Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கை முக்கிய துறைகளில் மேலும் தாராளமயமாக்கல்


  • ஒற்றை பிராண்ட் சில்லரை வர்த்தகத்துக்கு ஆட்டோமேடிக் முறையின் கீழ் 100% நேரடி அந்நிய முதலீடு
  • கட்டுமான மேம்பாட்டுக்கு ஆட்டோமேடிக் முறையின் கீழ் 100% நேரடி அந்நிய முதலீடு
  • வெளிநாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் ஒப்புதல் அளிப்பு முறையின் கீழ் ஏர் இந்தியா நிறுவனத்தில் 49% வரையில் முதலீடு செய்ய அனுமதி
  • பிரதானச் சந்தை மூலமாக மின்சார இணைப்பகங்களில் FII/FPI-கள் முதலீடு செய்ய அனுமதி
  • நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கையில் `மருத்துவ உபகரணங்கள்’ என்ற வரையறையில் திருத்தம்

 

 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கையில் பல திருத்தங்கள் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நாட்டில் தொழில் செய்வதை எளிமை ஆக்கும் வகையில் நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கையை எளிமையாக்குவதையும், தாராளமாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தத் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன. இதன் மூலமாக முதலீடு, வருமானம் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் வகையில் பெருமளவு நேரடி அந்நிய முதலீடு அதிகரிக்கும்.

நேரடி அந்நிய முதலீடு (FDI), பொருளாதார வளர்ச்சியில் முக்கிய காரணியாக இருக்கிறது. நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு கடன் அல்லாத நிதி ஆதாரமாக இது இருக்கிறது. முதலீட்டாளர்களுக்கு உகந்த நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கையை அரசு உருவாக்கியுள்ளது. இதன்கீழ் பெரும்பாலான துறைகள் / செயல்பாடுகளில் ஆட்டோமேடிக் முறையின் கீழ் 100% வரையில் நேரடி அந்நிய முதலீடு அனுமதிக்கப் படுகிறது. பாதுகாப்பு, கட்டுமான மேம்பாடு, காப்பீடு, ஓய்வூதியம், இதர நிதிச் சேவைகள், சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்கள், ஒலிபரப்பு, சிவில் விமானப் போக்குவரத்து, மருந்து துறை, டிரேடிங் உள்ளிட்ட பல துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கையில் அண்மையில் அரசு சீர்திருத்தங்கள் செய்தது.

அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக, நாட்டுக்கு வந்த நேரடி அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது. 2014-15 ஆம் ஆண்டில் வந்த மொத்த நேரடி அந்நிய முதலீடு 45.15 பில்லியன் அமெரிக்க டாலர்கள். 2013 – 14-ல் இது 36.05 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 2015-16ல் கிடைத்த மொத்த நேரடி அந்நிய முதலீடு 55.46 பில்லியன் அமெரிக்க டாலர்கள். 2016-17 நிதி ஆண்டில் இது 60.08 பில்லியன் அமெரிக்க டாலர்களாக, முன் எப்போதையும்விட அதிக அளவாக வந்திருக்கிறது.

நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கையை மேலும் தாராளமாக்குவது மற்றும் எளிமையாக்குவதன் மூலம், இன்னும் அதிகமான அந்நிய முதலீட்டைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக உணரப்பட்டது. அதற்கேற்ப நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கையில் பல திருத்தங்களைச் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

விவரங்கள் :

ஒற்றை பிராண்ட் சில்லரை வர்த்தகத்தில் (SBRT) FDI-க்கு இனி அரசின் அனுமதி பெறத் தேவையில்லை.

  1. நடப்பில் உள்ள FDI கொள்கையின்படி SBRT-ல் 49% அளவு ஆட்டோமேடிக் முறையில் அனுமதிக்கப் படுகிறது. 49%-க்கு மேல் 100% வரையிலான FDI-க்கு அரசின் அனுமதி பெற வேண்டும். இப்போது SBRT-க்கு 100% FDI-ஐ ஆட்டோமேடிக் முறையிலேயே அனுமதிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
  2. ஒற்றை பிராண்ட் சில்லரை வர்த்தக நிறுவனம் கட்டாயமாக 30% அளவுக்கு இந்தியாவில் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதற்குப் பதிலாக, அந்நிய செயல்பாடுகளுக்கு இந்தியாவில் இருந்து பொருள்களை வாங்குவதை படிப்படியாக உயர்த்த வேண்டும் என்பதை,  முதலாவது விற்பனை நிலையம் தொடங்கப்பட்ட ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு ஈடு செய்வதற்கு  அனுமதிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. படிப்படியாக உயர்த்துவது என்பது, இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு அனுப்பும் அந்த ஒற்றை பிராண்ட் பொருளின் மதிப்பு (இந்திய ரூபாயில்), முந்தைய நிதியாண்டைவிட அந்தக் குறிப்பிட்ட நிதியாண்டில் உள்ளதைக் குறிக்கும். ஒற்றை பிராண்ட் சில்லரை வர்த்தக நிறுவனத்தைச் சார்ந்த வசிப்பிட – அந்தஸ்து இல்லாத நிறுவனங்களாகவோ, நேரடியாகவோ அல்லது அதன் குழும நிறுவனங்கள் மூலமாகவோ பெறுவதாக இருக்கலாம். இந்த 5 ஆண்டு காலம் முடிந்த பிறகு, இந்த SBRT நிறுவனம் தனது இந்திய செயல்பாடுகளுக்கு, வருடாந்திர அடிப்படையில் 30 % அளவுக்கு நேரடியாக இந்தியாவிலேயே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விதிமுறை கட்டாயமாக்கப்படும்.
  3. வசிப்பிட அந்தஸ்து உள்ள நிறுவனம் அல்லது நிறுவனங்கள், பிராண்ட் அல்லது இதர வகையான உரிமையாளராக இருப்பவர், நாட்டில்  `ஒற்றை பிராண்ட்’  பொருட்களை சில்லரை வர்த்தகம் செய்வதில் ஈடுபட அனுமதிக்கப்படுவார். பிராண்ட் உரிமையாளர் நேரடியாகவோ அல்லது ஒற்றை பிராண்ட் சில்லரை வர்த்தகத்தை எடுத்துக் கொள்ளும் இந்திய நிறுவனத்துக்கும், பிராண்ட் உரிமையாளருக்கும் இடையில் செய்யப்பட்ட சட்டபூர்வமாக ஏற்கத்தக்க ஒப்பந்தம் மூலமாகவோ  இதைச் செய்யலாம்.

 

சிவில் விமானப் போக்குவரத்து

 

வழக்கில் உள்ள கொள்கையின்படி, அட்டவணையிடப்பட்ட மற்றும் அட்டவணையிடப்படாத விமான போக்குவரத்து சேவையில் உள்ள இந்திய நிறுவனங்களின் மூலதனத்தில், 49% வரையில், அந்நிய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் அரசின் அனுமதியுடன் முதலீடு செய்யலாம். இருந்தபோதிலும், இந்த வசதி இப்போது ஏர் இந்தியா நிறுவனத்துக்குப் பொருந்தாது. அதனால் வெளிநாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் ஏர் இந்தியா நிறுவனத்தில் முதலீடு செய்ய முடியாது. இப்போது இந்தக் கட்டுப்பாட்டை நீக்கி, பின்வரும் நிபந்தனைகளுக்கு உள்பட்டு ஏர் இந்தியா நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் வெளிநாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் 49% வரை முதலீடு செய்ய அனுமதிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது:

  1. ஏர் இந்தியாவில் அந்நிய முதலீடு (முதலீடுகள்), வெளிநாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனம் (நிறுவனங்கள்) உள்பட, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ 49%-க்கு மிகாமல் இருக்க வேண்டும்
  2. ஏர் இந்தியாவின் கணிசமான முதலாளி நிலை மற்றும் செயல்பாட்டு கட்டுப்பாடு இந்திய தேசத்தைச் சார்ந்ததாகவே இருக்க வேண்டும்

கட்டுமான மேம்பாடு : நகரியங்கள், வீட்டுவசதி,  கட்டமைப்பு உருவாக்குதல் மற்றும் ரியல் எஸ்டேட் புரோக்கிங் சேவைகள்

ரியல் எஸ்டேட் புரோக்கிங் சேவை என்பது ரியல் எஸ்டேட் வியாபாரத்துடன் மட்டும் முடிந்துவிடாது என்று தெளிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆட்டோமேடிக் முறையில் இது 100% FDI-க்கு தகுதி பெறுகிறது.

 

மின்சார இணைப்பகங்கள்

வழக்கில் உள்ள கொள்கையின்படி மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணைய (மின்சார சந்தை) கட்டுப்பாடுகள், 2010-ன் கீழ் பதிவு செய்துள்ள மின்சார இணைப்பகங்களில் 49% FDI, ஆட்டோமேடிக் முறையில் அனுமதிக்கப்படுகிறது. இருந்தபோதிலும், FII/FPI கொள்முதல்கள் இரண்டாவது நிலை சந்தை அளவுக்கு மட்டுமே அனுமதிக்கப் படுகிறது. இப்போது, இந்த விதியை நீக்குவதற்கு முடிவு செய்யப் பட்டுள்ளது. இதன்மூலம் FII/FPI-கள் பிரதானச் சந்தையிலேயே மின்சார இணைப்பகங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படும்.

 

FDI கொள்கையின் கீழ் பிற ஒப்புதல் தேவைகள் :

  1. வழக்கில் உள்ள FDI கொள்கையின்படி, தொடக்கத்துக்கு முந்தைய செலவினங்கள், இயந்திரங்கள் இறக்குமதி போன்ற, ரொக்கம்-அல்லாத அம்சங்களுக்காக பங்குகள் வெளியிடுவற்கு, அரசு ஒப்புதலுடன் செய்ய அனுமதிக்கப் படுகிறது. இப்போது ஆட்டோமேடிக் முறையில் அனுமதிக்கப்படும் துறைகளில், இதுபோன்ற தொடக்கத்துக்கு முந்தைய செலவினங்கள், இயந்திரங்கள் இறக்குமதி போன்ற, ரொக்கம்-அல்லாத அம்சங்களுக்காக பங்குகள் வெளியிடுவதை ஆட்டோமேடிக் முறையில் அனுமதிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
  2. இப்போது இந்திய நிறுவனம் / நிறுவனங்கள்// LLP மற்றும் அடிப்படை முதலீட்டு நிறுவனங்களின் மூலதனத்தில் மட்டும் அந்நிய முதலீடு செய்வதற்கு, அரசு அனுமதியுடன் 100% வரை அனுமதிக்கப் படுகிறது. இப்போது இந்தத் துறைகளின் FDI கொள்கையை, இதர நிதி சேவைகளுக்கான FDI விதிகளிலும் சேர்க்க இப்போது முடிவு செய்யப் பட்டுள்ளது. எனவே, மேற்சொன்ன செயல்பாடுகள் ஏதாவது நிதித் துறை ஒழுங்காற்று அமைப்பால் ஒழுங்குமுறை செய்யப்பட்டால், அப்போது 100% வரையிலான அந்நிய முதலீடு ஆட்டோமேடிக் முறையில் அனுமதிக்கப்படும்; மேலும், அவை ஏதாவது நிதித் துறை ஒழுங்காற்று அமைப்பால் ஒழுங்குமுறை செய்யப்படாவிட்டாலோ அல்லது ஒழுங்காற்று கவனக்குறைவு குறித்து சந்தேகம் இருந்தாலோ, 100% வரையிலான அந்நிய முதலீடு அரசு ஒப்புதலுடன் அனுமதிக்கப்படும். அரசால் முடிவு செய்யப்படும் குறைந்தபட்ச முதலீட்டுத் தேவை குறித்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு இது அமையும்.

கவலை ஏற்படுத்தும் நாடுகளில் இருந்து FDI முன்மொழிவுகளை ஆய்வு செய்யும் பொருத்தமான ஆணையம்

 

வழக்கில் உள்ள நடைமுறைகளின்படி, செயல்பாட்டில் உள்ள FEMA 20, FDI கொள்கை மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி, அவ்வப்போது செய்யப்படும் திருத்தங்களின்படி, பாதுகாப்புத் துறை அனுமதி தேவைப்படும், கவலை தரும் நாடுகள் தொடர்பான முதலீடுகள் குறித்த FDI விண்ணப்பங்கள், ஆட்டோமேடிக் முறையில் அனுமதிக்கப்படும் துறைகள் /செயல்பாடுகள் பிரிவின் கீழ் வந்தால் உள்துறை அமைச்சகம் (MHA) மூலம் பரிசீலிக்கப்படும். அரசு ஒப்புதல் பெற வேண்டிய துறைகள் / செயல்பாடுகள் பிரிவின் கீழ் பாதுகாப்புத் துறை ஒப்புதல் பெற வேண்டியவையாக இருந்தால், சம்பந்தப்பட்ட நிர்வாக அமைச்சகங்கள் / துறைகள் மூலம் ஆய்வு செய்யப்படும். ஆட்டோமேடிக் முறை துறைகளில் முதலீடுகளுக்கு, கவலை தரும் நாடு என்ற அம்சத்தில் மட்டும் முதலீடுகளுக்கான ஒப்புதல் தேவைப்பட்டால், அந்த FDI விண்ணப்பங்களை அரசின் ஒப்புதலுக்கு தொழில் கொள்கை & மேம்பாட்டுத் துறை (DIPP) பரிசீலனை செய்யும் என இப்போது முடிவு செய்யப் பட்டுள்ளது. அரசு ஒப்புதல் முறையின் கீழ் வரும் நேர்வுகளிலும், கவலை தரும் நாடு என்ற வகையில் பாதுகாப்புத் துறை ஒப்புதல் தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட நிர்வாகத் துறை/ அமைச்சகத்தால் பரிசீலிக்கப்படுவது தொடரும்.

 

மருந்துகள் துறை :

மருந்துகள் தயாரிப்புத் துறையில் FDI கொள்கையின்படி, FDI கொள்கையில் குறிப்பிட்டுள்ள `மருத்துவ உபகரணம்’ என்பதற்கான வரையறை மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் திருத்தத்துக்கு உள்பட்டது.  இந்தக் கொள்கையில் குறிப்பிட்டுள்ள வரையறை முழுமையாக இருக்கும் காரணத்தால், FDI கொள்கையில் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தை மேற்கோள் காட்டுவதைக் கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுதவிர, FDI கொள்கையில் உள்ளவாறு `மருத்துவ உபகரணங்கள்’ என்பதற்கான வரையறையைத் திருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தணிக்கை நிறுவனங்கள் குறித்த கட்டுப்பாட்டு நிபந்தனைகளைத் தடை செய்தல் :

இப்போதுள்ள FDI கொள்கையின்படி, அந்நிய முதலீடுகளைப் பெறும் இந்திய நிறுவனங்களில் நியமிக்கப்படும் தணிக்கையாளர்களைப் பொருத்தவரை எந்த விதிமுறைகளும் கிடையாது.  இந்திய நிறுவனத்தில் முதலீடு செய்யும் அந்நிய முதலீட்டாளர் சர்வதேச நெட்வொர்க் உள்ள ஒரு குறிப்பிட்ட தணிக்கையாளர் / தணிக்கை நிறுவனத்தைக் குறிப்பிட விரும்பினால், அப்போது முதலீடு பெறும் அந்த நிறுவனங்களின் தணிக்கை கூட்டாக செய்யப்பட வேண்டும் என்றும், அதில் ஒரு தணிக்கையாளர் அதே நெட்வொர்க்கை சாராதவராக இருக்க வேண்டும் என்றும் FDI கொள்கையில் விதிமுறை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

******