இந்தியா – பெல்ஜியம் இடையே தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறையில் ஒத்துழைப்புக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட விவரம், பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. பெல்ஜியம் மன்னர் பிலிப், அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு கடந்த நவம்பர் 7, 2017-ல் வந்தபோது, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியா-பெல்ஜியம் இடையே தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் கொள்கைகள்; டிஜிட்டல் செயல் திட்ட தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுகளை தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் உற்பத்தி மற்றும் சேவைகள் மீதான சிறப்பு கவனத்துடன் மேற்கொள்தல்; மின் ஆளுமை மற்றும் மின்னணு முறையில் பொது சேவைகளை வழங்குதல், கருத்தரங்குகளில் கலந்துகொள்தல், கற்றுக் கொள்வதற்கான பயணங்கள் மற்றும் வல்லுநர்கள் பரிமாற்றம், இணையதள பாதுகாப்பு மற்றும் தரவுகளில் தெளிவு, சந்தையைப் பெறுதல், வர்த்தகம் மற்றும் சேவைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது போன்ற பகுதிகளில் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்துகொள்வதற்கு வழிவகை செய்கிறது.
பின்னணி:
தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் இருதரப்பு மற்றும் பல்வேறு தரப்பினருடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த பல்வேறு நாடுகளுடன் இணைந்து மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. தற்போதைய அறிவுசார் காலகட்டத்தில், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கச் செய்வதிலும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் மற்ற பரிமாணங்களிலும் முக்கியப் பங்கு வகிக்கும் திறன், தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துக்கு உண்டு. தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் நெருங்கிய ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும், தகவல் பரிமாற்றத்துக்கும் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த நிறுவனங்கள்/அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்/உடன்பாடுகளை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. பல்வேறு நாடுகளுடன் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த, குறிப்பாக டிஜிட்டல் இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம் போன்ற இந்திய அரசு மேற்கொண்டுள்ள புதிய நடவடிக்கைகளின் அடிப்படையில், தொழில்நுட்பத் துறையில் வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தவும், முதலீடுகளை ஈர்க்கவும் தேவை அதிகரித்துள்ளது.
இந்தியாவும், பெல்ஜியமும் நெருங்கிய நட்புறவை கொண்டுள்ளன. இந்தியாவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் இரண்டாவது பெரிய வர்த்தக நாடாக பெல்ஜியம் திகழ்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறை, குறிப்பாக, மின்னணு ஆளுமை, மின்னணுவியல் அடையாள அட்டை மற்றும் வரி தளம் உள்ளிட்ட துறைகளில் பெல்ஜியம் நிபுணத்துவம் பெற்று விளங்குகிறது. ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புரூசெல்ஸுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி, கடந்த மார்ச் 2016-ல் பயணம் மேற்கொண்டபோதும், பெல்ஜியமுடனான இருதரப்பு பேச்சுவார்த்தையின்போதும், இந்தியா-பெல்ஜியம் இடையே தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டது. அதன்பிறகு, பெல்ஜியத்தின் துணை பிரதமரும், வளர்ச்சி ஒத்துழைப்பு, டிஜிட்டல் செயல் திட்டம், தொலைத் தொடர்பு மற்றும் அஞ்சல் சேவைகளின் அமைச்சருமான மேதகு திரு.அலெக்சாண்டர் டி குரூ தலைமையிலான குழுவுடன் பரஸ்பர நலன்கள் தொடர்பான துறைகள் குறித்து மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் (புதுதில்லியில் பிப்ரவரி 7, 2017-ல்) பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது, டிஜிட்டல் இந்தியா மற்றும் டிஜிட்டல் பெல்ஜியம் மூலம், மக்களை தொழில்நுட்ப அடிப்படையில் மேம்படுத்துவதற்கு இணைந்து பணியாற்ற தங்களது உறுதியான தீர்மானத்தை இருதரப்பிலும் வெளிப்படுத்தினர்.
***