந்திய தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.
  • உலக வர்த்தக மையத்தில் ஈரான் இணைவதற்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக இந்தியா தெரிவித்தது. மேலும், அனைவருக்குமானதும் உள்ளடக்கிய வகையிலும் உலக வர்த்தக அமைப்பு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் நடவடிக்கைகளுக்குப் புத்துயிர் அளிக்க உலக வர்த்தக மைய உறுப்பினர்களுக்கு இடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவு தெரிவித்தது.

நட்புரீதியான பரிமாற்றங்கள் மற்றும் மக்களுக்கு இடையேயான தொடர்புகளை ஊக்குவித்தல்

  • இரு நாடுகளுக்கும் இடையே நட்புரீதியான பரிமாற்றங்களுக்கு வழிவகை செய்வதற்காக, ஈரான் நாட்டவர்களுக்கு மின்னணு- விசா வசதியை இந்தியா வழங்கும். இதேபோல, இந்திய நாட்டவர்களுக்கு மின்னணு – விசா வசதியை ஈரான் வழங்கும். இந்த உடன்பாட்டின் அடிப்படையிலேயே, தூதரக பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா பெறுவதிலிருந்து விலக்கு அளிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு நாடுகளையும் சேர்ந்த மக்களுடன் தொடர்புடைய மனிதநேய விவகாரங்களுக்குத் தீர்வுகாண வேண்டியதன் அவசியம் குறித்து இரு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. ஈரானில் உள்ள தூதரகங்களை மேம்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையைச் சாதகமான முறையில் ஈரான் பரிசீலிக்கும்.
  • வலுவான நாகரீக அடித்தளங்கள் மற்றும் கலாச்சார இணைப்பு மற்றும் பல்வேறு மட்டத்திலும் ஒவ்வொருவருக்கும் இடையே சிறந்த புரிந்துணர்வை ஏற்படுத்துவதைக் கருத்தில் கொண்டு, ஈரானில் 2018/19-ல் இந்தியா திருவிழாவை நடத்த ஒப்புக் கொள்ளப்பட்டது; தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் இந்திய கல்விக்கான இருக்கை உருவாக்குதல்; இந்திய அயல்நாட்டுச் சேவை கல்வி நிறுவனத்தில் ஈரான் தூதர்களுக்காக இந்தியவியல் பாடப் பிரிவுகளுக்கு ஏற்பாடு செய்தல்; இந்தியாவில் பெர்சிய மொழிப் பாடப் பிரிவுகளுக்கு ஆதரவு அளித்தல்; தொல்லியல், அருங்காட்சியகங்கள், ஆவணக் காப்பகங்கள் மற்றும் நூலகங்கள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு

  • தங்களது தேசியப் பாதுகாப்பு குழுக்களுக்கு இடையேயான தொடர்பு வளர்ந்துவருவதை இரு தலைவர்களும் வரவேற்றனர். தீவிரவாதம், பாதுகாப்பு மற்றும் அதுதொடர்பான விவகாரங்களான திட்டமிட்ட குற்றச் செயல், நிதி முறைகேடு, போதை மருந்து கடத்தல் மற்றும் இணையதளக் குற்றங்கள் ஆகிய விவகாரங்கள் தொடர்பாக இரு நாடுகளின் தேசிய பாதுகாப்புக் குழுக்களுக்கு இடையே வழக்கமான மற்றும் அமைப்புசார்ந்த கலந்தாலோசனைகளை வலுப்படுத்த ஒப்புக் கொண்டனர்.
  • கடல்சார் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க இருதரப்பிலும் ஆர்வம் வெளிப்படுத்தப்பட்டது. கடற்படைக் கப்பல்களின் துறைமுக அழைப்புகள், பாதுகாப்புப் படைகளின் பயிற்சி மற்றும் வழக்கமான பரிமாற்றங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு விவகாரங்களில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வதற்கான பேச்சுவார்த்தையை நடத்த ஒப்புக் கொள்ளப்பட்டது.
  • தண்டனை விதிக்கப்பட்ட நபர்களைப் பரிமாறிக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட இரு தரப்பு ஒப்பந்தத்தைச் செயல்படுத்துதல்; இரு நாடுகளுக்கும் இடையேயான நாடுகடத்துதல் ஒப்பந்தம் மற்றும் சிவில், வர்த்தக விவகாரங்களில் மேற்கொள்ளப்பட்ட பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் ஆகியவற்றைச் செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை இரு தரப்பினரும் சாதகமாகக் குறிப்பிட்டனர்.

மற்ற துறைகள்

  • பரஸ்பர நலன் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இரு தரப்பு ஒத்துழைப்புக்கு அவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். மேலும், உயர்கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், வேளாண்மை, தொழிலாளர் மற்றும் தொழில்முனைவோர், சுற்றுலா, அஞ்சல் உள்ளிட்ட பிற துறைகளில், தொடர்க் கருத்துப் பரிமாற்றம் மற்றும் அமைப்புரீதியான வழிமுறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கும் வரவேற்பு தெரிவித்தனர். இதனை மேலும் விரிவாகச் செயல்படுத்த உரிய அதிகார வட்டாரங்களை அறிவுறுத்தினர்.

பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள்

  • பிராந்திய மற்றும் சர்வதேச நிலவரங்கள் குறித்து இரு தலைவர்களும் தங்களது கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். பல்தரப்பு சூழலை வலுப்படுத்தும் நோக்கில், சர்வதேச அமைப்புகளில் மிகப்பெரும் பங்கு வகிக்கும் இந்தியாவின் விருப்பத்தை அதிபர் ரோஹானி அங்கீகரித்தார். ஐக்கிய நாடுகள் அமைப்பு வலுவாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். மேலும், தற்போதைய புவிஅரசியல் சூழலின் உண்மைத்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில், பாதுகாப்பு குழுவில் விரைந்து சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர். பாதுகாப்பு குழுவில் விரிவான சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்காக அரசுகளுக்கு இடையே பேச்சுவார்த்தைக்கு ஆதரவு அளிக்கும் தங்களது தீர்மானத்தை உறுதிப்படுத்தினர். சர்வதேச நிதி நிறுவனங்களில் சீர்திருத்தம் செய்வது மற்றும் வலுப்படுத்துவதன் அவசியத்தை இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். மேலும், சர்வதேச அளவிலான பொருளாதார முடிவுகளை எடுப்பதில், வளரும் நாடுகளின் பங்களிப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
  • தீவிரவாதம் மற்றும் வன்மையான பயங்கரவாதத்தின் கொள்கைகளால் ஏற்படும் சவால்களை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். தீவிரவாதத்தை அனைத்து வடிவங்களிலும், தோற்றங்களிலும் எதிர்கொள்வது என்ற வலுவான உறுதியை வலியுறுத்தினர். தீவிரவாதத்தின் எந்தவொரு செயலையும், எந்த நிலையிலும் நியாயப்படுத்த முடியாது என்று அவர்கள் குறிப்பிட்டனர். தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் என்பது, தீவிரவாதிகள், தீவிரவாத அமைப்புகள் மற்றும் அதன் இணைப்புகளை அழிப்பதாக மட்டும் இல்லாமல், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதக் கொள்கைகளுக்குக் காரணமான சூழலை கண்டறிந்து அழிப்பதாக இருக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். தீவிரவாதம் என்பதை எந்தவொரு மதம், நாடு அல்லது குழுவுடன் தொடர்புபடுத்திப் பார்க்கக் கூடாது என்று அவர்கள் வலியுறுத்தினர். தீவிரவாதக் குழுக்கள் மற்றும் தனிநபர்கள் பெற்றுவரும் அனைத்து ஆதரவுகள் மற்றும் புகலிடங்களை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். தீவிரவாதத்துக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக ஆதரவு அளிக்கும், உதவிசெய்யும், தூண்டிவிடும் நாடுகளைக் கண்டிக்க வேண்டும். தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் குறிப்பிட்ட அல்லது பகுதியளவு நிலைப்பாட்டை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று சர்வதேச சமூகத்துக்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர். இந்த விவகாரத்தில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், சர்வதேசத் தீவிரவாதம் குறித்த ஒருங்கிணைந்த தீர்மானத்தை முடிவுக்கு கொண்டுவரவும், ஒப்பந்தத்தை ஏற்படுத்தவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று அவர்கள் தெரிவித்தனர். ஈரான் அதிபரின் யோசனையில் உருவான “வன்முறை மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான உலகம்” என்ற தீர்மானம், 2013-ம் ஆண்டில் ஐநா பொதுச் சபையில் ஒருமனதாக நிறைவேறியதை இரு தரப்பினரும் அங்கீகரித்தனர். தீவிரவாத சக்திகளை முறியடித்தல், அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் செயல்பாடுகள் மற்றும் நிதி ஆதரவை, குறிப்பாக தீவிரவாத குழுக்களுக்கான ஆதரவை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர்.
  • பரவல் தடை வழிமுறைகள் மற்றும் சர்வதேச அமைதி, நிலைத்தன்மை, பாதுகாப்புக்கு முக்கியப் பங்களிப்பை அளிக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை அங்கீகரித்த கூட்டு ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திட்டத்தை முழுமையாகவும், சிறப்பாகவும் அமல்படுத்துவதற்கு ஆதரவு அளிக்கப்படும் என்பதற்கு இந்திய தரப்பில் மீண்டும் உறுதியளிக்கப்பட்டது.
  • இந்தப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்த, வலுவான, ஒருங்கிணைந்த, பன்முகத்தன்மை கொண்ட, ஜனநாயக மற்றும் சுதந்திரமான ஆப்கானிஸ்தான் அவசியம் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதற்காக ஆப்கானிஸ்தானில் தேசிய ஒற்றுமை அரசு அமைய ஆதரவு தெரிவித்தனர். இந்தியா-ஈரான்-ஆப்கானிஸ்தான் முத்தரப்பு ஆலோசனைகள் மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர். இதில், சபாகர் விவகாரத்தில் தங்களது ஒத்துழைப்பு, போதுமான ஆதரவை அளிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்தச் சூழலில், பிராந்தியத்தில் உள்ள நாடுகள், பிராந்திய இணைப்பை வலுப்படுத்த முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். மேலும், நிலப் போக்குவரத்துக்கு உள்ள தடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
  • இந்தியாவில் தங்கியிருந்தபோது, தனக்கும், தனது குழுவினருக்கும் சிறப்பான உபசரிப்பு அளித்ததற்காக அதிபர் ரோஹானி ஆழ்ந்த பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். ஈரானுக்கு வருமாறு இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு அவர் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. பயணம் மேற்கொள்வதற்கான தேதியை தூதரக வழிமுறைகள் மூலம் முடிவுசெய்வது என ஒப்புக் கொள்ளப்பட்டது.

***